பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலக அளவில் ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு உயிர்கோள் காப்பகங்களான அகஸ்தியர்மலை உயிர்கோள் காப்பகம் மற்றும் நீலகிரி உயிர்கோள் காப்பகம் ஆகியவை தமிழ்நாட்டின் பெருமையாகும். வனஉயிரினங்கள் பாதுகாப்பில் தமிழக வனத்துறை தலைசிறந்ததாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 26,281 ச.கி.மீ வனப்பரப்பில் 04 புலிகள் காப்பகங்கள், 03 உயிர்கோள் காப்பகங்கள், 15 வனஉயிரின சரணாலங்கள், 15 பறவைகள் சரணாலங்கள், 05 தேசீய பூங்காக்கள் உள்ளன. இந்தியாவின் முதல் கடல்வாழ் உயிரின உயிர்கோள் காப்பகம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த வனப்பரப்பில் தமிழக வனப்பரப்பு 3.7 சதவீதமாக இருந்தாலும், இந்தியாவின் 10 சதவீத (4000க்கும் மேற்பட்ட) யானைகள் தமிழகத்தை உய்விடமாக கொண்டுள்ளன. தேசீய அளவில் புலிகளின் எண்ணிக்கை 2226 ஆகும். அவற்றில் தமிழ்நாட்டில் மட்டுமே 10 சதவீதம் அதாவது 229 புலிகள் உள்ளன.

ஒரு பூகோள பரப்பில் மட்டுமே தென்படக்கூடிய உயிரினங்கள், தன்னகத்தன்மை கொண்ட உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 36 இரு வாழ்விகள், 63 ஊர்வன இனங்கள், 17 பறவை இனங்கள், 24 பாலுட்டி இனங்கள் தன்னகத்தன்மை கொண்டவையாக உள்ளன. தேசீய அளவில் மாநிலங்களுக்குள் பூக்கும் தாவரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 5745க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் உள்ளன. தேசிய அளவில் தமிழகமே அதிக தன்னகத்தன்மை கொண்ட தாவாரங்களை (சுமார் 410) கொண்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக 1988-இல் உருவாக்கப்பட்டது. இக்காப்பத்தில் சுமார், 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் உள்ளன. இக்காப்பகம் 448 அரிய வகை தன்னகத்தன்மை கொண்ட தாவர இனங்களையும், 103 தன்னகத்தன்மை கொண்ட விலங்கினங்களையும் கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவில் இங்குதான் 400 ச.கி. பரப்பளவில் ஈரப்பதமிக்க பசுமைமாறாக் காடுகள் தொடர்காடுகளாக உள்ளன. இந்த பசுமை மாறாக் காடுகளே வற்றாத ஜீவநதி தாமிரவருணி உருவாக காரணமாகும். உலகிலேயே தாவர பல்லுயிர் பெருக்கம் மிகுதியாக காணப்படும் இடங்களில் ஒன்றாக இக்காப்பகம் திகழ்கின்றது. மலைநன்னாரி, ஆரியல்பத்ரம், சட்டன்பச்சிலை, ஆரோக்கிய பச்சை, ஆற்றுநெல்லி, காட்டு ருத்தராட்சம், லேடிஸ் ஸிலிப்பர் ஆர்க்கிட் போன்ற பல அபூர்வ அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன.

சிங்கவால் குரங்கு

இப்புலிகள் காப்பகம் சிங்கவால் குரங்குகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. உலகளவில் 4,000 சிங்கவால் குரங்குகளே உள்ள சூழ்நிலையில் இங்கு மட்டுமே அவை 450 எண்ணிக்கைக்கு மேல் காணப்படுகின்றன. இந்த சிங்கவால் குரங்கு 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை தன் உணவாக உட்கொள்கின்றது என்ற தகவல் இவ்வனப்பகுதியின் உயிர்பன்மைக்கு ஓர் சான்று.

புலிகள் காப்பக வனப்பகுதியில் மரப்பொந்துகளில் உள்ள நீரை மட்டுமே நம்பி வாழும் மரநண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. களக்காடு மலைப்பகுதியில் அபூர்வ பறக்கும் தவளை (களக்காடு கிளைடிங் ப்ராக்) காணப்படுவது இப்பகுதியின் உயிர்பன்மைக்கு மற்றும் ஒரு சான்றாகும்.

தாமிரவருணி வண்ணக்கெண்டை (புண்டியஸ் தாமிரவருணி) மீன் 1953-ம் வருடத்திலும், கேரா களக்காடன்சிஸ் மீன் 1993-ம் வருடத்திலும், கன்னிக்கட்டி கண்ணாடி கெண்டை (புண்டியஸ் கன்னிகட்டியன்சிஸ்) மீன் 2003-ம் வருடத்திலும் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட நன்னீர் மீன்கள் புலிகள் காப்பகத்தின் 55-க்கும் மேற்பட்ட மீன்வளத்தை பறைசாற்றுகின்றன.

புலிகள் காப்பகமும் பொதிகை மலையும்

மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைப்பகுதியில் அமைந்துள்ள இக்காப்பகத்தின் சிறப்பு மிக்க மலையாக அகஸ்தியர் மலை என்றழைக்கப்படும் பொதிகைமலைப்பகுதி அமைந்துள்ளது. பொதிகைமலை சூழல் சிறப்பு மட்டுமல்லாமல் வரலாற்று சிறப்புமிக்கதுமாகும். இம்மலையைப்பற்றி பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே... நடுக்கின்றி நிலையியர்..... என்று புறநானூறு 2- 20:24ல் பதிவிடப்பட்டுள்ளது.

கும்பமாமுனிவர் எனப்படும் 18 சித்தர்களில் முதல்வராக கருதப்படும் அகத்திய மாமுனிவர் இந்த பொதிகைமலையில் வாழ்ந்துள்ளார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 1866 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் அகஸ்தியருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியமாமுனிவர் இயற்றிய பேரகத்தியம் ஆதி தமிழ் இலக்கிய நூல் என அறியப்படுகிறது. பொதிகை மலைப்பற்றி "தங்குமுகில் சூழுமலை தமிழ் முனிவர் வாழும் மலை' என குற்றால குறவஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

அகத்தியரின் 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியரே தொல்காப்பியத்தை வகுத்தவர். எனவே இந்த பொதிகை மலை தமிழ் பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது. அடர்ந்த வனங்கள் கொண்ட மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று உருவாகுவதால் பொதிகைமலையில் இருந்து வரக்கூடிய காற்று "தென்றல்' என்று அழைக்கப்படுகிறது. தென்றலோடு தோன்றினாள் தமிழ்பெண் என்ற வழக்கும் உண்டு.

பொருநை நதி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 13 கிளை நதிகளை கொண்ட வற்றாத ஜீவநதியான தாமிரவருணியின் பிறப்பிடமாகும். இந்த நதிகள் 11 நீர்த்தேக்கங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. எனவே இது "நதிகளின் சரணாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது.

தாமிரவருணி மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நதியாகும். சங்க இலக்கியங்களில் தன் பொருநை நதி என்று அழைக்கப்பட்டது. தாமிரவருணி சிறப்பு குறித்து "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை திருநகை' என்று கம்பராமயணத்தில் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி நதி குறித்து "அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஸ்டாம்த்ரச்யத்' என்று ராமாயணத்திலும் பதிப்புகள் காணப்படுகின்றன.

சுற்றுலாத்தலங்கள்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்

  • அகஸ்தியர் அருவி,
  • மணிமுத்தாறு அருவி,
  • பாணதீர்த்தம்

போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளின் உவகைக்கு விருந்தாகின்றன. இங்கு அமைந்துள்ள சேர்வலார், காரையார், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி போன்ற அணைப்பகுதிகள் வனப்பு மிகுந்த சுற்றுலா தலங்களாகும். இக்காப்பகத்தில் அமைந்துள்ள நம்பிக்கோயில், சொரிமுத்தையனார் கோயில், அகஸ்தியர் கோயில், கோரக்நாதர் கோயில் போன்றவற்றிற்கு மக்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

சூழல் மேம்பாட்டுத்திட்டம்

வனங்களை பாதுகாத்திட, மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை ஓட்டியுள்ள கிராம பகுதிகளில் பொதுமக்களை ஒருங்கிணைத்து 243 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு சூழல் மேம்பாட்டு திட்டம் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராம வனக்குழு மக்களுக்கு வழங்கப்பட்ட 8 கோடி ரூபாய் சூழல் மேம்பாட்டு நிதி ரூ.84 கோடியாக சுழற்சியடைந்து கிராம பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நம் எதிர்கால சந்ததியினரிடமிருந்து முன் இரவலாகப் பெற்றே வளங்களை நாம் தற்போது நுகர்கின்றோம். நம் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட வனஉயிரினங்களை சற்றும் மாண்பு குறையாமல் பாதுகாத்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் போன்ற சூழல் மாண்புமிக்க, பொருளாதார சிறப்பு மிக்க, நீர் வளத்தின் பிறப்பிடமாக திகழ்கின்ற, உயரிய கலாசார பெருமைமிக்க வனப்பகுதிகளையும், வன உயிரினங்களையும் பாதுகாத்திட வனத்துறையுடன் தமிழக பொதுமக்கள் கரம் கோர்க்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை

2.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top