பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறு

செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறு பற்றி இங்கு காணலாம்

அறிமுகம்

கோட்டை என்றாலே தமிழக அரசு என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றது செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இந்தியாவில் பிரிட்டீஷார் கட்டிய முதலாவது கோட்டை இதுதான். 1600-ம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர்.

அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்ஸிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர் மூன்றாம் வெங்கடனிடம் (1630-1642) வேங்கடப்பர், அவரது சகோதரர் அய்யப்பர் ஆகிய இரு நாயக்கத் தலைவர்களும் (தாமல் சகோதரர்கள்) செல்வாக்குப் பெற்று விளங்கினர். வேங்கடப்பரின் தலைமையிடம் வந்தவாசியில் இருந்தது. அய்யப்பர் பூவிரிந்தமல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி புரிந்தார். புலிக்கட்டிலிருந்து (புல்லிநாடு) சாந்தோம் வரை உள்ள கடற்கரைப்பகுதி இவர் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தது.

வரலாறு

மசூலிப்பட்டினத்தில் தங்களது வாணிபச் செழிப்பிற்கு வாய்ப்பு இல்லாததைக் கண்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் தென்னிந்தியக் கடற்கறையில் தங்கள் வாணிபத்திற்கு ஏற்ற ஒரு இடத்தைப் பெற முற்பட்டனர். அப்பொழுது வேங்கடப்பர் ஆங்கிலேயருக்கு வியாபாரச் சலுகைகள் அளிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்ஸிஸ்டே என்பவர் மசூலிப்பட்டினத்திலிருந்த மேலதிகாரியின் அனுமதி பெற்று வேங்கடப்பரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாந்தோமுக்கு 5 கி.மீ. வடக்கில், மதராஸ் பட்டினத்தை அடுத்துள்ள மீனவர் வாழும் ஒரு கிராமத்தைப் பெற்று அங்கு ஆங்கிலேயர் தங்கி வாணிபம் செய்ய உரிமை பெற்றார். அதன் படி ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி 1, மார்ச்,1639 இல் நடந்தது. ஆண்டுக்கு 600 பவுண்ட் வாடகை கட்டவேண்டும் என்பது ஒப்பந்தம். அந்நிகழ்ச்சி நடந்தபொழுது முதலாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராயிருந்தார். இதைக் கட்டி முடிக்க £3000 அதாவது இந்தியப் பணம் ரூ. 2,45,514 ஆகும்.

வேங்கடப்பரிடம் பெற்ற கடற்கரைக் கிராமத்தில் ஆங்கிலேயர் கி.பி. 1640 முதல் வாணிபத்திற்காகக் குடியேற ஆரம்பித்தனர். கடற்கரையருகில் தங்கள் வாணிபத்தின் பாதுகாப்பிற்காக ஒரு கோட்டையைக் கட்டலாயினர். கோட்டையின் ஒரு பகுதி 1640-ல் கட்டி முடிக்கப்பட்டது. கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு ‘புனித ஜார்ஜ் கோட்டை’ என அழைக்கப்படலாயிற்று. கி.பி. 1641-ல் இக்கோட்டை சோழ மண்டலக் கரையில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையிடமாயிற்று. இதற்கு முன் மசூலிப்பட்டினமே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கி.பி. 1640 முதல் 1643 வரை கோகன் என்பவரும் அவரை அடுத்து பிரான்சஸிஸ்டே (1643-44)யும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனிக்கப் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆங்கில அதிகாரிகளாகப் பணியாற்றினர். இவர்களைத் தொடர்ந்து பல ஆங்கில அதிகாரிகளும், ஆளுநர்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் பதவி வகித்தனர்.

வேங்கடப்பரிடமிருந்து பிரான்ஸிஸ்டே கி.பி. 1639-இல் பெற்ற மீனவர் வாழ்ந்த கடற்கரைக் கிராமம், வேங்கடப்பரின் தந்தை சென்னப்பர் என்பவர் பெயரால் சென்னப்பட்டினம் என அழைக்கப்படலாயிற்று என்பர். ஆங்கிலேயர் பெற்ற சென்னப்பட்டினத்துக்கு வடக்கில் மதராஸ் பட்டினம் என்ற இடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னப்பட்டினத்திற்கும், மதராஸ் பட்டினத்துக்கும் இடையில் இருந்த பகுதியில் புதிய கட்டடங்களும் தெருக்களும் ஏற்பட்ட பின் இரு இடங்களும் ஒன்றாயின என்றும், ஒன்றாகிய பகுதியே ஆங்கிலேயரால் மதராஸ் பட்டினம் என்றும் தமிழக மக்களால் ‘சென்னைப்பட்டினம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று என்றும் கருதப்படுகிறது.

1678-ல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான புனித மேரி ஆலயம் கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு வித்திட்ட இராபர்ட் கிளைவின் திருமணம் 1753-ல் நடைபெற்றது. 1670-களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக இருந்தார். அவர் கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் போன்ற கிராமங்களை விலைக்கு வாங்கி பிரிட்டிஷ் பகுதியின் எல்லையை விரிவுபடுத்தினார்.

பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஒரு பள்ளிக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதுதான் வளர்ந்து இன்று புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. அந்த பிரபல யேலின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை மிகவும் முக்கியமானதாக கருதியதால், இதனைப் பாதுகாக்க சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பினர். 1695ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே கட்டிய போர்ட் ஹவுஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு, தற்போது தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தின் நடுவே அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஆங்கிலேய ஆளுநர் இல்லமும், அலுவலகமும் அமைக்கப்பட்டது. அங்கு ஆங்கிலேய வணிகர்கள் வீடுகளை கட்டிக் கொண்டு குடியேறினர். செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளையர் நகரம் என்றும், வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான கலைஞர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த பகுதி கருப்பர் நகரம் என்றும் இரு நகரங்கள் உருவாகின. கருப்பர் நகரம்தான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

1700 முதல் 1774 வரை புனித ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயர்களுக்கு தலைமையிடமாகத் திகழ்ந்தது. அதன்பிறகுதான் கல்கத்தா தலைமையிடமாக மாறியது. ஆங்கில பேரரசை தொடங்கி வைத்த ராபர்ட் கிளைவுடன் பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் போரிட்டு 1746இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டை பலவீனமாக இருந்ததால் எளிதில் பிரெஞ்சு படைகளிடம் வீழ்ந்துவிட்டது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் சாதுர்யமாகத் தப்பி கடலூரில் உள்ள டேவிட் கோட்டைக்கு சென்றுவிட்டார். இது அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

1749-இல் பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீண்டும் கைப்பற்றினர். இதனையடுத்து ராபர்ட் கிளைவ் மீண்டும் சென்னை திரும்பி கோட்டை பொறுப்பாளர் ஆனார். உடனடியாக கோட்டையை பலப்படுத்தும் பணி தொடங்கியது. கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடக்கே ஓடிக் கொண்டிருந்த எழும்பூர் ஆற்றின் பாதையை மாற்றி அதனை ஒரு அகழியாக்க முயற்சி மேற்கொண்டனர்.

கோட்டை 20 அடி உயரம் கொண்ட சுவர்களை உடையது. 1746  முதல் 1749-இல் பிரஞ்சு வசம் இருந்த கோட்டை Treaty of Aix-la-Chapelle மூலம் திரும்பப் பெறப்பட்டது.

1758-59-இல் பிரெஞ்சுக்காரரான லாலி என்பவரால் கோட்டை மீண்டும் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து, 1783 வரை கோட்டையை புனரமைத்து, பலப்படுத்தும் பணி தொடர்ந்தது. கருப்பர் நகரப் பகுதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு, பீரங்கிகள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட கோட்டையின் வடிவத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 107.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் வெல்லஸ்லி இல்லம், கிளைவ் இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டிடம் ஆகியவை தற்போதும் உள்ளன.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
தொடர்புடைய தகவல்கள்
மேலும்...
Back to top