பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / மாணவர்களின் கண்டறி முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாணவர்களின் கண்டறி முறை

மாணவர்களின் கண்ட றி முறை (Heuristic Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆசிரியர் துணை இல்லாமல் செய்தறிதல் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே கண்டறி முறை எனப்படும். லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் நிறுவனத்தில் (City and Guilds Institute) பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் H.E. ஆம்ஸ்ட்ராங் (H.E.Armstrong) என்பவரால் இம்முறை கண்டறியப்பட்டது. செயல்களை உண்மையாக நிகழ்த்தி, வெளிப்படும் முடிவுகளைக் கொண்டு கருத்துகளைக் கற்றுக் கொள்வதே அறிவியல் கற்பது என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். இம்முறையில் மாணவர்களுக்கு அறிவியல் நிகழ்வுகளைத் தாங்களாகவே கண்டறியும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே சில குறிப்புகள் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் ஒரு பிரச்சனையைக் கொடுத்து மாணவர்கள் அப்பிரச்சனையை எவ்வாறு ஆராய்கின்றனர் என்பதை கண்காணிப்பர்.

H.E. ஆம்ஸ்ட்ராங்கின் கருத்துப்படி, "அறிவியல் உண்மைகளையும், தத்துவங்களையும் முன் கூட்டியே அறிவிக்காமல், ஆராய்ச்சியாளர்களின் நிலையில் மாணவர்களை வைத்து அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க, அவர்களை சொந்த முயற்சிகளை மேற்கொள்ளச் செய்து, உண்மைகளைக் கண்டறியச் செய்வதுவே" கண்டறி முறையாகும்.

நோக்கங்கள்

  • இம்முறையின் மூலம் மாணவன் அறிவியல் யுக்தியைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பான். நிகழ்த்தவிருக்கும் செயல்களை விளக்குவான். சோதனைக் கருவிகளைச் சேகரிப்பான். சோதனைகளை நிகழ்த்திக் காட்டுவான். சோதனை முடிவுகளை எடுத்துரைப்பான். புதிய கருத்துக்களைக் கண்டறியும் அறிவைப் பெறுவான். சுயமாகச் சிந்திப்பான். தகவல்களைச் சேகரித்து, அவற்றிலிருந்து உண்மைகளைக் கண்டறிவான்.

வழிமுறைகள்

  • ஆசிரியர், ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எழுதப்பட்டத் தாள்களை கொடுத்துவிட வேண்டும். மாணவர்கள், அவர்கள் கையிலிருக்கும் தாளில் குறிப்பிட்டுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சோதனைகளைத் தாங்களாகவே நிகழ்த்த வேண்டும். குறிப்பேட்டில் கொடுத்துள்ள குறிப்புகளைக் கொண்டோ, அல்லது அவ்வப்போது ஆசிரியர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களைக் கொண்டோ மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தலாம். இம்முறையில், மாணவர்களிடம் குறிப்புகள் அடங்கிய தாள்களைக் கொடுத்த உடனே, அவர்கள் சோதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களின் அருகிலிருந்து தேவைப்படும் நேரத்தில் வழிகாட்டுதல்களைத் தர வேண்டும்.
  • குறிப்பேட்டில் உள்ள குறிப்பின்படி மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தி, சோதனையின் போது ஏற்பட்ட மாற்றங்களை, நிகழ்ந்த உண்மைகளைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பதிவேட்டில் பதிவு செய்த குறிப்புகளை இறுதியாக ஆராய்ந்து, சரியான முடிவுகளைக் கண்டறிதலே இம்முறையின் இறுதி நிலையாகும். இம்முறையில் மாணவர்கள் ஒரு ஆய்வாளரின் நிலையில் இருந்து உண்மைகளைக் கண்டறிவர். எனவே கண்டறி முறை என்பது மாணவர்களை ஆய்விற்குப் பயிற்றுவிக்கும் ஒரு முறையாகும். இம்முறையில் அறிவியல் கருத்துகளை அறிந்து கொள்வதை விட, பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

பிரச்சனைக்கான குறிப்பேட்டைத் தயாரித்தல் (Preparation of Instruction Sheets)

அமிலங்களின் மூலப்பொருள்கள், அமிலங்களின் பண்புகள், அமிலங்களின் வகைகள், காரங்களின் மூலப்பொருள்கள், காரங்களின் பண்புகள், காரங்களின் வகைகள், உப்புகளின் வகைகள், உப்புகளின் பண்புகள். மேற்கூறிய பாடக் கருத்துகளை மாணவர்கள் கண்டறி முறையின் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வர் என்பதைக் காணலாம். உதாரணமாக அமிலங்களின் மூலப்பொருள்கள் எவை? என்பதை மாணவர்கள் கண்டறிய ஆசிரியர்கள் கீழ்க்கண்டவாறு பிரச்சனைகள் எழுதப்பட்ட குறிப்பேடுகளைத் தயாரிக்க வேண்டும்.

மாற்றங்களைப் பதிவு செய்தல்

நீல லிட்மஸ் தாளை புளிக் கரைசலில் நனைத்தவுடன் நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது. ஏனெனில் அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும். இந்த மாற்றத்தை மாணவர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முடிவுக்கு வருதல்

  • பதிவு செய்த மாற்றங்களை ஒரு ஆய்வாளரின் நிலையில் இருந்து மாணவர் ஆராய்ந்தறிவதில், புளியில் அமிலத்தன்மை உள்ளது என்ற உண்மையை அறிந்து கொள்கிறார்கள். எனவே, அமிலத்தின் ஒரு மூலப்பொருள் 'புளி' என்ற முடிவுக்கு வருகின்றனர்.
  • மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றியதன் மூலம் மாணவர் தனக்குக் கொடுத்த பிரச்சனையான 'அமிலத்தன்மை உள்ள பொருள்கள் யாவை?' என்பதற்கான தீர்வைக் கண்டறிந்து கொள்கின்றனர். கிடைத்த தீர்வை ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
  • இதே வழிமுறைகளைப் பின்பற்றி, மற்ற பிரச்சனைகளான பாலில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன? கனிமப் பொருள்களில் அமிலங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கும் ஆசிரிய மாணவர்கள், கற்பித்தல் பயிற்சியின் போது பள்ளி மாணவர்களிடம் இம்முறையைப் பின்பற்றக் கூறி அவர்களையே முடிவைக் கண்டறியச் செய்யலாம்.
  • 'விதை முளைத்தல்' என்ற பாடத்தில், விதை முளைப்பதற்குத் தேவையான காரணிகள் மற்றும் விதை எவ்வாறு முளைக்கிறது? முளைப்பதற்கான கால அளவு இவற்றைப் பற்றி மாணவர் தெரிந்து கொள்ள கண்டறி முறையைப் பயன்படுத்தலாம். விதை முளைத்தலுக்குத் தேவையான விதைகளை மாணவரால் எளிதில் சேகரிக்க முடிவதோடு, விதை முளைக்கும் நிகழ்வு அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதால் இச்சோதனையில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வமுடன் இருப்பர். கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மாணவரை இம்முறையில் ஈடுபட ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும்.

மாணவரின் பங்கு

  • இப்பிரச்சனையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர், குறிப்பின் மூலம் விதை முளைக்க பழுதில்லாத விதைகள், மண், நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க சோதனைகளில் ஈடுபட வேண்டும். இதற்கு அவரை விதைகள், மண், நீர் மற்றும் ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். விதை முளைப்பதற்குத் தேவையான காரணிகளைக் கண்டறிய கீழ்க்கண்ட செயல்களைச் செய்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோதனை நிகழ்த்துதல்

  • முதலில் ஐந்து (100 மி.லி.) கண்ணாடி பீக்கர்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு முறையே 1, 2, 3, 4 மற்றும் 5 என்ற எண்களினால் குறித்துக் கொள்ள வேண்டும். முதல் நான்கு பீக்கர்களை எடுத்துக் கொண்டு அவற்றில் முக்கால் பகுதியை நல்ல செம்மண்ணினால் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஐந்தாவது பீக்கரை செம்மண்ணினால் நிரப்பக் கூடாது.
  • பழுதில்லாத நான்கு அவரை விதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்று விதைகளை முதல் மூன்று பீக்கரில் உள்ள மண்ணில் விதைத்து விட வேண்டும். நான்காவது விதையை மண்ணில்லாத ஐந்தாவது பீக்கரினுள் போடவேண்டும். நான்காவது பீக்கரினுள் பழுதடைந்த விதையை விதைக்க வேண்டும். 'ஒன்று' மற்றும் நான்கு எண்ணிடப்பட்ட பீக்கர்களை வகுப்பறைக்கு வெளியே சூரிய ஒளி கிடைக்கும்படியாக வைத்துவிட வேண்டும். இரண்டு மற்றும் மூன்று அடையாளமிட்ட பீக்கர்களை வகுப்பறையினுள் அலமாரிக்குள் வைத்து, அதன் கதவுகளை மூடிவிடுதல் வேண்டும். 'ஐந்து' எண் இடப்பட்ட பீக்கரை வெளியே வைக்கலாம்.
  • மாணவர்கள் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு விதை விதைக்கப்பட்ட ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் தவறாமல் உற்று நோக்கி, விதை முளைப்பதற்கு தேவையான பராமரிப்பை ஆசிரியரின் உதவியோடு செய்தல் வேண்டும்.

பராமரித்தல்

'1' மற்றும் '3', '4', '5' எண்ணிடப்பட்ட கண்ணாடி பீக்கரினுள் விதைக்கப்பட்டுள்ள விதைகளுக்கு மாணவர் ஐந்து நாட்களுக்கும் தினமும் காலையில் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். '2' எண்ணிடப்பட்ட பீக்கரினுள் ஊன்றப்பட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. ஐந்து நாட்களுக்குப் பிறகு ஐந்து பீக்கரிலும் உள்ள விதைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஆசிரியரின் உதவியோடு கண்டறிய வேண்டும். தேவைப்படின், பாடப்புத்தகம் மற்றும் பிற வழிகாட்டி நூல்களில் விதை முளைத்தலுக்கு தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்து, உண்மை நிகழ்வோடு ஒப்பிடலாம்.

மாற்றங்களைப் பதிவு செய்தல்

  • ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஐந்து கண்ணாடி பீக்கர்களையும் ஒன்றாகச் சேகரித்து, ஓரிடத்தில் வைத்து, விதைக்கப்பட்ட விதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்று நோக்கி, பதிவேடுகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • '1' எண்ணிடப்பட்ட பீக்கரில் விதைக்கப்பட்ட விதையிலிருந்து மண் பகுதிக்கு மேலே சிறிய முளைவேர்ப் பகுதி வெளி வந்திருப்பதைக் காணலாம். இது விதை முளைத்தலுக்கான அறிகுறியாகும். 1ம் எண் பீக்கரில் இருந்த விதை நல்ல விதை. தேவையான அளவு தண்ணீர், காற்று, செம்மண் மற்றும் சூரிய ஒளி ஆகியவை கிடைத்ததால் அந்த விதையிலிருந்து முளைவேர்ப் பகுதியும், தண்டுப்பகுதியும் வெளிப்பட்டிருக்கின்றன.
  • மேற்கண்ட முறையில், ஒரு மாணவர், ஆசிரியர் உதவியுடன் சோதனையை உண்மையாக நிகழ்த்தி, ஏற்பட்ட மாற்றங்களை உற்று நோக்கி விதை முளைப்பதற்கான காரணிகள், அமிலத்தின் பண்புகள், ஒளி எதிரொலித்தல் விதிகள் ஆகியவற்றை தானாகவே கண்டறிந்து கற்கிறான்.

நன்மைகள்

  • மாணவர்களிடையே இம்முறை விசாரணை செய்யும் பழக்கத்தையும், புலனாய்வுத் திறனையும் வளர்க்கிறது.
  • தன் வழிகாட்டுதல் மற்றும் தானே கற்றல் பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறது.
  • செயல்களை உண்மையாக நிகழ்த்தி முடிவுகளை கண்டறிவதால், மாணவர்களிடையே நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அறிவியல் மனப்பான்மையை உண்டாக்குகிறது.
  • மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தும் போது ஆசிரியர்கள் மாணவர் அருகிலேயே இருப்பதால், ஆசிரியருக்கும் - மாணவருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.

வரம்புகள்

  • இம்முறை அதிக கால அளவை எடுத்துக் கொள்வதால், பாடத்திட்டப் பகுதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாது.
  • இம்முறையில் மாணவர்களைப் பழக்கப்படுத்த, திறமை மிக்க ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். பல நுணுக்கங்களையும் கற்றுத் தர வேண்டியிருப்பதால் சராசரியான ஒரு ஆசிரியரால் இம் முறையில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க இயலாது.
  • சோதனைகளை நிகழ்த்தத் தேவைப்படும் திறன்கள், அனைத்து மாணவர்களிடமும் காணப்படாது. இதற்கென மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது.
  • சோதனைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், அறிவியலுக்காக சோதனை என்ற நிலை மாறி 'சோதனைகளே அறிவியல்' என்ற தவறான கருத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது.
  • ஒரு நல்ல ஆய்வுக்கூடம், ஆர்வமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள், ஏராளமான உபகரணங்கள், நல்ல நூல் நிலையம், குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்பு முதலியன இருந்தாலொழிய இம்முறையைச் சிறப்பாகப் பின்பற்ற இயலாது.

முடிவுரை

இந்த முறையை தொடக்க வகுப்புகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவது சற்று கடினம். ஆனால் உயர் தொடக்க வகுப்புக்கள் மற்றும் உயர்நிலை வகுப்புகளில் இம்முறையை செயல்படுத்த இயலும். இருப்பினும் வகுப்பறையில், இம்முறையைப் பின்பற்றுவதற்கு ஆசிரியரின் ஆர்வம் மிகவும் அவசியமானதாகும். எனவே, கண்டறி முறையைப் பின்பற்றி அறிவியல் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளாவிட்டாலும், இம்முறையின் அடிப்படையாக அமைந்துள்ள ஆராய்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க ஊக்குவிக்கும்.

ஆதாரம் :தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top