பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கொல்லாமை

கொல்லாமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

துறவறவியல்

கொல்லாமை

321. அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச் செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.

விளக்கம்

(அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களல்லாம் கூடியம் விளைக்க மாட்டா என்பதாம் கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.) ---

322. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு, ஐகை உயிர்களையும் ஓம்புதல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.

விளக்கம்

('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின், அச் சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும், அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான், 'இது தலையாய அறம்' என்றும் கூறினார். ---

323. ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.

விளக்கம்

('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும், மேல் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின்' எனவும், 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை' எனவும் கூறினார் ஆகலின், இரண்டு அறந்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே! அது நிகழாமைப்பொருட்டு, ஈண்டு, 'அதன் பின்சாரப் பொய்யாமை நன்று' என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் 'பின்சார நன்று' என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

324. நல்ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.

விளக்கம்

('யாது ஒன்றும்' என்றது. ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.) --

325. நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாம் நிலைமை.

விளக்கம்

(துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால் பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார். இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.) ---

326. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.

விளக்கம்

("மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்பயன் அனுபவிப்பர்' என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம்செய்தான் தானும் கொல்லப்படான்; படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார், 'வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது,' என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவற்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---

327. தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்; தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.

விளக்கம்

('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி, 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிற செய்தலும் ஆகாமையின், அஃது உரையன்மை அறிக.) ---

328. நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம்பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்; சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை,

விளக்கம்

(இன்பம் மிகும் செல்வமாவது, தாமும்தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும், பின்னும்பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது.துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்கு ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கிய வாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.) ---

329. கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.

விளக்கம்

('கொலை வினையர்' என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.) ---

330. செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழி தொழில் வாழ்க்கையினை உடையாரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர்' என்று சொல்லுவர் வினை விளைவுகளை' அறிந்தோர்.

விளக்கம்

('செல்லா வாழ்க்கை, தீ வாழ்க்கை' எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், 'அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழு நோய் எழுபவே' (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும், அஃது அறிந்து அடக்கிக் கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.30769230769
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top