অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தீவினையச்சம்

தீவினையச்சம்

இல்லறவியல்

தீவினையச்சம்

201 தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை; தீவினையார் அஞ்சார்-முன் செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-அஃது இலராகிய சீரியர் அஞ்சுவர்.

விளக்கம்

('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்த அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.) ---

202 தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.

விளக்கம்

(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.) ---

203 அறிவினுள் எல்லாம் தலை என்ப-தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.

விளக்கம்

(விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும், செய்யத் தக்குழியுஞ் செய்யாது ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.) ---

204 பிறன் கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.

விளக்கம்

('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.) ---

205 இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.

விளக்கம்

(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.) ---

206 நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக் கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.

விளக்கம்

(செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.) ---

207. எனைப்பகை உற்றானாம் உய்வர்-எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்

விளக்கம்

("வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.) ---

208. தீயவை செய்தார் கெடுதல்-பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று-ஒருவன் நிழல் நொடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கி தன்மைத்து.

விளக்கம்

(இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு 'அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று' என்னாது, 'வீயாது அடி உறைந்தற்று,' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார். ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.) ---

209. தன்னைத் தான் காதலன் ஆயின்-ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்; தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.

விளக்கம்

(நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், 'தீவினைப் பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்து தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார். ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.) ---

210. மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்-ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-அவன் அரிதாகிய கோட்டையுடையவன் என்பது அறிக.

விளக்கம்

(அருமை:இன்மை. அருங்கேடன் என்பதனை, "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்" (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 11/16/2022



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate