অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

துறவு

துறவு

துறவறவியல்

துறவு

341. யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

விளக்கம்

(அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீக்குதல் - துறத்தல். ஈண்டத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி, ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.) ---

342. துறந்த பின் ஈண்டு, இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல; வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக் காலம் பெறத் துறக்க.

விளக்கம்

(அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன.இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக் கண் துன்பங்கள் இல்லாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.) ---

343. ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.

விளக்கம்

('புலம்' என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள்மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.) ---

344. ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்; உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயக்குவதற்கு ஏதுவாம்.

விளக்கம்

(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப் பெயர்த்தலான்' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாக விட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது' என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.) ---

345. பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவிஆகிய உடம்பும் மிகை ஆம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்?

விளக்கம்

('உடம்பு' என்ற பொதுமையான், உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள், அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம்; இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.) ---

346. யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கொடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.

விளக்கம்

(மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பற்சியானும் அவை 'யான், எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது என்பது கூறப்பட்டது.) ---

347. பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றி விடாதாரை; இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா.

விளக்கம்

(இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல்; 'விடாஅதவர்க்கு' என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.) ---

348. தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.

விளக்கம்

(முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் 'தலைப்பட்டார்' என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.) ---

349. பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே, அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமைகாணப்படும்.

விளக்கம்

(காரணமற்ற பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். "அற்றது பற்றெனில், உற்றது வீடு" (திருவாய் 1-2-5) என்பதூஉம் அதுபற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன. ---

350. பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, 'இதுவே நன்னெறி' என்று மனத்துக் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க, விடாது வந்த பற்று விடதற்கு.

விளக்கம்

(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் 'பற்றற்றான்' என்றார். 'பற்று அற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் 'பற்று' என்றது, பற்றப்படுவதனை 'அதன்கண் உபாயம்' என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும்உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 2/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate