অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நெஞ்சொடுகிளத்தல்

நெஞ்சொடுகிளத்தல்

கற்பியல்

நெஞ்சொடுகிளத்தல்

1241. தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது. நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன்; எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.

விளக்கம்

(எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்,' என்றாள்.) ---

1242. தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது. என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; காதல் இலராக நீ நோவது - அவா நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே; பிறிதில்லை.

விளக்கம்

('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பது அறியலாம்; அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்; இது, நீ செய்து கொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு. 'யாம்' அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.) ---

1243. இதுவும் அது. நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே, அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்துபடுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பயுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது.

விளக்கம்

('நம்மாட்டு அருளுடையர், அன்மையின், தாமாக வாரார்; நாம் சேறலே இனித் தகுவது' என்பதாம்.) ---

1244. இதுவும் அது. நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீஅவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.

விளக்கம்

('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம்: என்றது, தான் சேறல் குறித்து.) ---

1245. இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர்யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.

விளக்கம்

(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தருவது' என்பதாம்.)

1246.  தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது. என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கண்டால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டா நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயா நின்றாய்; இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.

விளக்கம்

('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.) ---

1247. நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது. நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காமவேட்கையை விடு; ஒன்று நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.

விளக்கம்

('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது 'நல்நெஞ்சே' என்றது, 'இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிறுண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்,' என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.) ---

1248. பேதையென் னெஞ்சு.  இதுவும் அது. என் நெஞ்சு நெஞ்சே அவர் பிரிந்து நல்கார என்று இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து  தலையளி செய்யாராயினார கருதி பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை அறிவித்தற் பொருட்டு நம்மைப் போயவர்பின் செல்லலுற்ற நீ யாதும் அறியாய்.

விளக்கம்

(ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)

1249. இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?

விளக்கம்

('உள்ளம்' என் புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற வரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து அதனை ஒழி,' என்பதாம்.) ---

1250 'அவரை மறந்து ஆற்றல் வேண்டும்' என்பதுபடச் சொல்லியது. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்போம்.

விளக்கம்

("குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" (குறுந். கடவுள் வாழ்த்து) என்புழிப்போல 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும், நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி 'நிறன் நிறையும் இழப்போம்,' என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 4/27/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate