பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புணர்ச்சி மகிழ்தல்

புணர்ச்சி மகிழ்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

களவியல்

புணர்ச்சி மகிழ்தல்

1101.  இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்ணே உளவாயின.

விளக்கம்

(உம்மை, முற்று உம்மை. தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.) ---

1102. இடந்தலைப் பாட்டின் கண் சொல்லியது. பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன் நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள்.

விளக்கம்

(இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந்தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து ' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப் பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.) ---

1103. 'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

விளக்கம்

(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.) ---

1104. பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும். அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்? -

விளக்கம்

(என் கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்? கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றிதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான். அவளான் அது வெளிப்படுதலின்.)

1105. தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவைதாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினை யுடையாள் தோள்கள்.

விளக்கம்

(தோடு: ஆகுபெயர். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.) ---

1106. கமிழ்தி னியன்றன தோள். இதுவும் அது. உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால் - தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.

விளக்கம்

(ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று - வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.) ---

1107. 'இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அம் மா அரிமை முயக்கு அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம். தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற் கண் தமக்குரிய இல்லின் கண் இருந்து உலகோர் தம் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்.

விளக்கம்

(தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று.) ---

1108. 'ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது' என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.

விளக்கம்

(நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.) ---

1109.  'கரத்தல் வேண்டாமையின், இடையறவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து' என வரைவு கடாவியாட்குச் சொல்லியது. ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்?

விளக்கம்

('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும். அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவ்வூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளிள் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா,' என, அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.) ---

1110. புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது. அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச் செறிய இவள்மாட்டுக் காதல்.

விளக்கம்

(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப் பெறாது அவாவுற்றான், இது பொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றான். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறிய அறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத் தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top