பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கொங்கு நாடு

கொங்கு நாடு பற்றிய வரலாறு இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரலாறு

கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு. தேன் பூந்தாது, குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மருத நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.

"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந் 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும், "கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார். "கொங்கு முதிர்நறு விழை" (குறிஞ் 83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது.

சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு நாட்டைக் காடு கொடுத்தது நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான்.

கொங்கு மண்டலம்

கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி கோவை, சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.

கொங்கு - 24 நாடுகள்

1. பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்

2. தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்

3. காங்கேய நாடு - தாராபுரம், காங்கேயம் பகுதிகள்

4. பொங்கலூர் நாடு - பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்

5. ஆரை நாடு - கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்

6. வாரக்கா நாடு - பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்

7. திருஆவின் நன்குடி நாடு - பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்

8. மணநாடு - கரூர், வட்டம் தெற்கு பகுதி

9. தலையூர் நாடு - கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.

10. தட்டயூர் நாடு - குளித்தலை வட்டம்

11. பூவாணிய நாடு - ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்

12. அரைய நாடு - ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.

13. ஒடுவங்கநாடு - கோபி வட்டம்

14. வடகரைநாடு - பாவனி வட்டம்

15. கிழங்கு நாடு - கரூர், குளித்தலை வட்டம்

16. நல்லுருக்கா நாடு - உடுமலைப்பேட்டை

17. வாழவந்தி நாடு - நாமக்கல் வட பாகம், கரூர்

18. அண்ட நாடு - பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி

19. வெங்கால நாடு - கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி

20. காவழக்கால நாடு - பொள்ளாச்சி வட்டம்

21. ஆனைமலை நாடு - பொள்ளாச்சி தென்மேற்கு

22. இராசிபுர நாடு - சேலம், ராசிபுரம், கொல்லிமலை

23. கஞ்சிக் கோயில் நாடு - கோபி, பவானிப் பகுதி

24. குறும்பு நாடு - ஈரோடுப் பகுதி

மலைகளும் கோட்டைகளும்

1. அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை

2. கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள் மலை

3. பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை

4. உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை

5. பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை

6. தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை

7. ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை

8. கோபி - தவளகிரி, குன்றத்தூர்

9. பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை

10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை

11. திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு

12. இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை

13. சேலம் - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி

14 . நாமக்கல் - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை

15. கரூர் - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை

16. பழனி - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.

கொங்கு கோட்டைகள்

 • கோயம்புத்தூர்,
 • சத்தியமங்கலம்,
 • கொள்ளேகால்,
 • தணாய்க்கன்,
 • பொள்ளாச்சி,
 • ஆனைமலை,
 • திண்டுக்கல்,
 • தாராபுரம்,
 • பொன்னாபுரம்,
 • பெருந்துறை,
 • எழுமாத்தூர்,
 • ஈரோடு,
 • காங்கேயம்,
 • கரூர்,
 • விஜயமங்கலம்,
 • அரவக்குறிச்சி,
 • பரமத்தி,
 • பவானி,
 • மோகனூர்,
 • நெருஞ்சிப் பேட்டை,
 • மேட்டூர்,
 • சரம்பள்ளி ,
 • காவேரிபுரம்,
 • சேலம்,
 • தகடூர்,
 • ராயக்கோட்டை,
 • அமதன் கோட்டை,
 • ஓமலூர்,
 • காவேரிப்பட்டினம்,
 • தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,
 • பெரும்பாலை,
 • சோழப்பாவு,
 • தொப்பூர்,
 • அரூர்,
 • தென்கரைக்கோட்டை,
 • ஆத்தூர்,
 • சேந்தமங்கலம்,
 • நாமக்கல், 300 அடி,
 • சங்ககிரி - 1500 அடி,
 • சதுரகிரி - 3048 அடி,
 • கனககிரி - 3423 அடி,
 • மகாராசக்கடை - 3383 அடி,
 • தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி.
 • இரத்தினகிரி - 2800 அடி,
 • சூலகிரி - 2981 அடி,

ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம்.

14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.

நதிகளும், தலங்களும்

கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆறு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு, திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம். அவிநாசி, நாமக்கல், பவானி, வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல், திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். `கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்.

கொங்கு நாட்டை ஆண்டவர்கள்

கரிகால சோழன் காலம் கி.மு 60 - 10 ஆகும் என்பர். இவனைப் பாடியவர்கள் கிளாத்தலையார், பரணர், கபிலர் என்பவர்களாம். இவன் வெண்ணிப் போரில் சேரனையும், பாண்டிய மன்னனையும் கொங்கு நாட்டு 11 வேளிர்களையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். கொங்கு நாட்டை நாடாக்கியவன் இவன். இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வெள்ளாள மகளை மணந்தான். கரிகாலன் பிறந்தான். கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். இருங்கோவேள் என்ற கொங்கு நாட்டு வெளிர் அரசனை அடக்கி வைத்தான்.

கொங்கு நாட்டைக் காடு கெடுத்து நாடக்கினான். கொங்கு வேளாளர்களைத் தொண்டை நாட்டு 24 கோட்டங்களில் குடியேற்றினான். இவனால் குடியேற்றப்பட்டவர்கள் தான் தஞ்சைக்குச் சென்று தாராபுரம் குடிபுகுந்தனர்.

சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை ஆண்ட பேரரசன். இவனது ஆட்சிக்காலம் - கி.பி. 150 - 205. இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார். கொல்லிமலை கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகும். சோழ நாட்டின் வடமேற்கு எல்லையாகும். இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான். அதியமானும், தனியாட்சி செய்தான். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர் கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது.

செல்வக் கருங்கோ வாழியாதன், பெருஞ்செரலிரும்பொறை, இளஞ்செரலிரும்பொறை, மாந்தரஞ்செரலிரும்பொறை ஆகியோர் இத்தலைநகரிலிருந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள். பெருஞ்செரலும், இளஞ்செரலும், நாமக்கல் வேட்டாம் பாடியில் பாசறை அமைத்துத் தங்கினர். நாமக்கல் கொங்கு வேளாளர் பிட்டன்கொற்றனை, படைத்தலைவனாக வைத்திருந்தனர். கி.பி 130 - 180 இல் இவர்கள் கொங்கு நாட்டை ஆண்டனர். காரியுடன் சேர்ந்து முதலில் ஓரியைக் கொன்றனர். பின் அதியமானையும் கொன்றனர். கொல்லி மலை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பிட்டன் கொற்றனிடம் கொல்லி மலையை ஒப்படைத்தனர்.

செங்கணான் கி.பி. 250 இல் சோழநாட்டை ஆண்டான். இவன் கொங்கர்களையும் வஞ்சிக் கோவையும் வென்றான் என்று சோழர் வரலாறு கூறும். இந்தக் கொங்கர்கள் கொங்கு நாட்டு வேளாளர்களே, சுந்தரர் செங்கணானை உலகமாண்ட தென்னாடன் குடகொங்கச் சோழன் என்று புகழ்ந்தார். மகேந்திர வர்மனும், அவன் மகன் நரசிம்ம வர்மனும் கொங்கு நாட்டு தழுவி ஆட்சி செய்தனர். நாமக்கல் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், நரசிம்மர் குடவரைக் கோயில் ஆகியவைகளை அமைத்தனர். ஆஞ்சநேயர் சிலையும் நரசிம்மன் காலத்தில் செய்யப்பட்டது. குணசீலன் நரசிம்மன் மைத்துனன் இதனைச் செய்தான்.

கி.பி. 800 இல் ஆதித்தசோழன் தஞ்சையில் முடிசூடிக்கொண்டான். கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான். கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான். கொங்குவேளாளர் இனத்தைச் சார்ந்த விக்கியண்ணன் இவனது படைத்தலைவன். இவனது மனைவிதான் கடம்பமாதேவி. இவனுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை ஆகியவற்றைப் பெரும் உரிமையும் நல்கியிருந்தான். செம்பியன் தமிழ்வேள் என்ற பட்டமும் கொடுத்தான். கி.பி. 1033 இல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. இதனை கொங்க மண்டலம் எனப்பிரித்தான் என்று சோழர் வரலாறு கூறும்.

முதல் ராசராசன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. கொல்லிமலைக் கற்களைக் கொண்டுதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப்பெரரசும் 13 , 16 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களும் கொங்கு நாட்டை ஆண்டனர். இதன்பின் முகமதியர் ஆட்சியும், ஆங்கில ஆட்சியும் வந்தது.

விஜய நகரப் பேரரசுக் காலத்தில் சாலிவாகன சகாப்தம் கி.பி 1443 இல் இராமதேவராயர் கொங்கு நாட்டை ஆண்டான். மதுரை வரையிலும் இவன் ஆட்சி இருந்தது. திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, சேந்த மங்கலம், தாரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பக் கோயில் மண்டபங்கள் கட்டப்பட்டன. இவன் கிருஷ்ணதேவராயர் மரபில் வந்தவன். எனவே கொங்குநாட்டிற்குச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறிகிறோம். கொங்குநாடும் கொங்கு வேளாளர்களும் தொன்மையான வரலாற்றிற்கும், பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்பதை அறிகிறோம் பதிற்றுப்பத்து அகம், புறம் ஆகிய சங்க இலக்கியங்கள் சங்ககாலக் கொங்கு வேளாளர் தம்வரலாற்றைக் கூறுகின்றன என்பதை அறிகிறோம்.

கொங்குநாடு எல்லையும் இருப்பிடமும்

கொங்கு நாட்டின் கிழக்கு எல்லை கொல்லிமலையும், சேர்வராயன் மலையும் ஆகும். கொல்லிமலை சோழநாட்டின் எல்லையாக இருந்தாலும், சேர நாட்டைச் சேர்ந்தது. தெற்கு எல்லை பழனிமலை, ஆனைமலை, வராகி மலையாகும். மேற்கு எல்லை நீலகிரி மலைத்தொடர், வெள்ளிமலை ஆகியவாகும். வடக்கு எல்லை தலைமலை, பர்கூர் , தோப்பூர் மலைத் தொடர்களாம். கொங்கு நாட்டின் முக்கிய ஆறுகள் பவானி, நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு ஆகியனவாம்.

கொங்குநாட்டின் குடிமக்கள்

சங்க காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் வேளிர், பூழியர், மழவர், வேடர் ஆகியோர்களாம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தாம் வெளீர் எனப்பட்டனர். கிழார் என்பவர்களும் இவர்களே, பூழியர்கள் இடைக்குலமக்கள், மழவர்கள் வீரமிக்கவர்கள் ஓரியின் இனத்தவர்கள் வேடர்கள் வேட்டை ஆடுவோர். கொங்கு மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது. கொங்கு வேளாளர், வேட்டுவர் , நாவிதர் , செட்டியார் , முதலியார், சாணார், புலவர், தச்சர், குயவன், பண்டாரம், வண்ணான், சிவியர், ஓவியர், தட்டார், இடையன், கன்னார், கொல்லன், மலைக்காரர், வலையன் என்பவர்கள் ஆவர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் முதற்குடிமக்கள். இவர்களுக்கு மட்டுமே கொங்கு என்ற மொழி இன்றும் நிலைத்து இருக்கிறது.

ஆதாரம் : ஆனந்த விகடன்

3.07317073171
bala Apr 30, 2018 11:37 AM

அருமையான பதிவு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top