பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தின் வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பொது விபரம்

 • வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து);
 • காவல் நிலையம்- 31
 • அஞ்சல் நிலையங்கள்
 • தலைமை அஞ்சலகம் - 394
 • திரையரங்குகள்: 136
 • தொலைபேசிகள்: 96,564

உள்ளாட்சி நிர்வாகம்

 • மாநகராட்சி - 1
 • நகரசபைகள் - 3
 • ஊராட்சி ஒன்றியங்கள் - 20
 • பேரூராட்சிகள் - 34
 • பஞ்சாயத்துகள் - 376
 • கிராமங்கள் - 3,100

வருவாய் நிர்வாகம்

 • கோட்டங்கள் - 4
 • வட்டங்கள் - 9

சட்ட சபை தொகுதிகள்

 • மேட்டூர்
 • தாரமங்கலம்
 • பனைமரத்துப்பட்டி
 • ஓமலூர்
 • ஏற்காடு
 • சேலம்-1
 • சேலம்-2
 • வீரபாண்டி
 • ஆத்தூர்
 • தலைவாசல்
 • சங்ககிரி
 • எடப்பாடி

பாராளுமன்றத் தொகுதிகள்

 • ராசிபுரம் (நாமக்கல்)
 • சேலம்
 • திருச்செங்கோடு
 • தர்மபுரி (சேலம் மட்டும் முழுத்தொகுதி)

கல்வி

பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

பள்ளிகள்

 • தொடக்க நிலை - 1,254
 • நடுநிலை - 120
 • உயர்நிலை - 103
 • மேநிலை - 33
 • கல்லூரிகள்:
 • மருத்துவம் - 2
 • பல் மருத்துவம் - 1
 • பொறியியல் - 4,
 • பாலிடெக்னிக் - 5
 • சட்டம் - 1
 • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 11.

முக்கிய விளைபொருள்கள்

 • நெல்
 • பருப்புவகைகள்
 • பருத்தி
 • மரவள்ளிக் கிழங்கு
 • கரும்பு
 • நிலக்கடலை
 • மாம்பழம்
 • ரோஜா
 • மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகள்

 • விவசாயம் சார்ந்தவை - 125
 • காடு சார்ந்தவை - 31
 • கனிமப் பொருள் - 38
 • துணியாலைகள் - 393
 • பொறியியல் - 20
 • வேதிப்பொருள் - 95
 • ஸ்டார்ச் - 726
 • ஏனையவை - 410

சுற்றுலா இடங்கள்

 • ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்),
 • மேட்டூர் அணை
 • தாரமங்கலம் கோயில்
 • சேலம் உருக்காலை
 • சேலம் கந்தாஸ்ரமம்
 • குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

வழிபாட்டிடங்கள்

 • சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
 • கந்தாஸ்ரமம்
 • தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்
 • சேலம் ராஜகணபதி ஆலயம்
 • சுகவனேஸ்வரர் திருக்கோயில்.

முக்கியத் திருவிழாக்கள்

 • மாரியம்மன் திருவிழா.
 • ஆடிப்பெருக்கு விழா,
 • ஏற்காடு கோடை விழா.

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்

 • டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்;
 • மோகன் குமாரமங்கலம் - அமைச்சர்;
 • சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்;
 • டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்);
 • எஸ்.பி.ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்) இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
 • இசையரசி சேலம் ஜெயலட்சுமி;
 • முன்னாள் அமைச்சர் இராசாராம்;
 • புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை; இராமசாமி கவுண்டர்;
 • சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார்;
 • 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன்,
 • கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம்,
 • சேலம் தமிழ்நாடன் முதலியோர்.

இயற்கை வளம்

இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி திணையைச் சார்ந்தது. கல்ராயன், சேர்வராயன், கஞ்சமலை, தீர்த்தலை, ஏற்காடு மலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை.

கனிவளம்

கஞ்சமலை, தீர்த்தலை முதலிய மலையில் இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட் தாது இந்தியாவிலேயே முதல் தரமானதாகக் கருதப்படுகிறது.

மாவட்ட மக்கள்

இம்மாவட்டத்தில் பெருமளவு வன்னியர்களும், வேளாள கவுண்டர்களும் வாழ்கின்றனர். தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், சேலம் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் செய்யும் செங்குந்த முதலியார்கள் அதிகளவில் உள்ளனர். எத்தாப்பூர், புத்திரகவுண்டன் பாளையம், பெத்த நாயகன் பாளையம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு நாயக்கர்களும், சேலத்தின் தென்பகுதி, எளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் கன்னட சாதியினரும் வாழ்கின்றனர். மாவட்டத்தின் ஆதி குடிகளான மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.

வேளாண்மை

ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழமும் இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியவை பணப்பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன.

வசிட்டா நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன. இவ்விவசாயப் பிரிவில் சுமார் 45095 கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளால் சுமார் 11.2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதிகள் பெறுகின்றன. இப்பிரிவில் 22,500 கிணறுகளில், மின்சாரப் பம்பு செட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நெசவுத்தொழில்

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன. சேலம், வெண்ணந்தூர் ஆகிய இடங்களிலும், ஜலகண்டபுரத்தில் இப்போது பவர்லும் தறிகள் மிகுதியாக உள்ளன. சேலம் நகரத்தில் அம்மாப்பேட்டைப் பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டிப் பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில் 7 சதவீதம் கால்நடைகள் சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. ஓமலூர் வட்டத்திலுள்ள மேச்சேரியில் நல்ல தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாடுகளின் மாமிசமும், தோலும் தரத்தில் உயர்ந்ததவை. இவ்வாடுகளின் தரத்தை உயர்த்த கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், அரசாங்க நிதி உதவியோடு செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் காங்கேயம் மாடுகள், நெல்லூர் பசுக்கள், ஓசூர் பசுக்கள், சிந்திப் பசுக்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. மேச்சேரியில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகின்றது.

'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.

சேலம் மாவட்ட தொழில் வளம்

சேலம் மாவட்டத்து மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சேலம் (உடையாபட்டி), சேலம், ஆத்தூர், (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்து சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.

பிரபல ஊர்கள்

சேலம்

சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு. கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர். சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள். இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.

சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது. சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள் : இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

சுகவனேசுவரர் கோயில்

கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார், கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம். இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில் சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகள்.

மேட்டூர்

சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து - குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன.

ஏற்காடு

'ஏழைகளின் ஊட்டி' என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் குறிப்பிடத்தக்க மலைவாழிடத்தில் இவ்வூரும் ஒன்று. சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. 383 சதுர கி.மீ. இவ்வூர் அமைந்துள்ளது. நில மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர். ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும் 13 டிகிரி செல்சியசுக்கு குறையாமலும் இருப்பது இதன் சிறப்பு. சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவுதான் உள்ளது. ஏற்காட்டில் முதலில் நம்மை கவரும் இடம் 'ஏரி'தான். அமைதியான, குளிர்ச்சியான, மரங்களடர்ந்த சூழலில் படகுச் சவாரி செய்வது மனதுக்கு இன்பமளிக்கும். இதையடுத்து அண்ணா பூங்கா வண்ணமயமாக அமைந்துள்ளது. 'லேடிசீட்' பகுதியிலிருந்து தொலைநோக்கியின் மூலம் அற்புதமான காட்சிகளைக் கண்டு களிக்கலாம். இரவில் சேலத்தின் ஒளிவண்ணமான காட்சியை காணலாம். 'பகோடா' முனை என்ற முகட்டிலிருந்தும் மலையின் இயற்கையழகைக் கண்டுகளிக்கலாம். 'கிள்ளியூர் அருவி' 3000 அடியிலிருந்து விழும் அழகைக் காணலாம். கோட்டை போன்ற பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக எம்.டி.காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து பயிரிட்டார். சேர்வராயன் கோயில் போகும் வழியில் உள்ள நார்டன் பங்களா அருகில் 'கரடிக்குகை' இருக்கிறது. இதுவும் காண வேண்டிய இடமாகும். சேர்வராயன் கோயில் திருவிழாவை ஒவ்வோராண்டும் 'மே' மாதம், இங்குள்ள பழங்குடிகள் கொண்டாடுகின்றனர். கோடைவிழா சித்திரை மாதத்தில் இங்கு ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. கோடை விழாவில் மலர்க்காட்சி முக்கியமானது.

தாரமங்கலம்

சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள 'கைலாசநாதர் கோயில்' கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன.

தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான்.

கல்சங்கிலிகள்

மகா மண்டபத்தின் மேல் தளத்திலும், தூண்களின் போதிகைகளினின்றும் சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லாலாகிய வளையங்கள் மேல்தளக் கல்லினின்றும் வெட்டப்பட்டுத் தொங்குகின்றன.

மண்டப சுவர்களில் மீன், ஆமை, முதலையின் வடிவங்கள் கல்லோவியங்கள் போல வடிக்கப்பட்டுள்ளன. இதுபோலவே சூழலும் கல் தாமரை மலர், ரதி-மன்மதன் போன்ற சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள இரண்டு தூண்களில் வாலி வதத்தை உருவாக்கி இருக்கிறான் சிற்பி. இராமன் ஒரு தூண் பக்கத்திலிருந்து வாலியை நோக்கி அம்பு விடுகிறான். வாலி ஒளிகிறான். ஆனால் வாலி நிற்கும் இடமிருந்து இராமனை நோக்கினால் அவன் தெரிவதில்லை.

பேளூர்

சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிஷ்ட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில். இக் கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு.

இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான - தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது.

ஆத்தூர்

சேலத்திலிருந்து 51 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றுர் - தற்போது ஆத்தூராக உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று - 'ஆத்தூர்க் கிச்சிடி' புகழ்பெற்றது. இந்நகரத்தில் ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் பல உள்ளன. கி.பி. 1559-1585 காலத்தில் இருந்த கெட்டி முதலியார் வம்ச சிற்றரசர்களால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக் கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் இவர்களாலே கட்டப்பட்டது. முதலியாரின் சிலை இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையில் அகன்ற அகழியும், உயர்ந்த நெடுமதிலும், பீரங்கி அமைக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழைய முடியாத குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், இடிந்த மதிலும் காணப்படுகின்றன. இக்கோட்டையினுள் உள்ள சிவன் கோயிலுக்கு அருகில் காயநிர்மலேசுவரன் கோயில் இருக்கிறது. அக்கோயில் ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது.

ஆறகளூர்

சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் உள்ளது. வசிட்டா நதியின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வமிசத்தவரான 'வாணர்' என்போர், சோழர்களின் கீழிந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். 'ஆறு அகழிகள்' இருந்தவூர் என்று சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் 'காமநாத கோவை' என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.

சங்ககிரி

சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர்.

தம்மம்பட்டி

சேலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது.

பொய்மான் கரடு

சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.

ஆதாரம் : சேலம் மாவட்ட நிர்வாகக்குழு

3.02173913043
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top