பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

திருவண்ணாமலை கோயிலில் உள்ள இறைவன் பெயர் அண்ணாமலை. சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.

இப்பகுதி தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான 'பல்குன்ற கோட்டத்தில் உள்ளது. சங்க காலத்தில் இப்பகுதியில் உள்ள செங்கத்தில் நன்னன் ஆண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பாணாற்றுப் படை இப்பகுதிகளின் ஊர் வளத்தை மெச்சுகிறது. பல்லவர்கள் இப்பகுதியை ஆண்டனர். அவர்கள் நந்திவர்மன் பல்லவன் தென்னாற்றில் பாண்டியனைத் தோற்கடித்ததை 'நந்திக் கலம்பலம்' விதந்து பாராட்டுகிறது. சுந்தரச் சோழன் ஆட்சி முதல் அதி ராஜேந்திரன் ஆட்சிகாலம் வரை இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

சோழர்களுக்குப் பின்னர் 'சம்புவராயர்'கள் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். சம்புவராயர்களுக்குப் பின் இப்பகுதி விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் ஆற்காட்டு நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறியது. சுந்திரத்திற்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் இருந்து 1989 செப்டம்பரில் 30ந் தேதி இம்மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.

பொது விபரங்கள்

 • மழையளவு: 1074 மி.மி.
 • வங்கிகள் : 148
 • காவல் நிலையங்கள்-35
 • சாலைநீளம்-5478கி.மீ
 • பதிவு பெற்ற வாகனங்கள் 5665
 • அஞ்சலகங்கள்-464
 • திரையரங்குகள்-82.

எல்லைகள்

கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்; வடக்கில் வேலூர் மாவட்டம்; மேற்கில் தர்மபுரி; தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள்

 • நகராட்சிகள்-4
 • ஊராட்சி ஒன்றியங்கள்-18;
 • பேரூராட்சி-11
 • ஊராட்சி-865
 • கிராமங்கள்-1067

சட்டசபை தொகுதிகள்

 • செங்கம்
 • தண்டராம்பட்டு
 • திருவண்ணாமலை
 • கலசப்பாக்கம்
 • ஆரணி
 • செய்யார்
 • வந்தவாசி
 • பெரணமல்லூர்

பாராளுமன்றத் தொகுதி

1. வந்தவாசி

கல்வி

 • தொடக்கப்பள்ளிகள் : 1,773
 • நடுநிலை : 248
 • உயர்நிலை : 132
 • மேல்நிலை : 56
 • கல்லூரிகள் : 4

மருத்துவம்

 • அரசுமருத்துவமனைகள் : 6
 • தொடக்க மருத்துவ நல மையம் : 84

ஆற்றுவளம்

செய்யாறு அணை

ஆரணிக்குக் கிழக்கே பத்து மைல் தொலைவில் இந்த அணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புறப்படும் கால்வாயின் மூலம் 144 குளங்களில் நீர் நிரம்பி 24,000 ஏக்கர் நிலங்களின் பயிர் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது. இது செய்யாற்றுத் தலைக் கால்வாய் எனப்படும். இவ்வெள்ளத்தால் பாசன வசதி பெறும் வட்டங்கள் செய்யாறு, வந்தவாசி ஆகியன. ஆண்டுதோறும் இதன் பராமரிப்புக்காக ரூ.60,000 செலவு செய்யப்படுகிறது. திருவந்திபுரம் சேயாற்றில் கட்டப்பட்ட அணை, வந்தவாசி வட்டத்திற்குப் பாசன நீர் அளிக்கிறது. பாலாற்று அணை மூலமாக செய்யாறு வட்டம் பயனடைகிறது.

சாத்தனுர் அணை

 • செங்கம் வட்டத்தில் சாத்தனுர் கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதற்குச் சுமார் நான்கு மைல் கீழே கட்டப்ட்டிருக்கும் கசிவு நீரைத் தேக்கும் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து கால்வாய்கள் வெட்டப்ட்டு, பாசனவசதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
 • இந்த அணை முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டு 1958-இல் முடிவு பெற்றது. இதற்காக மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.258 இலட்சமாகும். இதன் நீர் பெருக்கத்தால் வடற்காடு மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நிலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 5800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்றுள்ளன.
 • இந்த அணையின் உயரம் 147 அடி. நீளம் 2580அடி. இதில் 1500 அடி கல் கட்டடப் பகுதியும் 1180 அடி மண் அணைப்பகுதியுமாகும். கல்கட்டடம் 80 இலட்சம் கன அடியும் மண் அணைப்பகுதி 43 இலட்சம் கன அடியும் சொற்றளவு கொண்டதாகும். இதில் 46,000 இலட்சம் கனஅடி முதல் 81,000 இலட்சம் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.

மலைவளம்

திருவண்ணாமலை எனும் புனிதமலை இம்மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஐவ்வாது மலையின் பகுதிகள் போளூர் வட்டத்தின் மேற்குப் பகுதிவரை பரவி இருக்கிறது. செங்கம் வட்டத்தின் தென் பகுதியில் மன் மலைத் தொடர் உள்ளது.

வேளாண்மை

 • திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் உள்ள செய்யாறு வட்டம். சிறப்பான முறையில் நெல் உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதிகளில் ஏரி, கிணற்று பம்புசெட் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.
 • புன்செய் பயிர்களாகிய கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, எள் போன்றவை கிணற்றுப் பாசனம் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. செய்யாறு வட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு பெருமளவில் விளைவிக்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

திருவண்ணாமலை

 • விழுப்புரம்-காட்பாடி புகைவண்டிப் பாதையில், விழுப்புரத்திற்கு வடமேற்கே 67கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அண்ணா மலையார் கோயில், இராசேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே இக்கோயில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.
 • கி.பி.1516 இல் கிருஷ்ணதேவராயர், ஆயிரங்கால்மண்டபத்தையும், திருக்குளத்தையும் பதினொரு நிலைக் கோபுரத்தையும், பல்வேறு திருப்பணிகளையும் செய்தமையைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். பெரிய கோபுரத்தின் உயரம் 66 மீட்டராகும்.
 • வல்லாளன் கோபுரம், சக்தி விலாசம், கிளிக் கோபுரம் கலியாண மண்டபம் முதலியன காணத்தக்கன. கோயிள் உள்ளும் வெளியிலுமாக, மலைப்பகுதிகளிலும் 360 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்கள்: சிவகங்கை, பிரமதீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம் முதலியனவாகும். சித்துக்கள் பல புரிந்த குகை நமச்சிவாயார், குரு நமச்சிவாயர் கோயில்கள் இங்கு உள்ளன.
 • இங்கு சித்திரைத் திருவிழா, பங்குனித் திருக்கல்யாணத் திருவிழா, மாசி வல்லாளன் விழா, தைத்திருவூடல் விழா, ஆனி விழா, ஆடி அம்பிகை விழா முதலியன ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகின்றன.
 • ஆண்டுதோறும் கார்த்திகைத் திங்களில் நடைபெறும் அண்ணாமலையார் தீபம், தமிழத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் பேற்றினைப் பெற்றது. திருவண்ணாமலையின் சுற்றளவு 11 கி.மீ, மலையின் உயரம் 11 கி.மீ இரமண மகரிஷி இம்மலையின் பவளக்குன்று பகுதியிலும், விருபாட்சிக் குகையிலும் 17 ஆண்டுகள் தங்கியிருந்தார். பின்னர் இம்மலையில் உள்ள ரமணாசிரமத்தில் கடைசி வரை இருந்து இறந்தார். இரமண மகரிஷி பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் பெற்றுச் செல்வார்கள்.

சாத்தனுர் நீர்த்தேக்கம்

திருவண்ணாமலைப் பகுதிக்கு நீர்ப்பாசனம் போதாத காரணத்தால், சாத்தனுர் நீர்தேக்கத் திட்டம் 1949 இல் உருவானது.

நீர்த்தேக்கத்தின் தோற்றம்

இந்நீர்த் தேக்கத்தின் மொத்த நீளம் 2583 அடி அதில் 1400 அடி கட்டடப் பகுதி. 1183 அடி மண் அணைப்பகுதி. நடுவில் 432 அடி மடை உள்ளது. அதில் 9 கண்கள் உண்டு. ஒவ்வொரு கண்ணின் அகலமும் 40 அடி. கடைக்காலின் ஆழம் 135 அடி கடைக் காலுக்கு மேலாக அணையின் உயரம் 147 அடி. இவ்வணைக்கட்டு வேலை 1955 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு, 1956 மே மாதத்தில் முடிந்தது.

அமைப்பு

 • சிறிய அணைக்கட்டின் இடது புறம் அமைந்துள்ள மடையில் 3 கண் உள்ளன. ஒவ்வொன்றும் 9 அடி அகலம் 5 1/2 அடி உயரம் உடையது. இக்கண்கள் வழியாக நொடிக்கு 400 க.அடி நீர் வெளியாகிறது. தலைக் கால்வாயின் தொடக்கத்திலிருந்து எட்டு மைல் வரையில் நீர்க்கசிவு ஏற்படா வண்ணம் சிமெண்ட் கால்வாய் போடப்பட்டுள்ளது. இதனால் சேமிக்கப்படும் நீர் மேலும் 1000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன மளிக்கும்.
 • இக்கால்வாயின் முதல் 6 மைல்களுக்குள் 6 பாலங்களும், ஒரு பெரிய நீர்குழாயும், இரண்டு நடைபாலங்களும், இரண்டு மேம்பாலங்களும், 11 சுரங்க வழிகளும் கட்டப்பட்டுள்ளன. 6 மைல்களுக்கு அப்பால் 3 பாலங்களும் 8 சுரங்க வழிகளும் கட்டப்பட்டுள்ளன. இவ்வணை இம்மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்டுகிறது.
 • திரைப்படத்துறையினர் இப்பகுதியில் படம் பிடிப்பு நடத்துகின்றனர். இவ்வணையைச் சுற்றிலும் அமைந்துள்ள மின்சார அலங்காரம் பாதிப்பேரைக் கவரக்கூடியது.

திருமலை

 • போளூருக்கு அருகில் உள்ள வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது திருமலை. 'திருமலை' யில் உள்ள சிறு குன்றின் மீது மூன்று நிலைகளில் சமணக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்குன்று முழுவதும் சமணச் சிறுகோயில் உள்ளன.
 • குன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள கோவில் சோழர்காலத்தில் கட்டப்பட்டது. அக்கோவில் உள்ள கல்வெட்டு மூலம் நமக்கு பல செய்திகள் தெரிய வருகின்றன. இக்கோவில் இராஜாராஜனின் தமக்கையராகிய குந்தவை பிராட்டியார், இம்மலையில் ஒரு ஜினாலயம் அமைத்தார். அது குந்தவை ஜினாலயம் என்று பெற்றது. பொன்னுரைச் சேர்ந்த நந்கை, அம்மலையின் அருகில் திரு உருவை நிறுவினாள். அருகதேவனுக்குரிய மலைகளில் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்படுகிறது.

கோவில் அமைப்பு

அடிவாரத்திலுள்ள கோவில், சிறு கோவிலாகும். முக மண்டத்தில் அருகக் கடவுளின் பெரிய புடைப்புச் சிற்பம் உள்ளது. உள்ள திருவாசியுடன் கூடிய முக்குடையின் கீழ் அருகக் கடவுளின் உருவம் செப்பு திருமேனியாகக் காணப்படுகிறது. கருவளையின் வெளியே சோழர்காலக் கல்வெட்டு காணப்படுகிறது.

மாடிக்கோவில்

இரு பாளைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை இணைத்து அறைகளாகத் தடுத்து இரண்டு பெரிய அறைகள் காணப்படுகின்றன. இவ்வறைகளுக்குச் செல்ல மாடிப்படிக்கட்டுகள் உண்டு. இப்படிக் கட்டுகளுக்கு கீழேயும், மேலேயும் அருகக் கடவுளின் சிற்பங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன.

ஓவியங்கள்

அறைகளில் சமண சமயம் தொடர்பான ஓவியங்கள் உள்ளன. இவ்விரண்டு அறைகளிலும் கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை வரையப்பட்ட ஓலியங்களின் சிதைவைக் காணலாம். ஒரு அறையில் பெண் கடவுளின் முழு உருவம் சிதையாமல் உள்ளது. அவ்வறையின் ஒரு பக்கத்தில் அருகக் கடவுள் சமவ சரணத்தில் 'அருள் உரை'க்கும் பாங்குடன் காணப்படுகிறது. தீர்த்தங்கரரைச் சுற்றி மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதலியன உட்கார்ந்து அருள் உரை கேட்கின்றனர்.

நேமி நாதர்

மாடி கோவிலின் மற்றொரு பக்கத்தில் திகம்பரக் கோலத்தில் நின்ற வண்ணம் உள்ள நேமிநாதரின் புடைப்புச் சிற்பம் 20 அடியில் காணப்படுகிறது. இந்தச் சிலை தான் தமிழகத்தில் உள்ள சமண சமய சிற்பங்களில் பெரியது என்று சொல்கிறார்கள்.

மலையின் உச்சியில் உள்ள சிறு கோவிலில் ஒரே வட்ட வடிவத்தில் உள்ள மாக்கல்லில் 5 தீர்த்தங்கரர்களின் உருவம் காணப்படுகிறது. அருகில் இரு இணையடிகள் செதுக்கப்பட்டுள்ளன. இது போன்றதொரு கோவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

திரக்கோல்

வந்தவாசிக்கு எட்டுமைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றில் மூன்று குகைகளும், மூன்று ஜினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயிலின் அடியாகத் திருக்கோவில் என்னும் பெயரே "திரக்கோல்" என்றாகி விட்டது. இம்மாவட்டத்தில் பொன்னுர், வெம்பாக்கம், முதலிய இடங்களிலும் சமணக் கோயில்களைக் காணலாம்.

ஜைனர்

குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட தமிழ் சமணர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர். வந்தவாசி, பொன்னுர், வெம்பாக்கம் முதலிய ஊர்களிலும், போளூர் வட்டத்திலும் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக நைனார் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தாலும், மற்ற சாதியினரின் பட்டப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

ஆரணி

ஆற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி உள்ளது. ஆரணியும் நகராட்சி நிருவாகத்தில் உள்ளதாகும். மைசூர் மன்னன், ஐதர் அலி, ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்தது இவ்வூரில்தான். பழங்கால கோட்டையின் பகுதிகளை இங்கே காணலாம். இந்நகரம் கைத்தறிப் பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்றதாகும். ஆரணிப்பட்டு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது.

செங்கம்

நன்னன் ஆண்ட மலை. இங்குள்ள கோவிலில் நன்னனைப் பற்றிய கல்வெட்டொன்று காணப்படுகிறது.

மருதநாடு

வந்தவாசி வட்டத்திலுள்ளது இவ்வூர். விக்ரம சோழ நல்லூர் என்னும் பெயரும் உண்டு. இராசராசன் கல்வெட்டும் காணப்படுகிறது. பெருந்திருக்கோயில் என வழங்கப்பட்ட இவ்வூர் கோயில் புரந்தீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

தென்னாறு

வந்தவாசி வட்டத்தில் தென்னாறு உள்ளது. இங்குதான் தென்னாற்றில் நிகழ்ந்த போரில், பாண்டியனது பெருஞ்சேனையை நந்திவர்மன் வென்று, "தெள்ளாற் றெரிந்த நந்திர்மன்" என்று நந்திக் கலம்பகத்தால் அழைக்கப்படுகிறான்.

வழுவூர்

இவ்வூரில் உள்ள பழமையான கோவிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இக்கோயிலை பழுது பார்ப்பதற்காகவும், பூசனை புரிவதற்காகவும் சம்புவராயம் 'தேவதான' மாக அளித்த நிவந்தம் கல்வெட்டில் காணப்படுகிறது.

தொழில் வளம்

வேலூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிந்துள்ளதால் இங்கு தொழில் வளம் இனித்தான் ஏற்பட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டமும் இன்னமும் ஒரு வேளாண்மை மாவட்டமாகத் தான் இருக்கிறது.

செய்யாறில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கிறது. தனியார் நூற்பாலைகள் சில உண்டு. ஆரணியில் அரிசி மண்டி பெருமளவில் உள்ளது. நவீன பட்டு நெசவுக்காக, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பட்டி நெசவு நடந்து வருகிறது. பொன்னுரை ஒட்டியுள்ள பிரதேசங்களில் கைத்தறி நெசவுத்தொழில் வளர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் வேளாண்மையையொட்டி வளரும் சாத்தியக்கூறுள்ள தொழில்களாவன:

 1. உமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை.
 2. வைக்கோளிலிருந்து அட்டை தயாரிப்பு.
 3. கயிறு திரித்தல் மற்றும் கயிற்றின் துணைப்பொருள்களைக் கொண்டு செய்யப்படும் பொருள்கள்.
 4. சந்தான எண்ணெய் ஆலை.
 5. பட்டுப்பூச்சி வளர்ப்பு
 6. உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு.

வந்தவாசி

ரூ.11 லட்சம் செலவில் ஆர்.சி.சி.பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இங்குள்ளது. ரூ.12 இலட்சம் செலவில் செங்கல் தயாரிக்கும் தொழிலகம் உள்ளது.

ஆரணி

ஆரணியில் பட்டு நெசவு மிகுதியாகும். ஆரணியில் தயாராகும் பட்டுச் சேலைகள் உலகப் புகழ்பெற்றவை. பட்டுத் துணியில் அழகாக அச்சுப் போடும் கலை இம் மாவட்டத்தில வியக்கத்தக்களவு வளர்ந்து வருகிறது.

பட்டுச்செடி நடுதல்

பட்டுச் செடி நடுவதன் மூலம், நிறைய வருவாய் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பயிரிட்டு ஆண்டு வருமானம் 20,000 முதல் 30,000 வரை பெறலாம். ஒரு ஏக்கருக்கு 5 பேருக்கு வேலை கிடைக்கும். குறைந்த நீர் பாசனத்திலும் அதிக வருவாய் தரக் கூடியது.

கூட்டுறவுத் துறை

இந்தியாவில் கூட்டுறவுத் துறையில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. தமிழகத்தில் 4-வது இடத்தைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது.

கூட்டுறவுத் துறைமுகம் வளந்துள்ள நிறுவனங்கள்

 1. கூட்டுறவு விவசாய சேவைச் சங்கம்
 2. கூட்டுறவு வங்கி
 3. கூட்டுறவு விற்பனைச் சங்கம்
 4. கூட்டுறவு பண்டக சாலை
 5. கற்பகசம் கூட்டுறவு சிறப்பங்காடி
 6. திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்கம்
 7. பல்நோக்கு கூட்டுறவு சங்கம் (மலைவாழ் மக்களுக்கு)

கூட்டுறவு அச்சகம்

1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அரியூர் கூட்டுறவு நூற்பாலை

இந்த நூற்பாலையில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்குத் தேவையான நூல்களும் மற்றும் டெரிகாட்டன் நூலும் தயாராகின்றன 26,656 கதிர்களும் கொண்டது.

பால்வளம்

கிராமப் புறங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய விலைக்கு பாலைப் பெற்று, பின்பு பதப்படுத்தி, சென்னை மற்றும் உள்ளூர் தேவைக்கு ஏற்ற தரமான பாலை வழங்கும் சீரிய பணியில் இம்மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பால் உற்த்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 1,50,000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 80 சதவீதம் சென்னைக்குச் செல்கிறது.

புகழ் பெற்ற பெருமக்கள்

சி.பி.இராமசாமி அய்யர்

இவர் திருவாங்கூர் திவானாகவும், இந்து அறநிலைப் பாதுகாப்புத் துறைத் தலைவராகவும், திருவதாங்கூர், காசி, அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும் இருந்தவர். இவர் வந்தவாசியில் பிறந்தவர்.

டாக்டர் சி.பாலசுப்பிரமணியம்

சென்னை பல்கலைக் கழக தமிழ்துறை தலைவரான இவர் கண்பிச்சுபுரத்தில் பிறந்தவர். கவிஞர் வல்லம் வேங்கடபதி, திருவேங்கம் முதலியோர் இம்மாவட்ட கவிஞர்கள். திராவிட இயக்க தூண்களில் ஒருவரான ப.உ.சண்முகம் திருவண்ணாமலைக்காரர். கேரளம், புதுவைப் மாநில முதல்வராக இருந்த பா.ராமச்சந்திரன் செய்யாற்றுக்காரர்.

ஆதாரம்: மாவட்ட நிர்வாகப்பிரிவு

2.96363636364
ஸ்ரீரங்கராஜபுரம் துளசி 8754921751 Jun 21, 2018 11:27 AM

தற்போது வந்தவாசி வட்டாரத்தில் உள்ள ஸ்ரீரங்கராஜபுரம் .அப்போது மருதநாடு கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அவ்வூரைப்பற்றி மேலும் தகவல் வேண்டும் அய்யா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top