பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் பல்லவர், பாண்டியவர், ஹேர், சோபூர், முத்தரையர், ஹொய்சளர், முஸ்லீம்கள், விஜயநகர அரசு, நாயக்கர்கள்,மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் படையெடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அவர்களின் கலை கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பொது விவரங்கள்

எல்லைகள்:

கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தஞ்சை மாவட்டமும்; மேற்கிலும் வடக்கிலும் திருச்சி மாவட்டமும்; தெற்கில் சிவகங்கை மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எல்லைகளாக உள்ளன. கடற்கரை நீளம் 36 கி.மீ.

பருவநிலை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை பெறுகின்றது. சராசரி மழையளவு (ஆண்டுக்கு) 1395.1 மி.மீ.

வருவாய் நிர்வாகம்:

கோட்டங்கள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) வட்டங்கள்-7 (கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்).

உள்ளாட்சி நிறுவனங்கள்:

நகராட்சிகள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) ஊராட்சி ஒன்றியங்கள்-13 (புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், விராலிமலை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, அரிமழம், அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, மணல்மேல்குடி, திருவரங்குளம், ஆவுடையார் கோவில்); பேரூராட்சிகள்-8; கிராமங்கள்-757.

பாராளுமன்ற தொகுதி

இம்மாவட்டத்திலுள்ள பாராளுமன்றத் தொகுதி-1 (புதுக்கோட்டை)

கல்வி

பள்ளிகள்: துவக்கநிலை-1,103; நடுநிலை-182; உயர்நிலை-81; மேனிலை-38. கல்லூரிகள்-9; மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை; அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ஸ்ரீகணேசா செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி; ஸ்ரீமூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனுர்; அரசினர் பாலிடெக்னிக், அறந்தாங்கி; சீனிவாசா பாலிடெக்னிக், கீரனுர்; ஜெ.ஜெ. கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ராயவரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக், வெங்கடேஸ்வர பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.

இவை தவிர, இலங்கை, பர்மா முதலிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி பெறுவததற்காக மாட்டூர் பகுதியில் அகதிகளுக்கான உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் 23 வயதிற்கு உட்பட்ட இளங்குற்றவாளிகள் கல்வி பெற ஒரு அரசுப் பள்ளி புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது.

முக்கிய ஊர்கள்

அம்புக்கோயில்:

ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

ஆவுடையார் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 49 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இங்குள்ள கோயில் பெயரே ஊர் பெயராய் அமைந்துள்ளது. இது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலமாகும். இத்தலப் பெருமையை திருப்பெருந்துறை புராணமும், திருவாசகமும் விரித்துரைக்கின்றன. உருவமற்ற வழிபாட்டு முறை இக்கோயிலில் பின்பற்றப்பட்டு, இறைவுருவற்ற மூலத்தானத்தில் பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வழிபாட்டு முறைக்கு ஆதரவாக கோயிலில் சிறப்பு வாய்ந்த சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயில் காலங்காலமாக சைவ வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும், கோயிலின் வடிவமைப்பும் இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

ஆவூர் (avur church)

புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலுள்ள இக்கிராமம் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இங்கு வாழ்வோரில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். 1697ல் தந்தை ஜான் வெனன்டியஸ் பவுக்கெட் என்பவரால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். ஈஸ்டர் பெருநாளையொட்டி கிறித்துவர்கள் நடத்தும் சிலுவைப்பாடுகளின் நாடகம் 'ஆவூர் பாஸ்கா' புகழ்பெற்றதாகும்.

கீழநிலை (Kizhanilai)

புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் திருமயம் வட்டத்திலுள்ளது. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் போர்ப்படைகள் தங்கும் இடமாக கீழநிலை இருந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டின் எல்லையாக விளங்கியது. கடைசி நாயக்க மன்னர் விஜயராகவா இவ்வூர்க் கோட்டையைக் கட்டினார். இக்கோட்டை பல்வேறு காலக் கட்டங்களில் பல அரசர் கைகளுக்கு மாறியதால் சீரழிந்த நிலையில் உள்ளது. 1683இல் சேதுபதி அரசர் காலத்தில் போர்த்தளவாடங்கள் இக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டன. கோட்டை 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து, சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோட்டையினுள் சிறிய அனுமான் கோவில் உள்ளது. அரியநாயகி அம்மன் கோவிலும், அம்மன் குளமும், விஷ்ணு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையிலுள்ள சுரங்கப்பாதை ராமநாதபுரத்து சாக்கோட்டைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. என்றாலும் சுரங்கம் அடைபட்டுள்ளது.

கொடும்பாளூர்:

புதுக்கோடடையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இவ்வூரின் கலைச் சிறப்புமிக்க கோயில்கள் தென்னிந்திய சிற்பக் கலைப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. 108 சைவ ஆலயங்கள் கொடும்பாளூர் பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வூர் மண்ணை எங்குத் தோண்டினாலும் லிங்கமோ நந்தியோ கிடைக்கின்றன. உடைந்த சிற்பங்களும், புதைந்தும் புதையாமலும் இருக்கும் உருவச் சிலைகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. சோழர் தலைநகரான உறையூருக்கும் பாண்டியர் தலைநகரான மதுரைக்கும் இடையில் கொடும்பாளூர் இருந்ததாகச் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.

மூவர் கோயில் (muvarkoil vimanam)

பெரிய புராணம் இவ்வூரை கோனாட்டுடன் இணைந்த கோனாட்டுக் கொடி நகரம் எனச் சொல்கிறது. இங்குள்ள மூவர் கோயில் பெயர் பெற்றதாகும். இக்கோயிலில் சிற்பங்கள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்துள் லிங்க உருவமே இல்லை. சோழர், பல்லவர் கால கலைச் சிறப்பு கோயில் முழுவதும் காணப்படுகிறது. இக்கோயில் நந்தி சுமார் 7 அடி உயரம், 10 அடி நீளம், 11 அடி சுற்றளவுடையது. பல்லவ நரசிம்மன் கால கலை அமைப்பை இந்நந்தி கொண்டுள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் கட்டப்பட்டதால் மூவர் கோயில் என்பர்.

முச்சுக்கொண்டேஸ்வரர் கோயில்

சிலர் சேர, சோழ, பாண்டியர்களால் எழுப்பப்பட்டதால் இப்பெயர் பெற்றதென்பர். மற்றும் சிலரோ பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்காக இக்கோயில் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கலாயிற்று என்பர். இவ்வூரிலுள்ள முச்சுக்கொண்டேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கால ஆலயமாகும். பல்லவ கலை அமைப்பில் லிங்கம் கலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் இவ்வூரிலுள்ள ஜவஹர் கோவில் சிவாலயமாகும். ஐவர் கோயிலுக்கு சில மீட்டர் தூரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல சோழர் காலச் சிற்பங்கள் கண்டெடுக்கப் பெற்றன. அவை புதுக்கோட்டை, சென்னை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

விராலிமலை (Viralimalai)

விறலி (நாட்டியமாடும் பெண்) மலையே விராலி மலை என்று திரிந்ததாகவும் கூறுவர். விராலூர் மலை என்பது விராலிமலை என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இம்மலையில் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. நூற்றுக்கணக்கான மயில்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

திருவரங்குளம் (thiruvarangulam temple)

புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹரிதீர்தீஸ்வரர் கோயில் உள்ளது. சிற்பங்களுடன் விளங்கும் இக்கோயிலின் நடராசர் சிலை தற்சமயம் டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 65 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. பெரிய கோட்டை ஒன்று இருந்து அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் இதுவேயாகும்.

திருமயம்:

திருமெய்யம் என்பதே இதன் பூர்வீகப் பெயராகும். அழகிய மெய்யர் இவ்வூர் பெருமாளின் பெயர். புதுக்கோட்டையிலிருந்து கிழக்கில் 12 மைல் தொலைவில் மதுரைக்கு போகும் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள கோட்டை இராமநாதபுரம் அரசர் விஜயரகுநாத சேதுபதியால் கி.பி. 1687 இல் கட்டப்பட்டது. இம்மலையின் தென்சரிவில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று இவை பல்லவர் காலத்தவை.

ஆதிரங்கம் எனப்படும் 'வைணவ ஆலயம்' இவற்றில் ஒன்று. இது திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். சிவாலயத்தில் இசை சம்பந்தமான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. சிவாலயத்தில் உள்ள லிங்கோத்பவர் மிக உயரமானதாகும். இவ்விரு கோவில்களும் இன்று நலிந்த நிலையில் பராமரிப்பற்று உள்ளன. இவ்வூர் பிரமுகர்கள் 'திருமெய்யர் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி பராமரிப்பு வேலைகளை ஆற்றத் துவங்கியுள்ளனர். தீரர் சத்தியமூர்த்தி இவ்வூரில் பிறந்தவர்.

தேனீ மலை:

புதுக்கோட்டையிலிருந்து 31 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் உள்ளது. இவ்வூர் சுப்ரமணியர் ஆலயம் பழம்பெருமை பெற்ற தலம். மலையின் கிழக்குச் சரிவில் ஆண்டார்மடம் எனும் குகைக் கோயில் இருக்கிறது. ஜைனக் கலாச்சாரம் இப்பகுதியில் பரவி இருந்தமைக்குக் கல்வெட்டு ஆதாரம் காணப்படுகிறது.

திருக்கட்டளை:

புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் இங்கு கட்டப்பட்ட சிவாலயம் சோழர் காலச் சிறப்புடன் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயச் சுற்றுச் சுவர்களில் காணப்படுகின்றன.

சித்தன்னவாசல் (Siththannavasal)

இது ஒரு சுற்றுலாத்தலம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தன்ன வாசல் குகைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. சித்தன்னவாசல் பெரியபுராணம், தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் அண்ணல்வாயில் என்று குறிக்கப்படுகிறது. அண்ணல் வாயில் என்பது அன்னவாசல் என்று மாறி வழங்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றியவை. பாண்டியர் காலத்திய 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான சுதை ஓவியங்கள் இக்கோயில்களில் அழகுற அமைந்துள்ளன.

விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரை மலர்களை சேகரிக்கும் மக்கள், இரண்டு நடன ஓவியங்கள் என்று காணப்படும் இவ்வோவியங்களின் தேர்ந்த வண்ணங்கள் இன்றுவரை மெருகு குன்றாமல் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அர்தி மண்டபத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுதை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் காண நாள்தோறும் வெளிநாட்டினரும் வருகிறார்கள். இங்கு சிறப்பு மிக்க ஜைன ஆலயங்கள் ஆதியில் அமைந்திருந்த தாகவும், பிற்கால பல்லவ, சோழப் பேரரசுகளால் அவை அழிவுற்று சைவ வைணவக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு 16 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை (Pudukkottai)

புதுக்கோட்டை நகரம் சென்னைக்குத் தென்மேற்கில் 366 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரின் மத்தியில் கோட்டை ஒன்று வலுவான மதிர்சுவர்கள் சூழ, தக்க பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கு எதிரில் கிழக்கிலிருந்து மேற்காகவும் வடக்கிலிருந்து தெற்காகவும் அகலமான பெரிய வீதிகள் அமைந்துள்ளன. கோட்டைக்கு நடுவில் பழைய அரண்மனை உள்ளது. தட்சிணாமூர்த்தி கோயிலும் தர்பார் மண்டமும் கட்டப்பட்டுள்ளன. ராமச்சந்திர தொண்டைமானால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், பெரிய குளத்தின் தென்கரையில் வினாயகர் கோயிலும் உள்ளன. திருவாப்பூர் ராஜராஜேஸ்வரம் ஆலயம் சோழர் கால சிற்பச் சித்திரங்களைக் கொண்டு விளங்குகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயமும், பிறகு கட்டப்பட்ட வேணுகோபால ஸ்வாமி ஆலயமும் திருவப்பூரில் உள்ள வைணவ ஆலயங்களாகும். திருக்கோகர்ணம்- திருவாப்பூர் மார்க்கத்தில் மாரியம்மன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கருப்பர் கோயிலும் புகழ்வாய்ந்த ஆலயம் ஆகும். சாந்தநாத ஸ்வாமி கோயிலும், பிருகதாம்பாள் ஆலயமும் சிறப்பு பெற்றவையாகும். வரதராஜா, விட்டோபா, வெங்கடேச பெருமாள்களுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவருவதில் புவனேஸ்வரியம்மன் ஆலயம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வைகாசி மாதத்தில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. நகருக்குத் தென்மேற்கில் தொண்டைமான் அரசரால் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனை உள்ளது. இது பிச்சாத்தான்பட்டி அரண்மனை என வழங்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

பொற்பனைக் கோட்டை:

பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 2000 போர் வீரர்கள் தங்க வசதியானது.

பொன்பட்டி:

இவ்வூர் அறந்தாங்கி வட்டத்தை சேர்ந்தது. இக்கிராமத்தின் மேற்கிலமைந்த கரூர் எனும் ஊரில், தியான நிலையில் அமர்ந்தவாறு 2 1/2 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. இதிலிருந்து சோழர் ஆட்சியில் புத்தமதம் இப்பகுதியில் பரவியிருந்தது தெளிவாகிறது. சோழ அரசன் வீரராஜேந்திரன் வேண்டுகோளுக் கிணங்க, பொன் பட்டியை ஆண்ட புத்தமித்திரனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் என்னும் நூல் இயற்றப்பட்டது. வீரசோழியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். கலித்துறையால் ஆக்கப்பெற்ற இந்நூல் சந்தி, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகையாலும் சிறப்புற்றது. புத்தமித்திரன் பிறந்த ஊரும் இதுவேயாகும்.

பேரையூர்:

புதுக்கோட்டைக்கு 15 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. பேரையூரில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டுச் சோழர், பாண்டியர் கல்வெட்டுக்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கோயில் பிரகதாம்பாள் உருவம் விஜய நகர அரசர் கால கலைச் சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது. பனை ஓலை விசிறிகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றதாகும்.

பள்ளிவாசல்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. காட்டுபாவா பள்ளிவாசல் என்பது இயற்பெயர். கிழவர் சேதுபதியால் இரண்டு ஏரிகளும் பெரிய நிலப்பரப்பும் இக்கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

நெடுங்குடி:

புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில், திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவாலயமும், இங்கு நடத்தப்படும் தேர் திருவிழாவிற்கு ஏராளமான மக்கள் கூடுவதும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பனவாகும்.

நார்த்தாமலை (Narttamalai)

புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்திலுள்ளது. ஒன்பது சிறிய குன்றுகள் அமைப்பாக காணப்படும் இடம் நார்த்தாமலை. ஒரு குடைவரைக் கோயிலையும் சேர்த்து இங்கு சில பழங்காலத்திய கற்கோயில்கள் உள்ளன. மைய மண்டபத்தில் கைதேர்ந்த சிற்பத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட ஆறு விஷ்ணு சிலைகள் உள்ளன. விஜயாலயா சோழீச்சுவரம் கோயிலுக்கு முன்னால் தெற்கில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் பிற்காலச் சோழர்களில் முதலாமவன். சிற்பங்கள் அடங்கிய இந்த சிவன் கோயில் சோழர்களின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகும். விஜய சோழீச்சுவரம் கோயிலிலும் சுற்றுப்புறங்களிலும் இறை உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை 17ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கால ஓவியங்களாகும். கடம்பர் மலையில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட திருக்கடம்பூர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

குடுமியான் மலை (kudumiyamalai)

இங்குள்ள சிவன் கோவில் பல கல்வெட்டுகளையும் அழகான சிற்பங்களையும் தாங்கி நிற்கிறது. எட்டு நாண்களை உடைய பரிவதினி எனும் இசைக்கருவியைக் கொண்டு மகேந்திரவர்மன் பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதிலமடைந்த நிலையில் ஆயிரங்கால் மண்டபம் கோயிலுக்கு முன்னே உள்ளது. உள் மண்டபம் விஜயநகர காலத்து ஓவியங்களால் நிறைந்துள்ளது. உள் மகா மண்டபம் சோழர் கால கலைச் சிறப்பையும், கோபுரம் பல்லவர் கால கலைச்சிறப்பையும் பெற்று விளங்குகின்றன. மலை மேல் இருக்கும் மேலக்கோயிலின் பல இடங்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் மிகப்பெரும் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை இங்கு அமைந்துள்ளது.

மடத்துக் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலின் முன் மண்டபம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கருங்கற்களால் அமைந்துள்ளது. உள் மண்டபம் விஜயநகர அரசர் காலத்தது. சிவப்புக் கற்களால் அமைந்துள்ளது. இங்கு சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் உயரமான பைரவர் சிலை உள்ளது.

திருக்கோகர்ணம்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு மற்றும் கலை தொடர்பான பிரிவுகள் உள்ளன. இதற்கருகில் உள்ள குமாரமலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

ஆதாரம் : தமிழ்ச்சுரங்கம் இணையதளம்

2.97619047619
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top