பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நுண்ணிலைத் திட்டம்

நுண்ணிலைத் திட்டம் (Micro Planning) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒவ்வொரு பள்ளியும் தன் வாழ்விடத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியினை பெறும் வகையில் வாழிடத்தில் உள்ள மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆசிரியரால் மட்டுமே முடியாது. சமூக அங்கத்தினர்களான மகளிர் குழுக்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றோரின் பங்களிப்பும் அவசியம்.சமூக அங்கத்தினர்களின் (Stake holders) துணையோடு வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினரை உள்ளடக்கிய அனைத்து குழந்தைகளும் தரமான தொடக்கக் கல்வி பெற உறுதி செய்தல் வேண்டும்.

நுண்ணிலைத் திட்டமிடலில் சமுதாயத்தினர் பங்கேற்பதற்கான படிநிலைகள்

நுண்ணிலை திட்டமிடலில் சமுதாயத்திலுள்ளவர்களை பங்கேற்கச் செய்வதற்கான படிநிலைகள் பின்வருமாறு:

  • சமூகத்திற்கு அதிகாரமளித்தல்
  • கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, தாய் ஆசிரியர்கள் கழகம் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு குழந்தைகளின் தொடக்கக் கல்வி பெறுவதற்கான உரிமைசார் சிக்கலை கண்டறியவும், தீர்வு காணும் வகையிலான பயிற்சிகளை அளித்தல்.
  • குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் சிறப்பம்சங்கள், அதில் ஒவ்வொருவரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்தும், அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதில் அரசின் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்துதல்.
  • சேர்க்கைப் பேரணி சமூக அங்காடிகள், வாராந்திர சந்தைகளில் கலாச்சார நிகழ்ச்சிகள்/வீதி நாடகங்களை பின்வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தி சேர்க்கை அதிகரிப்பு, இடைநிற்றல் குறைத்தல், பிற பள்ளியில் சேர மாற்றுச்சான்று பெறுதல், பெண் கல்வி ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பிற பின்தங்கிய வகுப்பினர் போன்ற நலிவுற்ற பிரிவினருக்கான முறையார்ந்த உரிமை பெறுதல், நாடோடி / நாட்டுப்புற வாழ்க்கை மேற்கொள்ளும் பிரிவினருக்கான உரிமை பெறுதல் போன்றவற்றை உறுதிசெய்தல்.

திட்டமிடும் குழுக்களை அடையாளங்காணல்

திட்டமிடலுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தலைமையாசிரியரோ அல்லது அரசு உயரதிகாரியோ மட்டுமே பெற்றிருக்க வேண்டியதில்லை. அனைவரும் தொடக்கக் கல்வி வழங்குதலின் கோணத்திலும் ஒவ்வொருவரும் சிந்தித்து முதன்மை திட்டமிடல் குழுக்களை நியமித்தல் வேண்டும். சமுதாயம் பள்ளியில் தமது சொந்த பொறுப்பை / பங்களிப்பை உணர்ந்து பள்ளியின் நோக்கங்களை உருவாக்குதலையும் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தலையும் மேற்கொள்ள வேண்டும். இதில் முதன்மை திட்டமிடல் குழுவை ஈடுபடுத்துவதால் இத்திட்டமிடல் சட்ட பூர்வமானதாக அமைகிறது. ஒவ்வொரு வாழிடத்திலிருந்தும் முதன்மை திட்டமிடல் குழுவிற்கான உறுப்பினர்களைக் கண்டறிய சமூகம் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குழுக்களுக்கு வாய்ப்பு அளித்து இடைவினையாற்றல் வேண்டும்.

அதில் சிலர் கல்வியறிவு பெற்றவராகவோ, அரசியலில் பங்கேற்பவராகவோ, கருத்துகளில் ஆர்வமும் உடைய இளைஞர்களாகவோ, தன் திறமையை வெளிப்படுத்த ஆர்வம் உள்ளவர்களாகவோ, சிறந்த திறமிக்க பெண்களாகவோ, வேலையில்லா படித்த சிறுபான்மையினராகவோ இருப்பர் அவர்களின் பங்களிப்புகள்:

  • சமுதாயத்தை பள்ளிகளுடன் இணைக்கவும், மேம்படுத்தவும் உதவுதல். பள்ளியிலிருந்து இடைநிற்றல், இடம்பெயர்வு, விலகுதல் போன்றவற்றை சமுதாய உதவியோடு தடுத்தல்.
  • சமுதாய பங்கேற்பாளர்களின் கருத்து கேட்டு கல்வியளித்தல். முதன்மை திட்டமிடல் குழுவில் இடம்பெறுபவர்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

ஏனெனில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் குழுவில் இடம்பெற வாய்ப்பு உண்டு. அவர்களுள் சிலர் குரல் உயர்த்தியும், ஆதிக்கம் செலுத்துபவராகவும் மற்றும் பிறரிடம் கருத்தை திணிப்பவராகவும் இருக்கலாம். இக்குழுவில் உள்ளோரில் சிலர் எதிர்பார்ப்பின் அளவிற்கு இல்லாவிடினும், ஆசிரியருக்கும், உள்ளடங்கிய தொடக்கக் கல்வியினை வழங்க பள்ளிக்கும், உள்ளூர் நபருக்கும் உதவியாக இருக்கலாம். இது அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற ஒவ்வொருவரின் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. பொதுவாக முதன்மை திட்டமிடல் குழுவானது சமூகத்தில் அனைத்து பிரிவு பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.

முதன்மை திட்டமிடல் குழுவிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தரமான திட்டமிடல் பயிற்சியும், திட்டங்களும் முதன்மை திட்டமிடல் குழுவின் திறனை சார்ந்ததாகும். உத்தேசிக்கப்பட்ட திட்டம் மாவட்ட அளவில் செயல்படுத்த தக்கதாக அமைய வேண்டும். ஒட்டுமொத்த திட்டமிடல் செயலானது, அனைத்து கல்விசார் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும், தனிநபரின் அல்லது குழுவின் விருப்பு வெறுப்புகளை களைந்த பங்கேற்றலாக அமைதல் வேண்டும். இந்தத் திட்டமிடலானது வெவ்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்களை ஒருங்கிணைத்து தம் திட்டத்தில் பயன்படுத்தும் அறிவினைப் பெற்றதாக அமைய வேண்டும். முதன்மை திட்டமிடல் குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் அனுபவமின்றி இருப்பினும், திட்டம் தீட்ட, செயல்முறையை வகுப்பதில் பங்காற்றுவதற்கான அறிவினைப் பெறுதல் அவசியமாகும். இவர்கள் அதே பகுதியில் பலகாலம் வாழ்பவராக இருப்பினும் தம் சொந்தப் பகுதிக்கான பொது முடிவெடுத்தலில் பலர் முதல் முறையாக பங்கேற்பவராக இருக்கலாம்.

முதன்மை திட்டமிடல் குழுவானது பள்ளி வளர்ச்சி திட்டத்தை தொகுத்து, கிராமக் கல்வி முன்னேற்றத் திட்டத்தினை தயாரித்தல் வேண்டும். இக்குழு பள்ளியின் தேவையை கிராமத்திலிருந்தும், கிராமத் தேவையை ஒன்றியத்திலிருந்தும், ஒன்றியத் தேவையை மாவட்டத்திலிருந்தும் பெற்று வழங்க வேண்டும். இரண்டு முதல் மூன்று அமர்வு கொண்ட பணிமனைகள் மூலம் SSA-வின் நோக்கங்கள், இலக்குகள், விதிமுறைகள் குறித்து அறியவும், திட்டமிடல் வரைவுக்கான தகவல்களைச் சேகரிக்கவும், செயல்பாட்டை கண்காணிக்கவும் நடத்தப்பட வேண்டும். ஒன்றியம்/குறுவள அளவில் / மாவட்ட அளவில் உள்ள வல்லுநர்களின் அனுபவங்களை பயன்படுத்தி கொள்ளவும் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இடைவினையாற்ற வேண்டிய பிரச்சினைகளை அடையாளங்காணுதல் (Identification of issues requiring invention)

  • எளிதில் பள்ளியைச் சென்றடைதல்,
  • பள்ளியில் குழந்தைகளை சேர்த்தல்,
  • தக்கவைத்தல் மற்றும் தரமான தொடக்கக் கல்வி வழங்குவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை கிராம அளவில், இருப்பிட அளவில், ஒன்றிய அளவில் அல்லது மாவட்ட அளவில் அடையாளங்கண்டு தீர்விற்கு வழிவகை செய்யப்பட்டதா என்பதை அறிந்துகொள்வது அடுத்த படிநிலையாகும்.

அவை

  • நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள்
  • தேவையான கொள்கைசார் மாற்றங்கள்
  • விதிமுறைகளை மாற்றுதல் / மேலும் நெறிப்படுத்துதல்
  • ஒருங்கிணைந்த முறையில் பிரச்சினைக்கு தீர்வு காணல்
  • மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளின் உதவியைப் பெறுதல்

இந்த நிலையில் தங்கள் பள்ளிக்குத் தேவையான வளங்களை அவசரமாக பெறும் பொருட்டு பள்ளிகள், கிராமங்கள், வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்கள் தங்கள் பகுதியில் அவை எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் சவால்களை முன்னிலைப்படுத்தி வெளிப்படுத்த தீவிர போட்டியை தங்களுக்குள் நிகழ்த்தலாம். இதற்கு கல்வி முன்னேற்றத் திட்டத்தின் போதுமான தெளிவான தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சில சமயம் மாவட்டங்களுக்கு இடையேயான திட்டமிடல் பணிமனைகளில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யலாம். இது பிரச்சனைகளை கண்டறியவும் தகுந்த தீர்வு முறையை கற்கவும் வழிவகுக்கும்.

தரவு தேவைகள் (ம) தரவுகளின் மூலங்கள்

அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட இலக்கினை அடைய காலக்கெடு மற்றும் தெளிவான கட்டாயத்தினை பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் (R.T.E) குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைத்து குழந்தைகளும் எட்டு ஆண்டுகள் தொடக்கக் கல்வியினை பூர்த்தி செய்ய கீழ்க்காணும் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள் (சிறுவர் (ம) சிறுமியர்கள்) பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகள், பள்ளியில் சேராதவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள், பாதுகாப்பு நிறுவனங்களில் வாழும் குழந்தைகள், ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர், மலைவாழ் நாடோடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாகரிக முதிர்ச்சியற்ற பழங்குடியினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் குழந்தைகள், வன்முறை நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வேலை தேடி இடம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள், குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள், வீதிகளிலும், பொது இடங்களிலும் வசிக்கும் குழந்தைகள், கைதிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள், பிற நலிவுற்ற குழந்தைகள் மேற்கண்ட தகவல்களின்படி பள்ளி அமைப்புக்குள் கொண்டுவர வேண்டிய குறிப்பிட்ட குழுவை தேர்ந்தெடுக்க முடியும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குள் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் மையப்படுத்தியே திட்டமிடல் அமைய வேண்டும். அப்போது தான் தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தை பின்தொடர்ந்து கண்காணிக்க முடியும். பள்ளி (ம) அரசுத் துறைகளில் மேலே குறிப்பிட்ட தகவல்களின் பெரும்பகுதி கிடைக்கும். கிராம கல்வி பதிவேடு தயாரிப்பதிலும் நிகழ்காலப் பதிவுகளை மேற்கொள்வதிலும் கிராமக் கல்விக் குழுவும், பள்ளி மேலாண்மை குழுவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போதுள்ள சூழ்நிலைகளின் பிரதிபலிப்பாக கிடைக்கும் தரவுகள் மட்டுமே தரவுகள் தொகுப்பின் நோக்கமாக கருத முடியாது. சவால்களை கண்டறிவதற்காகவும், குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பதற்காகவும், இடை வினைகளை திட்டமிடுவதற்காகவும், தேவையான வளங்களை பெறுவதற்காகவும், மேற்குறிப்பிட்ட தகவல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கிடைக்கக்கூடிய வளங்களை முழுமையாகவும் சிறப்பாகவும் போதுமான அளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் தரவு அடிப்படையிலான திட்டமிடல் அமைய வேண்டும். குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்கு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான தரவுகள் தொகுக்கப்பட்டாலும், பொருத்தமான தரவுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். குடியிருப்பு அளவிலான திட்டமிடலுக்கு வீட்டு கணக்கெடுப்பின்படி உருவாக்கும் தரவுகள் அடிப்படையாக உள்ளன.

இதைத் தவிர வீட்டு கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட குடும்ப அமைப்பு தகவல்கள், குடியிருப்பு நிலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன. இச்செயலை மேற்கொள்ள உதவியாக ஓர் இணை ஆலோசனைப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டன. ஒருமுறை குடியிருப்பு நிலை தரவுகள் தொகுக்கப்பட்டு விட்டால், அதையே கணினிமயமாக்குவதற்கும், குடியிருப்பு அளவிலான திட்டமிடலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளியில் ஒவ்வொரு குழந்தைகளின் சேர்க்கை (ம) வருகைப் பதிவேடுகளை கண்காணிக்கவும், கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு உதவியாக பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுக் கணக்கெடுப்பு தரவு படிவத்தில் உள்ள தகவல்கள் கிராம வார்டு பதிவேட்டில் சேமிக்கப் படுகின்றன. இவை பின்னர் கிராம கல்விக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நுண்ணிலைத் திட்டமிடல் பயிற்சிகள்

முதன்மை திட்டமிடல் குழு துவங்கியவுடன் உறுப்பினர்களின் திறன் மேம்பாட்டை கருத்தில் கொண்டு சிக்கல்கள் (ம) இடைவினை உத்திகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அமைக்க வேண்டும். தேவையான தகவல்கள் கிடைத்த பிறகு, நுண்ணிலை திட்டமிடல் பயற்சி தொடங்கப்பட வேண்டும். இப்பயிற்சியில் அடங்கியுள்ளவை:

குழந்தைகளின் சேர்க்கை, இடைநிறுத்தம், தக்கவைத்தல், தேர்ச்சி விகிதம், குழந்தைகளின் வகைப்படி ஆசிரியர் - மாணவர் விகிதம், இடம் சார்ந்த குறிக்கோள் ஆகியவற்றை ஓராண்டிற்குள் அடைவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும்.

  • நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்பாடுகளை முடிவெடுத்தல்,
  • செயல்பாடுகளை வரிசைப்படுத்தல்,
  • அடைய வேண்டிய இலக்கினை பல கட்டங்களாக (படிகளாக) பிரித்து செயல்படுத்தல்,
  • பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள பொறுப்பான அலுவலர்கள் (ம) நிறுவனத்தை தெரிவு செய்தல்,
  • கால அளவை நிர்ணயம் செய்தல்,
  • ஒவ்வொரு செலவினத்தையும் மதிப்பீடு செய்தல்,
  • திட்ட கருத்துரு தயாரித்தல்,

சுருங்கக் கூறினால் நடவடிக்கை தருக்க சட்டத்தை தயாரித்தல் வேண்டும்.

இந்த நடவடிக்கை தருக்க சட்டம் நோக்கங்கள், நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் செயல்கள், செயலை மேற்கொள்ளும் நபர்கள், கால அவகாசம், செயல்பாடுகளின் அட்டவணை, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகளை பட்டியலிடுகிறது. வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் (ம) வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் அவை பல உத்திகளின் திட்டமிடலின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. இவை மிகவும் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். ஆகையால் வகுப்பறை தொடர் வினைகள் எவ்வாறு நடைபெறுகின்றன (ம) குழந்தைகள் இடைவினைகளில் பங்குபெறும் நிலை போன்றவற்றை புரிந்துகொண்டால் மட்டுமே அவர்களால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

வகுப்பறைக்குள் நடைபெறும் கற்றல்-கற்பித்தல் இடை வினைகளில் முக்கியமான கூறுகள் பின்வருமாறு:

  1. வகுப்பறை சூழ்நிலை (உடல்நிலை (ம) சமூகம் உள்பட)
  2. வகுப்பறை அமைப்பு (ம) மேலாண்மை (இருக்கை அமைப்பு, கற்றல்-கற்பித்தல் குழுக்களின் அமைப்பு, பொருள்களின் காட்சி (ம) பயன்பாடு)
  3. ஆசிரியர்-மாணவர் விகிதம்
  4. கற்பித்தலில் பயன்படுத்தப்படும் முறைகள் (ம) உத்திகள்
  5. கிடைக்கக்கூடிய (ம) பயன்படக்கூடிய கற்றல்-கற்பித்தல் பொருள்கள் (ம) கருவிகள்.
  6. வகுப்பறை செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்கு (சொற்கள், (ம) சொற்கள் சாரா)
  7. வகுப்பறைக்குள் கிடைக்கக்கூடிய கற்றல்-கற்பித்தல் வசதிகள்.
  8. சூழலுக்கேற்ற புதுமையான உளவியல் முறைகளை உருவாக்கி, சோதனை செய்து பார்க்கும் வாய்ப்பை ஆசிரியர்க்கு அளித்தல்.
  9. கற்றலில் பாடச் செயல்பாடுகள் (ம) பாட இணைச் செயல்பாடுகள் ஆகிய இரண்டிலும் பெற்றோர்கள், உள்ளூரில் உள்ள படித்த மக்கள், சமுதாயத்தில் உள்ள வல்லுநர்களைப் பயன்படுத்தி உகந்த உத்திகள் மூலம் பங்கேற்கச் செய்தல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும், வகுப்பறையில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சில நேரங்களில் உயிரி பவ்வகைத்தன்மை போன்ற பாடத்தை கற்பிக்க இயற்கை சூழலோடு இயைந்த இடங்களுக்கு குழந்தைகளை இயற்கை பயணம் அழைத்துச் செல்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இதற்கு நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம். கல்வித் திட்டம் தயாரிக்கையில் இதனை கருத்தில்கொண்டு திட்டமிட வேண்டும்

குழந்தைகளின் முழுமையான ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு அனைத்து உட்கூறுகளையும் உள்ளடக்கிய கல்வியை வழங்க வேண்டும். அதாவது, பள்ளிகளில் விளையாட்டு, யோகா, கலை நிகழ்ச்சிகள், செயல்திட்டம், செயல் வழிக்கற்றல், உடல்நலம், ஊட்டச்சத்து, தொழில் கல்வி போன்றவற்றிற்கான வாழ்க்கைக் கல்வியை வழங்குதல் வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மூலம் பள்ளியானது ஒரு சமூக செயல்பாட்டு மையமாகத் திகழ்கிறது. மாணவர்கள் பணி அனுபவம் பெறும் வகையில் கைவினை கலைஞர், தச்சர், தொழில் வல்லுநர்கள், விவசாயி ஆகியோருடன் இணைந்து பழகசெய்ய வேண்டும். இத்தகைய கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடும்பொழுது உடல், மன, சமூக வளர்ச்சி மேம்படுகிறது.

விளையாட்டு மைதானம், உடற்கல்வி/யோகா ஆசிரியர், விளையாட்டுக் கருவிகள், பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை நிதி ஒதுக்கீடு செய்யும்போதே திட்டமிட வேண்டும்.

1986இல் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து தொடக்கக் கல்வியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் பின்பற்றப்பட்டன. அவை கரும்பலகைத் திட்டம், ஆசிரியர் கல்வி, முறைசாராக் கல்வி, மகிளா சமிக்ஷா, தேசிய அளவிலான தொடக்கக் கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டம், பீகார், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் (ம) ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட) செயல்திட்டம் போன்றவை அடங்கும். இவற்றில் கற்றல்-கற்பித்தல் கருவிகள், முழுமையான பங்கு வகிக்கின்றன.

இப்புதுமையான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த கற்றல்-கற்பித்தலுக்குறிய பொருள்களின் வகை, கிடைக்கக்கூடிய அளவு, பொருத்தப்பாடு மற்றும் பயன்பாட்டை மதிப்பிட வேண்டியது அவசியமாகிறது. புதுமையான கருவிகளை வாங்குவதற்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பயிற்சி ஏடு, ஆசிரியர் கையேடு, கற்றல்-கற்பித்தல் கருவிகள், கல்வி பெட்டகம் மற்றும் பல. இவை அனைத்தும் திட்ட முன்வரைவில் (கருத்துரு) சேர்க்கப்பட வேண்டும்.

நட்பு சார்ந்த பள்ளிச்சூழலை ஒரு குழந்தைக்கு உருவாக்கித் தருவதே கட்டுமானப் பணியின் நோக்கமாக உள்ளது. அடிக்கடி பேரிடர் ஏற்படும் இடங்களான தாழ்நிலைப்பகுதி, நெடுஞ்சாலைக்கு மிக அருகில், ஆறு (அ) குளம், உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகள் செல்லும் இடங்களில் பள்ளிகள் அமையக்கூடாது. அனைத்து வகைக் குழந்தைகளும் எளிதில் அணுகக்கூடியதாக ஆபத்தற்ற இடங்களில் பள்ளி இருக்க வேண்டும்.

பள்ளி கட்டிட வடிவமைப்பு செயல்படக் கூடிய நிலையில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். வகுப்பறையின் உள்வடிவமைப்பு, போதுமான காற்றோட்டம், விளக்குகள், பொருள்கள் சேமிக்கும் இட வசதிகளுடனும் வரைபடம் (ம) கரும்பலகை போன்றவைகளை உடையதாகவும் இருக்க வேண்டும். கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய சரிவுபாதை, கைப்பிடிச் சுவர், போன்றவற்றுடன் அவர்களின் கல்விக்கான தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் பாதுகாக்கப்பட்ட கழிவறை (ம) குடிநீர், மின்சார வசதி, பள்ளி மதில்சுவர் (ம) விளையாட்டு மைதானம் இருத்தல் அவசியம். பசுமையான சூழலில் பள்ளி அமைதல் வேண்டும். இருக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் (வகுப்பறைகள், கழிப்பிட வசதி, குடிநீர், இருக்கை வசதிகள், சேமிப்பு அறை வசதி, கணினி (ம) கற்றல்-கற்பித்தல் கருவி பொருத்துதல், மதில்சுவர் மற்றும் பல) இவையனைத்தும் பயன்பாட்டு நிலையிலும், சிறிய பெரிய அளவில் பழுதடைந்தால், சரி செய்யவும், புதியவை வாங்குவதற்கு ஏற்றாற்போல வரவு-செலவு, திட்ட முன்வரைவு தயார் செய்யப்பட வேண்டும். கட்டுமான நுணுக்கங்கள், ஓர் அலகுக்கு ஆகும் செலவு, நிதியிருப்பு, சமுதாயத்தினரின் பொறுப்புகளும், கடமைகளும், கணக்கு அமைப்பு ஆகியவற்றை கொண்டே சமுதாய கட்டமைப்பு கையேட்டினை தயாரிக்க வேண்டும். அதனடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும், முன்வரைவு திட்டத்தில் அவற்றை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.

DEO, DIET, BEO, BRC, CRC-யின் பங்குகளும் பணிகளும்

மாவட்ட அளவில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திட்டமிடல், செயல் படுத்துதல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொள்கிறார். அவர் பின்வரும் பொறுப்புகளை, தொடக்கக் கல்வியில் நிறைவு செய்ய வேண்டும்.

  • குழந்தைகளின் கற்றலுக்கான உரிமைகளை உணரும் சூழ்நிலையை உருவாக்கி தருதல்.
  • அனைத்து குடியிருப்பு வாழிடங்களிலும் தொடக்க (ம) உயர் தொடக்க நிலை பள்ளி வசதிகள் உள்ளதை உறுதி செய்தல்.
  • பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் அருகாமையில் உள்ள பள்ளிக்கு எளிதில் செல்வதை உறுதி படுத்துதல்.
  • அனைத்து குழந்தைகளின் சேர்க்கை (ம) தக்கவைத்தலுக்கு PRIs சிறப்பான உள்ளார்ந்த முயற்சி எடுத்து ஈடுபட வேண்டும்.
  • பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம்பெயர்வு/தெருவோரக் குழந்தைகள்/SC/ST/நாடோடி, மலைவாழினக் குழந்தைகள், தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய சிறப்பு தேவையுடைய குழந்தைகள்) பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • மேலும் அவர்கள் கல்வி வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய தங்குவதற்கான விடுதிகள் (மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது போன்ற வாஸ்தி ஷாலா - Vasthi Shala) மற்றும் மாற்றுப் பள்ளிகளை ஏற்படுத்துதல் வேண்டும்.
  • பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு தொடர்ச்சியாக அவர்களைப் பற்றிய பதிவேடுகளை பராமரித்தல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top