பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒரு நாட்டின் வளர்ச்சியானது நீடித்து நிலைத்து நிற்கும் சமூக மற்றும் பொருளாதார மேன்மையை வழங்குவதாகவும் எதிர்கால சந்ததியின் தேவைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வளர்ச்சியாகவும் அமையப் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சமூக பொருளாதார வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்த அம்சமாகும். நதிநீர் பாதுகாப்பு, ஏரிகள் தூய்மைப்படுத்துதல் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இவ்வரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சுற்றுச்சூழல் இயக்ககம்

தமிழ் நாட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை செயல்படுத்தும் பொருட்டு 1995ல் சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்டது. இவ்வியக்குநரகத்திற்கு காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகள் மற்றும் சென்னை நகரிலுள்ள நீர் வழிகள் மாசுபடுவதை தடுக்கும் பெரும் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஏரிகள் பாதுகாப்புத்திட்டம், கடற்கரைப்பகுதி மேலாண்மை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் கையாளப்படாத இதர சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இவ்வியக்குநரகத்தின் பொறுப்பாகும்.

துறையின் நிர்வாக அமைப்பு

சுற்றுச்சூழல் இயக்குநரகம், தலைமை வனப் பாதுகாவலர் நிலையில் ஒரு இயக்குநரையும், வனப்பாதுகாவலர் நிலையில் ஒரு கூடுதல் இயக்குநரையும் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இயக்குநரகத்தில் மொத்தம் 23 பேர் பணிபுரிகின்றனர். அதில் ஒரு துணை இயக்குநரும், உதவி செயற் பொறியாளரும் அடங்குவர். கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கையின் விதி மீறல்கள் குறித்து உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் இயங்கும் பசுமைப்படை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் பணிகளை மைய அரசு மற்றும் செயலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து மேற்பார்வையிடுதல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முகமைக்கு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும், அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலர் தலைவராகவும் உள்ளார்கள்.

கடற்கரைப் பகுதி மேலாண்மை

தமிழ்நாடு 1076 கி.மீ. நீளமுள்ள கடலோரத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் கடலோரத்தின் 15 சதவீதத்தினை உள்ளடக்கியது. கடலோர சூழலினைப் பாதுகாப்பதற்கும், கடலோரத்திலுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மைய அரசு 1991ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கையை பிரகடனப்படுத்தியது.

அதன்படி கடற்கரையோரப் பகுதிகளில் அ) உயர் மட்ட அலைக்கோடு மற்றும் தாழ்மட்ட அலைக்கோடுகளுக்கும் இடையே உள்ள பகுதி ஆ) உயர் மட்ட அலைக்கோட்டிலிருந்து 500 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதி மற்றும் இ) கடல் அலைகளின் பாதிப்புக்குள்ளாகும் நிலப் பகுதிகளில் 100 மீட்டர் வரையும் கடற்கரையோர ஒழுங்குமுறைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைய அரசினால் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், மாசுபடுவதைத் தடுக்கவும், தேசிய கடற்கரையோர மேலாண்மைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், மாசுபடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலரை தலைவராகவும், சுற்றுச்சூழல் துறை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், பல பொறியியல் வல்லுனர்களும், அறிவியல் வல்லுனர்களும் அடங்கிய ஒரு மாநில அளவிலான கடற்கரையோர மேலாண்மைக்குழுமம் அமையப் பெற்றுள்ளது. கடற்கரையோர ஒழுங்குமுறை அறிவிக்கையினை மாவட்ட அளவில் கண்காணிக்கவும், அமலாக்கவும், மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் மாவட்ட கடற்கரையோர மேலாண்மைக் குழுமத்தையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கடற்கரையோர ஒழுங்குமுறை அறிவிக்கை 1991 கீழ் பெறப்படும் கருத்துருக்கள் முதலில் மாவட்ட கடற்கரையோர மேலாண்மைக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, ஒருநிலை வரையில் மாநில அளவிலான கடற்கரையோர மேலாண்மைக்குழுமத்தின் ஒப்புதலுக்கும் தேசிய மேலாண்மைக் குழுமத்தின் ஒப்புதலுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன.

நதி மற்றும் ஏரிகளின் பாதுகாப்பு பணிகள்

மைய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களை தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்ககம், மைய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் பல்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் திட்டங்கள் பின்வருவன :

காவிரி நதியின் கரையோரத்திலுள்ள ஐந்து பகுதிகளின் மாசு தடுப்புப்பணிகள்

இது, மைய அரசின் நிதி ஆதாரத்துடன், பெரும்பணிகள் எனப்படும் கழிவுநீரைத் தடுத்து வழிப்படுத்துதல், கழிவுநீரேற்று நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள், திருச்சி, ஈரோடு, பவானி, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய நகரங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி, குமாரபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. பவானி நகரத்தில் இப்பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பள்ளிப்பாளையம் நகரத்திற்கு கழிவுநீர் சம்பந்தமாக விரிவான திட்ட அறிக்கை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறு பணிகள் எனப்படும் குறைந்த செலவிலான சுகாதாரப் பணிகள், எரியூட்டு மயானம், ஆற்றங்கரை பாதுகாப்புப் பணிகள் போன்றவை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறைவு பெற்றுள்ளன.

தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - கூடுதல் ஏழு நகரங்கள்

காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகள் மாசுபடுவதைத் தவிர்க்கும் திட்டம் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு நகரங்களில் ரூ 575.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ 282.15 கோடி மைய அரசு மானியமாகவும், மீதமுள்ள செலவுத் தொகை தமிழக அரசு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பாதாளச் சாக்கடை அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கழிப்பிடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தி ஆற்று நீரின் மாசினைக் களைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டங்கள் ஆற்றில் கலக்கும் மாசுகளை களைவதோடு மட்டுமன்றி, மக்களின் மேம்பட்ட வாழ்வு மற்றும் சுகாதாரத்திற்கு வழி வகுக்கின்றன. சிறு பணிகளான திடக்கழிவு மேலாண்மை, ஆற்றங்கரை பாதுகாப்புப் பணிகள் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 249.55 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கலாம். மதுரை மற்றும் கும்பகோணம் நகரங்களின் பணிகள் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலமாகவும், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவும் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் மதுரையில் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுத்து வழிப்படுத்தவும் பணிகள் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை இத்திட்ட பணிகளுக்காக ரூ 460.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரில் பாதாள சாக்கடை திட்டம் முடிவுற்று பராமரிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மற்றும் கரூர் நகரங்களில் ரூ298.48 இலட்சம் மற்றும் ரூ295.00 இலட்சம் செலவில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சென்னைப் பெருநகர நதிநீர் பாதுகாப்புத் திட்டம்

மைய அரசு வழங்கிய ரூ.491.52 கோடி நிதி உதவியுடன் சென்னை நகரின் முக்கிய ஆறு நீர் வழித் தடங்களான கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, ஓட்டேரி ஓடை, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் மாசுத் தடுப்புப் பணிகள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முக்கிய நீர்வழித் தடங்களில் சேரும் கழிவுநீர் கால்வாய்களைத் தடுத்து நிறுத்தி, குழாய் மூலம் மாற்று வழியில் எடுத்துச் சென்று பெருங்குடி (54மில்லியன் லிட்டர் / நாளொன்றுக்கு) கோயம்பேடு (60 மில்லியன் லிட்டர்/நாளொன்றுக்கு) நெசப்பாக்கம் (40 மில்லியன் லிட்டர் / நாளொன்றுக்கு) மற்றும் கொடுங்கையூர் (110 மில்லியன் லிட்டர் / நாளொன்றுக்கு) ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் முடிவுற்றதும், கூடுதலாக 264 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படும். இதுவரை ரூ.379.34 கோடி செலவிடப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ2215.78 இலட்சம் செலவில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்

ஊட்டி ஏரியைப் புதுப்பிக்கும் பணிகள் ரூ 1.72 கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் செயலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நீர்பரப்பில் உள்ள தாவரங்கள் மற்றும் வண்டல் அகற்றுதல் (Deweeding and Desilting), நுண்ணுயிர் மூலம் தூய்மையாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக தேசிய நதிநீர் பாதுகாப்பகம் ரூ 10.43 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுப்பணித்துறை, ஏரியை நுண்ணுயிர் மூலம் தூய்மைப்படுத்தும் பணியையும், கொடைக்கானல் நகராட்சி, சுகாதார கழிப்பிட வசதிகளை அமைக்கும் பணியையும் செயல்படுத்துகின்றன. இதுவரை ரூ.132.00 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள ஏரியை தூய்மைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ 5.74 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தயாரிக்கப்பட்டு தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணியை மேற்கொள்ள ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

தேசிய பசுமைப்படை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வினைப் பள்ளி மாணாக்கர்களிடையே வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் 7500 பள்ளிகளில் மைய அரசின் நிதியுதவியுடன் தேசிய பசுமைப்படை துவங்கப்பட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு இயக்கத்தில் 3.00 இலட்சம் மாணாக்கர்கள் பங்கேற்று வருகின்றனர். மைய அரசு ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2500/- மானியம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலுமான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இத்திட்டம் கண்காணிக்கப்படுகிறது. மைய அரசு நிதி உதவியுடன் இத்திட்டம் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சூழல் மன்றங்கள்

மாநில அரசின் நிதியுதவியுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு மாநிலம் முழுவதும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மைய அரசால் தேசிய பசுமைப்படை திட்டத்திற்கு வழங்கப்படுவதற்கு சமமாக ரூ.2500/- வீதம் ஒவ்வொரு சூழல் மன்ற பள்ளிக்கும் மாநில அரசு வருடந்தோறும் விடுவிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் கொண்டு 50000 மாணாக்கர்களைக்கொண்ட 1200 சூழல் மன்றங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மன்றங்களின் மூலமாக பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய விழிப்புணர்வு

போகித் திருவிழாவின் போது டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதரப் பொருட்களை எரிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் சென்னை மாநகரம் முழுவதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், டயர்கள் எரிப்பதை கைவிடக்கோரி தொலைகாட்சி மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றும் சுற்றுச்சூழல் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 8700 சூழல் மன்றங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் டயர்கள், பிளாஸ்டிக் முதலியவற்றை எரிக்கும் வழக்கம் நகர்ப்புறங்களில் பெரிதும் குறைந்துள்ளது. 2.4.4 சமத்துவ பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாளன்று தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் பண்பாட்டைத் தரணிக்கு வெளிப்படுத்தும் வகையில் தமிழர் திருவிழா பொதுமக்களையும் சூழல் மன்ற உறுப்பினர்களையும் ஈடுபடுத்தி கலை நிகழ்ச்சிகள், கிராம் விளையாட்டுகள் மற்றும் பல்வேறு போட்டிகளை நடத்தி சமத்துவப் பொங்கலென சூழல் மன்றங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் தகவல் மையம்

சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தகவல் மையம் (ENVIS) மைய அரசின் நிதியுதவியுடன் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இயங்கி வருகிறது. சுற்றுச்சூழல் தகவல் மையம், வலைதளம் வாயிலாக தமிழக சுற்றுச்சூழல் பற்றிய பொதுவான தகவல்களை சேகரித்து, பிரித்து, சேமித்து வழங்குகிறது. செய்திமடல், இணையதளம் வாயிலாக வினாடிவினா, உரையாடல், அடிப்படைத் தகவல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் பயிற்சிகள் ஆகியவை சுற்றுச்சூழல் தகவல் மையம் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகளாகும்.

சுற்றுச்சூழல் நிலை அறிக்கை

மாநிலத்தின் சுற்றுச்சூழல் நிலை குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி ரூ.12.50 இலட்சம் செலவில் மைய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் வரைபடம், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் புகைப்படத் தொகுப்பு, சுற்றுச்சூழல் நிலை குறித்த வலைதளம் முதலியவை இதன்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் விருதுகள்

சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் விருதுகள் மாநில அரசால் 1999 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதியன்று வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது

சுற்றுச்சூழல் போட்டிகளை நடத்துதல்

தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 3.5 இலட்சம் மாணாக்கர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கும், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கும் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகளில் பங்ககேற்ற மாணாக்கர்களுக்கும், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மூன்று நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்களை இத்துறை நடத்தி வருகிறது. இயற்கை அழகு மிக்க வனவிலங்குப் பகுதிகளுக்கும், மாசு காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று முதல்தர அனுபவத்தைப் பெறுவது இம்முகாம் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

தமிழகத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளல்

தமிழ்நாட்டில் பருவநிலை மாறுதலால் ஏற்படும் பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழக தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் அதனை ஏற்கொள்ளல் ஆராய்ச்சி மையம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதி உதவியுடன் 2009-2010ல் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்

தமிழகக் கடலோரத்தின் பாலாறு முகத்துவாரம் முதல் குமரி மாவட்டத்திலுள்ள தேங்காபட்டினம் வரை உயர் அலைமட்டம் குறியிடுதல் சுற்றுச்சூழல் துறையால் பாலாறு முதல் குமரி மாவட்டத்திலுள்ள தேங்காபட்டினம் வரை உயர் அலைமட்ட குறியீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உயர் அலை மட்டத்தினை அதற்கான கிராம வரைபடங்களில் 1:5000 என்ற அளவீட்டில் குறியீடு செய்யும் பணிகள் ரூ.2.23 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வு மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உயர் அலைமட்ட குறியீடு செய்யப்பட்ட இடங்களில் கல்தூண் நடுதல்

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக உயர் அலை மட்டக் குறியீடு செய்யப்பட்டு 250 மீட்டர் இடைவெளியில் கடலோரத்தில் கல்தூண்கள் நடப்படும் பணி ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம் மற்றும் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும் கடற்கரையோரப் பகுதிகளின் வரைபடம் தயாரித்தல் தமிழகக் கடலோரப்பகுதி, தொழிற்சாலைகள், சுற்றுலா, மீன் பிடித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியது. பல்வேறு மாறுபட்ட பயனாளிகளிடையே ண்மை திட்டம் அவசியமானதாகும். தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை பாதிக்காத வகையில், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கு ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கடற்கரைப் பகுதிகளில் பாதிப்படையும் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. பாதிப்பிற்குள்ளாகும் கடலோரப் பகுதிகளை வரைபடத்தில் குறியீடு செய்வதற்கு கடல் மட்ட ஏற்றத் தாழ்வுகள், புவியியல், புவி மாற்றம், கடல்மட்ட மாறுபாடுகள், கடலோர படுக்கைக் கோடு மாறுபடுதல் (கடல் அரிப்பு, மணல் குவிதல்), அலை வரம்புகள் மற்றும் அலை மட்டப்போக்கு ஆகிய ஏழு அளவீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம் மற்றும் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும் கடற்கரையோரப் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கும் பணி ரூ4.92 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகுதி மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மைத் திட்டம் மற்றும் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய கடற்கரையோரப் பகுதிகளின் வரைபடம் ஆகியவை முற்றிலும் புதியதான நடைமுறைகளாகும். இவற்றின் முக்கியத்துவம் குறித்து, கடலோர மக்களுக்கும் மற்றவர்களுக்கும் உரிய பயிற்சி வடிவமைப்பின் மூலம், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கும் மற்றும் கடலோரம் வாழ்கின்ற மக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு வனத்துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top