பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு வனத்துறை - மனிதவள மேம்பாடு

தமிழ்நாடு வனத்துறையின் மனிதவள மேம்பாடு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ்நாட்டின் வனத்துறையில் மனிதவள சக்தி பெரியளவிலுள்ளன. கிட்டத்தட்ட 5,500 களப்பணியாளர்களும் 3,500 அமைச்சு பணியாளர்களும் இத்துறையில் பணிபுரிந்து வருவதால், அனைத்து பணியாளர்களுக்கும் வனக்கொள்கையின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான திறனை உயர்த்திக் கொள்ளவும் முறையாக பயிற்சி அளிக்கவும் தேவையேற்படுகிறது. கோவை மற்றும் வைகை அணையில் இயங்கி வரும் தமிழ்நாடு வனவியல் பயிற்சி கழகத்திலும், வனவியல் பயிற்சி கல்லூரியிலும் முறையே இத்தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

தமிழ்நாடு வனவியல் பயிற்சி கழகத்தில் சரகர்களுக்கு ஒருவருட பயிற்சியும் வனவர்களுக்கு 6 மாத பயிற்சியும், தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில் வனக்காவலருக்கு 3 மாத காலமும், வனக்காப்பாளருக்கு 6 மாத காலபயிற்சி மற்றும் திறம்பட செயல்பட துறை சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதனை தவிர சிறப்பு பயிற்சிகளும், குறுகிய கால பயிற்சியாக 3 முதல் 10 நாட்கள் வரையிலும் அனைத்து வகை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சூழல் சுற்றுலா

சூழல் சுற்றுலாவின் உள்ளாற்றலை உணர்ந்து ரூ.47 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அரசின் நிதி உதவிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முதுமலை மற்றும் ஆனைமலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிக்காக முதல் சுற்றாக ரூ.4.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2008லிருந்து இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள மற்ற பிரபலமாக்கப்படாத வனவிலங்கு பாதைகள் அடங்கிய பகுதிகளிலும் இத்திட்டத்தை வருங்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பணியாளர் நலன்

நிதிக்குழு பரிந்துரை திட்டம்

நீலகிரி மற்றும் பழநி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள தரங்குன்றிய காடுகளை மீட்டு பசுமைகாடுகளாக தரம் உயர்த்துதல் - வனப்பகுதிகளில் வனசாலைகளை மேம்படுத்துதல்-புகலிட மேலாண்மை மூலம் பல்லுயிரினப்பரவலை பாதுகாத்தல்-வனத்துறை கட்டிடங்களை சீரமைத்தல் கொடைக்கானல் கோட்டத்தில் பைன் மரங்கள் மற்றும் தைல மரங்களை அகற்றிய பகுதிகளில் சோலைகாடுகளை உற்பத்தி செய்தல்.

பணியாளர் நலன்

அரசின் திட்டங்கள் அதன் நோக்கத்தினை அடையும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், திட்டத்தினை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு வேண்டிய அடிப்படை ஆதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மாநில வன ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் விரைவில் அதன் ஆய்வுகளை சமர்ப்பிக்க உள்ளது. பணியாளர் நலன் குறித்த தீர்க்கப்படாத பலநாள் கோரிக்கையினை நிறைவேற்ற இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

களப்பணியாளர்கள் வனப்பாதுகாப்புப் பணி நிமித்தமாக வனங்களின் உட்பகுதிகளில் வசிப்பதற்கு சாதகமற்ற இடங்களில் தங்கி பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற இடங்களில், களப்பணியாளர்களுக்கு வீட்டுவசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டியது அரசின் கடமையாகும். எனவேதான், தமிழ்நாடு காடு வளர்ப்புத்திட்டத்தில் முன்னுரிமை தந்து 463 களப்பணியாளர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 29 அலுவலக கட்டிடங்களும் 20 ஓய்வு இல்லக் கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  நவீன தொலை உணர்வு மற்றும் புவிதகவல் தரவு மையம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது.

வன நிலங்களை வளர்ச்சிப்பணிகளுக்கென பயன்படுத்துதல்

மத்திய அரசின் வனப்பாதுகாப்புச்சட்டத்தின்படி அரசுக்குச் சொந்தமான வன நிலங்களையோ, தனியாருக்கு சொந்தமான நிலம் வனமாக இருந்தாலோ உச்சநீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட குழுவினால் வனங்களாக இனம் காணப்பட்ட நிலங்களையோ அல்லது அரசு ஆவணங்களின் வனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களையோ வனம்சாரா பிற பணிகளுக்கு உபயோகப்படுத்த மத்திய அரசின் முன் அனுமதி தேவைப்படுகிறது.

தேசிய பூங்கா மற்றும் சரணாலயப் பகுதிகளில் வனம் சாரா பணிகளுக்கு (குடிநீர் வசதி, மின்வசதி, தொலைதொடர்பு வசதி முதலியவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பணிகள் நீங்கலாக) வன நிலங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் கருத்துருக்களை உச்சநீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி சமர்ப்பித்தல் கூடாது. வனப்பாதுகாப்புச் சட்டம், 1980ன் வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்டுள்ள அத்தியாவசியமான அரசுத்துறை மேம்பாட்டுப் பணிகளுக்கு 1 எக்டேர் வரையிலான வனநிலத்தை, வனம்சாரா பிற பணிகளுக்கு அனுமதி வழங்க மாநில அரசுக்கு 31.12.2008 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் ஒப்புகை அளிக்கப்பட்ட வன பாதுகாப்புச் சட்டம் 1980இன்படி எக்டர் நிலங்கள் பிற துறைகளுக்கு மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன. 1980 முதல் இதுவரை 304 நிகழ்வுகளில் 4321.1492 எக்டர் வன நிலங்கள் பிற துறைகளுக்கு மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன. பழங்குடி மக்கள் மற்றும் வனவாழ் மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கென முன்னுரிமை கொடுத்து வன நிலங்களை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வனச்சாலைகள் மேம்பாடு

தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கல் பரப்பிய மற்றும் தார் பரப்பிய சாலை 1380 கிலோ மீட்டர், மண் சாலை 1941 கிலோ மீட்டர், சிமெண்ட் சாலை 1.68 கிலோ மீட்டர் ஆக மொத்தம் 3323 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெவ்வேறு வகையான சாலைகள் வனப்பாதுகாப்பிற்காகவும் வனப்பகுதியை சார்ந்துள்ள பொது மக்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

வனச்சாலைகள் அனைத்தும் காப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் இயற்கை சூழ்நிலைக் காரணங்களாலும் கடும் மழை மற்றும் வெள்ளத்தினாலும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையினை அடைந்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் பொது மக்களும் துறை அலுவலர்களும் வனச்சாலைகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இவ்வனச்சாலையினை ஆண்டு தோறும் பழுதுபார்த்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனக் கழகங்கள்

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், திருச்சி.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் 1974 ம் ஆண்டு ஜூன் திங்கள் 13ம் நாள் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு கம்பெனி சட்டம் 1956 ன் கீழ் நிறுவப்பட்டது. சுமார் 74963.23 ஹெக்டேர் பரப்புள்ள காப்புக்காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனங்கள், தமிழ்நாடு வனத்துறையிடமிருந்து குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்டது. இக்கழகத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோயிலூர் மற்றும் மேல்செங்கம் என 7 மண்டலங்கள் இக்கழகத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இது தவிர தெக்குப்பட்டு என்ற இடத்தில் உள்ள சந்தனப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை, தமிழ்நாடு வனத்துறையிடமிருந்து குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு வனத்துறை

2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top