பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் சார்ந்த ஆளுமை மற்றும் நிறுவனம் சார்ந்த திறனை வலுப்படுத்துதல்

சுற்றுச்சூழல் சார்ந்த ஆளுமை மற்றும் நிறுவனம் சார்ந்த திறனை வலுப்படுத்துதல் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் தொடர்புடைய பல அரசமைப்புச் சட்டம், சட்டம் மற்றும் நெறிப்படுத்துகிற விதிகள் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் இயற்றப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான நடைமுறையிலுள்ள சட்டமியற்றுகிற கட்டமைப்பு கீழே கட்டம் 1-ல் விவரிக்கப்பட்டுள்ளது.

கட்டம்-1 : சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக நடைமுறையில் உள்ள சட்டம்

தற்போதைய சட்டமியற்றுகிற கட்டமைப்பு, 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1974 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் மற்றும் 1981ஆம் ஆண்டு காற்று (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் ஆகியவற்றின் கீழ் அடங்கியுள்ளது. வனங்கள் மற்றும் பல்வகை உயிரினத்தொகுதி மேலாண்மைச் சட்டத்தைப் பொறுத்த வரையில், அது, தமிழ்நாடு 1882 ஆம் ஆண்டு வனச்சட்டம், 1927 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம், 1980 ஆம் ஆண்டு வனச் (பாதுகாப்பு) சட்டம், 1972 ஆம் ஆண்டு வன விலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 2002 ஆம் ஆண்டு உயிரினப் பல்வகைமைச் சட்டம் (2004ஆம் ஆண்டு உயிரினப் பல்வகைமை விதிகள்) ஆகியவற்றின் கீழ் அடங்கியுள்ளது. கீழ்க்காணும் சட்டங்கள் மற்றும் விதிகள், ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்தவையாக உள்ளன.

சுற்றுச்சூழல்

 • 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்
 • திருத்தியமைக்கப்பட்ட 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள்.

நீர்

 • 1978 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1974 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம்.
 • தமிழ்நாடு 1983 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) விதிகள்.
 • 1991 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1977 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) செஸ்வரிச் சட்டம்.
 • 1992ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) மேல்வரி விதிகள்.

காற்று

 • 1987 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு காற்று (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம்.
 • தமிழ்நாடு 1983 ஆம் ஆண்டு, காற்று (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) விதிகள்.

ஒலி

 • 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 2000 ஆம் ஆண்டு ஒலி மாசு (முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்) விதிகள்.

திடக்கழிவு

 • 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1999 ஆம் ஆண்டு நிலக்கரிச் சாம்பல் பயன்பாட்டு அறிவிக்கை.
 • 2016 ஆம் ஆண்டு நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவு மேலாண்மை விதிகள்.
 • 2016 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள்.

அபாயகரமான கழிவு மற்றும் ஏனையவை

 • 2016 ஆம் ஆண்டு, அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் இடை எல்லை நடமாட்டம்) விதிகள்.
 • 1994 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், திருத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டு அபாயகரமான இரசாயனத் தயாரிப்பு, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள்
 • 1989 ஆம் ஆண்டு, அபாயகரமான நுண் உயிரகங்கள் l மரபு ரீதியாக கட்டமைக்கப்பட்ட உயிரகங்கள் அல்லது உயிரணு தயாரிப்பு, பயன்பாடு, இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சேமிப்பு விதிகள்.
 • 1996 ஆம் ஆண்டு இரசாயன விபத்துகள் (அவசரகால திட்டமிடல், ஆயத்த நிலை மற்றும் பொறுப்பு) விதிகள்.
 • 2016 ஆம் ஆண்டு உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள்.
 • திருத்தப்பட்ட 2001ஆம் ஆண்டு மின்கலங்கள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள்.
 • 2016 ஆம் ஆண்டு மின்கழிவு விதிகள்.
 • 2016 ஆம் ஆண்டு கட்டுமானம் மற்றும் தகர்த்தல் சார்ந்த கழிவு மேலாண்மை விதிகள்.

கடற்கரைப் பகுதியை முறைப்படுத்துதல்

 • 1994, 1997 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில், திருத்தப்பட்ட 1991 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

 • 2006 ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு (2009 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது).
 • மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2016

கற்றுச்சூழல் தீர்ப்பாயம்

 • 2010ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டம்

ஏனையவை

 • 1992ஆம் ஆண்டில், திருத்தப்பட்ட 1991ஆம் ஆண்டு பொது பொறுப்பு காப்பீட்டுச் சட்டம்.
 • 1991ஆம் ஆண்டு பொது பொறுப்பு காப்பீட்டு விதிகள்.
 • 2010ஆம் ஆண்டு சதுப்பு நில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள்.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவனம் சார்ந்த கட்டமைப்பு, மேற்சொன்ன சட்டங்கள் சார்ந்த கட்டமைப்பின் விளைவாகத் தோன்றியுள்ளது. மேலும், கீழே கட்டம் 2-ல் தெரிவித்துள்ள பல நிறுவனங்களும் அதில் அடங்கியுள்ளன.

கட்டம்-2 : சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக, நடைமுறையிலுள்ள நிறுவனம் சார்ந்த கட்டமைப்பு

1974 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) (மத்தியச்சட்டம் 61974) சட்டத்தையொட்டி, தமிழ்நாடு அரசு, 1982 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அமைத்தது. இது 1974 ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1977ஆம் ஆண்டு நீர் (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) மேல்வரிச் சட்டம், 1981ஆம் ஆண்டு காற்று (மாசு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட தொடர்புடைய விதிகள் ஆகியவற்றை செயற்படுத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ளது. குடிநீர், காற்று ஆகியவற்றை மாசடையாது பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் ஆகியவற்றுக்கான விரிவான திட்டம் ஒன்றைத் தயாரித்தல், கழிவுநீர் வெளியேற்றம். தொழிலக கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செம்மையாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்தல், தொழிலகத் தளவாடங்களின் கட்டுப்பாட்டு சாதனத்தை ஆய்வு செய்தல், காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவுகள் பிறப்பித்தல், கழிவுநீர் மாதிரிகளை சேகரித்தல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காற்றை மாசுபடுத்துகிற புகைகளை ஆய்வு செய்து, குறிப்பிட்ட தர அளவுகோல்களை நிர்ணயித்தல், மாநில அரசு அல்லது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தும் அத்தகைய பிற அலுவல்களை மேற்கொள்ளுதல் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியமான செயற்பாடுகளாக உள்ளன.

சுற்றுச்சூழல் துறை

மாநிலத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் துறை, 1995 ஆம் ஆண்டில் ஓர் ஒருங்கிணைப்புத் துறையாக உருவாக்கப்பட்டது. துறையின் பொறுப்புகளில் கீழ்க்கண்டவை அடங்கும்:

 • தேசிய ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றைச் செயற்படுத்துதல்.
 • தேசிய பசுமைப்படை வாயிலாக பள்ளிக் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளுதல்.
 • கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் விதிமுறைகளை செயற்படுத்துதல்.
 • உலக வங்கியின் நிதி உதவியுடன், கடலோர பேரிடர் அபாய குறைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மைத் திட்டத்தைச் செயற்படுத்துதல்.
 • பருவநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு மாநில செயல்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
 • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சனைகள் பற்றிய தகவல்களை சுற்றுச்சூழல் தகவல் ஏற்பட்டு முறை மூலமாக இணையதளம் வழியாக அளித்தல்.

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக, (1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சகம் 2006 செப்டம்பரில் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிவிக்கையின்படி) மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மத்திய அரசுக்கு துணை புரிகிற ஒர் உதவிக்கரமாக அமைக்கப்பட்டுள்ளது. திட்டங்களுக்கான வளவாய்ப்பினை ஆய்வு செய்தல், கண்டறிதல் மற்றும் மதிப்பீடு செய்தல் அல்லது மேற்சொன்ன அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த ஆணையத்தின் அலுவல்களில் அடங்கும்.

ஐந்து எக்டேர் அல்லது அதற்குக் குறைவான பகுதியில் சிறு கனிமங்களை வெட்டியெடுக்கும் குத்தகைப் பகுதி தொடர்பான "பி2" வகை திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்க ஏதுவாக, மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில கடலோரப் பகுதி மேலாண்மைக் குழுமம்

1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிக்கையிட்டவாறு கடலோரத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்துவதற்கும், 1991 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை மற்றும் 2011ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை ஆகியவற்றை கட்டாயமாகச் செயற்படுத்துவதற்கும் தமிழ்நாடு மாநில கடலோரப் பகுதி மேலாண்மைக் குழுமம் பொறுப்பு வாய்ந்ததாகும்.

பிற துறைகள் மற்றும் முகவரமைப்புகளின் பங்கு பணி

சுற்றுச்சூழல் குறித்த உணர்வினை ஒரே சீராகப் பயன்படுத்தி, மாநிலத்தில் அனைத்து நிலைகளிலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்சொன்னவற்றுடன், தமிழ்நாடு அரசின் பல முகவரமைப்புகள் / துறைகள், தங்களுடைய ஆளுகையின் கீழ் வருகிற பகுதிகளுக்குள் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சுற்றுச்சூழலைக் கண்காணித்து, செம்மையான முறையில் நிருவகிப்பதற்காக, பல சட்டங்களை இயற்றியும், பலவகையான நிறுவனங்களை நிறுவியும், செம்மையான வகையில் முறைப்படுத்தியும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கீழ்க்காணும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, சுற்றுச்சூழலைக் கண்காணித்தல், பாதுகாத்தல் ஆகியவை ஒரு சவாலாக இருப்பதை தமிழ்நாடு அரசு நன்கு அறிந்துள்ளது.

நிறுவனஞ்சார்ந்த பங்கு பணிகள், சுற்றுச்சூழல் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் சாசனம் குறித்த தெளிவுரை

பல்வேறு சட்டத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, சுற்றுச்சூழலை மேலாண்மை செய்யும் பொருட்டு, பல நிறுவனங்கள் அறிவிக்கையிடப்பட்டு, நிறுவப்படுகையில், அவற்றின் பங்கு பணிகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை நிர்ணயித்தல் தொடர்பாக, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான நிறுவனஞ்சார்ந்த கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இக்கொள்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை என்பது களத்துறைகள் மற்றும் முகவரமைப்புகளுடன் மேற்கொள்ள வேண்டிய ஒரு பொருண்மை என்பதையும், இவை, சுற்றுச்சூழல் மூலவளங்களைப் பாதுகாப்பதற்கான, அமைப்புகளை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு பணி ஆற்ற வேண்டியுள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.

திறன் மற்றும் சிறப்பறிவு போதிய அளவுக்கு இல்லாமை

சுற்றுச்சூழலைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்வதற்காக நிறுவப்பட்ட பல நிறுவனங்கள், அவற்றிடம் முன் வைக்கப்படும், அதிகரித்து வரும் மற்றும் அடிக்கடி மாறி வருகிற கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, போதிய திறன் மற்றும் சிறப்பறிவு இல்லாததால், அவற்றின் செயல்பாட்டில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தமிழ்நாடு அதனுடைய தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டுச் சூழலையும் மேம்படுத்தும் போது, நவீன நடைமுறைகள் மற்றும் புதிய தொழில் துறைகள் தொடர்பான தொழில்நுட்பத் திறன்கள் குறித்த சிறப்பறிவை, இந்த முகவரமைப்பு நிறுவனங்கள் சில சமயங்களில் போதிய அளவுக்குப் பெற்றிருப்பதில்லை. நியாயமான முறையில், பரந்த அளவில், சட்டங்களும் விதிமுறைகளும் இயற்றப்பட்டுள்ள போதிலும், நிறுவனஞ் சார்ந்த பங்கு பணிகளில் தெளிவின்மை, போதிய அளவுக்கு பதில் சொல்லும் பொறுப்பின்மை, முகவரமைப்பு நிறுவனங்களுக்குள் போதிய அளவுக்கு கண்காணிப்புத் திறன் மற்றும் சிறப்பறிவு இல்லாமை ஆகியவற்றால் இவற்றைச் செயல்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது.

தகவல் கட்டமைப்பு போதுமான அளவு இல்லாமை

சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான தகவல் உட்கட்டமைப்பை மேம்படுத்துகிற முயற்சிகள் செயற்பாட்டில் உள்ளன. தொலையுணர்வு சாதனம், புவியியல் தகவல் ஏற்பாட்டு முறை முதலியவை உட்பட பல நவீன முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கடலோரப் பகுதிகள், வனங்கள், சதுப்பு தகவலின் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பல ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதுபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தெரிவு செய்யப்பட்ட தொழிலகப் பகுதிகள் மற்றும் நகர்ப்பகுதி மையங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை, தொடர்ந்து கண்காணிக்கிற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதே நிலையில், தொடர் முயற்சிகள் மேற்கொள்வது அவசியமாகிறது.

பொறுப்பாளர்களிடம் இனக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கான அவசியம்

முடிவெடுப்பதில் பரந்த அளவிலான பொறுப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு உண்மையான மற்றும் முனைப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. பாதிப்பு குறித்த மதிப்பீடுகள் மற்றும் மக்கள் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது, நீடித்த வகையிலான வளர்ச்சிக்காக, விழிப்புணர்வை ஏற்படுத்துகிற ஆக்கபூர்வமான முயற்சிகள் மற்றும் பொறுப்பாளர்களின் வெளிப்படையான ஈடுபாடு குறித்த அவசியத்தை தமிழ்நாடு அரசு முக்கியமாக அறிந்துள்ளது.

இசைவுகள், ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் குறித்த நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல்

நமது மாநிலத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீட்டுச் சூழலை மேம்படுத்து வதற்கு, இசைவுகள், ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கான நடைமுறையை மிகவும் வெளிப்படையாகவும், காலவரையறைக்கு உட்பட்டதாகவும் செய்வது மிகவும் இன்றியமையாதது என்பதை தமிழ்நாடு அரசு அறிந்துள்ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறுவது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொள்கிற போது, சுற்றுச்சூழல் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணல் மற்றும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக, இந்த நடைமுறைகளை மேலும் சீரமைப்பது இன்றியமையாதது என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.

தமிழ்நாடு, விரைவாக நகர்ப்பகுதிமயமாவதையும் தொழில்மயமாவதையும் கருத்திற்கொண்டு, நிருவாகம் (ஆளுகை) மற்றும் நிறுவனஞ்சார்ந்த கட்டமைப்பிற்கு ஏற்படும் மேற்சொன்ன இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது இன்றியமையாத ஒன்றாகும். சுற்றுச்சூழல் நிருவாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனஞ் சார்ந்த கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படுகிற முக்கியமான நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

1. தமிழ்நாடு அரசின் முகவரமைப்புகளில் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பறிவு மற்றும் திறனைப் பெருக்குதல்:

சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பாக, தமிழ்நாடு அரசின் முகவரமைப்பிற்குள் ஏற்படுகிற குறிப்பிட்ட தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த இடைவெளிகளைக் (பற்றாக்குறை) கண்டறிந்து, மதிப்பீடு செய்வதற்கான தொடக்க நிலை மதிப்பீட்டை, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். கீழ்க்கண்ட விருப்புரிமைகள் மூலம் முன்னுரிமை அடிப்படையில், இந்த இடைவெளிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவற்றுள் கீழ்க்கண்டவை அடங்கும்.

அ. கூடுதல் திறன்களையும், சிறப்பறிவையும் மேம்படுத்துவதற்காக பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள்.

ஆ. தொடராத தன்மையுள்ள சிறப்பறிவுத் திறன்களை (தேவைகளை) சிறந்த முறையில் பெறுவது அவசியம் என்று கருதும் இடங்களில் தனிப்பட்ட வல்லுநர் பட்டியல்களை உருவாக்குதல் மற்றும் அவர்களைப் பணியில் அமர்த்துதல், தேவைகளுக்கு இணக்கமான முன் நிலவர ஏற்பாட்டு முறைக்கு உதவுதல் மற்றும் தெளிவுரைகளை வழங்குதல்.

இ. ஏனைய சில மாநிலங்களில் செய்யப்பட்டு வருவதைப் போன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பிற்கு துணை செய்வதற்காக, தனிப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை ஆராய்தல்.

2. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தகவல் மேலாண்மை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்:

தகவல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியை, தமிழ்நாடு அரசு, தொடர்ந்து மேற்கொள்ளும். இது, குறிப்பாக கீழ்க்கண்டவை குறித்து கவனம் செலுத்தும்.

அ. புவியியல் தகவல் ஏற்பாட்டு முறை மற்றும் தொலையுணர்வு உள்ளிட்ட தொழில்நுட்ப உத்திகளை பரந்த அளவில் பயன்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் சுற்றுச்சூழல் மூலவளங்கள் குறித்த வரைபடத்தை உருவாக்குதல்.

ஆ. ஆய்வுக்கூடம், இணையம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் சாதனங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல். தூய்மைக் கேட்டின் அளவுகளையும், சுற்றுச்சூழல் மூலவளங்களையும் தொடர்ந்து கண்காணித்தல்.

3. இசைவுகள், பாதிப்பு குறித்த மதிப்பீடுகள் மற்றும் ஒப்புதல்கள் ஆகியவற்றுக்கான நடைமுறைகளையும்,அமைப்புகளையும் வலுப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல்

மேற்கூறிய நடைமுறையை வெளிப்படையானதாகவும், சுற்றுச்சூழல் ரீதியாக வலுவானதாகவும், செம்மையானதாகவும், மக்கள் மற்றும் முதலீட்டாளர் ஆகியோருக்கு உகந்ததாகவும் செய்கிறபோது, விதிமுறைகளைக் கண்டிப்பாகச் செயற்படுத்த இயலும் வகையில், தமிழ்நாடு அரசு, இசைவுகள், மதிப்பீடுகள் மற்றும் ஒப்புதல்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான நடைமுறைகளை தொடர்ந்து வலுப்படுத்தும். அத்தகைய நடைமுறைகளில் கீழ்க்கண்டவை அடங்கும்.

அ. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய நேரத்தில் காற்றின் தரம் குறித்த தகவலைப் பெறும் முறையை தொடர்ந்து மேம்படுத்தி, இணையதளம் மூலமாக அதனை அறிந்து கொள்ளுதல் மற்றும் விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவலைப் பெறுதல்.

ஆ. ஒற்றைச் சாளர நடைமுறையை வலுப்படுத்துதல், பச்சை மற்றும் ஆரஞ்சு வகைப்பாட்டைச் சேர்ந்த தொழிலகங்களை நிறுவுவதற்கு இசைவு அளிப்பதற்கான நடைமுறையை மேலும் சீரமைத்தல். இதற்காக ஒற்றைச் சாளரக் குழு தடையில்லாச் சான்றிதழை வழங்குகிறது.

இ. குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிவெடுத்தல், இசைவுகள் அளித்தல் மற்றும் இசைவு அளிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு உட்பட அளிக்கப்பட்ட இசைவுகள் குறித்து இணைய வழியில் தெரிவித்தல்.

4. சுற்றுச்சூழல் தரங்கள், வரையளவுகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தல்: சட்டம் மற்றும் தரங்களைச் செயற்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு நடைமுறையை செயற்படுத்துதல்

தமிழ்நாடு அரசு, தேசிய மற்றும் பன்னாட்டு சிறந்த நடைமுறைகளின் வரையளவு ஒன்றின் அடிப்படையில், சுற்றுச்சூழல் வரையறைகள் மற்றும் தரங்களை விரிவாக ஆய்வு செய்யும். அவற்றை, குறிப்பிட்ட காலந்தோறும் திருத்தியமைக்கும். மேலும் இந்த வரையறைகள் மற்றும் தரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலந்தோறும் இறுதி செய்யப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் சார்ந்த சட்டம் மற்றும் பொருந்தக் கூடிய தரங்கள் வரையறைகள் உரியவாறு செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு அரசு, கண்காணிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும்.

5. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்:

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, திறன் வாய்ந்த நிறுவனங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த சவால்களை எதிர்கொள்வதற்காக, அரசு, தொழிலகம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே உடனுழைப்புத்தன்மை வாய்ந்த கூட்டாண்மையை ஊக்குவிக்கும். தற்போதைய மற்றும் வருங்கால சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, புதுமையான தீர்வுகளை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சி, வளர்ச்சி குறித்த முயற்சிகள் தொடர்பாக, கல்வி சார்ந்த மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் படிப்படியான அளவு வீதத்தில் பெரிதாக்கிக் காட்டுதல் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு உதவும்.

6. விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் பொறுப்பாளர்களைப் பெருமளவில் ஈடுபடுத்துதல்:

சுற்றுச்சூழல் குறித்த தங்களுடையை உரிமைகள் மற்றும் பொறுப்புகளை பொறுப்பாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களிடையே பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்பதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குதல், மனித வளமேம்பாடு, நீடித்த வகையிலான சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் சமுதாயத்தினர், குடிமையியல் சங்கங்கள், அரசு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற பொறுப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு, சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். பொது மக்களிடம் கேட்டறிதல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டிக் குறிப்புகள் ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் செயற்படுத்தப்படும்.

7. நிலையான வளர்ச்சிக்கான இலக்கினை அடைவதற்கான தொடர் நடவடிக்கைகள்:

எதிர்காலத்தில் நீடித்த நிலையான வளர்ச்சியினை அடைவதற்கு, தேசிய நீடித்த நிலையான வளர்ச்சியை அடையும் வகையில், தமிழ்நாடு, அதற்குண்டான இலக்குகளை திட்ட நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கும். இந்த நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கானது (எஸ்.டி.ஜி), அதனை அடைவதற்கான தெளிவான செயற்பாட்டு நடவடிக்கைகளுடன், பொருளாதாரம், சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய முப்பெரும் காரணிகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.

8. நிதியுதவி மற்றும் நிதி ஆதார ஒதுக்கீடு

2006 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அரசின் நடவடிக்கைகளில் (மாசுபடுத்துவோர் தொகை செலுத்துதல் மற்றும் செலவைக் குறைத்தல் ஆகியவை தொடர்பான சிக்கல்கள் உட்பட) செலவுச் சிக்கனத்தை செயலுருவாக்குமாறு கோரப்பட வேண்டும் என்ற கொள்கை ஆதரிக்கப்படும். அதற்கிணங்க, மாசு ஏற்படுத்துவோர், மக்களின் நலனுக்கு உரிய மதிப்பளித்தும், பன்னாட்டு வணிகம் மற்றும் சுற்றுச்சூழலை சீர்குலைக்காமலும்,தூய்மைக் கேட்டினை சரிசெய்ய ஆகும் செலவை, கொள்கை அளவில் ஏற்க வேண்டும் என்ற அணுகுமுறையைக் கருத்திற்கொண்டு, ஊக்க உதவியை அடிப்படையாகக் கொண்ட கொள்கை ஆவணங்களைப் பயன்படுத்துதல் உட்பட, இக்கொள்கை, சுற்றுச்சூழல் குறித்த செலவை, அனைத்து நாட்டுரிமையாக்கும் நடவடிக்கையை மேம்படுத்தும்.

பசுமையாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை முயற்சிகளுக்குக் கிடைக்கிற நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக, ஏனைய வளவாய்ப்புள்ள நிதி வாயில்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஆராயும். அவையாவன:

அ. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வாயிலாக தூய்மைக் கேட்டினை (மாசு) ஏற்படுத்துபவை உள்ளிட்ட உயரளவு தூய்மைக் கேட்டுடன் பெரிதும் தொடர்புடைய குறிப்பிட்ட நுகர்வோர் குழுக்களுக்கு மேல்வரி விதித்தல்.

ஆ. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள் வழங்குதல்.

இ. உயிரின வாழ்க்கைச் சூழல் வரி ஒன்றை உருவாக்கி, அதனை, பொருள் மற்றும் சேவை வரியுடன் இணைத்து, தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலின் சுய மேலாண்மையை ஊக்குவித்தல்.

ஈ. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் மூலம் ஏற்படக்கூடிய மாசு குறித்த பாதிப்புகளுக்கு, மாசு விளைவிப்பவர்களிடமிருந்து, மாசு உற்பத்தியாகும் இடத்திலேயே அதாவது எரிபொருள் விற்பனை செய்யுமிடத்தில் மற்றும் அதனைப் பயன்படுத்துகிற இடத்தில் சம்பந்தப்பட்ட மாசு ஏற்படுத்துபவரிடமிருந்து அதற்குரிய வரியை செலுத்திட வற்புறுத்திட வேண்டும்.

உ. எரிசக்தி சிக்கனத்தை அதிகரிப்பதற்காக, பசுமைக் கட்டடங்கள் மற்றும் பிற முயற்சிகளுக்கு வரிக்கழிவுகள் அனுமதித்தல்.

ஊ. சுற்றுச்சூழல் சார்ந்த சொத்துக்களை உருவாக்குவதற்காக, அரசு – தனியார் பங்கேற்பு முயற்சிகளுக்கு நீடித்த வகையில் பயன் தருகிற ஆதரவு அளித்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை

3.05555555556
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top