பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018

தமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018 பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டள்ளன.

முகவுரை

காடு வளர்ப்பு என்பது, வாழ்வாதாரக் கூறுகளாக உள்ள மண், நீர், காற்று மற்றும் பல்வகை உயிரித்தொகுதி ஆகியவற்றின் மீது ஏற்படுகிற முக்கியமான தாக்கத்துடன், இயல்பான முறையில் நிலப்பகுதியைப் பயன்படுத்துவதாகும். இம்மாநில மக்களின் உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றுக்கான தேவைகளை நிறைவு செய்வதற்காக, தமிழ்நாட்டிலுள்ள வனங்களை மேலாண்மை செய்வது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. வனங்களைப் பாதுகாத்தல், நீடித்த வகையில் மேலாண்மை செய்தல் மற்றும் வனங்களை மீட்டல் ஆகியவற்றுக்கான நடவடிக்கையானது, பொருளாதார வளர்ச்சி, வறுமை தணிப்பு, உணவுப்பாதுகாப்பு, பருவநிலை எதிர்விசைப்பு ஆகியவற்றுக்கு பெருமளவில் பங்களிப்பாக அமையும். வனங்கள், தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைக் கணிசமாகத் தணிப்பதிலும், மாற்றியமைப்பதிலும் இவை பெரும்பங்காற்றுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள வனங்கள், நமது மாநிலத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக மாண்புகளுக்கும் சிறப்பான முறையில் பங்கு பணியாற்றுகின்றன.

வனக்கொள்கையின் அவசியம்

  • நீண்ட நெடும் கடற்கரை;
  • கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்களின் சங்கமம்;
  • வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு;
  • வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம்

போன்ற தனித்துவமான பண்புகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்வதால், இம்மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க வனக்கொள்கை இருக்கவேண்டியது அவசியமாகிறது. தேசிய வனக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023' ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட தொலைநோக்கங்களை எய்துவதற்கும், இக்கொள்கை அவசியமாகிறது. எனவே, கீழ்க்கண்டவற்றை மாநில வனக்கொள்கை விளக்கமாகத் தெரிவிக்கிறது.

1988-ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கை, உயிரின் வாழ்க்கைச் சூழலின் சமநிலையைப் பராமரித்து, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை உறுதி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மொத்த நிலப்பரப்பில், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பிலும், மொத்த மலைப்பகுதியின் பரப்பில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலும், மரங்களை வளர்த்து, அவற்றை வனப்பகுதியாக உருவாக்குகிற அல்லது அடர்த்தியான மரவளர்ப்பு சாதனையை எய்துவது மேற்சொன்ன இக்கொள்கையின் நோக்கமாகும்.

தமிழக அரசு, 2014-ஆம் ஆண்டில், உட்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான வினைமுறைத்திறன் திட்டங்கள் கொண்ட 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' என்னும் திட்டத்தினை தொடங்கியுள்ளது. பாரம்பரியச் சிறப்பினைப் பேணி வளர்ப்பதும், சூழலியலைப் பாதுகாப்பதும் தொலைநோக்கத்தின் ஓர் முக்கிய கருப்பொருளாகும். ஏனையவற்றுடன், வனப்பரப்பினை அதிகரிப்பது, சதுப்பு நிலங்கள் மற்றும் ஏனைய நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, கடலோரப்பகுதி மற்றும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற மென்மையான சூழலியலைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் விலங்கு மற்றும் தாவர இனங்களின் பன்முகத் தன்மையினைப் பாதுகாப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். மேலும், 33 சதவீத வனம் / அடர்த்தியான மரவளர்ப்பு என்ற இலக்கை அடைவதற்கான மற்றொரு மிக முக்கியமான மற்றும் செலவு குறைந்த உத்திமுறையானது, காடுகளுக்கு வெளியே அடர்த்தியாக மரங்களை வளர்ப்பதேயாகும்.

அடிப்படை நோக்கங்கள்

மாநில வனக்கொள்கையின் நோக்கங்களில், இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்புமுறை, அதன் வேறுபட்ட மரபியல் பண்புகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், வனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், வனப்பகுதிகளிலுள்ள நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், மாநிலம் முழுவதிலும் அடர்த்தியாக மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல் மற்றும் தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தை தணித்தல் ஆகியவையும் அடங்கும்.

தமிழ்நாடு வனக்கொள்கையின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களை எய்துவதற்காக முக்கியத்துவம் அளிக்கிற முக்கிய அம்சங்களாவன:

  1. பல்வகை உயிரின தாவரத்தொகுதி மற்றும் அவற்றின் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்;
  2. வளங்குறைந்த வனப்பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து சீரமைத்தல்;
  3. கடலோரப்பகுதிகளின் உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்;
  4. வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணிப்பது மாற்றி அமைப்பது;
  5. வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர் வளத்தைப் பெருக்குதல்;
  6. வனவிலங்கு மேலாண்மையைப் பாதுகாத்துப் பேணுவதற்கு, உள்ளூர் மக்களை, குறிப்பாக பழங்குடியினரை ஈடுபடச்செய்தல்;
  7. அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு;
  8. உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக பழங்குடியினரின் வாழ்வாதாரத்திற்கு வகை செய்வதற்காக, உயிரின் வாழ்க்கைச் சூழல் செறிந்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ளுதல்;
  9. வன மேலாண்மைக்கான மனித வளத்தை மேம்படுத்துதல். பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல்

செயலாக்கமுறை

மேற்சொன்ன நோக்கங்களை எய்துவதற்கு பின்வரும் செயலாக்க முறைகள் பின்பற்றப்படவுள்ளன.

பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி, வனவிலங்கு மற்றும் அவற்றின் மரபியலைப் பாதுகாத்தல்

மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கு, 40 சதவீதத்திற்கும் அதிகமான மர அடர்த்தியைக் கொண்டுள்ள சுமார் 13,462 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப்பகுதிகளைப் பாதுகாத்து வருவது மிக மிக அவசியமாகும். நம் மாநிலம், ஏறக்குறைய 30.92 சதவீத நிலப்பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், நமது மாநிலம் உலகளாவிய மாபெரும் பல்வகை உயிரி தாவரத் தொகுதியைக் கொண்டுள்ள இடங்களுள் ஒன்றாகிய குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த பூச்செடிகள் மற்றும் விலங்கினங்கள் காணப்படும் பகுதியாக விளங்கும் மேற்கு மலைத் தொடர் பகுதியை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தநாள் நிலவரப்படி, இம்மாநிலத்தில், 15 வன உயிரினச் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க்கோள் காப்பகங்கள், 2 பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள், 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் 1 மரபியல் தொகுப்பு தோட்டம் ஆகியவை உள்ளன. மேலும், இம்மாநிலம், தனிச்சிறப்புடைய கடலோரப்பகுதிகளையும், வளமான சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் வனப்பகுதி இணைவுடன் கூடிய தாவர வகைகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மலைத்தொடரும் இம்மாநிலத்திற்குரிய பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி வளங்களுக்கு செழுமை சேர்க்கிறது.

பரந்துபட்ட இந்த தாவரங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு, அவ்வப்போது மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக்குறிப்புகளிலும், தேசிய வனவிலங்கு செயல் திட்டத்திலும், வகை செய்யப்பட்டவாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதி வலுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். பெருவழிகளைக் கையகப்படுத்துவதன் மூலமாகவும், இயற்கையான வசிப்பிடங்களை விரிவுபடுத்துவதன் மூலமாகவும் பாதுகாப்புப்பகுதியை அதிகரிக்கக் கருதியுள்ள நடவடிக்கையானது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளை, காப்புக்காடுகளுடன் இணைக்கவும், வன விலங்குகளுக்கு பரந்த வசிப்பிடப்பகுதிகளை வகை செய்யவும் உதவும். வன விலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்பு மற்றும் பயிர்சேதத்திற்கு குறித்த காலத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்படும். இது மனிதர்களால் வனவிலங்குகளுக்கும், வன விலங்குகளால் மனிதர்களுக்கும் ஏற்படுகிற பிரச்சினைகளைக் குறைக்கும்.

சேதத்துக்குள்ளாகாத வாழ்விடங்களை உருவாக்குவதற்காக, புலிகள் காப்பகங்கள் உள்ள பகுதிகளில் அமைந்திருக்கிற வனவாசிகளின் வசிப்பிடங்களை உரிய இடமாற்ற வசதிகளுடன் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுகிற நடவடிக்கை ஊக்குவிக்கப்படும். வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான பரவலை உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள சூழலமைவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி கண்டறியப்பட்டு அறிவிக்கையிடப்படும்.

வனப்பகுதிகளின் உரிய அளவு பாதுகாப்பை உறுதி செய்து, இதன் மூலம் உயிரின் வாழ்க்கைச் சூழல் அமைப்பு முறை மற்றும் அவற்றின் மரபியல் வளங்களைப் பேணிக் காப்பதற்கு, வனச்சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவது உறுதி செய்யப்படவேண்டும். வேற்றுவகை தாவரங்கள் இயற்கை வனப்பகுதிகளாக மாற்றப்படும். குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள இனங்களைப் பேணிக் காப்பதற்கும் அவற்றின் வளங்களை மேம்படுத்துவதற்கும், சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அயல் தாவர வகைகளின் ஊடுருவலை தடுக்க விஞ்ஞான ரீதியில் முயற்சி மேற்கொள்ளப்படும். உள்ளூர் மக்களின் ஈடுபாட்டுடன், வனப்பகுதிகளில் மேய்ச்சல் முறைப்படுத்தப்படும்.

காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, கிராம மக்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காட்டுத் தீயைக் கண்டறிவதற்காகவும், அதை அணைப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் துறையின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிலத்தின் உடைமை உரிமையைக் கருதிப்பாராமல் தனியார் நிலங்களில் உள்ள இயற்கை வளங்களையும் அருகி வருகிற தாவர வகைகள் இயற்கையாக செழித்து வளருகிற இடங்களையும் மற்றும் விலங்கினங்களின் வசிப்பிடங்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, தனியார் நிலங்கள், வனம் சாராத நோக்கங்களுக்காக, கள்ளத்தனமாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து தடுத்தல்.

சரியான நிலப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்திசைவான வருமானத்தை அளிப்பதற்கான வழிவகைகள் மூலம் சாகுபடி முறையை மாற்றுவது தவிர்க்கப்படும்.

உயிரின வாழ்க்கைச்சூழலைப் பேணுவதற்காக, தற்போதுள்ள வனப்பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980 கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்றவாறு, வன நிலங்களை, வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். வனங்களுக்குள், வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்படும். வனத்திற்குள், வணிக நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

வனங்களை, முன்னிருந்த அதே இடத்தில் பாதுகாத்தல், முன்னிருந்த இடத்திற்கு வெளியில் - வெற்றிகரமாகப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான வலுவான இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். பெரிய மற்றும் சிறிய உயிரியல் பூங்காக்கள் மற்றும் மரபணு தொகுப்புத் தோட்டம்' ஆகியவை வனங்களை வெற்றிகரமான முறையில் பாதுகாப்பதற்கான இத்தகைய இணைப்பு வசதிகளை ஏற்படுத்துகிற பணியில் ஈடுபடுத்தப்படும்.

வனவளம் குறைக்கப்பட்ட காடுகளைச் சீரமைத்தல் மற்றும் மீட்டல்

கடந்த நூற்றாண்டின் இடைப்பட்ட ஆண்டுகளில், தவறான மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பெருமளவில் மண் ஆராய்ச்சி நடவடிக்கைகளை, விளைவு பற்றி சிறிதும் கருதிப்பாராமல் மேற்கொண்டதால், நமது மாநிலத்தில், வனங்களில் பெரும்பகுதியின் வளம் மிகவும் குறைக்கப்பட்டதுடன் அழிவுக்கும் உள்ளானது. ஆனால், மிகவும் மனநிறைவளிக்கிற செயல் யாதெனில், நமது மாநிலம், வனவளம் மேலும் குறைவதைத் தடுத்ததுடன் மட்டுமின்றி, வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்களின் வாயிலாக செயற்கையான முறையில் காடுகளை மீண்டும் வளர்க்கும் நடவடிக்கையுடன், 'இயற்கையான முறையில் மறுஉற்பத்திக்கு உதவுதல்' என்றழைக்கப்படுகிற சூழலமைவு ஏற்பாட்டு அணுகுமுறையைப் பின்பற்றி, கடந்த 20 ஆண்டுகளில், கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தின் கீழ், சுமார் 6,00,000 எக்டேர் வனப்பகுதியில், மீண்டும் மரங்களை வளர்த்தது. 'இயற்கையான காடு வளர்ப்பிற்கு இணக்கமான வன மேலாண்மை கொள்கைகளைப் பயன்படுத்தி, வன மேலாண்மைக்கான சூழலமைவு ஏற்பாட்டு அணுகுமுறை' வகையில், தமிழ்நாடு மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இயற்கையான காடு வளர்ப்பிற்கு இணக்கமான அணுகுமுறையின் கீழ், மரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் மட்டுமின்றி சூழலமைவு நடைமுறைகளை பாதிக்கிற புதர்கள் (குறுஞ்செடிகள்), கொடிகள், பூண்டு வகைகள், புல் வகைகள், திணை நிலத்திற்குரிய உயிரினத்தொகுதி, திணை நிலத்திற்குரிய குறு உயிரினத்தொகுதி மற்றும் குறுந்தாவரத்தொகுதி, மண், மண் ஊட்டச்சத்துக்கள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் வன எல்லையிலுள்ள குடியிருப்புகள் ஆகியவை குறித்து சூழலமைவு ஏற்பாட்டு முறை மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காடுகளை மீண்டும் வளர்ப்பதில் உள்ளூர் மக்களின் தன்னார்வப் பங்கேற்பைக் கோருவதன் மூலமாகவும், இத்தகைய காடுகள் மூலம் கிடைக்கும் நீடித்த பயன்களை, அம்மக்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும், தரம் குறைந்தவையாக ஆகிவிடக்கூடிய 40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தியைக் கொண்டுள்ள திறந்தவெளி வன நிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ள மற்றும் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் மர அடர்த்தியைக் கொண்டுள்ள வனங்கள், நிருவகிக்கப்படும்.

காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கிராம் வனக்குழுவை (Village Forest Committee) ஏற்படுத்துவதன் மூலம் கூட்டு வன நிர்வாகத்தின் வாயிலாக இந்த முயற்சியில் மக்களின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும்.

கடலோர உயிரின் வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பும், மேலாண்மையும்

சதுப்பு நிலக்காடுகள், நன்செய் நிலங்கள் மற்றும் கடல்சார் தேசிய பூங்காக்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, கடலோரப் பகுதிகளின் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய உயிரின் வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையை மேலாண்மை செய்வதற்காக, சிறப்பு கவனம் செலுத்தப்படும். கடலோர உயிரின வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையில் அவற்றின் முக்கியமான பங்கு பணியைக் கருத்திற்கொண்டு, சாத்தியமாகக்கூடிய இடங்களில், தரம் குறைக்கப்பட்ட சதுப்புநிலக்காடுகளுக்குப் புத்துயிரளிக்கப்படும்.

மாநில வனத்துறை, நமது மாநிலத்தில் கடலோரப்பகுதி நெடுகிலும், உயிரி பாதுகாப்பு அரணாக, சதுப்பு நிலக்காடுகளை வளர்த்து மேம்படுத்தும்.

காற்றினால் ஏற்படுகிற மண்ணரிப்பைக் குறைப்பதற்காகவும், சுனாமி, புயல், அலையேற்றங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உட்பட இயற்கையின் போக்குகளுக்கு எதிராக, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதற்காகவும், காற்றின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கடலோர இடைநிலப்பகுதியில் தோட்டங்கள் வளர்க்கப்படும்.

தொடர்புடைய துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், சமுதாயத்தைப் பங்கேற்கச் செய்தல், அறிவியல் சார்ந்த நிருவாகக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் மன்னார் வளைகுடா உயிரின வாழ்க்கைச் சூழல் காப்பு வனம், கடல்சார் உயிரி பல்வகை தாவரத் தொகுதியை பாதுகாக்க உதவும். அதன் வாயிலாக, இவை தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பயன்களை தொடர்ந்து அளிக்கமுடியும்.

முகத்துவாரங்களில், கடலோரப்பகுதி நெடுகிலும் அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகளில், அறிவிக்கையிடப்படாத பல பகுதிகள் உள்ளன. இத்தகைய பகுதிகளை, வனத்துறை ஏற்கனவே மேம்படுத்தியுள்ளது. இத்தகைய பகுதிகள், அறிவிக்கையிடப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.

வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணித்தல் / மாற்றியமைத்தல்

1988ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கையானது, நாட்டின் மொத்த புவியியற்பரப்பில் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்கப்படுவதற்கு வகை செய்கிறது. தற்போது மொத்த புவியியற் பரப்பில் 21.76 சதவீதமாக உள்ள வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு, மாநில அரசு, புதிய உத்திகளை உருவாக்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 33 சதவீத வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை உருவாக்க அரசு பாடுபடும்.

பசுமை வீடு வெளியேற்றுகிற புகையைக் குறைப்பதற்கான பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும். தட்பவெப்பநிலை மாற்றம் குறித்தும் கரியகத் தணிப்பானாகச் செயல்படுகிற உயிரி பொருண்மை அமைப்பு வாயிலாக இந்த பிரச்சினையை தீர்வு செய்வது குறித்த கவலை அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் அரசு பங்கேற்புடன், உடனுழைப்புகள் வாயிலாக, பெருமளவில் மர வளர்ப்பு நடவடிக்கைகள் மூலம் புவி வெப்பமயமாதலைக் குறைக்கலாம். கரியக வெளியேற்றத்தை அறவே தடுக்கலாம் மற்றும் புதைபடிம எரிபொருளுக்கு மாற்று எரிபொருளாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

சமுதாய நிலங்கள், தரிசு நிலங்கள், ஊராட்சிக்கு சொந்தமான நிலங்கள், வருவாய் நிலங்கள் மற்றும் பண்ணை நிலங்கள் போன்ற வனப்பகுதிகளுக்கு வெளியேயான பகுதிகள் மற்றும் அழிந்துபட்ட வனப்பகுதிகளில் அடர்த்தியான காடு வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் இதனை நிறைவேற்ற இயலும். எனவே, அரசு ஊராட்சிகள், சமுதாயம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏனையோரின் கடின முயற்சிகள் இதில் எதிர்பார்க்கப் படுகின்றன. பலவகை தொழில் முனைவோர் கூட்டு வணிகம் மற்றும் பொது-தனியார் உடனுழைப்பு முயற்சிகளால் (UFM முதலியன) இதை நிறைவேற்ற இயலும்.

தமிழ்நாடு, தனியார் நிலங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்தவும், ஆதரவு அளிக்கவும், அதன் மரம் அடிப்படையிலான திட்டங்களை உரியவாறு வகுக்கும். வழக்கொழிந்த விதிகளும், விதிமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டு உழவர்கள் மரம் வளர்ப்பதற்கு இடையூறாக உள்ள குறிப்பிட்ட சில வழக்கொழிந்த வரையறைகளும் விதிமுறைகளும் களையப்படும். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பது, அரசின் பெருமளவிலான கட்டுப்பாடின்றி தனியார் தொழில்கள் ஒன்றோடொன்று போட்டியிடுகின்ற ஒரு பொருளாதார ஏற்பாட்டு முறையாக (free enterprise) சீரமைக்கப்படும்.

  • வனத்துறை, ஆராய்ச்சி நிறுவனங்களின் உதவியுடன், உள்நாட்டு வகைகளில் சிறந்த தரமான குளோன்களை (clones) உருவாக்குவதற்கு உதவுவதுடன், மரம் வளர்ப்பு குறித்து தேவைப்படும் அறிவியல் சார்ந்த தகவல்களை உழவர்களுக்கு வழங்கும். மாறுபட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து வளரக்கூடிய வேளாண் காடு வளர்ப்பு மாதிரிகளும் தொடர்ந்து உருவாக்கப்படும்.
  • உழவர்கள், அவர்களின் நலனில் அக்கறை கொள்வதற்கும், இடைத்தரகர்களால் சுரண்டப் படுவதை தவிர்ப்பதற்கும், மரம் நடும் உழவர்கள் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கப்படும்
  • தமிழ்நாடு மாநிலத்திற்குள் பருவநிலை மாற்றத்தை தணிப்பதற்கு / பின்பற்றுவதற்கு ஊராட்சிகள், அரசு சாரா அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகம் வாயிலாக பெரியளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மரப்போர்வை மேம்பாடு, வனவிலங்குகள் மேலாண்மைக்கான பாதுகாப்புக் கல்வி மற்றும் எய்தப்பெறுதல் ஆகியவற்றிற்கான வனப்பகுதிகளின் விரிவாக்கம்

வனங்களுக்கு வெளியே மரப்போர்வையை அதிகரிப்பதன் தேவையைக் கருதி, மாநிலத்தில் வலுவான வன விரிவாக்கப்பணிகள் மற்றும் மரம்நடுதலை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. மாவட்ட அளவிலான விரிவாக்க மையங்கள், வட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தான், மரங்கள், மரங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில்கள் மற்றும் வாழ்வாதார ஆதரவு உத்திகள் குறித்து மக்களால் அறியப்பட்டு மெச்சப்படும். விரிவாக்க மையங்கள், மரம் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்திற்கு உறுதுணையாயிருக்கும். முக்கியத் திட்டக்கூறுகளில் ஒன்றான மரம் குறித்த பண்ணைத் தொழிலைக் கொண்ட ஒருங்கிணைந்த நீர்வரத்து அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதற்கும் ஊரக சமுதாயங்களிடையே நோக்கம் சென்றடைவதற்கு பலவகை முக்கியக் காரணிகள் செயல்படுத்தப்படும்.

இந்த முயற்சியில் தொழில்நுட்ப உதவியை அளிக்க வனத்துறையினர் ஆயத்தப்படுத்தப்படுவர். மரம் வளர்ப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மர விற்பனையில் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்கும்படியான தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிகளைத் தளர்த்துவதன் மூலம் மரம் நடுவதை ஒரு இயக்கமாக செயற்படுத்த இயலும். மரம் நடுவதில் உள்ள இடைஞ்சல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் களைய, அச்சட்டத்தில் மற்றும் விதிகளில் தேவையான மாற்றம் அல்லது திருத்தங்கள் கொண்டு வர மாநிலம் தொடர்ந்து பாடுபடும்.

தனியார் நிலங்களில் வெட்டுவதற்கான விதிமுறைகள் சந்தன மரம், செம்மரக்கட்டைகள் முதலியன போன்று வனப்பகுதிகளில் பெரும்பாலும் காணப்படுகின்ற அத்தகைய அருகி வருகிற அட்டவணையிடப்பட்ட மற்றும் மதிப்பு வாய்ந்த மர வகைகள் வரையறை செய்யப்படும். கொண்டு செல்வதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள் அருகி வருகின்ற மற்றும் அட்டவணையிடப்பட்ட இனவகைகளுக்கு மட்டுமே வரையறை செய்யப்படலாம். தமிழ்நாடு 1949 ஆம் ஆண்டு தனியார் வனங்கள் பாதுகாப்புச்சட்டம், மற்றும் தமிழ்நாடு 1955ஆம் ஆண்டு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வருகின்ற பகுதிகள் தவிர தனியார் வசமுள்ள ஏனைய மர வகைகளை வெட்டுவதற்கும் அகற்றுவதற்கும் பொதுவாக எந்தவொரு வரையறையும் இல்லை.

நகர்ப்புற காடு வளர்ப்பு

மாசுபாடு அளவை குறைப்பதற்கும், நகர்ப்புற சுற்றுச்சூழலை சீராக்குவதற்கும் வனத்துறையானது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து சாலையோரங்களில் பொருத்தமான மர வகைகளை நடுவதற்கும், மரப்பூங்கா அமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படும். சாலையோரங்களில் பொருத்தமான மர வகைகளை நடுவதுடன் நெடுநாளிருக்கின்ற தோட்டக்கலை பயிர்களை நடுவதும் பசுமைப்போர்வைக்கும் வணிக பயன்பாட்டிற்கும் பங்களிக்கும்.

வனவிலங்கு பாதுகாப்பு கல்வி செயல்பாடு

மாநிலத்தில் உயிரியல் பூங்காக்களிலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக் கட்டமைப்புகளிலும் (தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள்) கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாக வனவிலங்கு குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தப்படவேண்டும். மனிதன், வன உயிரின முரண்பாடுகளைத் தவிர்க்கவும் இயற்கையுடன் பேணவும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை பொதுமக்களிடையே பரப்புவதற்கு, உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுடன் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். வனங்களை மக்களின் அருகாமைக்கு கொண்டு வருவதற்காக பொருள் விளக்க மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் இலக்கு பயன்பாட்டுக் குழுக்கள், பயிற்சி அலகுகள் மற்றும் விளம்பரப்பொருட்கள் உருவாக்கப்படும்.

வனம் சார்ந்த தொழிலகங்கள்

வனம் சார்ந்த தொழிலகங்களை நிருவகிப்பது மற்றும் அதற்கான மூலப்பொருட்களை வழங்குவது குறித்த முக்கியக் கருத்துக்கள் வருமாறு:

  • இயற்கைக் காடுகள் உயிரின் வாழ்க்கைச் சூழலில் சமன்பாட்டைப் பேண உதவுகிறது. எனவே, இத்தகைய காடுகளில் தொழிலக பயன்பாட்டுக்கான மரங்கள் நடுதல் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக இடம் அளிக்கக்கூடாது.
  • வனப்பொருள் சலுகை வீதத்தில் தொழிலகங்களுக்கு வழங்கப்படக்கூடாது. நாட்டின் பிற பகுதிகள் அல்லது வெளிநாட்டிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உட்பட தொழிற்பிரிவுகளில் மூலப்பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப்பொருட்களை பயன்படுத்த ஊக்கமளிக்கப்படும். தனியார் நிலங்களில் மீள் பெறுகை வசதியுடன் (buy back facility) மரம் வளர்ப்பதற்கான ஒப்பந்தப் பண்ணைத் தொழிலை மேம்படுத்த, வனம் அடிப்படையிலான தொழிலகங்களுக்கு ஊக்கமளிப்பதுடன் மாநிலத்தில் மரங்களை பெருக்குவதற்கு, வனம் அடிப்படையிலான தெழிலகங்கள் மரம் வளர்க்கும் உழவர்களுடனும் வங்கியாளர்களுடனும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படும்.
  • உழவர்கள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் அவர்களின் குறு மற்றும் அழிந்துபட்ட நிலங்களில் மரத்தொழிலகங்களுக்கு தேவையான மர இனங்களை வளர்க்குமாறு ஊக்குவிக்கப்படும். உள்ளூர் ஒப்புதலுடன் இத்தகைய மரங்கள், விறகு மற்றும் தீவன வகை மரங்களுடன் சமுதாய நிலங்களில் வளர்க்கப்படும்.

வனப்பாதுகாப்பு, ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை மற்றும் ஈர நில மேலாண்மை வாயிலாக நீர்ப்பெருக்கம்

மாநிலம் பல புகழ்மிக்க ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப்பட்ட ஆறுகளின் கூட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த ஆறுகள் அனைத்தும், கிழக்கு நோக்கி பாய்வதால் இவை அனைத்தும் முழுமையாக மழையால் நீர் பெறும் நதிகள் ஆகும். இவை மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள வனங்களிலிருந்து உற்பத்தியாகிறது. இங்கு 17 ஆற்றுப்படுகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை நீர் விசையழுத்தம் கொண்டுள்ளன. இங்கு மேற்பரப்பு நீரையும் (17.5 BCM) நிலத்தடி நீரையும் (15.3 BCM) அதிகளவில் பயன்படுத்துகின்ற 61 பெரிய நீர்த்தேக்கங்கள், சுமார் 3 மில்லியன் கிணறுகள் உள்ளன. சுமார் 950மிமீ சராசரி ஆண்டு மழையளவும் சுமார் 13 மில்லியன் எக்டரும் கொண்ட புவியியல் பரப்பளவின், மேற்பரப்பு நீரானது 25,000 MCM (893 TMC) என்றும் நிலத்தடி நீரானது சுமார் 22,400 MCM (800 TMC) என்றும் மதிப்பிடப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் வேளாண் அல்லாத நோக்கங்களுக்கான தேவையானது சுமார் 16,500 MCM (589 TMC) ஆகவும் வேளாண் நோக்கங்களுக்கான தேவையானது சுமார் 45,000 MCM (1607 TMC) ஆகவும் இருக்கும். வழங்கல் தேவைக்கான இடைவெளி சுமார் 14,100 MCM (504 TMC) 29.7% ஆக இருக்கும். உரிய மெய்ப்பிக்கப்பட்ட முறைகள் வாயிலாக நீர் இயங்காற்றல் வளவாய்ப்பினை அனைத்து வன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு சீரமைக்கப்படும்.

பெரியளவிலான மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வாயிலாக வன நீர்பிடிப்பு பகுதிகளின் பேரெண்ணிக்கை பாதுகாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மையின் தற்போதைய அணுகுமுறை, அனைத்து பொறுப்பாளர்களும் முனைப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதன் வாயிலாக மேலும் வலுப்படுத்தப்படும். பொறுப்பாளர்களை மேம்படுத்துவதற்கு ஏனைய தொடர்புடைய துறைகளுடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்படும்.

பொதுவாக, நகர்ப்புறப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள ஈர நிலங்கள் மற்றும் ஏரிகள், வண்டல் படிவு மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த ஈர நிலங்களும் ஏரிகளும் பலவகையான உயிரின் வாழ்க்கை சூழல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவை பலவகை உயிரினத் தாவரத் தொகுதி செறிந்தவையாக உள்ளன. இவை நிலத்தடி நீரைச் செறிவூட்டி, பல விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் புகலிடமளிக்கின்றன. இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்போது தான், தற்போதுள்ள மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பயன்களை தொடர்ந்து அளிக்க இயலும்.

வனம் சார்ந்திருக்கின்ற பெண்களின் நிலையை உயர்த்துவதுடன் வன மேலாண்மையில் அவர்களின் முக்கியப் பங்கினை உறுதி செய்தல்

தற்போதைய வழிகாட்டி குறிப்புகளின்படி, கிராம வன மன்றங்களில் சரிபாதியாகவும், செயற்குழுக்களில் மூன்றில் ஒரு பங்கும் மகளிர் உறுப்பினராக இடம் வகிக்கின்றனர். செயற்குழுக்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிப்பதற்கும், மகளிர் தலைமையிலான மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். காப்பு மண்டலம் மற்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகள் வாயிலாக மகளிர் அதிகார பகிர்வு குறித்த தற்போதைய நோக்கத்திற்கு வலுவூட்டப்படும். நுண்கடன் துறையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவுகின்ற தற்போதைய நடைமுறை தொடரும். மகளிரின் நிதிநிலைமையை மேம்படுத்தவதற்கும் குடும்பத்தில் முடிவுகளை எடுக்கின்ற அவர்களுடைய பங்கினை, உயர்த்துவதற்கும், மகளிருக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்யப்படும்.

பழங்குடியினர் மேம்பாடு

மாநிலத்திலுள்ள வனங்களில், பழங்குடி சமுதாயத்தினர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார வளத்திற்கு வகை செய்கின்ற போது, வனப்பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த நோக்கத்துடன் வாழ்வாதார வாய்ப்புகள் வாயிலாக, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு, சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெற்றுதருவதற்கு துறை முயற்சி செய்யும், வனங்களை பாதுகாப்பதற்கும், மீண்டும் உருவாக்குவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் பழங்குடியின சமுதாயத்தினரின் உயரிய பாரம்பரிய நுண்ணறிவு முனைப்புடன் பயன்படுத்தப்படும். அவ்வாறு செய்கின்றபோது போதுமான அங்காடி வாய்ப்புகளுடன் மரம் அல்லாத வனப் பொருட்கள் (Non-Timber Forest Produce) விற்பனை உரிமைகள் ஆகியவற்றை அவர்களுக்கு வகை செய்வதன் வாயிலாக, அவர்களின் வழக்கமான உரிமைகளும் தனியுரிமைகளும் பாதுகாக்கப்படும்.

வனங்களிலுள்ள, பழங்குடியின சமுதாயத்தினரையும் அருகாமை சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். அவர்களுடைய சமூகப்பண்பாடு மற்றும் பொருளாதார நிலைகள் மேம்பட பழங்குடியினர் மற்றும் ஏனைய பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006 ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலனுக்கு இடையேயான விவேகமான நிலை எய்தப்படும்.

அறிவியல் ரீதியான வனமேலாண்மைக்கான தொழில்நுட்ப ஆதரவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

காடு வளர்ப்பு குறித்த ஆராய்ச்சியானது, செயல் திட்டங்கள் நிர்வாகத் திட்டங்கள் தயாரிப்பதற்கு வழிகாட்டுகின்ற வலுவான உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வாயிலாக உயிரின வாழ்க்கைச் சூழலை பாதுகாப்பதற்கு வனங்கள் மற்றும் வன விலங்கு நிர்வாகத்தை நெறிப்படுத்தும். பல்வகை உயிரின தாவரத் தொகுதி பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள் அமைப்பிற்குள்ளேயே இருக்கின்ற ஆராய்ச்சி பிரிவு வனவிலங்கு பிரிவு வாயிலாக புகழ்பெற்ற ஆராய்ச்சி / வனவிலங்கு அமைப்புகளுடன் கூட்டாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாநிலத்தில், வேளாண் - காடு வளர்ப்பிற்கு தொழில்நுட்ப ஆதரவுக்கு வகை செய்யவும், சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை ஊக்கப்படுத்தவும், வனத்தை அடிப்படையாக கொண்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும், இந்த ஆராய்ச்சி வகை செய்யும். இது, காடு வளர்ப்பு விரிவாக்கத்திற்கு உதவுவதுடன் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் பின்பற்றத்தக்க நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு களப்பணியாளருக்கு பயிற்சியளித்து வழிகாட்டும்.

வன ஆராச்சியின்போது, அழிந்து வருகின்ற தாவர மற்றும் விலங்குகளை பாதுகாத்தல், அழிந்துபட்ட உயிரின் வாழ்க்கைச் சூழல்களை மீட்டெடுத்தல், மரம் வளர்ப்பு மற்றும் மேம்பாடு, வேளாண்மை காடு வளர்ப்பு, நீர்வரத்து மேலாண்மை , கடலோர காடுவளர்ப்பு, பயன்பாடு மற்றும் விற்பனை, மண் ஊட்டச்சத்து மற்றும் சிக்கலான வன மேலாண்மை, சமூக பொருளாதார ஆராய்ச்சி உள்ளிட்ட உயிரின வாழ்க்கைச் சூழல் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். வனத்துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான உள்ளீட்டிற்கு வகை செய்வதற்கு, மாநில வன ஆராய்ச்சி நிறுவனம் சிறப்புத் தகுதிமையமாக மேம்படுத்தப்படும்.

வனம் குறித்த தரவுத்தளம்

காடு வளர்ப்பு வன வள ஆதாரங்கள் மற்றும் வன மேலாண்மை குறித்த தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தரவினை விரைவில் மீண்டும் பெறக்கூடிய வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு குறித்த கால அளவிற்கொருமுறை நாளதுவரை ஆக்கப்படவேண்டும். இந்த செயல்நோக்கத்திற்காக, தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் பொறியமைவு, மேலாண்மை தகவல் பொறியமைவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பச் செயல்பாடுகள் பயன்படுத்தப்படும். நிருவாக இடர்பாடுகள் குறித்த உள்ளீடுகளை வழங்குவதற்கு, புவியியல் தகவல் பொறியமைவு ஆய்வுக்கூடம் ஆயத்தப்படுத்தப்படும். வனத்துறையின் தரவுதளம் மற்றும் சிறப்பறிவுத் திறமானது, வருவாய், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் போன்ற ஏனைய துறைகளிடமும் பகிரப்பட்டு, அவற்றின் தரவுத் தளம் மறுசீராக்கப்பட்டு, எல்லை வரையறுக்கப்பட்ட வன நிலப் பகுதிகள் காலமுறை தோறும் மறு ஆய்வு செய்யப்படும்.

மின் ஆளுகை - அன்றாட நிருவாக நடவடிக்கைகளுக்காக, அனைத்து கோட்டங்களும் / வட்டங்களும் இணையதளம் / உள் இணையம் வாயிலாக இணைக்கப்படும். திட்டப்பணிகள் குறித்து சிறந்த முறையில் தகவல் தெரிவிப்பதற்கும், அனுப்புவதற்கும், ஆய்வு செய்வதற்கும், கோட்ட / வட்ட அளவிலான அலுவலகங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்தப்படும். பயிற்சி மற்றும் தகவலை பரப்புவதற்காக கல்வி சார்ந்த செயற்கைகோள் இணைப்பு வசதி வாயிலாக கோயம்புத்துாரிலுள்ள தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை அணையிலுள்ள தமிழ்நாடு வனவியல் கல்லுாரி, அனைத்து விரிவாக்க மையங்கள் ஆகியவற்றில் மெய்நிகர் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். வனம் மற்றும் வனவிலங்கு மேலாண்மை, தீ எச்சரிக்கை, குற்றக் கண்காணிப்பு, வனவிலங்கு நடமாட்டம், ஆகியவற்றிற்காக இணைய வழி புவியியல் தகவல் பொறியமைப்பு வசதியுடன் கடைநிலை அளவிலான தகவல் பரிமாற்றத்திற்காக தனிவழி இலக்கமுறை உதவிக்கு (Personal Digital Assistant) வகைசெய்யப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைச் சுற்றுலா

பசுமைச் சுற்றுலா என்பது, உள்ளூர் பகுதி மக்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்கும்போது, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதையும், முழுமையான சுற்றுச்சூழலுக்கு மாற்று இல்லை என்பதால், சுற்றுச்சூழல் குறித்த பண்பாடு மற்றும் இயற்கை வரலாற்றைப் புரிந்துகொண்டு கவனம் செலுத்துவது என்ற பயனுள்ள பயணமாக இது வரையறை செய்யப்படுகிறது. சுருங்கக்கூறின், இது இயற்கை அடிப்படையிலும், உள்ளூர் பகுதி மக்களுக்கான பயன்கள் குறித்த முதன்மைத் திட்டக் கூறுகள் உட்பட முனைப்பான கல்வி, பொருள் விளக்கங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்குகந்த சுற்றுச்சூழலியல் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.

பசுமைச் சுற்றுலா நிருவாகம் பின்வருவனவற்றில் முழு முயற்சியுடன் ஈடுபடும்.

வனம் சார்ந்த சுற்றுச்சூழல் முறையில், பழமை மாறாத இயற்கைத் தன்மையை எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுதல். உள்ளூர் பகுதி மக்களின் பொருளாதார வளம் மற்றும் நன்னிலைக்காக பசுமைச் சுற்றுலா நிகழ்வில் அவர்களை ஈடுபடுத்துதல்.

பண்படுத்தப்படாத நிலங்களை சுற்றுச்சூழலுக்குகந்தனவாக மாற்றி அளித்தல், கல்வி, பொழுதுபோக்கு ரீதியான அனுபவ அறிவை அளித்தல். பசுமைச் சுற்றுலாவை மேம்படுத்தவதற்காக மாநிலப் பசுமைச் சுற்றுலா கொள்கையின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் உத்திகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

உரிய வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் மற்றும் குறிப்பிட்ட பகுதி சார்ந்த அனுமதிக்கத்தக்க அளவு வரம்பிற்குள், வனத்துறையால் மேம்படுத்தப்படும் பசுமைச் சுற்றுலா. வனத்துறை - உள்ளூர் பகுதி மக்கள் தொடர்புகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் வாயிலான பங்கேற்பு அனுகுமுறை.

காடு வளர்ப்பு மேலாண்மைக்கான மனிதவள மேம்பாடு

காடுவளர்ப்பு, பன்முகப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையுடன் கூடிய அணுகுமுறைகள், தொடர்புகள் மற்றும் பாரம்பரிய மற்றும் நவீன காடு வளர்ப்பு மேலாண்மை நடைமுறைகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவற்றுடன் தொடர்புடையதாகும். எனவே, அனைத்து வனப்பகுதிகள் குறித்தும் நாளதுவரையிலான திறன் மற்றும் அறிவு அவசியமாகிறது. பல்வகை உயிரின தாவரத்தொகுதிக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுடன், கடினமான அறைகூவல்களை எதிர்கொள்வதற்கு, வனத்துறை பணியாளர்களிடையே, வன மேலாண்மை சம்மந்தப்பட்ட அண்மை தொழில் நுட்பங்கள், கூட்டு வன மேலாண்மை, மனிதவள மேம்பாடு ஆகியவை இன்றியமையாததாகும். வனப்பாதுகாப்புப்படையில், குறிப்பாக வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை துறையில் மகளிரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வனத்துறைப் பணியாளர்களுக்கு அவசியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தற்போதுள்ள கோயம்புத்துார், தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை அணை தமிழ்நாடு வனவியல் கல்லுாரி ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டும். புகழ்பெற்ற தேசிய பன்னாட்டு நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்கள் மூலம், வன மேலாண்மையின் போக்குகளை துறைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும்.

தொழில் வல்லமையுடன் பயிர் செய்யும்பொருட்டு, நிலத்தைப் பண்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு வனவியல் பயிற்சி நிறுவனங்களும் வலுவூட்டப்படவேண்டும். பயிற்சி உட்பட மேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய திறனை மேம்படுத்துவதற்கு, வனத்துறையின் அமைப்பு ரீதியான தேவைகள் மற்றும் பணியாளர்களின் தேவைகள் குறித்து ஆராயப்படவேண்டும். துறையின் மேம்பாட்டுத் திட்டத்தில், அனைத்துப் பணியாளர்களின் பணி முன்னேற்ற வாய்ப்பு வளம் குறித்து தனி முக்கியத்துவம் அளிக்கப்படும். வனத்துறையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வன வளர்ப்பிற்கான நிதியுதவியை அதிகரித்தல்

கணிசமான நிதி முதலீடு, ஏனைய ஆதாரங்கள் முதலீடு ஆகியவற்றால் மட்டுமே வனத்துறை கொள்கையின் நோக்கங்களை எய்த இயலும். காடுகளை வருவாய் ஆதாரங்களாக மட்டுமே பார்க்காமல், புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆதாரங்களாகவும் கருத வேண்டும். காடுகள் தேசியச் சொத்தாக இருப்பதுடன், மக்களுக்கும், மாநிலத்திற்கும் நலம் பயப்பதாக உள்ளதால், அவை நிலைத்திருக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். எனவே, காடு வளர்ப்பில், பொதுநிதி முதலீட்டினை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

வன மற்றும் வன உயிரின மேம்பாட்டிற்காக வரவு செலவு திட்டத்தில் 2.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய தேசிய வன ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தந்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய நிதி நிலையினை கருத்தில் கொண்டு இவ்வனக் கொள்கையின் இலக்கினை நிறைவேற்ற ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் வனத்துறைக்கான நிதி ஒதுக்கத்தை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை

3.92307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top