பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வனத்துறை (2018-19) திட்டங்கள்

வனத்துறை (2018-19) திட்டங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தேனீ கூடுகள் மூலம் வேலி அமைத்தல்

காட்டுயானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தவிர்ப்பதற்கு தேனீ கூடுகள் மூலம் வேலி அமைத்தல்

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. 120 கி.மீ நீள வன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 110 கிராமங்கள் மனித-வன் உயிரின் மோதல்களால் பாதிப்புக்குள்ளாகின்றன. தேனீ கூடு மூலம் வேலி அமைத்து விவசாயப் பயிர்களை அழிக்கும் யானைகளை தடுக்கும் இப்புதுமை திட்டம் ஆப்பிரிக்க நாடுகளில் பலனளிக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் செலவு குறைவானதாகவும், இயற்கை சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.

எனவே, 2018-19-ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மனிதன் மற்றும் யானைகளுக்கு இடையேயான மோதலை தவிர்க்கும் பொருட்டு இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ரூ.1.28 கோடி செலவில் "பயிர்களை சேதம் செய்யும் யானைகளை தடுக்கும் பொருட்டு தேனீ கூடுகள் மூலம் வேலி அமைத்தல்" என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர்நிலைப் படை (ELITE FORCE) அமைத்தல்

வனத்துறையில் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள உயர்நிலைப் படை (ELITE FORCE) அமைத்தல்

வனத்துறை களப்பணியாளர்கள் அவரவர் பதவிக்கேற்ப சாதாரண மற்றும் கடினமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் செவ்வனே பணிபுரிந்து வந்தாலும், திடீரென நிகழும் கடத்தல் சம்பவம், ஆக்கிரமிப்பு, பெருமளவிலான காட்டுத் தீ மற்றும் மனித - வனஉயிரின் மோதல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அவற்றினை எதிர்கொள்ள, அவர்களது திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது. இத்தகைய தருணங்களில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, அனைத்து வகை உபகரணங்கள் உள்ளடக்கிய, நிலைநிறுத்தப்பட்ட ஒரு குழுவின் உதவி அத்தியாவசியமாகின்றது. எனவே, ஒட்டுமொத்த மாநிலத்தின் தேவையினைப் பூர்த்தி செய்யும் விதத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பணியிடங்களை மறுபகிர்வு செய்து மாநிலத்தில் இரண்டு இடங்களில் உயர்நிலைப்படைகள் அமைக்கப்படும். அப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் மற்றும் உபகரணங்களுக்காகவும் ரூபாய் 50 இலட்சம் செலவிடப்படும்

கம்பியில்லா தொலைதொடர்பினை தற்போதைய அமைப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாற்றுதல்

கம்பியில்லா தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தியதில் தமிழ்நாடு வனத்துறை முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாடு வனத்துறையில் தற்போது வழக்கமான கம்பியில்லா தொலை தொடர்பு வசதி உள்ளது. தற்போது கைபேசியின் வருகையினால், வனவிலங்குகள் தொடர்பான தகவல்கள் பெறுதல் மற்றும் கைபேசி அலைவரிசை பெறாத நிலை உள்ள தொலைதூர பகுதிகளில் தொடர்பு கொள்ளுதல் தவிர, இவ்வசதி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுவதில்லை.

சாதாரண காலங்களிலும் மற்றும் நெருக்கடியான காலங்களிலும் தொடர்பு மேற்கொள்ள வனத்துறைக்கென ஒரு தனி கம்பியில்லா தொலைத்தொடர்பு அமைப்பு மிக முக்கியமானதாகும்.

மின்னணு தொலைத்தொடர்பு முறையின் நன்மைகளாவன் –

  • அதிக மற்றும் துல்லியமான ஒலி
  • இரட்டிப்புத் திறன்,
  • மேம்பட்ட பரப்பு,
  • ஒருங்கிணைந்த குரல் மற்றும் தகவல் திறன்கள்
  • உயர்த்தப்பட்ட கட்டுப்பாடு அம்சங்கள்,
  • அதிக ஆயுள் கொண்ட மின்கலம்,
  • பொருந்தும் தன்மை
  • பாதுகாப்பு

எனவே தற்போதைய அமைப்பிலிருந்து மின்னணு முறை கம்பியில்லாத் தொலைத்தொடர்பு முறைக்கு மாற்றம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018-19 ஆம் ஆண்டில் ரூ.5 கோடி செலவில் மின்னணு கம்பியில்லா தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மாநில வனக்கொள்கையினை வடிவமைத்தல்

தேசிய வனக் கொள்கை மத்திய அரசால் 1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனை அடியொற்றி, அந்தந்த மாநிலத்தில் நிலவும் சுற்றுச்சூழலினை கருத்திற்கொண்டு அம்மாநிலங்களுக்கான வனக்கொள்கையினை வடிவமைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கொப்ப தமிழ்நாட்டில் நிலவும் பன்முக உயிர்த்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு மாநில வனக்கொள்கையினை உருவாக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் வனங்கள், பண்பாடு மற்றும் சமயங்களின் அடையாளமாக உள்ளன. மக்களின் நல்வாழ்வினை காக்கும் பொருட்டு, வனங்கள் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் மற்றும் தேசிய சொத்தாகக் கருதி நிலைத்த பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாநில வனக்கொள்கை அறிவிக்கப்படும்.

ஆர்கிட் மரச்செடி அரங்கம் அமைத்தல்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆர்கிட் மரச்செடி அரங்கம் அமைத்தல்

ஆனைமலை புலிகள் காப்பகம் பன்முகத்தன்மை கொண்ட பல வண்ண மலர்த்தாவரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பல வண்ண மலர்த்தாவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்புகள் தற்போது இல்லை. எனவே, இத்தகைய பன்முகத் தன்மையுடைய பல வண்ண மலர்த்தாவரங்களை ஒரே இடத்தில் அமைப்பது சிறப்பானதாகும். எனவே கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் ரீதியிலான பல வண்ணமலர்த் தாவரங்கள் கொண்ட அரங்கம் ஒன்று ஆனைமலையில் அமைக்கப்படும். இதன் பொருட்டு நாற்றங்கால் எழுப்புதல், பராமரிப்பு மற்றும் பல வண்ண மலர் அரங்கம் உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ரூ.46.90 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

காடுகளின் எல்லைகளில் கம்பிக் கயிறு வேலி அமைத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளில் கம்பிக் கயிறு வேலி அமைப்பதன் மூலம் வனவிலங்குகள் வெளியே வருவதை தடுத்தல்

வனப்பகுதிகளுக்குள் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினை விட்டு வெளியேறி, அருகில் உள்ள விளைநிலங்களில் சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டும் வேலிகள் அமைக்க வேண்டியுள்ளது. உள்ளூர் மக்களை சாந்தப்படுத்துவதுடன், அவர்களது ஒத்துழைப்புடன் வன உயிரினங்களை பாதுகாத்திட இது உதவுகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் விளைநிலங்களில் யானைகள் புகுவதை முழுமையாக தடுக்க இயலாத நிலை உள்ளது. யானைகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு ஓரடுக்கு தடுப்பு போதுமானதாக இல்லை. மேலும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து பல்வகை அடுக்கு தடுப்பு அமைப்புகள் (யானைபுகா அகழிகள் மற்றும் சூரிய மின்வேலி / சிறப்பு கட்டமைப்புகள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வலுவான மற்றும் எளிதில் பராமரிப்பு செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தூண்களுடன் கூடிய கம்பிக்கயிறு வேலி அமைக்கும் புதுமையான திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018-2019 முதல் 2020-2021 வரையில் ரூ.2.62 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் படகுகள் அமைத்தல்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சூழல்சார் சுற்றுலாவிற்கென சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் படகுகள் அமைத்து அதன் மூலம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வினை விரிவுபடுத்துதல்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அமைந்துள்ள, காரையாறு அணை தமிழ்நாடு மின்சாரம் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் நீர் மின்சக்தி திட்டத்திற்கும் காரையாறு அணை பயன்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால், சுற்றுலாவிற்கு தனியார் மூலம் இயக்கப்பட்ட டீசல் படகுகள் ஜூலை 2012 முதல் நிறுத்தப்பட்டது. எனவே, காரையாறு முதல் பானதீர்த்தம் வரை செல்வதற்கு சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாமலும், ஒலி எழுப்பாத வகையில், சூரிய மின்சக்தி மூலம் படகு இயங்கும் வகையில் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018-2019 ஆம் ஆண்டில் ரூ.2.25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

நீர் மேலாண்மை யுக்தியினை மேம்படுத்துதல்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நீர் மேலாண்மை யுக்தியினை மேம்படுத்துதல்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உள்ள நீர் மேலாண்மை தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். இச்சரணாலயம், தமிழ்நாட்டின் ஆண்டுச் சராசரி மழைப் பொழிவில் 25 விழுக்காட்டிற்கு மேல் மழை நீரைப் பெறுகின்ற போதிலும், கோடையின் உச்சகாலங்களில் சரணாலயத்தில் நீர் இருப்பு பற்றாக்குறையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் நீண்ட வறட்சியினால் ஏற்படும் கடுமையான நீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையெனில் வன விலங்குகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்படும் நிலை உண்டாகும்.

எனவே, கோடையின் உச்ச காலங்களில் கோடியக்கரை வன உயிரின் சரணாலயத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கையை நலமுடன் தக்க வைத்துக் கொள்ள, நீர் மேலாண்மையின் கீழ் குறுகிய கால திட்டத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும், தண்ணீர் தொட்டிகள் கட்டுதல் மற்றும் சூரிய ஒளி மூலம் உப்பு நீக்கும் நீண்டகால திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018-2019 ஆண்டில் 27.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

நிலங்களின் மீதான கூர்ந்தாய்வு

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைப்பாங்கான புல்வெளி நிலங்களின் மீதான நீண்டகால கூர்ந்தாய்வு

ஆனைமலையில் உள்ள மலைச்சார்ந்த புல்வெளியில் நீண்டகால கூர்ந்தாய்வுப் பணிகளை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் உருவாக்குவதன் மூலம் மலை சார்ந்த புல்வெளிப்பகுதிகளை அடையாளம் கண்டு, உரிய நில வரைபடம் தயாரித்து, அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாவர இனங்களின் தொகுப்பு மற்றும் மேலாண்மையினை செம்மைப்படுத்த வழிவகுக்கும். இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018 - 2019 முதல் 2019 - 2020 வரை ரூ.17.87 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய உணவகம் அமைத்தல்

அமிர்தி சிறு உயிரியல் பூங்காவில் சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய உணவகம் அமைத்தல்

வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலைப்பகுதியின் அடிவாரத்தில் தெள்ளை ஒதுக்கு காட்டில் அமைந்துள்ள அமிர்தி சிறு உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், சுற்றுலாப் பயணிகளை கவர்வதாக உள்ளன. 2018-19 ஆம் ஆண்டில், அமிர்தி சிறு உயிரியல் பூங்காவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலாப்பயணிகள் தங்களது உணவை உட்கொள்ள காற்றோட்ட வசதி கொண்ட பாதுகாப்பான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 100 நபர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ள ஏதுவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி உணவகம் ஒன்று ரூ.10.00 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

நவீன மின் எரியூட்டு வசதி ஏற்படுத்துதல்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இறக்கும் வன உயிரினங்களை எரியூட்டுவதற்கு நவீன மின் எரியூட்டு வசதி ஏற்படுத்துதல்

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 176 இனங்களை சார்ந்த பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையை சார்ந்த 2471 விலங்குகள் உள்ளன. இவைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வயது முதிர்வு, நோய்வாய்ப்படுதல் மற்றும் இதர காரணங்களால் இறந்து விடுகின்றன. இது போன்ற இறந்து போன உயிரினங்களின் உடல்களை தற்போது திறந்தவெளியில் எரியூட்டப்படுகிறது. இதனால் பூங்கா பகுதியிலுள்ள வனம் மற்றும் அரசு சொத்துகள் நெருப்பினால் பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்படாமல் தடுக்கவும், நோயினால் இறந்து போன வன உயிரினங்களிலிருந்து தொற்று நோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் நவீன மின் எரியூட்டு வசதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2018-2019 ஆம் ஆண்டில் சுமார் ரூ.20.00 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்

கழிவுகளை மறுசுழற்சி முறையில் அழிக்க நிலையம் ஏற்படுத்துதல்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்படும் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அழிக்க நிலையம் ஒன்று ஏற்படுத்துதல்

வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தினசரி 7000 பார்வையாளர்களுக்கு மேல் வருகை புரிகின்றனர்.  பார்வையாளர்கள் வருகை புரிவதன் மூலம் ஏற்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், இயற்கை முறையில் மறுசுழற்சி செய்தும், திறந்த வெளியில் எரித்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரமான அறிவியல் தொழில்நுட்ப முறையில் அப்புறப்படுத்தும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ரூ.75.00 இலட்சம் செலவில், உயிரியல் பூங்காவில் சேகரமாகும் குப்பைகளான தாவரப் பொருட்கள், விலங்குகளின் உணவுக் கழிவுகள், எச்சங்கள் மற்றும் காகிதப் பொருட்கள் ஆகியவற்றை நுண்ணுயிரி ஜீரணம் முறையில் மறுசுழற்சி செய்யும் நிலையம் அமைக்கப்படும்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு – வனத்துறை

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top