பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய பயன்பாடுகள்

பல்வேறு இடங்களில் சூரிய ஒளியை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

கிராமப்புறங்களில் நிலைத்த ஒளியேற்றத்திற்கான பெண்களின் முயற்சி

சூரிய சக்தியை பயன்படுத்தி, கிராமப்புறங்களில் நிலைத்த ஒளியேற்றத்திற்கான முயற்சியை “ஏதுவான தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் திறன்களுக்கான மையம் (Centre for Appropriate Technology and Livelihood Skills - CATALIS)” துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் பெண்களை ஈடுபடுத்துவது, இதன் வெற்றி மற்றும் செயல்பாடுகள் சிறப்பாகவும், நிலையாகவும் இருக்க உதவுகின்றன.

கிராமங்களில் ஏதுவான தொழில்நுட்பங்களை வளர்க்க, CATALIS நிறுவனம், “உற்பத்தி செய் (Make), விற்பனை செய் (Market), பராமரி (Maintain) என்ற வழிமுறையை கடைபிடிக்கிறது. முதலில், ஜார்கண்ட் மாநிலம், பெரேகா என்ற கிராமம், மாதிரியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சமுதாய ஈடுபாட்டை அதிகரிக்க, பெரேகாவில் உள்ள 3 குடியிருப்புகளின் பிரநிதிகளை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கமிட்டியில் 6 பெண்கள் உறுப்பினராக இருந்தனர். இந்த கமிட்டி, CATALIS பணியாளர்களுடன் இணைந்து கிராம வளங்கள் மற்றும் தேவைகளை ஆய்வு செய்து, தங்களுக்குத் தேவைப்படும் ஏதுவான தொழில்நுட்பங்களை கண்டறிந்தது. எரிசக்தி, குறிப்பாக வீடுகளுக்கு ஒளியேற்றும் நிரந்தர வழிகளை, உடனடியாக வேலைகள் துவக்குவதற்கான முதன்மை தேவையாக அறிவித்தார்கள்.

இந்தப்பகுதி கிராமங்களில், மாலை நேரத்திற்குப் பிறகு மக்கள் நடமாட்டம் நின்று விடும். குறைவான ஒளியேற்றம் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததுடன், ஒளியேற்ற மண்ணெண்ணை மற்றும் பயிர்க்கழிவுகளை பயன்படுத்துவதால் மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு ஆகியவையும் நேரடியாக பாதிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக, மக்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் விளக்குகளை விரும்பினார்கள். இத்திட்டத்தை, CATALIS உதவியுடன் தொழில்முறையில் நடைமுறைப்படுத்தவும் மக்கள் முடிவு செய்தார்கள். இதற்கான மாதிரியை CATALIS உருவாக்கி, மக்களுடன் தொடர் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு நடைமுறைபடுத்தியது.

தலா 10 பெண்களை உறுப்பினராகக் கொண்ட கிடான் மஸ்கல் (Gidan Maskal) மற்றும் ஹராக்கன் (Harakan) என்று இரு சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டன. ஒரு தீவிர பயிற்சிக்குப் பிறகு சூரியவிளக்கு பாகங்களை இணைக்கும் திறனை பெண்கள் உடனடியாக கற்றுக்கொண்டார்கள். வியாபார திறன்கள் (business skills), சுய உதவிக்குழு நிர்வாகம் (SHG management), பிரச்சினைகளை தீர்த்தல் (conflict resolution), வியாபாரத் திட்டம் தயாரித்தல் (business plan development) மற்றும் சூரிய சக்தி விளக்குகள் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் கிராமங்களிலேயே அளிக்கப்பட்டதால் அவை பெண்களுக்கு எளிதாக இருந்தன. பயிற்சி பெறும் போதே முடிவுகளையும் உணரும் வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டதால், மக்களிடம் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்தன.

தங்கள் கிராமத்தின் தேவையை பூர்த்தி செய்தபின், பிறர் மற்றும் திட்டப்பணியாளர்கள் உதவியின்றி தாங்களாகவே சூரிய சக்தி விளக்குகளை அமைப்பதில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றை உள்ளூர் சந்தை மற்றும் பிற கிராமங்களில் விற்பனை செய்வதன் மூலம், ஒரு விளக்கிற்கு ரூ 250 முதல் 350 வரை இலாபம் அடைகிறார்கள். 4 முதல் 8 மணி நேரம் எரியும் சாதாரண சூரிய சக்தி விளக்குகள் போல் அல்லாமல், இந்த விளக்குகள், 20 மணி நேர பயன்பாடு தரும் வகையில் எல்.இ.டி (LEDs - light emitting diodes) ஒளிப்பான்களை கொண்டுள்ளன. இவற்றை அமைக்கத் தேவையான பொருட்களை நம்பகமான இடங்களில் குழுவினர் கொள்முதல் செய்கிறார்கள். 6 மாதங்களில், சுமாராக 850 விளக்குகளை இக்குழுவினர் உற்பத்தி செய்து விற்பனை செய்தனர். விளக்குகள் வந்துவிட்டதால், கைபேசிகளை சார்ஜ் செய்யும் தேவையும் அதிகரித்தது. கூடுதல் பயிற்சிகளின் உதவியுடன், சூரிய சக்தி சார்ஜர்கள் மூலம் கைபேசி மின்கலன்களை சார்ஜ் செய்யவும், அதன் மூல கூடுதல் வருமானம் பெறவும் முடிந்தது. இந்த வியாபார முயற்சிகளுக்கு தேவைப்பட்ட ஆரம்ப மூலதனம், LEADS என்ற உள்ளூர் தன்னார்வ நிறுவனத்தாலும், குழுக்களின் சேமிப்பிலிருந்தும் வழங்கப்பட்டன. ஆரம்பத்தில் லாபங்கள் அனைத்தும் குழுவின் வியாபாரத்திற்கான மறுமுதலீடாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது, 40 சதவீத லாபம் மறுமுதலீடாகவும், 60% குழு உறுப்பினர்களிடையே சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

கிராமப்புற மகளிர், எரிசக்தித் துறையில் சேவை வழங்குவோராக பணியாற்ற வாய்ப்புள்ளதை இந்த அனுபவம் மூலம் கற்கலாம். இதை சாத்தியமாக்க, அவர்களுக்கு முறையான பயிற்சிகள், தொழில்நுட்ப அல்லது பிற இடு பொருட்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. தற்போது இந்த மாதிரி, சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் விரிவாக்கப்பட்டுள்ளது.

சமுதாய சார்ஜ் ஏற்றும் மையம்

நாராயண்பூர் கிராமத்தில், மின்சார வசதியில்லாத பழங்குடியின மக்கள் வசிக்கும் 16 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் மண்ணெண்ணை விளக்குகளே ஒளி தர பயன்படுத்தப்படுகிறது. 10 லூமன் அளவு வெளிச்சம் மட்டுமே வழங்கும் விளக்குக்கான மண்ணெண்ணை ஒரு லிட்டர் விலை ரூ 30 முதல் 40 வரை. இந்த வீடுகளுக்கு தலா ஒரு சூரிய சக்தி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு 60 W சூரிய ஒளித்தகடுகள் கொண்ட சமுதாய சார்ஜ் ஏற்றும் மையமும் இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 16 விளக்குகளும் ஒரே சமயத்தில் சார்ஜ் செய்யும் வகையில் இரண்டு சர்க்யூட் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் சுற்றுச்சூழல் பயன்கள்:

இந்த வீடுகளில், குறைந்த தரமான மற்றும் குறைவான வெளிச்சம் மட்டுமே தரும் விளக்கிற்கு, மாதத்தில் தலா 2 முதல் 2.5 லிட்டர் வரை மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகிறது. சூரிய சக்தி விளக்குகள் மண்ணெண்ணை விளக்குகளை விட தரமாக இருந்த போதிலும், ஒரே நேரத்தில் பல இடங்களில் வெளிச்சம் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஒரு மண்ணெண்ணை விளக்கிற்கு இணையாக ஒரு சூரிய சக்தி விளக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, ஒரு மாதத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் சேமிக்கப்படும் மண்ணெண்ணை அளவு – 2 முதல் 2.5 லிட்டர் 1 லிட்டர் மண்ணெண்ணை எரிப்பதால் வெளியாகும் கரியமில வாயுவின் அளவு – 2.5 கிலோகிராம், 16 குடும்பங்களில் குறைக்கப்படும் கரியமில வாயுவின் அளவு: 960 முதல் 1200 கிலோகிராம் வரை [ஒரு கரிம சேமிப்புக்கு சமம் (Carbon Credit)]

இதனால், தலா ஒரு விளக்கிற்கு ஆகும் செலவில் ஒவ்வொரு குடும்பமும் ரூ 70 முதல் 100 வரை சேமிக்கின்றன. சூரிய விளக்குகள் மற்றும் சார்ஜ் ஏற்றும் மையத்தின் பராமரிப்பு மற்றும் எதிர்கால தேவைகளை (குறிப்பாக சூரிய சக்தி மூலம் ஒளியேற்றம் பெற), ஒவ்வொரு குடும்பமும் மாதம் தலா ரூ. 25 சேமிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

சமுதாய நலன்கள்

கெரஸின் விளக்குகளை விட சூரிய விளக்குகளின் ஒளி தரமாகவும் அதிகமாகவும் இருப்பதால், மாலை நேர வகுப்பை கிராமத்தினர் துவக்கியுள்ளனர். இதன் மூலம், கிராமத்தின் கல்வி நிலை உயரும் வாய்ப்புள்ளது. கிராமத்தின் கெரஸின் மாதாந்திர தேவை குறைந்துள்ளதால், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து இனி கெரஸின் வாங்கும் அவசியமில்லை. நாராயண்பூரின் சமுதாய சார்ஜ் ஏற்றும் மையத்தின் மூலம் பெறும் சக்தியே கிராமத்திற்கு போதுமானது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், தற்போது பசுமைக்குடில் வாயுக்களை (GHG) வெளியேற்றும் கெரஸின் பயன்பாட்டுக்கு செலவழிக்கப்படும் மக்களின் பணம், சுற்றுச்சூழலுக்கு உதந்த சூரிய அல்லது பிற புதுப்பிக்கத்தக்க சக்தி (Solar or other renewable sources) பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படும்.

பொருளாதார குறிப்பறிக்கை:

DRCSC-ன் பங்களிப்பு

  • 2 சூரிய ஒளித்தகடுகளின் விலை (@ ரூ 9000) = ரூ 18000
  • ஒளித்தகடுகளை நிர்மாணிக்கும் கட்டுமானத்தின் செலவு = ரூ 1500
  • பல விளக்குகளை சார்ஜ் ஏற்றும் 2 சர்க்யூட் பெட்டிகளின் விலை = ரூ1500
  • 16 விளக்குகளின் விலை (@ரூ 900) = ரூ 14400
  • கொல்கத்தாவிலிருந்து நாராயண்பூருக்கு 16 விளக்குகளை கொண்டுவந்த போக்குவரத்து செலவு = ரூ 6000
  • மொத்த DRCSC பங்களிப்பு = ரூ 41,400

சமுதாயத்தின் பங்களிப்பு

  • 3 சூரிய ஒளித்தகடுகளை கூரை மீது நிர்மாணிக்க, தலா ரூ 50 என்ற அளவில் 4 வேலையாட்களுக்கான கூலி = ரூ 200
  • கூரை மீது நிர்மாணிக்க தேவையான பொருட்கள் மற்றும் கூலி = ரூ 500
  • ஒளித்தகட்டுக்கான இரும்பு கட்டுமானத்திற்கு வர்ணம் பூசிய செலவு = ரூ. 100
  • மொத்த சமுதாய பங்களிப்பு = ரூ 80

தூய்மை, பசுமை மற்றும் பிரகாசம்

தென் இந்தியாவிலுள்ள கர்நாடகா மாநிலத்திலுள்ள குக்கிராமமாகிய கப்பிகெரே என்னும் கிராமத்தில் பசுமை என்பது எல்லாருடைய கவனத்தை கவர்கிற ஒன்றாகும். இந்த குக்கிராத்தின் பஞ்சாயத்தானது இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு ஆற்றல் துறைக்கு, ஆற்றலை விற்கிறது என்பது வெளியே தெரியாத ஒரு விஷயமாகும்.

கப்பிகெரே கிராம பஞ்சாயத்தானது, தங்களுடைய சுயமான உயிர்சக்தி உலைகளின் மூலம் உருவான ஒரு கிலோவாட் ஆற்றலை இந்திய மதிப்பில் ரூ 2.85-ற்கு, பெங்களூர் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற்கு விற்கிறது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத்திட்டம் மூலம் வழிநடத்தப்படும் “இந்திய கிராமங்களுக்கான உயிர்மப்பொருள் ஆற்றல்” என்ற திட்டத்தின் விளைவே இந்த நூதன முயற்சியாகும். இத்திட்டத்தை அகில உலக சுற்றுப்புற சூழல் அமைப்பு, இந்திய கனடா சுற்றுப்புற சூழல் அமைப்பு மற்றும் கர்நாடக மாநில அரசின் கீழ் செயல்படும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. மூன்று சிறிய ஆற்றல் உலைகள் (250, 250 மற்றும் 500 கிலோவாட் அளவுடைய) மின்சாரத்தை ஊரிலிருந்து கிடைக்கும் உயிர்மப்பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்கின்றன. 2007 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 4,00,000 கிலோ வாட் மின்சாரமானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது 6000 கிராம வீடுகளில் ஒரு ஆண்டுக்கான பயன்பாட்டின் அளவாகும். மேலும், இதன் மூலம் அதிக நம்பகமான மின்சாரமானது இந்த பகுதிகளுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முறை ஆற்றல் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு, சுற்றுப்புற சூழலுக்கு சேதம் ஏற்படுத்தாதகவும் இருக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரமானது ஊர்ப்புறங்களில் வளர்க்கப்படும் தைலமரம் மற்றும் பிற மரங்களிலிருந்து கிடைக்கும் உயிர்மப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்த தேவையின் நிமித்தம் அந்த பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

கப்பிகெரே கிராமச்சங்கத்தின் தலைவர் சித்தாண்கம்மா இவ்வாறு கூறுகிறார், “ சில சமையங்களில் எங்களை சுற்றி நிகழ்ந்துள்ள பல மாற்றங்களை நம்புவது கடினமாக இருக்கிறது. எங்களை சுற்றி பல பகுதிகள் பசுமையாக உள்ளன; மின்சாரமானது சீராக கிடைக்கப்பெறுகிறது; எங்களுக்கு சமையல் செய்ய சிறந்த எரிபொருளும் கிடைக்கிறது”. இருபத்தி ஐந்து வயது நிரம்பிய ரங்கம்மா என்பவர்க்கு தன் கணவருடன் செலவு செய்கிற நேரமானது அதிகமாக கிடைக்கிறது என்பதே இத்திட்டத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றம் என்று கூறிகிறார். ”என் கணவர் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனென்றால், அவர் தினமும் வெளியே சென்று விறகு தேடி எடுத்து வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அவரிடம் இப்பொழுது பணமும், நேரமும் அதிகமாக இருக்கிறது” என்று சிரித்த முகத்துடன் கூறுகிறார். மேலும் அவர், இப்பொழுதெல்லாம் புகையின் நிமித்தம் நான் கஷ்டப்படாததால், என்னுடைய குடும்பத்திற்கு சமைப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்றும் கூறுகிறார்.

சுற்றுப்புற சூழலில் ஏற்பட்ட அனுகூலங்களுடன், பொருளாதார நிலையில் ஏற்பட்ட சேமிப்புகளும், இத்திட்டத்தின் முக்கியமான விளைவுகளில் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட 51 சாணஎரிவாயு உலைகள் மூலம் 175 குடும்பங்களுக்கு தேவையான சுத்தமான சமையல் எரிவாயுவானது எந்தவித தயாரிப்பு செலவுமின்றி கிடைக்கின்றது என்று இத்திட்டத்தினை ஆய்வு செய்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமானது இக்கிராமத்திலுள்ள 130 ஆழ்குழாய் கிணறுகளின் தேவையை சந்திக்கிறது. ஒவ்வொரு கிணறும் ஐந்து குடும்பங்களினால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு, கிராமத்தின் ஒட்டுமொத்த நீர்பாசன வசதிக்கு வழி வகுக்கின்றன. இது, ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி வருமானத்தை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அலுவலர் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது, “ பொதுவாக ஆற்றல் உலைகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உள்ளூர் வாசிகள், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சீரான பயிற்சி பெற்றவர்களாய் இருப்பதால், இவர்களுடைய வேலைத் திறனும், வேலை வாய்ப்பிற்கான சந்தர்பங்களும் அதிகரித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்த எரிவாயு உலைகளில் பயன்படுத்தப்படும் அங்ககக் கழிவுகளானது, 81 சுய உதவிக்குழுக்களினால் நிறுவப்பட்டுள்ள நாற்றாங்காளிலிருந்து பெறப்படுவதால், சிறுபாண்மையான பெண்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்களையும் இத்திட்டம் உருவாக்கியுள்ளது.

இவ்வாறாக, கிராமப்புறங்களுக்கான ஆற்றல் தேவையை வற்றாத ஆற்றல் மூலமாக கிடைக்கச்செய்வது, சமையல் மற்றும் பாசன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது போன்றவை நிலையான சுற்றுப்புற சூழல் மேம்பாட்டிற்கு நம்மிடம் உள்ள திறமையை திறம்பட செயல்விளக்கம் செய்துகாட்டுவதற்கு எடுத்துகாட்டாகும்.

வாழ்வுக்கு ஒளி ஏற்றுவோம்

அனிமிகாவிற்கு ஆங்கிலம் மிகவும் பிடித்தமான பாடம். அவளுக்கு எதிர்காலத்தில் மருத்துவராக ஆசை. ‘இந்த விளக்குகள் நான் படிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளன அதனால் நான் இன்னும் நன்றாக படிக்க இயலும். இங்கே மின்சாரத் தட்டுப்பாட்டினால் ஏகப்பட்ட தொல்லைகள் உள்ளன. சமீபமாகக் கூட இரண்டு, மூன்று நாட்களாக மின்சார விநியோகம் இல்லை. இது போன்ற விளக்குகள் இருந்தால் நாங்கள் இரவிலும் வேலை செய்ய முடியும்’ என்று அனிமிகா கூறுகிறாள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 454 கஸ்தூரிபாய் காந்தி பாலர் பள்ளிகள் உள்ளன. அவற்றுள் 376 அரசாங்கமும், 78 பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்களாலும் இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் 37,000-க்கும் அதிகமான சிறுமிகள் பதிவு செய்துள்ளனர்.

IKEA சமுதாய இயக்கத்தால் நூறு, சூரியஒளி மூலம் இயங்கும் சன்ஆன் (SUNNAN) விளக்குகள் பள்ளிக்கு கடந்த மாதம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த விளக்குகளின் எண்ணிக்கை பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுமிக்கும் ஒன்று என்ற விகிதத்தில் போதுமானதாக இருந்தது. மாணவர்கள் பளிச்சென்று இருக்கும், அந்த விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி அதன் பாகங்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

‘பொதுவாக இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் சிறுமிகளால் படிக்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறுமிக்கு இந்த விளக்குகள் வழங்கப்பட்டவுடன் அவர்கள் படிக்கும் நேரத்தை அவர்கள் விருப்பம் போல திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்கின்றனர்’ என்று கிஷோர் தெரிவிக்கிறார். ‘இந்தப் பகுதி முழுவதும் ஊரகப்பகுதி, மின்சார விநியோகம் 2-4 நாட்களுக்கு கூட தொடர்ச்சியாக இருப்பதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இந்த விளக்குகள், படிக்கும் எங்கள் சிறுமிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. படிப்பதில் ஆர்வம் கொண்ட எங்கள் சிறுமியர் பகல் நேரத்தினைப் போன்றே இரவிலும் படிக்க விரும்புகின்றனர்’.

IKEA கடைகளின் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு சன்ஆன் விளக்கிற்கும் ஒரு சன்ஆன் விளக்கு உலக குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு இலவசமாக வழங்கபட்டு, அதன் மூலம் மின்சார வசதியில்லாத குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக வழங்கப்படுகிறது. IKEA நிறுவனம் வளரும் நாடுகளுக்காகவே சிறப்பாக, சன்ஆன் விளக்கினை வடிவமைத்துள்ளது. இந்த விளக்குகள், கடினமான வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப தேய்மானங்கள் மற்றும் இதர சேதாரங்களை தாங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக வெப்பநிலையைத் தாங்கும் பேட்டரியும் உள்ளது.

மொத்தமாக 66,740 சன்ஆன் விளக்குகள் 6,949 பள்ளிகளுக்கும், பெண்கள் எழுத்தறிவு குழுக்களுக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 24720 விளக்குகள் இராசஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் விநியோகிக்கப்படவுள்ளன.

‘விளக்கு இருக்கும்போது மிகவும் வெளிச்சமாக உள்ளது. அது எனக்கு பிடித்திருக்கிறது’ என்று மாண்டசா மகிழ்ச்சியாக கூறுகிறாள். ‘விளக்கு இல்லாத போது நாங்கள் சீக்கிரம் எங்கள் இரவு உணவினை முடித்துக்கொண்டு தூங்க சென்று விட்டு அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும். ஆனால் தற்பொழுது நான் இரவிலும் படிக்கலாம்’ என்று அவள் மேலும் கூறுகிறாள்.

‘IKEA சன்ஆன் விளக்குகளுடன் வாழ்வுக்கு ஒளி ஏற்றுவோம் – படக்கட்டுரை’

கிராமப்புற வாழ்க்கை மேம்பாட்டிற்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல் - பெண்களின் எதிர்காலத்தை சுடர்விட செய்யும் முயற்சி

இராஜஸ்தான் மாநிலத்தின் விளிம்பில், நான்கு கிராமங்கள் தன்னுடைய இரவை இன்கேன்டஸண்ட் விளக்குகளால் மிளிர வைத்துக் கொண்டிருந்தது. ஏற்றம் இறக்கம் கொண்ட பாலைவனப் பகுதியில், பரவி கிடக்கும் வீடுகளைக் கொண்ட இந்த கிராமமானது, மின்சார கம்பியுடன் இதுவரைக்கும் இணைக்கப்பட வில்லை. இப்பொழுது அவர்களிடம் இருக்கும் விளக்குகள் எல்லாம் இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடு மேம்பாட்டு திட்டமான "கிராமப்புற வாழ்க்கை மேம்பாட்டிற்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல்" என்னும் திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை.

இரவு நேரங்களில், முற்றத்தில் எரியும் ஒரு விளக்கானது, அங்குள்ள மக்களுக்கு ஒரே வழிகாட்டியாகயாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்களே இந்த விளக்குகளைப் பொருத்துகிற பொறியியற் பணியை மேற்கொண்டு, இப்பொழுது பராமரிக்கிற பணியையும் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு நான்கு பெண்களை, இந்த சூரிய ஒளி மின்விளக்கு பயிற்சி பெறுவதற்கு வரவழைப்பது ஒரு பெரிய செயலாக அமைந்தது. சமூக சேவை மற்றும் ஆராய்ச்சி மையம் (SWRC) என்ற அமைப்பு, திலோனியாவை சார்ந்த, ஒரு அரசுசாரா நிறுவனமாகும். இது இவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு ஒரு பயிற்சி மையத்தை இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் நடத்தி வருகிறது. இதுவே இத்திட்டத்தை பர்மர் என்னும் கிராமத்தில் நிறுவியது.

இந்த நான்கு பெண்களும் ஐந்தாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையே பள்ளி சென்று பயின்றுள்ளனர். இதில் யாரும் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதோ அல்லது பக்கத்து கிராமத்தை தாண்டியதோ இல்லை. இந்த நான்கு பயிற்சி பெற்ற பெண்களில் மூவர் திருமணம் ஆனவர், ஒருவருக்கு நிச்சயம் ஆகியுள்ளது.

கிராம மக்கள், ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கூறியபோது, திட்டமானது பெண்களுக்கு தான் பயிற்சி என்று கூறியது. இதை மக்கள் ஏற்பதற்கு நீண்ட காலம் ஆனது. கடைசியில் பகவதி, சஜானி, சலிமாட்டி மற்றும் சனோ ஆகியோர், SWRC-யில் இரண்டு மாதங்கள் தங்கியும் பின்னர் ஒரு மாதம் களப்பயிற்சியும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களே கிராமத்தில் விளக்குகளை அமைத்தும் அடிக்கடி கண்காணித்தும், சரி செய்தும், புகார்களை சரி செய்தும், விளக்குகளின் பேட்டரிகளை சக்தியூட்டவும் செய்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன், ஏனைய பெண்கள் போல் வீட்டை சுத்தம் செய்யவும், நீர் கொண்டு வரவும், சமைக்கவும் செய்து கொண்டிருந்த இந்த இளம் பெண்கள், இப்பொழுது பொறியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த விளக்கை கொண்ட, ஒவ்வொரு குடும்பமும், கிராம பொது நிதிக்கு, பணம் தருவதிலிருந்து, இப்பெண்கள், ரூபாய் 1000-திலிருந்து ரூபாய் 1350 வரை மாத சம்பளம் பெறுகின்றனர்.

மூலம் : www.undp.org

எதிர்கால வெளிச்சம் மாதஹபெராவில் ஒளிர்கிறது

ஜார்கண்ட் மாநிலத்தில் மாதஹபெராவில் ஒரு சிறிய கிராமம். அந்த மாநிலத்தில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்களது வாழ்வு விவசாயத்தையும், மாடு வளர்ப்பையும் நம்பி உள்ளது. இது தவிர ஊதுபத்தி உற்பத்தி, இலைத்தட்டு, கிண்ணம் தயாரித்தல், மூலிகைச்செடிகளை கண்டுபிடித்து பிரித்தல், மற்றும் உள்ளூரில் உள்ள வேலைகளை செய்து வாழ்க்கையை ஒட்டுகின்றனர்.

இதுவரை மாதஹபெரா கிராமத்திற்கு மின்சாரம் வசதி கிடைக்கவில்லை. அதனால் அந்த கிராம சமூகப் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற மகளிருக்கு ஊதுபத்தி, கைவினைப்பொருட்கள், இலைத்தட்டு, கிண்ணம், உடனடி உணவு வகை ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களது அன்றாட பணிகளை அவர்கள் செய்து முடிக்கவே மாலை நேரம் ஆகிவிடும். மாலை நேரங்களில் கிடைக்கும் சுமாரான, மங்கலான வெளிச்சத்தில் இத்தகைய பணிகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால், இவர்களது உற்பத்தி திறன் குறைவாகவே காணப்படுகிறது.

புதிய உதயம்

ஒரு கோடி மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் திட்டம் மாதஹபெரா கிராமத்தில் 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமுல்படுத்தப் பட்டது. இத்திட்டம் "சீட்ஸ்" என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் கிராம அளவில்,

ஊரக மேம்பாட்டுப் பணியில், மக்களிடையே நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் நிறுவனமாகும். சூரிய லாந்தர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கிராமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்ணான சாவ்ரி டுடுவின் வாழ்விலும் புதிய ஒளி, திருப்பம் ஏற்பட்டுள்ளது. தினமும் இவர் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து சமைத்து, 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனது கணவருக்கு உணவு கொடுத்து அனுப்புவார். இவரது கணவர் அருகிலுள்ள கமாரியா நகரத்தில், ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். முன்னர், உரைக்கல்லில் அரைக்கும் போது, எதை அரைக்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு இருண்டு காணப்பபடும். ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு இருக்கும். அதையும் அவர் கணவர் பயன்படுத்துவார். சாவ்ரி டுடு இருட்டில் மிகவும் கஷ்டப்படுவார். இருட்டில் சமைக்கும்போது உணவில் என்னென்ன பொருட்களை எவ்வளவு இடுகிறோம் என்பதே சரியாக தெரியாது. இப்போது சூரியஒளி லாந்தர் கிடைத்தவுடன் அவருடைய வேலைகளை விரைவாக முடிக்கின்றார். அவரது கணவரும், நேரத்திற்கு தொழிற்சாலைக்கு புறப்பட்டு செல்கிறார்.

தொழில் வாய்ப்புகள்

பெஜி மர்மு, தனது குழுவின மற்ற பெண்களுடன் சேர்ந்து, வியாபாரத்தை வேகமாகவும், விவேகமாகவும் செய்து வருகின்றார். சுயஉதவிக்குழுவினருக்கு தானியங்களை, பயறுவகைகளை, நிலக்கடலையை பதப்படுத்துதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. சூரியஒளி லாந்தர்களின் உதவியுடன் மாலை நேரத்தை அவர்கள் இத்தகைய பயனுள்ள செயல்பாடுகளை செய்ய பயன்படுத்துகின்றனர். மேலும், திருமணம், விழாக்காலங்களுக்கு தேவையான உணவு வகை தயாரிக்கும் பெரிய பணிகளையும் இவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த உணவு வகைகளை உள்ளூரிலும், கந்ரா, கமாரியா போன்ற அருகிலுள்ள நகரங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  வெளிச்சமில்லை என்ற பிரச்சனை இனி அவர்களது வியாபாரத்திற்கு தடையாக இருக்காது.

மலைவாழ் சிறுவன், கணேஷ் டுடு ஒரு பிறவிக் கலைஞன்.  உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன்.  படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களிலும், இரவிலும், வண்ணம் தீட்டுதல், சிலைகளை உருவாக்குதல், தெர்மோகோல் உபயோகித்து அழகுப்பொருட்கள் செய்தல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வான். இவை அனைத்தும், சூரிய ஒளி லாந்தர்கள் கிடைத்தபின் சாத்தியமாயிற்று.  உள்ளூரில் விற்பனைக்கான வேலைபாடுகளையும் கணேஷ் டுடுவிற்கு தற்போது செய்து வருகிறார். பக்கத்து ஊர்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இவனது கலைப் பொருட்களுக்கு தேவை அதிகமாயிற்று. கணேஷ், தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டே இப்போது கல்லூரியில் படித்து மகிழ்கிறான். சூரியஒளி லாந்தர் அவனது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பாதுகாவலானக உள்ளது என்றால் அது மிகையில்லை.

மூலம் : http://labl.teriin.org

பன்கங்கா- சூரிய சக்தி மூலம் திருத்தம் பெற்ற கிராமம்

இராஜஸ்தானில், விரத் நகர் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமம் தான் பன்கங்கா. இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், வெற்று தரிசாகவே இருக்கிறது. இதனால் அப்பகுதியில் மழையும் குறைந்துவிட்டது.

பன்கங்கா கிராம மக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். மின்சார கிரிட் வெகு காலத்திற்கு முன்பே வந்த போதிலும், இந்த கிராமத்திற்கு இன்னும் மின்சார கிடைக்கவில்லை. இந்த கிராமத்தில் சூரிய ஒளி அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறும் அனைத்து பணிகளும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே நடைபெறுகிறது. மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வரும் புகையானது, மக்களின் உடல் நலத்தையும், கண் பார்வையையும் பாதிக்கின்றது.

சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான லாந்தர்கள்

ஒரு கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டம் துவக்கப்பட்டபின், மக்கள் வாழும் சூழலில் மாற்றம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பன்கங்கா கிராம மக்களுக்கு தூய்மையான, பிரகாசமான வெளிச்சம் வழங்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு வைக்கப்பட்டுள்ள வெளிச்சம் தரக்கூடிய லாந்தர்கள் அனைத்தும் தினமும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து மக்களின் தேவையை நம்மால் உணர முடியும். பன்கங்கா கிராமத்திலுள்ள 100 வீடுகளில், அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர லாந்தர்கள் உதவி செய்துள்ளன. வீட்டில் வெளிச்சம் காணப்பட அதிகளவில் லாந்தர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சரியான விளக்கு வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், மாணவர்கள் வீட்டிலும், கல்விக் கூடங்களிலும், இரவு நேரத்தில் படிக்க முடிகிறது. லாந்தர்கள், மாலை மற்றும் இரவு நேரத்தில் பெண்கள் உபயோகமான பணிகளை முழுமையாகவும், வேகமாகவும் செய்து முடிக்க உறுதுணை புரிகின்றன. லாந்தர்களை பயன்படுத்துவதன் மூலம் வீட்டிற்குள் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறைகிறது. இதன் மூலம் சமூகத்தின் சுகாதாரம் மேம்படுகிறது, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.

புதிதாக வருமானம் பெற வழிவகை செய்தல்

மேம்படுத்தப்பட்ட வெளிச்சம் வழங்கும் வசதிகள், உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. அதாவது கூடை பின்னுதல், துடைப்பம் செய்தல், காய்கறிகளை பிரித்தெடுத்தல், கிராமப்புற சந்தைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு இந்த லாந்தர்கள் பயன்படுகின்றன.

இதன் மூலம் தனி நபர் வருமானம், குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது. லாந்தர்களை, கடைகாரர்களும், காய்கறி விற்பனையாளர்களும் அருகிலுள்ள சந்தைகளில் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்தக் கடைகள் மாலை நேரத்தில் நீண்ட நேரம் திறந்திருக்கின்றன. இதனை செயல்படுத்தும் நிறுவனம் கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை நடத்துகிறது. இக்குழுக்களின் உறுப்பினர்கள் லாந்தர்களை பயன்படுத்தும் போது, வியாபார நோக்கிலான உற்பத்தியில் அதிக நேரம் செலவிட முடிவதாகவும், அதனால் குழுவுக்கும் தங்களுக்கும் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். வரும் காலங்களில் சுயஉதவிக்குழுவினர் அவர்களுக்கான வங்கிக் கணக்கை துவக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்குள்ளே கடன் கொடுத்து வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

திருமதி கோட்டி தேவி, சக்தி லாந்தர் வழங்கும் நிலயத்தை நடத்துபவர். இவருக்கே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு அந்த நிலையத்தை நடத்துவதன் மூலம் நன்மதிப்பும், மரியாதையும் அவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய மகன் திரு. ஓமி, தொழில்நுட்ப ரீதியில் உதவிகரமாக இருக்கிறார். அது மட்டுமல்ல லாந்தர்களை வாங்கிச் சென்றவர்கள் சரியான நேரத்தில் திரும்ப கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், விசாரித்து, அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் ஓமி உதவியாக இருக்கிறார்.

மூலம் : http://labl.teriin.org

கோட்டபாளையத்தில், இரவிலும் சூரிய ஒளி!

பொது நலனுக்காக, இந்தியாவில் பலகிராமங்கள், கோட்டபாளையம் கிராமம் போல், மாற்றியமைக்கப்படலாம். அரசு சாரா நிறுவனம், தனியார் நிறுவனம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின், கூட்டு முயற்ச்சியால், இந்த விந்தை நிகழ்ந்தது.

முருகம்மா என்பவர், கோயம்புத்தர் சென்றுவிட்டு இரவு நேரத்தில் கடைசி பேருந்தில் கோட்டபாளையம் திரும்பியுள்ளார். வீடு சென்றவுடன், தனது 10 வயது மகளை, தெரு குழாயில் நீர் எடுத்து வர அனுப்பினாள். ஆனால், மூன்று வருடங்களுக்கு முன் இவ்வாறு தன் மகளை, முருகம்மா, அனுப்பி இருக்க முடியாது.

கோட்டபாளையம், ஒரு அழகிய மற்றும் தூய்மையான கிராமம். கிராமத்தில் உள்ள 50 வீடுகளும் (முருகம்மாவின் வீடு உட்பட) அழகான வீதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.


சிவப்பு கலர் கூரை மற்றும் பளீரென்று சுவர்களையுடைய எளிமையான கலைநயத்தடன் வசிக்கக்கூடிய வீடுகள் ஆகும். வவ்விபாளைய பஞ்சாயத்தின், 10 குக்கிராமங்களின் ஒன்றான கோட்டபாளையத்திற்கு, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்ததூரில் இருந்து, 1.5 மணி நேரத்தில் பேருந்தில் சென்று விடலாம்.

2004-ல் கோட்டபாளையம் கிராமம், பகலில் சூரியனால் வெளிச்சமாய் காணப்பட்டு, இரவில் இருளால் சூழ்ந்த கிராமமாக இருந்தது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராமங்களைப் போல், மின்சார மயமாக்கப்பட்டிருந்தாலும், மின்சாரம் தடையின்றி கிடைப்பது அரிதாக இருந்தது. இந்த சூழ்நிலையில், முருகம்மா, கடைசி பஸ்ஸையோ, தன் மகளை இரவில் தண்ணீர் பிடிக்கவோ அனுப்பி இருக்க முடியாது.
ஆனால் இன்று, 10 சூரிய போட்டோவோல்டிக் தெரு விளக்குகள் கொண்ட கிராமமாக இருக்கிறது. இவை வவ்விபாளைய பஞ்சாயத்திற்கு சொந்தமானதாகும். இந்த விளக்கிற்காக, பஞ்சாயத்து, எந்த மின்சார கட்டணமும் கட்டவேண்டியதில்லை. கடினமாக உழைக்கும், ஆண் மற்றும் பெண், குறிப்பாக, நிலமற்றவர்கள், இந்த விளக்குகளை நினைத்து பெருமையடைகிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, இவ் விளக்குகளை நிறுவுவது எளிது. ஆனால், இந்த திட்டத்தை ஆரம்பித்தது, தனித்துவம் வாய்ந்தது. இந்த கிராமத்தில் இயங்கும், அரசு சாரா இயக்கமான, சிந்தனை சிற்பிகளின், சுந்தரமூர்த்தி மற்றும் செந்தில் ஆறுமுகம், ஆகிய இருவரும் இத்திட்டத்திற்கான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள், கோயம்புத்தூர் மாவட்ட கிராமபுற மேம்பாட்டு நிறுவனத்தின், திட்ட அலுவலர், ஜெயபாலகிருஷணன் என்பவரிடம், இன்பராசிஸ் எனும், பெங்களுர் சார்ந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர். இன்பராசிஸ் எனும் நிறுவனம், கிராமபுற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனமாகும்.
இவர்களுக்கிடையே ஆன ஒப்பந்தம் மிக எளிமையானதாகும். தமிழ்நாடு அரசு, இத்திட்டத்திற்காக ரூ.1,00,000/- மான்யமாக அளிக்கும். இன்பரசிஸ்சும் அதே அளவு பங்கை முதலீடு செய்து, பின்வரும் மூன்று வருடங்களில் சிறிய வருமானம் வாயிலாக, முதலீட்டை திரும்ப பெறும். மூன்று வருடங்களுக்கு பின்னர், வவ்விபாளைய பஞ்சாயத்து, இந்த விளக்குகளை சொந்தமாக்கிக் கொண்டு, பின்னர் 20 வருடங்களில், மின்சார சேமிப்பு மூலம், ரூ.3,00,000/- வருமானமாக பெறும் ஜனநாயக மற்றும் ஒளிவு மறைவு இல்லாத இந்த திட்டத்தை பஞ்சாயத்து மற்றும் ஊர்மக்கள் ஒப்புக்கொண்டனர்.  2004, ஜனவரி 2ம் தேதி, கிராம சபையில் வவ்விபாளைய மக்கள், இன்பராசிஸ் நிறுவனத்துடன், சூரிய தெருவிளக்குகளுக்கான திட்டத்தில் உடன்படிக்கை எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். இது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  அலுவலகத்தில், பிப்ரவரியில் முடிவு செய்யப்பட்டு, முகமையின் வழிகாட்டுதலில், மே, 2004ல் விளக்குகள் நிறுவப்பட்டது.


பிப்ரவரி 2005-ல், விளக்குகள், இரவில் வெளிச்சம் காட்டத் தொடங்கியது. இங்கு வசிப்பவர்கள் இந்த சாதனையில் பெருமிதமாக உள்ளார்கள். இப்பொழுது அவர்கள், இரவில் பாதைகளை காண முடிகிறது, இவர்களது குழந்தைகள், வெளியில் அதிக நேரம் விளையாட முடிகிறது. இதைவிட எல்லாம் சிறந்தது, இவர்களை எந்தவித மின்வெட்டும் பாதிப்பதில்லை.

விளக்குகளை எங்கெங்கு நிறுவுவது என்பது ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டாலும், சில கருத்து வேறுபாடுகள்  இருந்தன. ஆனால் இரண்டு விளக்குகள் மட்டும் எந்த வித கருத்து வேறுபாடுமின்றி நிறுவப்பட்டன. ஒன்று, சமுதாய குழாயின் அருகே அமைந்தது. மற்றொன்று, ஒரு விளக்கின் கீழே, பிரதி செவ்வாய் கிழமை, இரண்டு ஆண் சுயஉதவி குழு கூடி குழு பரிமாற்றங்கள் நடத்துகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த குழுக்களே, விளக்குகள் நிறுவப்பட்டபின் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதைப்போல், நமது கிராமபுற இந்தியாவில், இன்னும் பல கதைகள், சூரிய ஒளி தெரு விளக்கின் கீழ் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

மூலம்: www.businessworld.in

2.88405797101
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top