பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்

இயற்கை மூலாதாரங்களை பேணிக்காக்கவும் அதன் நிலையான பயன்பாட்டைப் பெறவும் அறிவிக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த காப்பகப் பகுதியே உயிர்க்கோளக் காப்பகம் என அழைக்கப்படுகின்றது.

மனிதனும் உயிர்க்கோளமும் என்ற திட்டத்தின் கீழ் 1971ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் துவக்கப்பட்டதே உயிர்க்கோளக் காப்பகமாகும்.  உயிர்க்கோளத்தைப் பாதுகாப்பதற்காக உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இவ்வமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காப்பதற்காக உயிர்க்கோளக் காப்பகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கீழ்க்கண்டவற்றை பூர்த்தி செய்வதே உயிர்க்கோளக் காப்பகத்தின் முக்கிய நோக்கமாகும்.

நில அமைப்பு மற்றும் இயற்கையான சூழலமைப்பில் பல்லுயிர்வளத்தை பாதுகாத்தல். உயிர்க்கோளக்காப்பகத்தை சார்ந்து வாழும் மக்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்

நீண்டகால சுற்றுச்சூழல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு உகந்த இடமாக இருத்தல்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் உயிர்க்கோளக் காப்பகம் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.

மைய மண்டலம்

தாங்கல் மண்டலம்

நிலைமாறு மண்டலம்

மண்டலங்களின் செயல்பாடுகள்

மைய மண்டலம் :  தீவிர பாதுகாப்பிற்கு உட்பட்ட இம்மண்டலத்திலுள்ள சூழலமைப்பை கண்காணித்தல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் மற்றும் சூழல் சார்ந்த சுற்றுலா மற்றும் கல்விக்காக பயன்படுத்துதல்.

தாங்கல் மண்டலம் :  பொதுவாக இம்மண்டலம் மைய மண்டலத்தை சுற்றி காணப்படும்.  இங்கு சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் இயற்கை சுற்றுலா போன்ற சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல்.

நிலைமாறு மண்டலம் :  பலதரப்பட்ட விவசாய நடவடிக்கை, குடியிருப்பு மற்றும் இன்னும் பிற பயன்பாட்டிற்கு உள்ளாகும் இப்பகுதியில் வாழும் மக்கள், நிர்வாக துறையினர், விஞ்ஞானிகள், அரசு சாராநிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இணைந்து இப்பகுதியின் மூலாதாரங்களின் நிலையான மேம்பாட்டிற்கு செயல்படும் பகுதியாகும்.

இந்நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கு இக்காப்பகத்தில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.  இதற்காக யுனெஸ்கோ அமைப்பு 10 முக்கிய கருத்துக்களை 1994ல் பரிந்துரைத்துள்ளது.

நீடித்த பாதுகாப்பிற்கும் நிலையான பயன்பாட்டிற்கும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ளல்.

பாதுகாப்புத் திட்டத்தை வடிவமைத்து நிர்வகிப்பதில் அப்பகுதி மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.

அவர்களது சமூக பொருளாதார தேவைகளை அவர்களே கண்டறிய விட்டுவிடுதல்.

பாதுகாப்பு திட்டங்களால் ஏற்படும் இலாப நஷ்டங்களை அம்மக்களே ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.

பல்லுயிர்ப்பெருக்கத்தின் நிலையான பயன்பாட்டிற்கு உரிய வழிமுறைகளை கண்டறிவதைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

முடிந்தவரை அப்பகுதிக்கே உரித்தான பாரம்பரிய வழிமுறைகளால் பாதுகாத்தல்.

உயிர்க்கோளக் காப்பகத்தின் வளங்களை அப்பகுதி மக்களே நிர்வகிக்க முன்னுரிமை வழங்குதல்.

கிராம மக்களை அபிவிருத்தி திட்டங்களை பராமரிப்பதில் பங்குதாரர்களாக்கிக் கொள்ளுதல் மற்றும் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை விளக்கி கூறுதல்.

பாதுகாப்பு நடவடிக்கை மூலம் உள்ளூர் மக்களுக்கு தேவையான திறமைகளையும் வளங்களையும் அளித்து அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்.

உள்ளூர் மக்களுக்கு இயற்கை பாதுகாப்பு முறையையும் அதனால் விளையும் நன்மைகளைப் பற்றியும் கல்வி புகட்டுதல்.

உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு

முதலாவது உயிர்க்கோளக் காப்பகம் குறித்த மாநாடு மின்ஸ்க் நகரில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 62 நாடுகளில் உள்ள 226 உயிர்க்கோளக் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டன.  இரண்டாவது கூட்டம் 1995ஆம் ஆண்டு செவிலி என்ற இடத்தில் நடைபெற்றது.  இதில் 82 நாடுகளைச் சார்ந்த 324 உயிர்க்கோளக் காப்பகங்கள் தெரிவிக்கப்பட்டன.  தற்பொழுது 95 நாடுகளில் 425 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு

இந்திய அரசாங்கத்தால் 1979ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் வழிமுறைகளின்படி இந்தியாவில் உள்ள உயிர்க்கோளக் காப்பகங்களை கண்டறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.  14 பகுதிகளை உயிர்க்கோள காப்பகங்களாக அறிவிக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததில் இதுவரை 13 பகுதிகள் உயிர்க்கோளக் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம்

 

கேரளாவில் 1701 ச.கி. மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 2001ம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, முன்டந்துறை புலி பாதுகாப்பகம் மற்றும் களக்காடு வனவிலங்கு சரணாலயம் வரை இக்காப்பகத்தின் பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முட்புதர்க்காடு, ஈர இலையுதிர்க்காடு, பகுதி பசுமைமாறா காடுகளை உள்ளடக்கிய காப்பகத்தில் பல்லுயிர் வளம்மிகுந்து காணப்படுகிறது.  அகத்திய கூடத்தை சுற்றியுள்ள இக்காப்பகத்தில் 35க்கும் மேற்பட்ட அழியும் தருவாயில் உள்ள தாவரங்கள் காணப்படுகின்றன.

தாவரங்கள்

இதுவரை 2000 தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.  இவ்விடத்திற்கே உரித்தான 100 வகைகளும், அரியனவான 50 வகைகளுடன் 30 புதிய தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.  ஆடு திண்ணாபாலை, முடக்கற்றான், செங்காந்தள், பாம்புகளா போன்ற மூலிகைகள் காணப்படுகின்றன.

விலங்குகள்

புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான் மற்றும் தேவாங்கு போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்

நீர்மின்சக்தி திட்ட எல்லை அருகேயுள்ள பழங்குடியான குடியிருப்புகள், தோட்டப்பயிர்கள் சாகுபடி மற்றும் அகத்திய கூடத்திற்கு யாத்ரீகர்களின் வருகை அதிகரிப்பு போன்றவை மிகப்பெரிய அச்சுறுத்தல்களாகும்.

திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம்

அருணாச்சலப் பிரதேசத்தில் 5112 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 1998ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  ஆதி, புத்த மற்றும் மிஷ்மி பழங்குடி மக்கள் மிகுந்து வாழும் இக்காப்பகம் காடுகள் மிகுந்து காணப்படுகிறது.

தாவரங்கள்

உலகின் மெகா பல்லுயிர் வளப்பகுதியாக விளங்கும் இக்காப்பகத்தில் 1500 பூக்கும் தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.  சயாத்தியா, லிவிஸ்டோனா மற்றும் கோப்டிஸ் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 8க்கும் மேற்பட்ட வன வகைகள் உள்ளன.

விலங்குகள்

வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்திப்பூச்சிகள் உட்பட 45 வகையான பூச்சியினங்களும் 195 வகையான பறவையினங்களும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.  சிறுத்தை, பனிச்சிறுத்தை, பொன்பூனை, காட்டுப்பூனை மற்றும் சிறுத்தை பூனை போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

தீவிர காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் காடழித்து பயிர் செய்தல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

திப்ரு-சைக்ஹவா உயிர்க்கோளக் காப்பகம்

அஸ்ஸாம் மாநிலத்தின் கிழக்கு கோடியில் பிரம்ம புத்திரா நதியின் தென் கரையில் அமைந்துள்ள இக்காப்பகம் 1997ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  திப்ரு-சைக்ஹவா தேசியப் பூங்காவை உள்ளடக்கி 765 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது.  ஆண்டிற்கு 2300 மி.மீ முதல் 3600 மி.மீ வரை மழை பொழிகிறது.  பகுதி பசுமை மாறாக்காடு, இலையுதிர்க்காடு, சதுப்புநிலக்காடு மற்றும் ஈரமான பசுமைமாறாக் காடுகளை உள்ளடக்கிய காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் சுமார் 38 கிராமங்கள் உள்ளன.  இக்காப்பகம் முழுவதும் சமவெளிப்பகுதிகளாக உள்ளது.

தாவரங்கள்

இங்கு ஆர்க்கிட் வகை தாவரங்கள் அபரிமிதமாக காணப்படுகின்றன.  சர்ப்பகந்தி, ஹொலரினா போன்ற மூலிகைகளும் தர்ப்பை, யானைப்புல் போன்ற புற்களும் இலவு, வெண்தேக்கு, கடம்பு, பலா, நாங்கு, சிசு போன்றமர வகைகளும் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

இக்காப்பகத்தில் 36 வகை பாலூட்டிகள், 350 வகை பறவையினங்கள், இருவகை உடும்புகள், 8 வகை ஆமைகள் மற்றும் 8 வகை பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.  இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் முதல் வகைப்பாட்டில் 12 வகை பாலூட்டிகள் இடம் பெற்றுள்ளன.

அச்சுறுத்தல்கள்

மேய்ச்சல், வெள்ளப்பெருக்கு, அதனால் ஏற்படும் வண்டல் படிவு போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம்

இக்காப்பகம் 885 ச.கி. மீட்டர் பரப்பளவுடன் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  தற்போது சுமார்

1044 ச.கி. மீட்டரில் பரவியுள்ளது.  இக்காப்பகம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ளது.  இக்காப்பகத்தின் முதல் மைய மண்டலம் அலெக்சாண்டர் நதிக்கும் செங்கரப்பா வளைகுடாவுக்கும் இடையே உள்ளது.  இரண்டாம் மையமண்டலம் சஹினி மற்றும் ஆன்ட்டி மலைகளுக்கிடையே அமைந்துள்ளது.  ஏற்கனவே உள்ள குடியிருப்புகளைத் தவிர, மைய மண்டலமானது எந்தஒரு பாதிப்புக்குள்ளாகாமல் உள்ளது.  மெகாபோடு மற்றும் கொலக்கேலியா (உணவாகும் கூட்டை உருவாக்கும்) போன்ற அழியும் தருவாயிலுள்ள இனங்களுக்கு உறைவிடமாக உள்ளது. ஷாம்ஃபென் பழங்குடியினத்திற்கு உய்விடமாக விளங்குகிறது.

தாவரங்கள்

வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ள இக்காப்பகத்தில் சையாத்தியா, மரப்பெரணி, ஃபேலிநாப்சிஸ் ஆர்க்கிட், ருத்ராட்சம், புன்னை, உப்புப்பாலை, கண்டல், சிலைவாகை, தாழை, மருது மற்றும் சவுக்கு இன தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

நண்டுத்திண்ணிகுரங்கு, கடலாமை, மலேயாபெட்டி ஆமை, போன்ற இக்காப்பகத்திற்கே உரித்த விலங்கினங்களும் அந்தமான் காட்டுப்பன்றி, பழந்திண்ணி வெளவால், சமுத்திரகழுகு, நிக்கோபார் கிளி மற்றும் உடும்பு போன்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்

வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம், 1972ன் பகுதி 65ன் கீழ் உரிமைபெற்ற ஷாம்ஃபென் மற்றும் நிக்கோபாரிஸ் பழங்குடியின மக்கள் இக்காப்பாகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.  இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாலும் வனப்பொருட்களை சேகரிப்பதாலும்இக்காப்பகம், பெரிதும் பாதிக்கப்படுகிறது.  வேட்டையாடுவதால் அந்தமான் காட்டுபன்றியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  கடல்வெள்ளரி, கொலக்கேலியாவின் கூடு, முதலைகள் மற்றும் ஆமைகள் போன்றவை அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக ஏறறுமதி செய்யப்படுவதும் அச்சுறுத்தல்களாகும்.

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம்

தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

தாவரங்கள்

இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன.  இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன.  கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.

விலங்குகள்

மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது.  முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.

மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும்.  மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.

கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள கஞ்சன் ஜங்கா கி.பி. 2000த்தில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமாகவும் உலகின் மூன்றாவது உயரமானதாகவும் விளங்கும் கஞ்சன் ஜங்கா இவ்வுயிர்க்கோளத்தில் உள்ளது.  பல வனவகைகளையும், குறைந்த வெப்பமண்டலம் முதல் ஆர்டிக் வரையிலான பல சூழல் அமைப்புகளை உள்ளடக்கியும் லெப்சா, பூடியா மற்றும் நெப்ளேசஸ் போன்ற பழங்குடியினர்கள் வாழும் இச்சூழல் மண்டலம் சுமார் 2619 ச.கி.மீட்டரில் பரவி காணப்படுகிறது.

இக்காப்பகத்தில் பனியாறுகள் மற்றும் ஏரிகள் சுமார் 5825 மீட்டர் உயரத்திற்கும் மேலே அமைந்துள்ளதால் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த சூழலமைப்பு என்ற பெருமையும் பெற்றுள்ளது.

தாவரங்கள்

பகுதி வெப்பமண்டலகாடு, ஊசியிலைகாடுகள், பகுதி அல்பைன் காடுகளை உள்ளடக்கிய இக்காப்பகத்தில் பல மூலிகை தாவரங்கள் காணப்படுகின்றன.

விலங்குகள்

பனி சிறுத்தை, இமயமலை சிகப்பு பாண்டா, கஸ்தூரிமான், திபெத் ஆடு, இமயமலை வரையாடு மற்றும் குரங்கு வகைகள் போன்ற விலங்கினங்கள் அதிகமாக காணப்படுகின்றன.  பனிகாகங்கள், கழுகு, ஆந்தை, கொம்பு கழுகு போன்ற பறவையினங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்

நிலச்சரிவினால் ஏற்படும் மண் இழப்பு மூலம் வனவிலங்குகள் இருப்பிடத்தை விட்டு நகருதல் மிக முக்கிய அச்சுறுத்தலாகும்.

மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம்

நாகதேவதையான மனாசா (துர்க்கையம்மன்) என்பதிலிருந்து மனாஸ் என பெயரிடப்பட்டது.  இக்காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  அஸ்ஸாம் மாநிலத்தில் இமயமலைப்பகுதி முதல் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் வடபகுதிவரை சுமார் 2837 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது.  பிரம்மபுத்திரா நதியின் மிகப்பெரிய கிளை ஆறு மனாஸ் ஆகும்.  யுனெஸ்கோவால் 1985ஆம் ஆண்டு உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தாவரங்கள்

புல்வெளி (சவணா மற்றும் தேரி) மற்றும் வனநிலம் (வங்காள மழைக்காடுகள்) என இருவகையான நிலவகைகள் காணப்படுகின்றன.  இக்காப்பகத்தின் மைய மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 543 தாவர வகைகளில் விதைகளற்ற புதலிகள் மற்றும் பூவா தாவரங்கள் 30, வகைகள் ஒருவித்திலைத்தாவரங்கள் 139 வகைகள் மற்றும் இருவித்திலைத் தாவரங்கள் 37 வகைகள் என கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகள்

இக்காப்பகத்தில் 61 வகையான பாலூட்டிகள், 327 வகை பறவைகள், 2 வகை ஊர்வன, 7 வகை இருவாழ்விகள் மற்றும் 54 வகை மீன் வகைகள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலி, யானை, ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான், சதுப்புநில மான், பன்றிமான் போன்ற வன விலங்குகளும் முள் முயல், குள்ளம்பன்றி, பொன்குரங்கு போன்ற அரிதான மற்றும் அவ்விடத்திற்கே உரித்த விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.

ஐ.யு.சி.என். பாதுகாப்பு செயல்திட்டத்தின் கீழ் 1988ல் இக்காப்பகத்தில் காணப்படும் கூரை ஆமையினம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்கள்

இக்காப்பகத்திலுள்ள தீவனம், மரதடி, விறகு, சோகை, பழம் மற்றும் மீன் போன்றவற்றை பொடோ சமுதாயத்தினர் சார்ந்துள்ளனர்.  எல்லை பாதுகாப்பு, களைகள் அதிகரிப்பு மற்றும் மண் அரிப்பு போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம்

இக்காப்பகம் 1988ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  நந்தாதேவி மற்றும் பூப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காக்களை உள்ளடக்கி 5860 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது.  இந்தியாவில் உயிர்ப்புவியியல் மண்டலங்களில் இமயமலை மண்டலத்தில் இக்காப்பகம் காணப்படுகிறது.  உலகப் பாரம்பரியப் பகுதியாக 1992ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  நந்தாதேவி சிகரம் உட்பட தானகிரி, சங்பேங், திரிசூல் போன்ற பலசிகரங்கள் இங்கே காணப்படுகின்றன.  உத்ராஞ்சல் மாநிலத்தின் சமோலி, பித்தரோகார் மற்றும் பாகேஸ்வர் போன்ற மாவட்டங்களில் இக்காப்பகம் பரவியுள்ளது.  கார்வால் இமயமலைப் பகுதியில் உள்ள சமோலி மாவட்டத்தில் காப்பகத்தின் முக்கியப் பகுதிகள் பரவியுள்ளன.  மக்கள் பொதுவாக விறகு, தீவனம், மரதடி மற்றும் இலைகளுக்காக இக்காப்பகத்தைச் சார்ந்துளளனர்.  பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல மூலிகை தாவரங்கள் பயன்படுகின்றன.

தாவரங்கள்

வெப்பமண்டலக்காடு, பகுதி உயர்மலைக்காடு, உயர்மலைக்காடு மற்றும் பனிபடர்ந்த பல காடுவகைகளை உள்ளடக்கிய இக்காப்பகத்தில் இந்திய தாவரவியல் ஆய்வுத்துறையால் 800 தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகள்

இந்திய விலங்கியல் ஆய்வுத்துறை மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களால் 18 வகையான பாலூட்டிகளில் 7 இனங்களும், 200 வகை பறவைகளில் 8 இனங்களும் அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்கள் இங்கு உள்ளன.  பனிச்சிறுத்தை, கருங்கரடி, கஸ்தூரிமான் மற்றும் இமாலய வரையாடு போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.

காப்பகத்தின் கலாச்சார பாரம்பரியம்

இக்காப்பகத்தில் ஏழ்மையான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.  நகரங்களிலிருந்து வெகுதொலைவில் வாழ்வதால் கல்வியறிவு விகிதம் மிகக் குறைவாகவும் சொந்தமாக நிலம் வைத்திருப்போர்கள் குறைவாகவும் உள்ளனர்.  அவர்களுக்கென்று தனித்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.  வேளாண்மையும் ஆடுவளர்ப்பும் முக்கிய தொழில்களாகும்.  புதியா பழங்குடியினர் 1962ஆம் ஆண்டுக்கு முன்னர் திபெத்தியர்களுடன் பண்டமாற்று வியாபார முறையில் சிறந்து விளங்கினர்.

அச்சுறுத்தல்

மருத்துவத்திற்காக அழிந்து வரும் தாவர இனங்களை மிகுதியாக பயன்படுத்துதல், காட்டுத்தீ, வேட்டையாடுதல் மற்றும் யாத்திரீகர்கள் வருகை போன்றவை இச்சூழலமைப்பிற்கு  அச்சுறுத்தல்களாகும்.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்

இந்திய அரசால் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிவிக்கப்பட்ட காப்பகமாகும்.  இந்தியாவில் காணப்படும் 10 உயிர்புவியியல் மண்டலங்களில் 2 மண்டலங்களை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துளளது.  இக்காப்பகத்தில் பலவித சூழலமைப்புகளும் பல்லுயிர் வளமும் நிறைந்து காணப்படுகிறது.  கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் 5520 ச.கிமீ. பரப்பளவில் இது அமைந்துள்ளது.  இக்காப்பகத்திற்குள் முதுமலை மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயங்கள், பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முக்குர்த்தி தேசியப்பூங்காக்கள் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற பாதுகாப்பு பகுதிகள் உள்ளன.

தாவரப்பரவல்

முட்புதர்க்காடு, வறண்ட இலையுதிர்க்காடு, இலையுதிர்க்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகை வனங்கள் இங்கு காணப்படுகின்றன.

தாவரங்கள்

தாவர உயிர்ப்பரவல் மிகுந்து காணப்படுகிறது.  ஏறத்தாழ 3300 பூக்கும் தாவர வகைகள் உள்ளன.  இதில் 132 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தனவாக உள்ளன.  பேயேலெப்சிஸ் என்ற தாவரப்பேரினம் உலகில் இங்கு மட்டும்தான் காணப்படுகிறது.  இங்கு காணப்படும் 125 ஆர்க்கிட் இனங்களில் 8 இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தனவாகும்.  வாண்டா, லிபாரிஸ், பல்போஃபைலம், ஸ்பைராந்தஸ் மற்றும் திரிக்ஸ்பெர்மம் போன்றன இவ்விடத்திற்கே உரித்த மற்றும் அழிந்து வரும் முக்கிய இனங்களாகும்.

பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா, தோதகத்தி, ரோடோடென்ட்ரான் மற்றும் சந்தனம் போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் மரவகைகளாகும்.  நீலகிரி என்ற பெயர் வரக்காரணமான, நீல நிறத்தில் பூப்பூக்கும் குறிஞ்சி என்ற ஒரு சிறந்த தாவர இனம் இங்கு காணப்படுவது இக்காப்பகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.  மேலும் பல மூலிகைகளும் மிளகு போன்ற கொடியினங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

விலங்கினங்களைப் பொறுத்தமட்டில் 100 வகையான பாலூட்டிகள், 150 வகையான பறவைகள், 80 வகையான இரு வாழ்விகள் மற்றும் ஊர்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.  மேற்கு மலைத்தொடர்ச்சிக்கு உரித்தான 60 வகையான ஊர்வன, 31 வகையான இருவாழ்விகள் மற்றும் 39 வகையான மீன் இனங்கள் இக்காப்பகத்தில் உள்ளன.  டேனியோ, ஹிப்செலோபார்பஸ் மற்றும் புந்தியஸ் போன்ற நன்னீர் மீன் இனங்கள் இக்காப்பகத்தில் மட்டுமே காணப்படுகின்றன.  நீலகிரி வரையாடு, நீலகிரிக்குரங்கு, தேவாங்கு, வெளிமான், புலி, காட்டெருமை மற்றும் யானை போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் விலங்கினங்களாகும்.

பழங்குடியினங்கள்

தோடா, கோட்டா, குறும்பா, பனியா, இருளா, ஆதியா, எடநாடன், போன்ற பழங்குடியின மக்களுக்கு இக்காப்பகம் தாயிடமாக விளங்குகிறது.  இவர்கள் பாரம்பரிய வேளாண் முறைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றார்கள்.

அச்சுறுத்தல்

திட்டமிடா சுற்றுலா, காட்டுத்தீ, மேய்ச்சல், ஓரின பயிர்சாகுபடி, தீவிர காடழிப்பு, தோட்டப் பயிர்கள் வேளாண்மை, கட்டுமானப் பணிகள் மற்றும் நீர்மின் சக்தி திட்டங்கள் போன்ற மனிதனின் செயல்பாடுகள் இக்காப்பகத்தின் அச்சுறுத்தல்களாகும்.

நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்

மேகாலயா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் 820 ச.கி.மீட்டரில் இக்காப்பகம் பரவியுள்ளது.  உயிர்க்கோளக் காப்பகமாக 1988ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  மேற்கு கேரோ மலைகள், கிழக்கு கேரோ மலைகள், தெற்கு கேரோ மலைகள் போன்ற மூன்று மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது.  இதன் மைய மண்டலம் 47.48 ச.கி. மீட்டர் பரப்பளவு கொண்டது.  இக்காப்பகம் பல ஜீவநதிகள் மற்றும் ஊற்றுகளின் ஆதாரப்பகுதியாக விளங்குகிறது.  சிம்சங் ஆறு, கெனால் ஆறு, பகி ஆறு, தாரங் ஆறு மற்றும் ரோங்டிக் ஆறு போன்றவை முக்கிய ஆறுகளாகும்.

முக்கிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதியாக திகழ்வதும் எலுமிச்சை இனங்கள் மிகுந்து காணப்படுவதும் இக்காப்பகத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

தாவரங்கள்

உயரத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமண்டலம் மற்றும் பகுதி வெப்பமண்டலம் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.  மேலும் பசுமைமாறாக் காடு, பகுதி பசுமை மாறாக்காடு, மற்றும் மூங்கில் புதர்கள், புல்வெளிகள் மற்றும் ஆற்றோரங்களை உள்ளடக்கிய இலையுதிர் காடுகளில் பல தாவர வகைகள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

பன்றிவால் குரங்கு, இமாலய கருங்கரடி, புலி சிறுத்தை, யானை மற்றும் பறக்கும் அணில் போன்ற விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன.

நிலக்கரி, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்ற தாதுவளம் மிக்க இவ்வுயிர்க்கோளத்தில் சுமார் 40,000 மக்கள்தொகை கொண்ட, 128 கேரோ சமுதாய கிராமங்கள் உள்ளன.  இக்காப்பகத்தில் 16.4 விழுக்காடு பரப்பில் காடழித்து பயிர்செய்வதால் மண்ணரிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்

சுமார் 4926 ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்ட இக்காப்பகம் போரி வன விலங்கு சரணாலயம், பச்மரி வனவிலங்கு சரணலாயம் மற்றும் சாத்புரா தேசியப்பூங்காவையும் 510 கிராமங்களையும் கொண்டுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் உள்ள இக்காப்பகம் 1999ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  இக்காப்பகத்தில் உள்ள பாதல்கோட் என்ற ஆதிவாசி குக்கிராமம் மாந்தரியல் வல்லுனர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

போரி வனப்பகுதியில் 1862ஆம் ஆண்டு அறிவியல் முறைப்படி வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மேற்கொண்டதின் விளைவாக இந்தியாவில் முதன் முதலாக வனத்துறை நிறுவ அடிகோலிடப்பட்டது.

தாவரங்கள்

தேக்கு மற்றும் சால் மரவகைகள் இக்காப்பகத்தில் மிகுந்து காணப்படுகின்றன.  இலையுதிர் மற்றும் பகுதி வெப்ப மண்டலக் காடுகளைக் கொண்ட இவ்வுயிர்க்கோளத்தில் 30 வகையான தாலோபைட்டுகள், 83 வகையான பாசிகள், 21 வகையான விதைகளற்ற தாவரங்கள் மற்றும் 7 வகையான பூவா தாவரங்கள் காணப்படுகின்றன.  இது தாவரவியலாளர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.  விதைகளற்ற 71 தாவர வகைகளில், 48 வகையான பெரணிகள் காணப்படுகின்றன.

விலங்குகள்

இக்காப்பகத்தில் 50 வகையான பாலூட்டிகள், 254 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான ஊர்வன போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.  பாம்புதிண்ணிக் கழுகு, கருங்கழுகு, சிகப்பு காட்டுக்கோழி, மலபார் மலை மொங்கான், பறக்கும் அணில், கடமான், சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.

தொல்லியல் பாரம்பரியம்

இக்காப்பகத்திலுள்ள அனேக குகைகளில் காணப்படும் சுமார் 250 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களிலிருந்து இங்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.  இப்பாறை ஓவியங்கள் தற்போது கேட்பாரற்று அழிந்து வரும் தருவாயில் உள்ளது.  நாகபஞ்சமி மற்றும் மகாசிவராத்திரியின் பொழுது சுமார் 12,000க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் சிவனை தரிசிக்க வருகிறார்கள்.  அத்தகைய புனித சிவதலமாக பச்மரியைச் சுறறியுள்ள மலைகள் விளங்குகின்றன.

அச்சுறுத்தல்கள்

அரிதான மூலிகை செடிகள் அகற்றுதல், உண்ணு போன்ற களைச்செடிகள் அதிகரிப்பு, மண்அரிப்பு, நீர்நிலைகள் தூர்ந்து போதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்

ஒரிஸாவின் வடபுறத்தில் 4374 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 1994ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  கிழக்கு பீடபூமி, சோட்டா நாக்பூர் பீடபூமி, கீழ்கங்கை சமவெளி மற்றும் கடற்கரையோர பகுதிகளைக்கொண்ட இக்காப்பகம் பல ஜீவ நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் மிகப்பெரிய நீர்வடிப் பகுதியாகும்.  வெப்ப மண்டல பகுதி, பசுமைமாறா காடுகள், வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க்காடுகள் மற்றும் சவன்னா பகுதிகள் என பல காடுவகைகளை உள்ளடக்கி, பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது.  இந்தியாவில் காணப்படும் தாவரயினங்களில் பூக்கும் தாவரங்கள் 7%, ஆர்கிட்கள் 8%, ஊர்வன 7%, பறவையினங்கள் 20% மற்றும் பாலூட்டிகள் 11% இங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள்

இக்காப்பகத்தில் 94 வகை ஆர்கிட்கள் (இருவகை இவ்விடத்திற்கே உரித்தானது),  8 வகை அழியூம் தருவாயில் இருப்பவை, 8 வகை அழிந்து கொண்டிருப்பவை, மற்றும் 34 வகை அரியவை என சுமார் 1170 பூக்கும் தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.  நீர் மருது, சிசு, செண்பகம், சால் மற்றும் இலுப்பை போன்ற மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

யானை, புலி, சிறுத்தை, மீன் திண்ணி பூனை, நாற்கொம்பு மறிமான், செந்நிற கீரி, வல்லூறு மற்றும் மீன்திண்ணி கழுகு என 12 வகையான இருவாழ்விகள், 29 வகையான ஊர்வன, 260 வகையான பறவைகள் மற்றும் 42 வகையான பாலூட்டிகள் இங்குள்ளன.

பழங்குடியின மக்கள்

மைய மண்டலத்தில் நான்கு கிராமங்கள், தாங்கல் மண்டலத்தில் 61 கிராமங்கள் மற்றும் நிலைமாறு மண்டலத்தில் 1200 கிராமங்கள் என 1265 கிராமங்களில் வாழும் 4.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இவ்வுயிர்க்கோளத்தில் பெருமபாலும் பூமிஜா, பாதுடி, கோலா, கொண்டா, சந்தல், கடியா மற்றும் மாங்கடியா போன்ற பழங்குடியினர்கள் வாழ்கின்றனர்.

அச்சுறுத்தல்கள்

வேட்டையாடுதல், காடழிப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் மேய்ச்சல் போன்றவை மிக முக்கிய அச்சுறுத்தலாகும்.  அகந்த்ஷிகார் என்ற பழங்குடியினர்களின் வேட்டைத் திருவிழாவும் மிகமுக்கிய அச்சுறுத்தலாகும்.

சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்

உலகளவில் பெரும்பரப்பளவில் காணப்படும் சதுப்புநிலக்காடுகளைக்கொண்ட சுந்தரவனம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  உலக பாரம்பரிய ஒப்பந்தத்தில் பாரம்பரிய பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் பரப்பளவு 9630 ச.கி.மீட்டராகும்.  உலகளவில் புலிகளுக்கு உறைவிடம் தரும் மிகப்பெரிய சதுப்புநிலகாடுகள் இக்காப்பகத்தில் மட்டும் காணப்படுகிறது.

வங்கப்புலி காப்புப்பகுதி, சுந்தரவனம் தேசியப்பூங்கா, சச்னேகாலி, லோத்தியன் தீவு மற்றும் ஹாலிடே தீவு போனற் மூன்று சரணாலயங்களும் இக்£ப்பகத்தினுள் உள்ளன.

தாவரங்கள்

இதுவரை 120 வகையான பாசிகள், 25 வகையான கண்டல் தாவரங்கள் மற்றும 124 வகையான பூக்குந்தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  அக்காந்தஸ், கண்டலா, நைப்பா, சோனரேசியா மற்றும் செரியோப்ஸ் போன்ற அரிய மற்றும் அழியும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் இக்காப்பகத்தினுள் உள்ளன.

விலங்குகள்

விலங்கினங்களைப் பொறுத்தமட்டில் 163 வகைப் பறவைகள், 40 வகை பாலூட்டிகள், 56 வகை ஊர்வன, 165 வகை மீன்கள், 8 வகை இறால்கள், 67 வகை நண்டுகள் மற்றும் 23 வகை மெல்லுடலிகள் கண்டறியப்பட்டுள்ளன.  புலி, முதலை, சிறுத்தை, போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

வனப்பொருட்களைச் சார்ந்த மக்கள் பலர், இக்காப்பகத்தினுள் வாழ்ந்து வருகின்றனர்.  அதிகப்படியான மீன் பிடிப்பு, இறால் பண்ணைகள் மற்றும் காடழிப்பு போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன.

உயிர்க்கோளக் காப்பகங்களை பாதுகாப்போம்

ஒன்பது கோளங்களில் பூமி மட்டுமே உயிர்க்கோளம் என அறியப்படுகிறது.  பூமியில் உள்ள காற்றும் நீருமே உயிரினங்கள் வாழ வழிசெய்கிறது.  சுற்றுச்சூழலை பாதுகாத்தல் ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும்.  பெருகிவரும் உலகின் மக்கள் தொகையால் நீர், நிலம்,   தூயகாற்று மற்றும் உணவு போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை.  எண்ணற்ற மனித தேவைகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, இயற்கை சூழல் அமைப்பு குலைந்து வருகிறது.  எனவே ஒவ்வொருவரும், உயிர்க்கோளத்தைக் காப்பாற்ற முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

 

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

 

 

3.10236220472
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top