பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நீர்நிலைகளும் மாசுபாடு பற்றிய அனைத்துத் தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு வாழ்வியல் நெறி

நாம் எல்லோரும் நல்லவர்களாகவே இவ்வுலகில் பிறக்கின்றோம். வளர்ந்து வருகின்ற நிலையில் நமக்கென கனவுகள், இலட்சியங்கள், ஆசைகள் தோன்றுகின்றன. அவற்றை அடையவே இவ்வுலகை பயன்படுத்தி கொள்கிறோம். வளரும் பொழுதும், வளர்ந்து வாழும்பொழுதும் பெற்றோர்களை பேணிக்காப்பது, பிள்ளைகளை நல்லமுறையில் வளர்ப்பது, எதிர்காலத்திற்கு பொருள் சேர்ப்பது போன்ற கடமைகளை நிறைவேற்ற முற்படுகிறோம். ஆனால் நம்மையும் நம் மூதாதையர்களையும் வளர்த்தெடுத்த இப்பூவுலகிலுள்ள நிலம், நீர், காற்று ஆகிய சுற்றுப்புறசூழலை பாதுகாக்க மறந்து விடுகிறோம். சுற்றுச்சூழல்பாதுகாப்பை நம் வாழ்வின் முதன்மை கடமையாக கருத வேண்டும்.

தொழில்புரட்சி முன்னேறிக் கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்வுலகின் சூழல் அதிவேகமாக மாசுபட தொடங்கியது என்பது நாமறிந்த உண்மை. கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை எளிமையாக்கி அதிக நாள் வாழவைத்தது. மக்கள் பெருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தியது, ஆனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சுற்றுபுறத்தை சூரையாடி கொண்டிருக்கிறது. அதனால் இப்பொழுது நீடித்த வளர்ச்சி என்ற வார்த்தையை வாதமாக எடுத்து கொண்டு அதனை வாழ்வில் கடைபிடிக்க தவறி விடுகிறோம். இதை தனி மனித ஒழுக்கமாக, கடமையாக கருதாத காரணத்தினால் உலகளாவிய சூழல் மாநாடுகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் ஒன்றை ஒன்று குறைக்கூறிக் கொண்டு தங்களது பொறுப்புகளை தட்டி கழிக்கின்றன.

நீர்நிலைகளும் மாசுபாடும்

கண்ணுக்கு புலப்படாத கடவுளை மதிக்கின்ற மாந்தர்கள் மண்ணையும் மழைநீரையும் மதிப்பதில்லை. பெற்றோரை தெய்வமென கருதும் மனிதர்கள் கூட அவர்களுக்கு உணவூட்டிய மண், உயிரூட்டிய மழைநீர், காற்று முதலியவற்றை நன்றி உணர்வோடு நடத்துவதில்லை.

உலகத்தில் நான்கில் மூன்று பங்கு நீராயினும், மனிதர்களுக்கும், உயிர்களுக்கும் கிடைக்கும் நீரின் அளவு குறைவான சதவிகிதமே. நீரானது இயற்கையின் சுழற்சியில் நமக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல நீரின் சுழற்சியை தடைசெய்து அதன் தூய்மையையும் மாசுபடுத்துகிறோம். அதனால் வளர்ந்ததுதான் யமுனா, கங்கா தூய்மை படுத்தும் திட்டம். அதற்கு பல்லாயிரம் கோடி செலவாகக்கூடும். தொழில் புரட்சியாலும், மனித வளர்ச்சியாலும் பணம் சம்பாதித்து மனிதர்கள் மாசுபடுத்திய இயரற்கை வளங்களை தூய்மைபடுத்த செலவிடுவதா? எண்ணி, ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நீரின் சிக்கனமும் நம் மனமாற்றமும்

ஒரு மனிதனின் தேவையாக நாளொன்றுக்கு சுமார் 150 லி தண்னீர் இருக்கும் பட்சத்தில், மிகுதியாக இருப்பினும் அளவிற்கு மீறி பயன்படுத்த மாட்டேன் என்ற கட்டுப்பாட்டை கற்று தர வேண்டும். ஏரி, குளம், குட்டை, நீரூற்று, நீரோடை, ஆறு போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவது மனித பிறவியின் பாவச்செயல் என்று குழந்தைகள் மனதில் பதியும் படி போதனை செய்து சுய ஒழுக்கமாக மாற்ற வேண்டும். நீர் நிலைகளில் செய்கின்ற சடங்குகள், சம்பிரதாயங்களை நீரற்ற நிலங்களில் செய்ய நம் கலாச்சாரங்களை மாற்ற முன் வர வேண்டும். பண்டிகைகள், விழாக்கள், வெற்றி கொண்டாட்டங்கள் போன்றவற்றில் துணிமணிகள், ஆடம்பர பொருட்கள், உணவு பண்டங்களை வழங்குவதை தவிர்த்து மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தும், நீர் நிலைகளை சுத்தபடுத்தியும் கொண்டாடி மகிழும் அளவிற்கு மனம் மாற்றம் சமுதாய அளவில் ஏற்பட வேண்டும்.

பொதுவிடங்களில், விழாக்களில் பாட்டிலில் வைக்கபட்ட நீரில் சிறிதளவு குடித்துவிட்டு மீதியை பாட்டிலோடு தூக்கி எறிகின்றோம். வீட்டின் சுற்றுப்புறம் மற்றும் சிறு சாலைகளில் சிமெண்ட் தரைகளை அமைத்து தண்ணீர் நிலத்தடிக்கு செல்வதை தடுக்கிறோம். பொதுவிடங்களில் திறந்துகிடக்கும் தண்ணீர் குழாய்களை மூடக் கூட மணமில்லாமல் கண் மூடிச் செல்கிறோம். தண்ணணீரும், மின்சாரமும், இலவசமாக கிடைப்பதால் விவசாயிகள் கூட தேவைக்கு அதிகமாக பயிர்களுக்கு நீர் பாசனம் செய்கிறார்கள்.

உணவு தானியங்களை வளர்ப்பதற்கு நிறைய நீர் தேவைபடுதலால் (அரிசி 1 கிலோ-2500 லி), தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை உட்கொள்வதும், தேவையில்லாத பதபடுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பது, தண்ணீர் செலவை மறைமுகமாக மிச்சபடுத்துகிறது. மழைநீரை சேமித்து அன்றாட வீட்டு தேவைக்கு உபயோகிக்கலாம். சமையலறை கழிவுநீரை தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். வாஷிங் மிஷின் கழிவு நீரை கழிவறைக்கு பயன்படுத்தி மறுசுழற்சி செய்வதை ஒவ்வொருவரும் கடமையாகவும், பெருமையாகவும் நினைக்க வேண்டும்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபடுவதற்கு காரணம் இரண்டு, ஒன்று காடுகளை அழிப்பது, மற்றொன்று படிமஎரிபொருளை எரிய விடுவதால் காற்றில் கலக்கும் நச்சு வாயுக்கள். இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 50% மழைக்காடுகள் அழிந்துவிட்டன. மழைக்காடுகளில்தான் உலகின் 70% தாவர மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரெசில், இந்தோனேசியா, போன்ற 10 நாடுகள்தான் 87% காடுகள் அழிவதற்க்கு காரணம். அதில் பிரெசில் மற்றும் இந்தோனேசியா முக்கியமானவை. ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து அளவுள்ள காடுகள் அழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மரத்தின் சராசரி வயது 50 ஆண்டுகள் எனில் அது ஏறக்குறைய 2700கி பிரான வாயுவை உற்பத்தி செய்து நம்மை வாழவைக்கிறது. மேலும், மரங்களிலிருந்து பேப்பர், வீடு, மற்றும் மரச்சாமான்கள், மருந்துகள் போன்ற 5000 எண்ணிக்கையிலான உபபொருட்க்கள் கிடைக்கின்றன. இப்படி வாழ வைக்கும் தெய்வத்தை நாம் வெட்ட தயங்குவதில்லை, ஏன்?

காலம் கடந்து நிற்கின்ற பள்ளிகளில் பெரிய மைதானம் இருக்கும், அதனை சுற்றி மரங்கள் இருக்கும், மரத்திலிருக்கும் இலைகளை கிள்ளினால் கூட தண்டிப்பார்கள் தலைமையாசிரியர்கள். ஆனால் இப்பொழுது? வீடுகளில் மரம் வளர்கும் பழக்கம் குறைந்து வருகிறது. விவசாயிகள் கூட மரங்களின் நிழலால் உற்பத்தி குறையும் என்று வரப்புகளில் மரம் வளர்ப்பதில்லை. சாலை ஓரங்களில் மரங்களை நட்ட அரசாங்கம் இப்பொழுது சாலையை விரிவுபடுத்த மரங்களை வெட்டி கொண்டிருக்கிறது. எனவே வனங்களை பாதுகாப்பதும், மரங்களை வளர்ப்பதும் ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையாக கருத வேண்டும்.

காற்று மாசுபடுவதற்கு மற்றொரு காரணம் படிமஎரிபொருள் அதனால் நச்சு வாயுக்கள் வெளியாகி, புவி வெப்பமாகிறது. காற்று மாசினால் நகரங்களிள் வாழும் மக்களிடையே மரபுவழி குறைபாடுகள் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர். புவி வெப்பமயமாதலால் தாவரங்களிள் உற்பத்தியை பாதித்து  எதிர்காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை சமிக்கைகள் கொடுக்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

அதுமட்டுமின்றி மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் அதிகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தும் என்கிறார்கள். இத்தனையும் நிகழ்ந்த பின்னும் நாம் மாறாமல் இருப்பதன் பயன் என்ன? எரிபொருளை சிக்கனமாக, தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது, காலார நடந்து செல்வது, மிதிவண்டியை பயன்படுத்துவது, மகிழுந்து, வான வேடிக்கைகளை தவிர்ப்பது, குப்பைகள் எரிப்பதை தவிர்பப்து போன்ற செயல்களை மிகுதியாக கையாள வேண்டும்.

மண்ணுக்குள்ளும் உயிருண்டு

உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவு சுமார் 50% மேல் (மொத்த நிலப்பரப்பில்) விவசாயம் செய்யக்கூடிய நிலமாக இருக்கிறது. வேறு எந்த நாட்டிற்கும் இத்தகைய அதிர்ஷ்டம் கிட்டவில்லை. குறைந்த அளவிலான நிலப்பகுதியில் அதிகப்படியான மக்கள் வாழ்ந்து வருகின்றோம்.

உலகில் உள்ள உயிர் பன்முகத்தன்மையில் 70% இருப்பிடமாக இந்தியா உள்ளது. உலகில் உள்ள தாவரங்களுள் 37% இந்தியாவில் மட்டுமே உள்ளது. மேலும் 372 பாலூட்டிகள், 1228 பறவையினங்கள், 446 ஊர்வன இனங்கள், 4 உலக இயற்கையான பாரம்பரிய சின்னம், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மிக பிரமாண்டமான பன்முகத்தன்மை கொண்ட இடமும் உள்ளது.

மண்ணுக்குள் நம் வாழ்வு சங்கமிக்க போகிறது என்பதை மறந்த நாம் உயிருள்ள இந்த இந்திய தேசத்தின் மண்ணின் உயிர் எடுக்க துணிந்து விட்டோம். ஆம் மண்ணில் கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்களும் வாழ்கின்றன என்பதை உற்று நோக்க தவறிவிட்டதால், பூச்சிகொல்லிகளை தெளித்து மண்ணை மலடாக்குகிறோம். பின் உணவு உற்பத்திக்கு உரமிட்டு விவசாயிகளை கடன்காரனாக்கி தூக்கு கயிற்றை பரிசளிக்கிறோம். மண்ணுக்கு உரமிடும் போது நைட்ரஸ் ஆக்சைடு வெளிப்படுவதால், நிலத்தை மட்டுமின்றி காற்றையும் மாசுபடச் செய்கிறது.

ஒரு முறை பள்ளியில் மரம் நடுவதற்கு ஏற்பாடு செய்தோம். குழி எடுக்க தொடங்கினால் கடப்பாரையிலிருந்து கல் சத்தம் கேட்கிறது. குழியை முழுவதுமாக எடுக்க முடியவில்லை, காரணம் அடியிலிருந்தது மண்ணில்லை கான்கிரீட் கழிவுகள். கட்டட கழிவுகளை பொறுப்பற்ற முறையில் ஆங்காங்கே கொட்டி அங்குள்ள மேல்மண்னண உயிரற்றதாய் ஆக்கிவிடுகிறோம்.

அன்றாட கடமைகள்

கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம் அல்லது கட்டிடங்களின் அடிதளத்திற்கு பயன்படுத்தலாம். இது போன்ற மறுசுழற்சி பயன்பாட்டை அவரவர்களே முடிய செய்து பூமியை காக்கலாம். கடைக்கு எடுத்து செல்லும் தூக்கு பைகளை நாகரீகத்தின்  காரணமாய் தூக்கி எறிந்த நாம், இன்று அன்றாடம் மண் மீது நெகிழிப்பைகளை தூக்கி எறிந்து கொண்டிருக்கிறோம். தூக்கி எறியப்பட்ட நெகிழிப்பைகள் மாட்டிற்கும் மற்றும் சில உயிர்களுக்கும் இரையாகிறது, பின் அது உணவு சங்கிலியில் கலந்து தாய்பாலில் குழந்தைக்கு உணவாகிறது.

காய்கறிகள் வாங்க, பழங்கள் வாங்க, உணவு பண்டங்கள் வாங்க, உடைகள் வாங்க இப்படி எதை வாங்கினாலும் அதோடு கேரிபேக் அவற்றிற்கு உடையாக மாறி நம் வீட்டுக்குள் நுழைகிறது. சில சமயங்களில் சுடச்சுட டீ வாங்க கூட பிலாஸ்டிக் பைகள் பயன்படுத்த துணிந்துவிட்டோம். ஒவ்வொரு இந்தியனும் ஒரு வருடதிற்க்கு சுமார் 5 கி பிலாஸ்டிக் பொருட்களை உபயோக படுத்துகின்றோம்.

பெருநகரங்களில் வாழும் படித்து பட்டம் பெற்ற மக்களும் குப்பைகளை மட்க்கும் மற்றும் மட்க்காத குப்பைகளை தரம் பிரிக்க முன் வருவதில்லை. அதனால் மட்க்கும் குப்பை மக்காத பைக்குள் சென்று மண்ணின் மூச்சை அடைத்து மரணமடையச் செய்கிறது.

குப்பைகளை தரம்பிரிப்பது, மட்க்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது அல்லது அதன் தேவைகளை குறைக்க முற்படுவது, மண்ணில் மட்க்காத பொருளை ஒரு நாளும் ஊக்குவிக்காமால் தவிர்ப்பது போன்ற செயல்கனள தனிமனிதனாக அன்றாட வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

மனித கழவுகளை இந்த மண் எப்பொழதும் எற்றுக்கொள்ளும் ஆனால் மனிதன் செயர்க்கையாக தயாரித்து உபயோகித்த கழிவுகனள ஒருகாலும் இந்த மண் எற்றுக்கொள்ளாது.

அடிப்படை கடமைகள் — வாழ்து காட்டுவொம்

ஊடகம் வளர்ந்து இருக்கின்ற இன்றைய காலக்கட்டங்களில் சமுதாய பிரச்சனைகள், நாட்டு நடப்புகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இருப்பினும் சிறு சிறு பொறுப்புகளையும், கடமைகளையும் நடைமுறைப்படுத்தாமால் உதாசீனப்படுத்துகின்றோம். இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனத்தில் எழுதி வைத்த மூத்தோர்கள் நம்மீதுள்ள நம்பிக்கையால் நம் கடமைகளை எழுத மறந்து விட்டனர். அதனால் 1976 ஆம் ஆண்டு 42 வது சட்டதிருத்தத்தின் படி இந்திய குடிமகனுக்கு அடிப்படை கடமைகள் அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட்டது. அந்த 10 முக்கியமான கடமைகளில் ஒன்று, “இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாத்து மேம்படுத்துவதோடு, அவற்றின் மீது இரக்கமுடன் இருக்க வேண்டும்” என்பதாகும்.

”இந்த புண்ணிய பூமி மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் அவர்களின் பேராசைகளை நிவர்த்தி செய்யாது” என்று கூறினார் காந்தி மகான். தேவைக்கு அதிகமாக எடுத்து கொள்ளாமல் இருந்தால் இவ்வுலகத்தில் அத்துனை உயிர்களுக்கும் வாழ இடமும், உணவும் கிடைத்து கொண்டேயிருக்கும்,. ஆதலால் நம் முன்னோர்கள் தேவைக்கு அதிகமான நுகர்வை குறைத்து வாழ்ந்து வந்தார்கள். இன்று இருப்பது போல் அவர்களிடம் அதிகமான உடைகள், ஆபரணங்கள், ஆடம்பரமாக ஒன்றுக்கு மூன்று கார்கள் இல்லை. மகிழுந்துக்கு பதில் கால்நடைகளும், கால்களும் வேலைகளை செய்தன. உடைகளை கிழியும் வரை உடுத்தினார்கள். உணவு பண்டங்களை வீணாக்குவதை பாவம் எனக் கருதினார்கள். Reduce, Reuse, Recycle-மறுசுழற்சி என்றெல்லாம் வார்த்தைகளில் பேசாமல் வாழ்வியலில் நடத்தி காட்டினார்கள். அவர்கள் போல் நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாப்பதை ஒவ்வொருவரும் தன் வாழ்வியல் நெறியாக கருதி வாழ்ந்து காட்டுவோம்.

ஆதாரம்

டாக்டர்.ச.பாக்கியராஜ் உதவிப் பேராசிரியர்

உணவு (ம) பால்வள தொழில்நுட்ப கல்லூரி

சென்னை-52

3.23863636364
மணிகண்டன் Jan 08, 2018 07:21 PM

நன்று

karthiksankar May 23, 2017 04:55 PM

A good effort and wonderful website

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top