பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம் / பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம்

பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

திடீரென கொட்டித்தீர்க்கும் பெருமழை, வெள்ளப் பெருக்கு, புயல், வெப்பக்காற்று, கடல் நீர் மட்ட உயர்வு போன்ற அதி தீவிரமான மாற்றங்கள் உலகத்தின் பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வருகின்றன. 2001 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டுகள் உலகம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்த பத்தாண்டுகளாகும். உலக வானிலை அமைப்பின் 2011ஆம் ஆண்டின் அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. இந்தப் பத்தாண்டுகளில் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து இருந்தது. கோடைக்காலம் நீட்சி கண்டிருந்தது. குளிர்கால வெப்பநிலை வழக்கத்தை விடவும் குறைவாக இருந்தது. குளிர் நாட்களும், பனி நாட்களும் குறைவாக இருந்தன. உலகின் பல பகுதிகளில் பேய் மழை பெய்தது. துருவப் பகுதியிலும், பனி போர்த்திய மலைகளிலும் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஓடின. உலகம் முழுவதும் வெப்பநிலை சராசரியாக 10 சென்டிகிரேட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது.

பூமியின் துருவப் பகுதிகளில் ஏராளமான பனி உறைந்த நிலையில் இருக்கும். இலட்சக் கணக்கான ஆண்டுகளாக உறைபனிப்பரப்பைப் பெற்றி ருக்கும் பூமியின் துருவப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பனி உருகி ஓடிவிட்டது. டிசம்பர் 2001இல் ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் பனிப்படலம் மிகமிகக் குறைவாக இருந்தது. நீண்ட கால சராசரியைக் காட்டிலும் ஆர்க்டிக் பனிப்படலம் 39 விழுக்காடு குறைந்து போய் காணப்படுகிறது.

பூமி சூடேரி வருவதாக முதன்முதலில் தெரிவித்தவர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர். 1988ஆம் ஆண்டு இந்தக் கருத்தை இவர் கூறியபோது பலர் அவரை கேலி செய்தனர். ஆனால், இப்போது பிரேசில், கனடா, சினா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 உலக நாடுகளைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் பூமியின் தட்பவெப்பம் மாற்றம் கண்டுவருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளில் 98 விழுக்காடு பேர் இதனை ஒப்புக்கொள்கின்றனர். பூமியின் வெப்பம் அடுத்த நூற்றாண்டில் பல பாகைகள் (டிகிரி) அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.

துருவப் பகுதிகளை அடுத்து அதிகமான பனிப்படலம் இருப்பது இமயமலையில்தான். இமயமலை 6 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவிக்கிடக்கிறது. ஆசிய கண்டத்தின் பிரம்மாண்டமான 9 நதிகள் இமயத்தில் தான் பிறக்கின்றன. பூமியின் வெப்பநிலை 20 சென்டிகிரேட் அளவுக்கு அதிகரித்தால் உறைபனிக் கடல்களும், பனிமலைகளும் வேகமாக உருகிவிடும். பூமியின் வெப்பம் கூடுவதால் வெப்பக் காற்றலைகள் வீசும். கடல் நீர் மலைகளில் இருந்து நன்னீர் பெருக்கெடுத்து ஆறுகளாக ஒடுவது நின்று போகும். பூமியின் வெப்பம் 4 முதல் 50 சென்டிகிரேட் வரை அதிகரித்தால் மீத்தேன் வாயு உருவாகிப் பரவிவிடும். வெப்பம் 6°C அளவுக்கு கூடி விட்டால் பூமியில் ஒரு உயிரினம்கூட வாழமுடியாது. பூமித் தாய்க்கு காய்ச்சல் வராமல் காப்பாற்றியாக வேண்டும்.

காற்றுக் கூடாரம்

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று நமது பூமியைச் சுற்றிலும் ஒரு மாபெரும் திரையைப் போல சூழ்ந்திருக்கிறது. ஒரு காற்றுக் கடலின் கீழே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்றின் மொத்த எடை 50 கோடி டன். பூமியில் இருக்கும் கடல் நீரின் மொத்த எடையில் இது மூன்றில் ஒரு பங்கு தான். பூமிக்கு மேலே 50 மைல் தூரம் வரையிலும் அடர்த்தியான காற்று மண்டலம் இருந்தபோதிலும், பூமிக்கு மேலே 6 மைல் உயரம் வரை இருக்கும் காற்றுப் பகுதியில் தான் புயல், சூறாவளி, சுழல் காற்று, மேகங்கள், மழை, பனி யாவும் உருவாகின்றன்.

காற்றின் கட்டமைப்பு

காற்றின் 75 விழுக்காடுக்கும் அதிகமாக நைட்ரஜன் என்ற வாயு இருக்கிறது. ஆக்சிஜன் எனப்படும் உயிர்க்காற்று 23 விழுக்காடு உள்ளது. இந்த இரண்டு வாயுக்களுமாக சேர்ந்து 98 விழுக்காடு அளவுக்கு காற்றில் இருக்கின்றன. கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றும், மந்த வாயுக்கள் சிலவும் காற்றில் மிகக் குறைவான அளவில் கலந்திருக்கின்றன. இவை தவிர இன்னும் சில வாயுக்களும், நீராவியும் காற்றில் கலந்திருக்கும்.

காற்றின் கட்டமைப்புகள்

பசுமை இல்ல விளைவு

சூரியனிலிருந்து பூமிக்கு வரக்கூடிய வெப்பத்தில் மூன்றில் ஒரு பகுதியை வளி மண்டலம் பிரதிபலித்து திருப்பி அனுப்பி விடுகிறது. மீதமுள்ள சூரிய வெப்பம் பூமியை வந்தடைகிறது. காற்று மண்டலத்தின் இத்தகைய செயலினால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருந்துவருகிறது. பூமியின் மீது படக்கூடிய வெப்பத்தை பூமி உள்ளிழுத்துக் கொள்கிறது. பிறகு, இந்த வெப்பத்தை அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்களாக வெளியேற்றி குளிர்ச்சி அடைய முயற்சிக்கிறது.

இப்படி பூமி வெளியேற்றும் அகச்சிவப்புக் கதிர்களை பூமியைச்சுற்றி இருக்கும் வாயுக்களான Co, நைட்ரஸ் ஆக்சைடு, மீதேன், ஓசோன், நீராவி போன்றவை உறிஞ்சி வைத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக பூமி திருப்பி அனுப்பும் வெப்பம் தப்பிச் செல்ல இயலாமல் பூமிக்கும் காற்றடுக்கிற்கும் இடையே சிக்கிக் கொள்கிறது. இப்படி சிறைப்படும் வெப்பத்தினால் தான் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. பூமி வெளியேற்றும் வெப்பத்தை காற்று மண்டலத்தில் இருக்கும் கரிக்காற்று, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பிடித்து வைக்காமல் போனால் பூமியின் வெப்பநிலை-18°C அளவுக்கு குறைந்து போகும். இவ்வலவு குளிரில் எந்த உயிரினமும் பிழைத்திருக்க முடியாது. உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த வகையில் பூமியின் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த வாயுக்களை பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கின்றனர். ஆயினும், பூமியை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவக்கூடிய பசுமை இல்லா வாயுக்களான Co2, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் போன்றவை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். காற்று மண்டலத்தில் இவற்றின் அளவு அதிகரிக்கும்போது பூமியில் இருந்து வெளிச் செல்லும் வெப்பம் முழுவதையும் இவை பிடித்து வைத்துக்கொள்ளும். இதனால் பூமியின் சராசரி வெப்ப அளவு அதிகரிக்கும்.

பூமி சூடேறக் காரணங்கள்

பூமி சூடேறுவதற்கு மிக முக்கியமான காரணம் கார்பன் - டை - ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றுதான். கடந்த 30 இலட்சம் வருடங்களில் இல்லாத அளவுக்கு காற்றில் இதன் அளவு 41 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. வெப்பத்தை கிரகித்துப் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மை கரிக்காற்றிற்குத்தான் அதிகம். மேலும் இந்த வாயு நீண்ட காலத்திற்கு அதன் தன்மை மாறாமல் காற்று மண்டலத்தில் நீடித்து இருக்கும் இயல்புடையதும்கூட. 150 முதல் 200 ஆண்டுகளுக்குள் காற்றில் 8 ஆயிரம் மில்லியன் மெட்ரிக் டன் கரிக்காற்று சேந்திருக்கிறது. இதுதவிர மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் - டை - ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன் போன்ற வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் அதிகரித்து வருகிறது. காற்று மண்டலத்தில் மீத்தேனின் அளவு 259 விழுக்காடும், நைட்ரஸ் ஆக்சைடு 120 விழுக்காடும் அதிகரித்து இருக்கிறது. இந்த வாயுக்கள் விரைவில் சிதைவடைந்துவிடும் தன்மை உடையவை.

கரியமிலவாயு வெளியேற்றம்

ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக வளிமண்டலத்தில் கரிக்காற்றின் அளவு 300 ppm என்ற அளவைத் தாண்டாமலேயே இருந்து வந்தது. 1950ஆம் ஆண்டு முதல் இந்த அளவு தொடர்ந்து அதிகரித்து தற்போது 400 ppm ஆக மாறிவிட்டது. வளிமண்டலத்தில் கரிக்காற்று கலந்து வரும் வேகம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தொழிற்சாலைகளும் வாகனங்களும் பெருகி புகையை வெளியேற்றியதே இதற்குக் காரணம். உலகிலேயே அதிகமான அளவுக்கு கரிக்காற்றை வெளியேற்றும் தேசம் சீனா, அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவான மனிதர்கள் வாழும் அமெரிக்கா மற்ற உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து வெளியேற்றும் கரிக்காற்றின் மொத்த அளவில் 18 விழுக்காடு கரிக்காற்றை வெளியேற்றிவருகிறது. உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடு கொண்டிருக்கும் சீனா 23.9 விழுக்காடு கரியமில வாயுவையும், உலக மக்கள் தொகையில் 17 விழுக்காடு மனிதர்களைக் கொண்டிருக்கும் இந்தியா 5 விழுக்காடு கரிக்காற்றையும் வெளியேற்றுகின்றன. 2025ஆம் ஆண்டிற்குள் கரிக்காற்று வெளியேற்றத்தின் அளவை குறைத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்காவும், சீனாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

ஒட்டு மொத்த கரியமிலவாயு வெளியேற்றத்தில் 46 விழுக்காடு நிலக்கரியை எரிப்பதனால் உண்டாகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடுத்த அளவில் கரிக்காற்று வெளியேறுவது வாகனப் போக்குவரத்துகளினால் ஆகும். புகை படிவ எரி பொருள்களான பெட்ரோல், டீசல் போன்றவற்றை எரிப்பதனாலும், சிமெண்ட் ஆலைகள், காடுகள் அழிப்பு ஆகியவற்றினாலும் காற்று மண்டலத்தில் கரிக்காற்றின் அளவு கூடுகிறது.

மீதேன் வாயு வெளியேற்றம்

இயற்கை எரிவாயுவின் முதன்மையான கூட்டுப்பொருள் மீதேன். பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி வழிமுறைகள் மூலம் மீத்தேன் வாயு அதிகமாக வெளியேறுகிறது. கால் நடைகளின் சீரான வழிமுறையிலும் மீதேன் உருவாகிறது. வேளாண் தொழிலிலும் மீதேன் வெளியேறுகிறது. குப்பைகளை குழிகளில் கொட்டி நிரப்புகிறோம். இவை அழுகிச் சிதையும்போது மீதேன் வெளியேறுகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு, வடி நிலங்கள் போன்றவையும் மீதேன் வெளியேறக் காரணங்கள். மீதேன், காற்று மண்டலத்தில் 12 வருட காலம் வரை நீடித்து இருக்ககும்.

நைட்ரஸ் ஆக்சைடு

விவசாய நிலங்களில் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண்ணில் நைட்ரஜன் அதிகமாக சேர்கிறது. நைட்ரஸ் ஆக்சைடு 87.2 விழுக்காடு அளவுக்கு காற்றில் கலப்பதற்கு இரசாயன உரங்களிடுவதே காரணமாகிறது. வாகனப் புகையிலும் இது இருக்கிறது. தொழிற்சாலைகளில் உப பொருளாக நைட்ரிக் அமிலம் உருவாகிறது. மண்ணில் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் போது நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் வெளியேற்றம் தீவிரமடைகிறது. இது 14 ஆண்டுகளுக்கு மேலாக காற்றுமண்டலத்தில் சிதையாமல் இருக்கக் கூடியது. இதற்கு வெப்பத்தை கிரகிக்கும் ஆற்றல் அதிகம்.

ஓசோன்

வாகனப்புகை, ஆகாய விமானம், இரயில் என்ஜின்களில் இயக்கம், கட்டுமானத்தொழில், சிமெண்ட், மின்சாரத் தொழிலகங்கள், எண்ணெய், எரிவாயு பணிகள், காட்டுத்தீ ஆகியவற்றினால் ஓசோன் உருவாகிறது. ஓசோன் வாயு நேரடியாக உருவாகி காற்று மண்டலத்தில் சேர்வதில்லை. விரைந்து ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களுடன் சூரிய ஒளி வினைபுரிவதால் ஓசோன் உருவாகிறது.

தமிழகத்தில் ஆய்வு

சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு இந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 3.4°C அளவுக்கு அதிகரிக்கும். இதன் காரணமாக தண்ணீருக்கும், இயற்கை வளங்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம். கடல்நீர் மட்டம் 50 சென்டிமீட்டர் அளவுக்கு உயரும். கடலோரப் பகுதிகளிலும், காவிரி டெல்டா பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். 2100ஆம் ஆண்டுவாக்கில் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளில் மூன்றில் ஒரு பகுதி கடல் நீரில் மூழ்கிப்போகும். எனவே, இந்தக்காடுகளை இப்போதிருந்தே நிலப்பகுதியில் உள்நோக்கி வளர்ந்து வர வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வேளாண் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. வானிலை ஆராய்ச்சி மையங்களின் 30 வருட ஆராய்ச்சித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பூமி சூடேறுவதை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்: தொழிற்சாலை, வாகனப் புகைகளை வெளியேற்றுவதை குறைத்துக் கொள்வது, இரசாயன உரங்களைக் குறைப்பது, காட்டு தீயைக் கட்டுப்படுத்துவது, காடழிப்புகளைத் தடுப்பது, மரம் வளர்ப்பு, இன்வர்ட்டர் AC கருவியை பயன்படுத்துவது, புதிய வேளாண் முறைகளின் அறிமுகம் என பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள்

 • பருவநிலைக் கூர்உணர்வு கொண்ட தாவர, விலங்கினங்கள் அழியும். அடிக்கடி வெள்ளமும், வறட்சியும் ஏற்பட்டு மக்கள் இடம் பெயர நேரிடும்.
 • வேளாண் தொழிலைக் கைவிட்டு பருவநிலை அகதிகளாக விவசாயிகள் வெளியேற நேரிடும். நீர்நிலைகள் மோசமடையும்.
 • குடிநீர்ப்பஞ்சம்,
 • ஏழ்மை,
 • ஊட்டச் சத்துக்குறைவு,
 • கடல்நீர் மட்ட உயர்வு,
 • கடல் நீர் உட்புகுதல்,
 • வெப்பமண்டலத் தொற்று நோய்களின் பரவல் ஆகியவை ஏற்படும்.

பருவநிலை மாற்றத்தை உள்ளடக்கி இருப்பவை

உணவு, நீர் வாழ்வாதாரப் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை பருவநிலை மாற்றத்தை உள்ளடக்கி இருப்பவையாகும்.

உலகளாவிய நடவடிக்கைகள்

பருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் ஆகியவை பற்றி உணர்ந்துகொண்ட உலகநாடுகள் பலவிதமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. காலந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு;

1988 உலக வானிலை அமைப்பும் (WMO), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும் (UNEP) இணைந்து பருவ நிலைமாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவை அமைத்தன. இதற்கு Intergovernmental Panel on Climate change என்று பெயர். பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய அறிவியல், தொழில்நுட்ப, சமூகப் பொருளாதார காரணங்களை இந்த அமைப்பு சேகரித்து அவற்றை எதிர்கொள்ளும் வழி வகைகளை வகுக்கும்.

1990 பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) முதல் மதிப்பீடு அறிக்கையை அளித்தது.

1992 சுற்றுச்சூழல் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாடு. இதனை புவி மாநாடு (Earth Summit) என்றும் குறிப்பிடுவர்.

1992ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் இந்த மாநாடு நடைபெற்றது.

1994 பருவநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் கொள்கைத்திட்டம்.

1997 கியோட்டோ கூட்டு ஒப்பந்த நடவடிக்கை.

2007 பாலி வழிகாட்டித்திட்டம்.

2009 கோபன்ஹேகன் அறிவிக்கை

2011 செயல்வேக அதிகரிப்புக்கான டர்பன் தளம்.

2012 தோஹா நுழைவாயில்

2008 - 2012 - கியோட்டோ ஒப்பந்தத்தின் முதல் படிநிலை.

2013 வார்சா மாநாடு - போலந்தின் தலைநகர் வார்சாவில் நடைபெற்றது.

2014 தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் நடைபெற்ற மாநாடு

2015 பாரிஸ் மாநாடு.

பருவநிலை மாற்றத்தைத் தவிர்க்க இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள்

அவை.

 • தேசிய சூரிய மின் ஆற்றல் திட்டம்.
 • ஆற்றலை திறம்படக் கையாளுவதற்கான தேசியத்திட்டம்.
 • நீடித்த வாழ்விடங்களுக்கான தேசியத் திட்டம்.
 • தேசிய நீர்த்திட்டம்.
 • இமயமலைச் சூழல் பாதுகாப்பு தேசியத் திட்டம்.
 • பசுமையான இந்தியாவிற்கான தேசியத் திட்டம்.
 • நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம்.
 • பருவநிலை மாற்றம் பற்றிய திறம்சார்ந்த அறிவிற்கான தேசியத்திட்டம்.

பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து இந்தியாவும், உலக நாடுகளும் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர் போராட்டமாகவே இருக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

த. சித்தார்த்தன், நிகழ்ச்சி அமைப்பாளர், அகில இந்திய வானொலி, சென்னை.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top