பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / வானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்

வானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

வானிலை என்பது வெப்பம், மழை, குளிர், காற்று, ஈரப்பதம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது. காலநிலை என்பது குறைந்தபட்சம் 30 ஆண்டுகளில் வானிலை மாற்றத்தின் சராசரியாக கணக்கிடப்படுகிறது. வானிலையானது நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் மற்றும் வருடத்திற்கு வருடம் மாறக்கூடிய ஒன்றாகும்.

சுகாதாரம் நிர்யிணக்கப்படும் முறை

 • வானிலை மற்றும் காலநிலையானது, சுற்றுப்புற சூழல் மற்றும் அதன் சமூக கூறுகளை மாற்றுகின்ற திறன் வாய்ந்தது. இதன் காரணமாக உலகில் உள்ள உயிரினங்களின் சுகாதாரம் பாதிப்படைய வழி வகுக்கிறது.
 • சுகாதாரம் என்பது நோய்யற்ற தன்மை என்பதை தாண்டி, உடல் நலம், மனநலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றையும் சார்ந்ததாகும். பொது சுகாதாரம் என்பது மாசற்ற உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் தூய்மையான தங்குமிடம் மற்றும் நல்ல சமூக உறவுகள் ஆகியவற்றை பொருத்தே அமைகிறது.
 • வானிலை மற்றும் காலநிலைகள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் நமது சுகாதாரத்தை நிர்ணயிக்கிறது.
 • உலக வெப்பமயமாதல் என்பது உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கக்கூடிய விஷயம். காலநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் பாதிப்பால் உலக வெப்பமடைதல் மேலும் அதிகரிக்கிறது.
 • இதன் காரணமாக உலக மக்களிடையே சுகாதாரமின்மையும், இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் மூலம் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

நோய்கள் உருவாகும் விதம்

 • அடிக்கடி நிகழும் கனமழை, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய காலநிலை காரணிகள் உணவு பாதுகாப்பு, ஊட்டசத்து குறைவு, பசி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
 • சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் மற்றும் மழை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, வயிற்றுப்போக்கு, யானைக்கால் நோய் மற்றும் காலரா போன்ற எண்ணற்ற தொற்றுநோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இயற்கை பேரழிவுகள் காரணமாக அசாதாரண காலநிலை உருவாகிறது. இவை மன நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாகின்றது.
 • காலநிலையில் ஏற்படும் விரும்பத்தகாத பொது சுகாதார உள்கட்டமைப்புகளான விளை நிலங்களின் இழப்பு, கடல் மட்டம் உயர்வு, விவசாய உற்பத்தி குறைவு ஆகியவற்றை உண்டு பண்ணுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் வளர்ச்சி அடையாத பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பாக பெண்கள் மேலும் பலவீனமடைய செய்கிறது. எல்-நினோ நிகழ்வுகள் வானிநிலை மாற்றத்தை அதிகப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்கள் பரவுகிறது. காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய சுகாதார குறைபாடுகளில் சில கணிக்கக்கூடிய வகையிலும் சில கணிக்க முடியாத வகையிலும் உயிரிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
 • அதிகபட்ச வெப்பநிலையின் அளவு மேலும் மேலும் அதிகரிக்கின்ற போது அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. மேலும், இந்த உயர்கின்ற வெப்பநிலை காரணமாக காடுகள் தீக்கிரையாவது மட்டுமல்லாமல் வறட்சியை உண்டு செய்கிறது. அதேபோல் அளவுக்கதிகமான கடும் மழை, வெள்ளம் மற்றும் புயல்களின் காரணமாக தொற்று நோய்கள் மிக வேகமாக பரவுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதால் சிலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.  ஆகவே, வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுகாதார கேடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர், காற்று மற்றும் நுண்ணியிரிகளால் பரப்பபடும் நோய்களையும், அந்த நோய்களுக்கான சூழ்நிலைகளையும் அதனால் வருகின்ற சமூக, சுகாதார கேடுகளையும் ஆராய்வதற்கு குழந்தை விஞ்ஞானிகளுக்கு இந்த தலைப்பு ஏற்றதாகும்.
 • இந்தியாவில் காணப்படும் காலநிலை என்பது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாற்று காலங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த பருவ காலங்களுக்கு முன்னும் பின்னும் புயல் மற்றும் சூறாவளிகளை கொண்டுள்ளது. பருவகாலங்களில் பொழிகின்ற, அளவுக்கு அதிகமான கன மழைகளின் காரணமாகவும், புயல் மற்றும் சூறாவளிகளின் காரணமாகவும், கோடை காலத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாகவும் பல கொடிய நோய்கள் நம் நாட்டில் பரவி வருகின்றன. இதன் மூலம் நம் பொது சுகாதார கேடும், அதனால் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளுக்கும், பொருட்சேதமும் தவிர்க்க முடியாதவைகளாக மாறி வருகின்றன.
 • இந்தியாவில் உள்ள 41 மாவட்டங்களில் வெப்பநிலை மே மற்றும் ஜூன் மாதங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அங்கு உடல் வறட்சி, வெப்பத்தினால் ஏற்படும் மயக்கம் மற்றும் இறப்பு ஏற்படுகிறது. குளிர்க்காலத்தில் ஏற்படுகின்ற குளிர் பல மாநிலங்களில் குடல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார கேடுகளை சமாளிப்பது பெரும் சவலாக உள்ளது மற்றும் இந்த சுகாதார கேடுகள், மக்கள் தொகை பெருக்கத்தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் மேலும் அதிகமாகிறது.
 • மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சகத்தின் அறிக்கையின்படி நீரினால் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 40 மில்லியன் மக்கள் பாதிப்படைகிறார்கள். அதிகப்படியான வெப்பத்தினால் கால்நடைகளும், பறவைகளும் மற்றும் அதிகப்படியான வறட்சியால் விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள்.
 • காலநிலை மாற்றம் காரணமாக நீரினால் பரவும் நோய்கள் வேகமாக பரவும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், நோய் பரவுகின்ற காலமும் மற்றும் பாதிக்கப்படும் நிலப்பரப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மலேரியா நோய் அனாபிலிஸ் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இப்போது ஏற்படுகின்ற வானிநிலை மாற்றங்கள் இந்த கொசுக்களின் உற்பத்திக்கு மிகவும் ஏதுவாக உள்ளதால் அந்த நோய் வேகமாக பரவும் நிலை ஏற்படுகிறது. தொடர்மழை காலத்தில் இந்த நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. திங்கரா குழுவின் (2010) அறிக்கைப்படி இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை அக்டோபர் மாதத்தில் உள்ள மழை பொழிவிற்கும், மலேரியாவுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மே மாதத்தில் பெய்கின்ற மழை, மலேரியா நோய்யுடன் எதிர்மறை தொடர்பை ஏற்படுத்துகிறது.  மலேரியா போன்ற நோய்கள் வானிலை காரணிகளான வெப்பநிலை, மழையளவு மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்து வேகமாக பரவக்கூடியவை. இதுபோன்ற நோய்களை தடுப்பதற்கு வானிலை மற்றும் காலநிலை அளவீடுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
 • ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் கொடிய நோயான டெங்கு, உலகில் பல நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி அதிகமான உயர் சேதத்திற்கு காரணமாகிறது. உயர்கின்ற அதிக வெப்பநிலை மற்றும் தண்ணீர் தேக்கம் காரணமாக டெங்கு நோய் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது. அடிக்கடி ஏற்படும் வெள்ள பெருக்காலும் நோய் பரப்பும் உயிரிகளாலும், உயிர் கொல்லி நோய்களான வயிற்றுபோக்கு காலரா போன்றவை வேக பரவும் நிலை உருவாகிறது.
 • இப்போதைய நிலையில், நமக்கு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத்தை ஒருங்கிணைத்து கண்காணிக்கின்ற அமைப்புகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம் பற்றிய தொடர் கணக்கீடுகள் கொண்டு தற்போதய மற்றும் எதிர்கால காலநிலை மாற்றத்தையும், சுகாதாரத்தின் நிலையையும் மதிப்பிட முடியும். குறிப்பாக தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம், கொடிய நோய்களான காலரா, மலேரியா, டெங்கு, காசநோய், டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றையும் அவை பரவும் வேகம், திசை அவற்றின் சாதகமான சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்வதற்கும் காலநிலை மாற்றத்தின் காரணிகள் பேருதவியாக இருக்கின்றன.
 • சிறிய தீவுகள், வளரும் காடுகள், மாநகரங்கள், கடற்கரை சார்ந்த பகுதிகள், மலை பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக அளவில் காலநிலை மாற்றத்தால்  பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.  மேலும் மக்கள் தொகை பெருக்கம், மக்களின் பொருளாதாரம், உணவு மற்றும் சுற்றுபுற சூழ்நிலை ஆகியவை காலநிலை மாற்றத்தால் அதிக அளவில் மாற்றம் ஏற்பட வழி செய்கிறது. அது மட்டும் அல்லாமல், ஊனமுற்றோர், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார பின்விளைவுகளுக்கு உள்ளாகிறார்கள்.
 • தீவிரமான கனமழை மற்றும் குளிர் காலங்களில் உணவு மற்றும் நீரினால் பரவும் தொற்று நோய்கள் அதிகமாகின்றன. இந்த நோய்களை பரப்பும் உயிரிகளின் எண்ணிக்கை இந்த காலங்களில் அதிகமாகின்றன. இயற்கை பேரழிவுகளாலும்  சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்களுக்கு காரணமாகிறது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வயிற்று போக்கு மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர்.  மேலும் இயற்கை பேரழிவால் இடம் பெயர்ந்த மக்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
 • காலநிலை மாற்றம், சுகாதார, சமூக மற்றும் சுற்றுசூழல் கூறுகளை பாதிப்பதற்கான சுழ்நிலை உருவாகாமல் தடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

 • நோய் தொற்று ஏற்படுத்தகூடிய கிருமிகள் பெருகுவதற்கான இடங்களை குறைப்பது.
 • நோய் கிருமிகளுக்கும், மனிதருக்கும் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துவது.
 • காலநிலை மாற்றத்திற்கேற்ப சுகாதாரமான வாழ்க்கை முறையை மேற்க்கொள்வது.
 • பொது சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் பேணிக்காப்பது.
 • இது தொடர்பான ஆராய்ச்சி பணிகளை தீவரப்படுத்தி காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளின் முழு அறிவியல் பின்புலம் மற்றும் அதன் விளைவுகளை தடுத்து நிறுத்துவது அல்லது குறைக்க வேண்டிய வழிமுறைகளை கண்டறிவது மிகவும் அவசியமாகிறது.

ஆதாரம் : முனைவர் கதிர்வேலு சம்பந்தன் , தாவரவியல் துறை,  அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி , காரைக்கால் - 609 602

3.03125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top