பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாழையின் பயன்கள்

வாழையடி வாழையாய் தொடரும் வாழையின் பயன்கள் பற்றிய குறிப்புகள்

வாழை

வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடந்துக்கொண்டே இருக்கிறது. இலை, தண்டு, பூ, காய்,  பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. இவை  ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும்.

வாழைப்பூ

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைக்காய்

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

வாழைத்தண்டு

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும். வாழைத்தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழை இலை

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது.

கேள்வி பதில்கள்

1. வாழையிலுள்ள மருத்துவ குணங்கள் என்ன?

வாழை கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம் தேவையான வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது தேவைப்படுகிறது.

2. வாழைப் பழத்திலிருந்து உணவாக என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம்?

வாழைப்பழம் வாழைப்பழ தோசை, வாழைப்பழ உருண்டை, பேன் கேக், சேமியா, குழந்தை உணவுகள், பிஸ்கட், பீர், அப்பளம், தானியக் கலவை, ரொட்டி, பிரட் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பழத்திலிருந்து நொதிக்கவைத்த பானங்களான பீர் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் திருவிழா சமயங்களில் நறுமண பானம் செய்யப்படுகின்றது. இதன் கழிவுகள் கறவை மற்றும் பிற கால்நடைகளுக்கும் தீவனமாக உபயோகிக்கப் படுகின்றது.

3. கோதுமை உமி போல் வாழைப்பழ உமியிலும் ஏதேனும் சத்துக்கள் நிறைந்துள்ளனவா?

வாழைப்பழ எடையில் 5.6% அதன் உமியாகும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு போன்றவை நிறைந்துள்ளன. கால்சியச் சத்து தானியங்கள் மற்றும் சிறுதானியங்களில் இருப்பதைவிட இதில் அதிகளவு உள்ளது. இதில் உள்ள புரதங்களான புரோலமின்ஸ் மற்றும் குளுட்டெனில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. முளைகட்டப்பட்ட சிறுதானியப்பயிரிலிருந்து குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கலாம்.

4. வாழைப்பழம் அரிசியை விட ஏழைகளுக்குச் சிறந்த உணவா?

வாழைப்பழத்தில் அரிசி மற்றும் பிற தானியங்களில் அடங்கியுள்ளதை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குச்சிக்கிழங்கு, பாலிஸ் செய்யப்பட்ட அரிசி, மக்காச் சோளம் போன்ற பல கோடி ஏழைகளின் உணவுகளில் இல்லாத அமினோ அமிலமான மெத்தியோனைன் வாழையில் அடங்கியுள்ளது.

ஆதாரம் : தினகரன் ஆரோக்கிய வாழ்வு

3.28767123288
puvintar Aug 17, 2019 09:54 AM

இது என்னுடைய பாடத்திற்கு உதவியது.

கயல்விழி May 21, 2019 12:42 PM

நல்ல பயன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top