பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / குமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)

குமரப்பருவத்தினருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை) குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குமரப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும் பெரியவர்களுக்கும் (adult) இடைப்பட்ட பருவ நிலையாகும். எல்லா நிலைகளையும் விட குறிப்பிடத்தக்க துரித வளர்ச்சி இப்பருவத்தில் (13 முதல் 18 வயது வரை நடைபெறுகிறது. இப்பருவத்தில் ஏற்படும் உடல் சார்ந்த, உடலியல் செயல்பாடு சார்ந்த உளவியல் மற்றும் சமூக நிலைகளில் ஏற்படும் வளர்ச்சி ஆகியவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குமரப்பருவ காலத்தில் ஏற்படும் துரித வளர்ச்சி

இரண்டாவது இறுதிப் பருவ துரித வளர்ச்சி இப்பருவத்தில் ஏற்படுகிறது. உடலியல் வளர்ச்சியினால் குழந்தைப் பருவத்தைக் கடந்து, பெரியவரான நிலையில் முதன்மை இனபெருக்க உறுப்புகள் செயல்பட துவங்குதலுக்கு பால் முதிர்ச்சியடைதல் (puberty) என்று பெயர். ஏறத்தாழ 11 வயது முதல் 14 வயதுடைய பெண்களுக்கும் 13 வயது முதல் 16 வயதுடைய ஆண்களுக்கும் இத்துரித பருவ வளர்ச்சி ஏற்படுகிறது. பெண்கள் பருவமடையும் முன்பாக (menarche) தங்களுடைய அதிகபட்ச உயரத்தையும் எடையையும் அடைகின்றனர். பருவமடைந்த பின் பெண்களின் உயரத்தில் வளர்ச்சி காணப்படுவது குறைவாகத்தான் இருக்கும். அதாவது அரிதாக 2 முதல் 3 செ.மீ உயர வளர்ச்சி இருக்கும். ஆண்கள் தொடர்ந்து 19 வயது வரை வளருவர். 18 முதல் 20வயதுள்ள ஆண்களுக்கு, துரிதமாக எடையில் அதிகரிப்பு காணப்படும். மேலும் தங்களின் உயரத்தின் முழு வளர்ச்சியையும் அடைவர்.

உடல், உடல் சார்ந்த மற்றும் உளவியல் மாற்றங்கள், உடலமைப்பு

பருவம் எய்தும் (maturation) கால கட்டத்தில் உடலமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. ஹார்மோன்கள் (hormone) உடலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பாலியல் பண்புகளின் (Sexual characteristics) வளர்ச்சியைச் சீரமைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

எலும்புகளின் வளர்ச்சி பெண்களை விட ஆண்களுக்கு நீண்ட காலங்களுக்கு நீடிக்கின்றது. பொதுவாக பெண்கள் 17 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும், தங்கள் எலும்பு வளர்ச்சியின் முழுமையை (maturity) அடைகிறார்கள். தாது உப்புக்கள் படிதல் (mineralization) அதிகரிக்கும் போது உடலில் நீரின் அளவு குறைகிறது.

இப்பருவத்தில் பெண்களின் உடலில் அதிக கொழுப்பும், ஆண்களின் உடலில் தசை திரட்சியும் (Muscle mass) ஏற்படுகிறது. மொத்த உடலின் எடையுடன் கணக்கிடும் பொழுது ஆண்களின் பாலின முதிர்ச்சி மாற்றங்களால் (pubertal) எலும்புகளுடன் கூடிய தசைகளின் திரட்சி (lean bodymass), குறைந்த எலும்பு எடை மற்றும் குறைந்த அடிபோஸ் திசுக்களின் விகிதத்தை கொண்டிருப்பர். ஆண்கள் மற்றும் பெண்களின் உடலமைப்பு வேறுபாடுகள் அவர்களுடைய ஊட்டச்சத்து தேவைகளிலும் பிரதிபலிக்கின்றன.

பால் துணைப் பண்புகளின் முதிர்ச்சி

இப்பருவத்தில் பருவ வளர்ச்சியும், பால் துணைபண்பு முதிர்ச்சியும் ஒருங்கிணைந்து நடைபெறுகிறது. முதல் தீட்டு சுற்று (menarche) ஏற்படும் போது மார்பகங்கள் வளர்ச்சியுற்று இனபெருக்க உறுப்புகளிலும் பிற இடங்களிலும் உரோம வளர்ச்சி ஏற்படுகிறது. ஆண்கள் பால் முதிர்ச்சியடையும் போது குரலில் அழுத்தம் (deepening of voice), தோள்பட்டை விரிவடைதல், இனபெருக்க உறுப்புகளிலும் பிற இடங்களிலும் உரோம வளர்ச்சி போன்றவைக் காணப்படும். ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடையும்.

உளவியல் சார்ந்த சமூக மாற்றங்கள்

இப்பருவம் பெரியவராகும் நிலைக்கு மாற்றமடையும் காலமாக இருப்பதால், இளையோர் தங்களுக்கெனத் தனித்துவத்தை (self identity) உருவாக்கிக் கொள்ள முற்படுவர். தங்கள் ஒத்த வயதினரால் (peer group) ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவல், உணவு உண்ணும் பழக்கங்கள், ஆடை அணிதல் மற்றும் குழு நடத்தை (group conduct) போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைகள்

சக்தி

வளர்சிதை மாற்ற வளர்ச்சி தேவை (metabolic demands of growth) மற்றும் சக்தியை செலவிடுதல் போன்றவைக் கலோரிகளின் தேவையை அதிகரிக்கின்றது. ICMR பரிந்துரைக் குழு, சக்தியின் தேவைகள் அந்தந்த வயதினரின் குறிப்பிட்ட எடைக்கேற்றபடி (ideal body Weight) அளிக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கிறது. பெண்களின் சக்தி தேவையை விட ஆண்களின் சக்தி தேவை அதிகம். அதாவது 13 வயது முதல் 15 வயது வரையுள்ள ஆண்களுக்கு 2450 கி.கலோரிகளும், 16 வயது முதல் 18 வயது வரையுள்ள ஆண்களுக்கு 2640 கி.கலோரிகளும் தேவைப்படுகிறது. ஆனால் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள பெண்களுக்கு 2060 கி.கலோரிகளே தேவைப்படுகிறது. ஆண்களுக்கு தேவைப்படும் அதிக சக்தி, அவர்களின் துரித எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது.

புரதம்

பெரியவரின் தேவைகளைப் போலவே, குமரப் பருவத்தினரின் புரதத் தேவை கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த சக்தியின் தேவையில், புரதத்தின் தேவை 12 முதல் 14 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்புரதம் வளர்ச்சிக்காகவும், இரு பாலாரிடம் ஏற்படும் பால் முதிர்ச்சி பருவ மாற்றங்களுக்காகவும் எலும்புகளுடன் கூடிய தசைகளின் திரட்சிக்கும் உதவுகிறது.

கால்சியம்

கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. இப்பருவத்தில் ஏற்படும் கால்சியத்தின் அடர்வளர்ச்சியை 108 (accretion) அடிப்படையாகக் கொண்டு கால்சியத்தின் தேவைகள் கணக்கிடப்பட்டுள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்காக 150 மி.கி கால்சியம் தேக்கி வைக்கப்படுகிறது (retain). எனவே பெண்களை விட, ஆண்களின் எலும்பு வளர்ச்சிக்கென்று அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இரும்புச்சத்து

குமரப்பருவத்து பெண்கள் வருடத்திற்கு 4 கி.கிராமும், குமரப் பருவத்து ஆண்கள் வருடத்திற்கு 43 கி.கி எடை அதிகரிக்கின்றனர். (haemoglobin concentration) பெண்களிடம் 1கி/d என்ற அளவிலும், ஆண்களிடம் 2கி/d என்ற அளவிலும் அதிகரிக்கின்றது. எனவே வளர்ச்சிக்காக மட்டும், ஆண்களுக்கு 0.7 மி.கி/நாள் என்ற அளவிலும் பெண்களுக்கு 0.45 மி.கி/நாள் என்ற அளவிலும் தேவைப்படுகிறது. மேலும் 13 வயது முதல் பெண்களுக்கு மாதவிடாயின் (menstruation) மூலம் 0.45 முதல் 0.5 மி.கி/நாள் என்ற அளவில் இரும்புசத்து இழப்பு நேரிடுகிறது. எனவே கீழ்காணும் காரணங்களுக்காக இரும்புச்சத்து கூடுதலாகத் தேவைப்படுகிறது.

  • பருவ முதிர்ச்சி
  • இரத்தத்தின் கன அளவு அதிகரித்தல்.
  • ஹீமோகுளோபின் அடர்வு அதிகரித்தல்.
  • பெண்களின் மாதவிடாய் இழப்பை ஈடு செய்யும் கூடுதல் இரும்புச்சத்து தேவை மற்றும்
  • அடிப்படை இரும்புச்சத்து இழப்பை சரிசெய்தல்.

இரும்புச்சத்தின் தேவைகள் 13 முதல் 15 வயது வரையுள்ள ஆண்களுக்கு 41 மி.கி/நாள் என்ற அளவிலும் பெண்களுக்கு 28 மி.கி/நாள் என்ற அளவிலும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனைப் போலவே 15 முதல் 16 வயது வரையுள்ள ஆண்களுக்கு 50 மி.கி/ நாள் என்ற அளவிலும் பெண்களுக்கு 30 மி.கி/நாள் என்ற அளவிலும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்களின் இரும்புச்சத்து தேவைகள் பெண்களை விட கூடுதலாக இருப்பதற்கு காரணம், குமரப்பருவ ஆண்களின் இரும்புச்சத்து உறிஞ்சும் சதவீதம் குறைந்து காணப்படுகிறது. ஏனெனில் குமரப்பருவப் பெண்களின் இரும்புச்சத்து உறிஞ்சும் சதவீதம் 5 ஆகவும், ஆண்களுக்கு 3 சதவீதமாகவும் காணப்படுகிறது.

உயிர்ச்சத்துக்கள்

B வகை உயிர்ச்சத்துகளான தையாமின், ரைபோபிளேவின் மற்றும் நயாசினின் தேவைகள் உட்கொள்ளும் கலோரிகளின் அதிகரிப்பைப் பொருத்து நேர் வீதத்தில் (direct proportion) அதிகரிக்கின்றன. DNA மற்றும் RNA உற்பத்தியில் பங்கேற்கும் திசுக்கள் வேகமாக உருவாக்கப்படுவதால் போலிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து B, ஆகியவற்றின் தேவைகள் அதிகரிக்கிறது.

உணவு உண்ணும் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்

குமரப்பருவத்தினரின் மன அழுத்தங்கள் (psychological pressure), அவர்களுடைய உணவு பழக்கங்களைப் பாதிக்கின்றன. குமரப்பருவத்து ஆண்களின் பசியுணர்வு, பெண்களை விட அதிகமாக இருப்பதால், தங்கள் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். குமரப்பருவத்து பெண்கள் கீழ்கண்ட காரணங்களால் உணவின் நிறைவான நன்மைகளை பெற முடிவதில்லை.

  1. ஆண்களை விட பெண்களுக்கு உடலியக்க செயல்பாடுகள் (Physical activity) குறைவாகவும், ஓரளவிற்கு கொழுப்பு சேமிக்கப்படுவதாலும் பெண்களின் எடை அதிகரிக்கலாம்.
  2. சமூக அழுத்தங்கள் சில வேளைகளில், பெண்களை உடலமைப்பு பற்றி தன்னுணர்வு (self consciousness) மாற்றி விடுகிறது. இதனால் அவர்கள் உணவினை கட்டுப் படுத்தி எடையினை குறைத்தும், தன்னுடலை பட்டினி போட்டும் ‘புலிமியா’ (bulimia) மற்றும் ‘அனரக்சியா நர்வோசா (anorexianervosa) போன்ற உண்ணும் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

குமர பருவத்தினர், ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில்லாத, செறிவுற்ற கொழுப்புகள் அதிகமுள்ள துரித உணவு வகைகளை (fast foods) உட்கொள்ளும் ஆவலை உருவாக்கிக் கொள்வதால், சில வேளைகளில் உணவு உண்ணுதலைத் (skip meals) தவிர்க்கின்றனர்.

எனவே குமரப் பருவத்தினர் ஊட்டச்சத்து நிறைந்த சீருணவுகளை உண்ணும்படி கற்பிக்கப்பட வேண்டும். மேலும் இரும்புச்சத்து மிகுந்த, கால்சியம் மற்றும் புரதம் செறிந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளவும், ஊட்டச்சத்துக்களை அளிக்காத, கலோரிகளை மட்டுமே தருகின்ற உணவுகளைத் (Junk f00ds) தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும்.

குமரப் பருவத்தினர், உணவு உண்ணும் நேரங்களில் உணர்ச்சி வசபடக்கூடாது. அவர்கள் தங்களுடைய உணவு வேளைகளைத் தவிர்த்து, உண்ணாமலிருக்க கூடாது என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

உண்ணும் கோளாறுகள்

பரக்க பரக்க உண்ணுதல்

பரக்க பரக்க உண்ணும் தவறான பழக்கம் என்பது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதலாகும். குழந்தைப் பருவம் முதல் இப்பழக்கம் ஏற்பட்டாலும் பெரியவராகும் வரை உணரப்படுவதில்லை. இதனால் எடை அதிகரித்தல் அல்லது உடல் பருமனாதல் போன்றவை ஏற்பட்டு, அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், ஹைப்பர் கொலஸ்டீரோலிமியா (hypercholesterolemia) மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (type Il diabetes) போன்றவை ஏற்பட ஏதுவாகிறது.

  • அடிக்கடி உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பதால் சீரற்ற முறையில் எடை அதிகரித்தல் அல்லது எடை குறைதல்.
  • பசியாக இருக்கும்போது மட்டுமே உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் அல்லது அதிக அளவு உணவை உண்டு அவதிப்படுதல் அல்லது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதல்.
  • விழாக்கள் மற்றும் விருந்து போன்ற சமயங்களில் உண்ணாமலிருத்தல் அல்லது மற்றவர்களின் முன்பு குறைவாக உண்ணுதல்.
  • உடல் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுதல் அல்லது தன் உடலமைப்பு சார்ந்த மன உணர்வுகளை அதிகமாக கொண்டிருத்தல் அல்லது அவ்வுணர்வுகளால் அதிகமாக பாதிக்கப்படுதல் போன்ற உணவுப் பழக்கங்கள் இவர்களுக்கு ஏற்படும்.

இப்பழக்கத்தினால் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள்.

  1. மனசோர்வு (depression), தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு, குற்ற உணர்வு, அவமானமடைதல்.
  2. உண்ணும் போது தன்னை கட்டுப்படுத்தி கொள்ள இயலாத நிலை மற்றும் பரக்க பரக்க உண்ணுதலைத் தவிர்க்க இயலாத நிலை.
  3. தன் உணவு, உடல், உடல் எடை பற்றி ஏற்கனவே தீர்மானித்துள்ள மனநிலை.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனை கூற வேண்டியது மிக அத்தியாவசியமானது.

அனரக்சியா நர்வோசா

இவ்வுணவு உண்ணும் கோளாறில், உணவு உண்ண மறுத்தலும், எடை குறைதலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. குமரப் பருவத்து பெண்கள் சமூக அழுத்தத்தாலும், தன்னுடலமைப்பு பற்றிய உள்ளுணர்வுகளை அதிகமாக கொண்டிருப்பதாலும் உணவு உண்ணுதலைத் தவிர்க்கின்றனர்.

தசைகளின் இழப்பால் (emaciated) எடை குறைந்து, மிக மெலிந்த தோற்றமுள்ளவராக காணப்படுவர். அது மட்டுமின்றி, குமட்டுதல், வாந்தி அல்லது உணவு உண்ட பின் உடல் ஊதுதல் (bloating) போன்ற உபாதைகளினால் அவதிப்படுவர். பெண்கள் மாதவிடாய் ஏற்படாமல் அல்லல்படுவர்.

இத்தகைய சீர் குலைவில் அவதிப்படுபவர்கள். உண்ணாமல் இருத்தல், பசியுணர்வை மழுங்கடித்தல் அல்லது மிக குறைந்த உணவை உண்ணுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவர். இறைச்சி, பால் போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைத் திட்டவட்டமாக (rigidly) தவிர்த்துவிடுவர்.

மேலும் கடின உடற்பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். உணவு உண்ணும் போது வித்தியாசமான நடத்தையைக் கொண்டிருப்பர். அதாவது உண்பதற்குச் சில குறிப்பிட்ட வகை பாத்திரங்களையோ, (Special utensils) உணவினை மிக துல்லியமாக வெட்டியோ அல்லது மிக சிறிய கரண்டிகளையோ பயன்படுத்துவர்.

புலிமியா நர்வோசா

இவ்வுணவுக் கோளாறு ‘அனரக்சியா நர்வோசாக்கு முற்றிலும் எதிர்மாறானது. இதில் பரக்க பரக்க உண்ணுதலும், உடனே வாந்தி எடுத்துவிடுதலும் (purging), உணவினைப் பற்றிய இயற்கைக்கு மாறான எண்ணங்களை கொண்டவர்களாகவும் இருப்பர்.

குமரப்பருவத்தினர், இச்சீர்குலைவினால் பாதிக்கப்பட்டு அதிக அளவு உணவை, பரக்க பரக்க உண்ணுவதால் ஏற்படும் விளைவுகளாவன,

  • பற்களின் மேல் பூச்சான இனாமல் அரிக்கப்படுதல் .
  • பற்குழிகள்.
  • உப்பிய கன்னங்கள்.
  • கைகளின் பின்புறம் காய்ப்பு காய்த்தல் (Callus).
  • சோர்வுறுதல் மற்றும் ஊட்டச்சத்து குறைவினால் வலுவுற்றிருத்தல்.
  • ஒழுங்கற்ற மாதவிடாய்.

உணவூட்டம் தொடர்பான பிரச்சனைகள்

இரத்த சோகை

தற்கால போக்கு (trend), சமூகத்தின் செல்வமிக்க, உயர் மட்ட குமரப்பருவத்தினர் மற்றும் கிராமப்புறத்திலுள்ள குமரபருவத்தினருக்கு இளம் வயதிலேயே முதல் தீட்டுசுற்று (menarche) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இச்சமுதாயத்தில் எல்லா பிரிவினரையும் சார்ந்த சுமார் 20 முதல் 25 சதவீத குமரப்பருவப் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறப் பெண்களுக்கு ஆராக்கியமான உணவுகள் கிடைக்காமையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவினைப் பற்றிய விருப்பு, வெறுப்புகள் மற்றும் உணவு உண்ணும் சீர்குலைவுகள் இரத்த சோகைக்கு வழி வகுக்கின்றன.

உடல் பருமனாதல்

மொத்த குமரப்பருவத்தினரின் எண்ணிக்கையில் 10 முதல் 20 சதவீதத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை விட உடற்பயிற்சியின்மையே இதற்கு காரணமாக அமைகிறது. தங்கள் தோற்றத்தைப் பற்றிய அக்கறையினால் குமரப்பருவத்தினர் விளையாட்டு மற்றும் பந்தயங்களில் பங்கேற்பதில்லை. ஹார்மோன்களின் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் குடும்ப பழக்கங்களும் உடல் பருமனாதலுக்கு காரணிகளாக அமைகிறது.

முகப்பருக்கள் தோன்றுதல்

பொதுவாக எல்லா குமர பருவத்தினருக்கும் முகப்பருக்கள் தோன்றுகின்றன. 13 வயது முதல் 19 வயதுடைய குமர பருவத்தினரில் 80 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். முகப்பருக்களுக்கும், உணவுக்காரணிகளுக்கும் உறுதியான தொடர்பு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. ஆனால் குமரப்பருவத்தினர் கலோரிகளை மட்டுமே தரவல்ல உணவுகளான கொட்டைகள், சாக்லேட்டுகள், பிசா (pizzas), சிப்ஸ் (Chips), மிட்டாய்கள் போன்றவற்றைத் தவிர்த்து திட்டமிட்ட சீருணவை உண்ணும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். முகப்பருக்கள் தோன்ற முக்கிய காரணி, தோலிலுள்ள செபேசியஸ் சுரப்பி (sebaceous எண்ணெய் சுரப்பி) அதிகமாக செயல்படுவதேயாகும். இச்சுரப்பியில் அடைப்பு ஏற்படுமானால் நோய் தொற்றாக மாறி, குறிப்பிட்ட இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் புண்ணாக (leision) மாறுகிறது.

13 வயது முதல் 19 வயதுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைகள்

தாயின் மரணவிகிதமும் (morbidity rate) சிசு மரண விகிதமும் (infant mortality rate) அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மேற்குறிப்பிட்ட வயதில் கர்ப்பம் தரிப்பவர்கள் அதிக ஆபத்து நிலையில் (high risk) உள்ளவராக கருதப்படுகிறார்கள். உடலியல் ரீதியாக முதிர்ச்சி அடையாததால், இந்த வயதில் கர்ப்பம் தரித்தல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைவு ஏற்படும் போது இளம் கர்ப்பிணியின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் குழவியின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கர்ப்பம் பாதிக்கப்பட்டு சரியாக பாலூட்டாததினால் இளம் குழவியும் பாதிக்கப்பட்டு சிசு மரண விகிதமும் அதிகரிக்கிறது.

குமரப் பருவத்தினர் நல்ல உணவூட்டமும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டால், பெரியவராகும்போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுப்பர்.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top