பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / உணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கான திட்டஉணவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கான திட்டஉணவு

உணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கான திட்டஉணவு முறை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உணவுக்குழாய் பாதையின் வேலைகள்

உணவுக்குழாய் மண்டலத்தில் உணவுக்குழாய் பாதையும், (வாய், தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல்) சுரப்பிகளும் (உமிழ்நீர் சுரப்பிகள், கல்லீரல், பித்தப்பை, கணையம்) அடங்கும். சுரப்பிகள் உணவுக்குழாய் பாதையில் இல்லையெனினும், இவை சுரக்கும் சுரப்பு நீர்கள், நாளங்களின் மூலமாக உணவுக்குழாய் பாதையை அடைகிறது. உணவுக்குழாய் மண்டலத்தின் ஒட்டுமொத்த வேலை என்பது, உட்கொண்ட உணவினை சிறு துகள்களாக்கி, இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்து, செல்களுக்கு அனுப்புவது ஆகும்.

உண்ணும் உணவை விழுங்கும்போது, உணவுக்குழாய் ஒரே உறுப்பாக செயல்படுகிறது. உணவானது, வாயிலிருந்து தொண்டையை அடையும்போது, மேற்புற குடல்வாய் சுருக்கி (Upper Sphincter) விரிவடைகிறது. எனவே உணவு தொண்டையிலிருந்து, உணவுக்குழாயை அடைகிறது. இங்கு ஏற்படும் பல்வேறு விதமான குடலசைவுகளின் மூலம் (Peristaltic Movement), உணவு இரைப்பையை அடைகிறது.

உணவுக்குழாய் பாதை உடலுக்குத் தேவையான நீர், அயனி மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தங்குதடையின்றி வழங்குகிறது. இதை வழங்குவதற்கு கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

 1. உண்ட உணவு, உணவுக்குழாய் பாதையில் நகர வேண்டும்.
 2. சீரண நீர்கள் சுரக்கப்பட்டு, உண்ட உணவு சீரணமாக வேண்டும்.
 3. சீரணித்த உணவுகளிலுள்ள சத்துக்கள், நீர் மற்றும் அயனி திரவங்கள் உறிஞ்சப்பட வேண்டும்.
 4. உணவுக்குழாய் மண்டலத்திலுள்ள உறுப்புகளில் இரத்த சுற்றோட்டம் நடைபெற வேண்டும். ஏனெனில், இந்த இரத்த சுற்றோட்டத்தின் மூலம் தான் உறிஞ்சப்பட்ட சத்துக்கள் தேவைப்படும் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
 5. மேற்கூறப்பட்ட அனைத்து வேலைகளும், நரம்பு மற்றும் நாளமில்லா சுரப்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உறுப்புகள் சீரணித்தல், உறிஞ்சுதல் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற செயல்களைச் செய்கின்றன. சீரணித்தல், வாய் மற்றும் இரைப்பையில் ஆரம்பிக்கிறது. பின்னர் முன்சிறுகுடல் (Duodenum) கல்லீரல், கணையம் மற்றும் சிறுகுடலில் சுரக்கும் சுரப்பு நீர்களால் சீரணித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. உறிஞ்சுதல் முதலில் சுருள்குடலில் (Jejunum) தொடங்குகிறது. ஆனால் சிறுகுடலின் பிற்பகுதியில் தான் கொழுப்பு, பித்த உப்புகள் (Bile Salts) மற்றும் வைட்டமின் B, உறிஞ்சப்படுகிறது.

பெருங்குடல் மற்றும் பெருங்குடல் குடா (Colon) பகுதிகள் நீரை உறிஞ்சிய பின், மலத்தினை வெளியேற்றுகிறது.

வயிற்றுப்போக்கிற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் உணவியல் திட்டத்தில் மாற்றங்கள்

அடிக்கடி மலம் திரவ நிலையில் வெளியேறுதலுடன், திரவ இழப்பு, மற்றும் அயனி திரவ இழப்பு (சோடியம் மற்றும் பொட்டாசியம் ) ஏற்படுவதையே வயிற்றுப்போக்கு என்கிறோம்.

தன்மை மற்றும் கால அளவினைப் பொறுத்து வயிற்றுப்போக்கு இரண்டு வகைப்படும். (1) குறுகியகால வயிற்றுப்போக்கு, (2) நீண்டகால வயிற்றுப்போக்கு.

குறுகியகால வயிற்றுப்போக்கு என்பது, திடீரென, அடிக்கடி திரவ நிலையில் மலம் வெளியேறுவதைக் குறிக்கும். இதனுடன் வயிற்று வலி, தசை சுருங்கி இழுத்தல், பலவீனம், சில சமயங்களில் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும். 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருக்கும். ஊட்டச்சத்துக்கள் இழப்பு அதிகமாக ஏற்படாது. வயிற்றுப்போக்கு 2 வாரம் அல்லது அதற்கு மேலும் இருக்கும் போது, அதற்கு நீண்டகால வயிற்றுப்போக்கு எனப்படும். இந்நிலையில் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்பட வேண்டிய கால அளவு வரை குடலில் தங்காமல் வெளியேற்றப்படுவதால், ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

காரணங்கள்

சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள மியூக்கஸ் (Mucosa) சவ்வில் ஏற்படும் மாற்றங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவையாவன :

வைரஸ் தொட்டு (Viral Infection)

(உம்.) குடல் காய்ச்சல் (Intestinal Flu) என்பது குடல் பகுதியில் இன்புளுயன்சா வைரஸ் மற்றும் ரோட்டா வைரஸினால் ஏற்படும் தொற்றுக்கானப் பொதுப் பெயராகும்.

பாக்டீரியா தொற்று (Bacterial Infection)

50 சதவிகித பாதிப்பு, குடல் பகுதியில் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பாக்டீரியாவினால் தொற்று ஏற்படும்போது, குடல் பகுதியில் நஞ்சினை உற்பத்தி செய்கிறது. (உம்.) விப்ரியோ காலரே (Vibrio Cholerae).

உணவு நஞ்சாதல் (Food Poisoning)

உணவைத் தயாரிக்கும் போது கை கழுவாமல் இருத்தல், உணவைச் சரியாகக் கையாளாமை, உணவில் கொசுக்கள், ஈ கரப்பான்கள் விழுதல் மற்றும் அறையின் வெப்ப நிலையிலேயே நீண்ட நேரம் உணவை வைத்திருத்தல் போன்ற காரணங்களினால் உணவு நஞ்சாகிறது.

ஒவ்வாமை (Allergy)

சில உணவு வகைகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதிருத்தல் மற்றும் சில மருந்து வகைகளினால் ஏற்படும் ஒவ்வாமை.

அறிகுறிகள்

வயிற்றுப்போக்கு என்பது இளகியமலம் மற்றும் நீர்கலந்த மலம் ஒரு நாளைக்கு பல முறை வெளியேறுவது ஆகும்.

வயிற்றுப்போக்கு குடல் பகுதியில் தொற்று ஏற்படுவதைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும். குடல் பகுதியில் ஏற்படும் தொற்றால், உணவானது மிக விரைவில் குடல் பகுதியை விட்டு நகர்த்தப் படுகிறது. இதனால் நீர் மீண்டும் உடலால் உறிஞ்சப்படுவதற்கான நேரம் குறைகிறது.

வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வயிற்றுப்போக்குடன் தோன்றும்போது, உடல் உபாதையைத் தருகிறது. வயிற்றுப்போக்கினால், உடலில் நீர்வற்றுகீறது (Dehydration).

நீர்வற்றுதலை கண்காணித்தல்

வயிற்றுப்போக்கினால் ஏற்படும் உடலில் நீர்வற்றிப்போதல் அல்லது அதிக அளவு திரவம் உடலில் இருந்து வெளியேறுதல் ஆபத்தினை உண்டாக்கும். வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் நீர்வற்றிப்போதலை அதிகமாக்கும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீர்வற்றிப்போதலினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்களது உடலில், திரவத்தின் அளவு குறைவாக இருக்கும். ஆனால் குழந்தைகளும், பெரியவர்களும் நீரினை தாராளமாக குடிப்பதால் எந்தவித ஆபத்தும் வயிற்றுப்போக்கின் போது ஏற்படாது.

நீர்வற்றிப்போதலின் அறிகுறிகள்

 • மீட்சி திறனற்ற தோல்கள்.
 • உலர்ந்த உதடுகள் மற்றும் வாய்.
 • நாக்கு உலர்தல். (Sunken Fontanelle).

கிள்ளு சோதனை (Pinch Test)

வயிற்றுப் பகுதி அல்லது கைப் பகுதியில் ஏதாவது ஒரு பாகத்தை கிள்ள வேண்டும். இயல்பான தோல் உடனே பழைய நிலையை அடைந்துவிடும். ஆனால், மீட்சி திறனற்ற தோல் மெதுவாகத்தான் தனது பழைய நிலையை அடையும்.

திட்ட உணவு மாற்றங்கள் (Dietary Modifications)

வயிற்றுப்போக்கு என்பது நோயின் அறிகுறியாகும். எனவே, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் குணப்படுத்துவதே மருத்துவ பராமரிப்பின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதனை அடுத்து திரவ மற்றும் அயனி நிலையை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. கடைசியாக ஊட்டச்சத்து நிலை நிறைவுசெய்ய வேண்டும்.

திரவ உணவு (Fluids)

உடலில் ஏற்படும் திரவ இழப்பால், நீர் வற்றிப்போதல் நிலையை உடல் அடையாமல் இருக்க, தாராளமாக திரவ உணவை உட்கொள்ள வேண்டும். நீர், பழச்சாறு, காய்கறி சூப்புகள், உப்பு சேர்த்த அரிசி கஞ்சி, சர்க்கரை அல்லது தேன் கலந்த எலுமிச்சைச் சாறு போன்றவை கொடுக்கலாம்.

அயனித் திரவங்கள் (Electrolytes)

சோடியம், பொட்டாசியம் மற்றும் பல அயனிகள் இழப்பால், உடல் பலவீனமடைகிறது. உணவுக்குழாய் பாதையிலுள்ள தசைகள் உறுதியாக இருக்க பொட்டாசியம் தேவைப்படுகிறது. அயனிகள் இழப்பினைச் சரி செய்யாவிட்டால் பசியின்மை, வாந்தி மற்றும் பலவீனம் போன்றவை ஏற்படும்.

உயிர்ச்சத்துக்கள் குறைவாக உட்கொள்வதால் உயிர்ச்சத்துக்களான போலிக் அமிலம் நயாசின் ஆகியவற்றின் ஊட்டக் குறைவு ஏற்படலாம். மலத்தில் இரும்பு சத்து வெளியேறுவதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

கலோரிகள்

குறுகிய கால வயிற்றுப்போக்கிற்கு 1500 கிலோ கலோரிகளும், நீண்டகால வயிற்றுப்போக்கிற்கு 2500 கிலோ கலோரிகளும் கொடுக்கப்பட வேண்டும்.

புரதம்

எளிதில் உறிஞ்சப்படக் கூடிய புரதம் நிறைந்த உணவினை கொடுக்க வேண்டும்.

கொழுப்பு

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தரக்கூடாது. ஏனெனில், வயிற்றுப்போக்கின் போது, கொழுப்பு உணவு உறிஞ்சப் படுவதில்லை. மேலும், வயிற்றுப்போக்கினை அதிகமாக்குகிறது.

நார்ச்சத்து (Fibre)

நார்ச்சத்து குறைந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது. உணவுப் பாதையில் எரிச்சலைத் தூண்டாத, சூப்பு வகைகள், பிஸ்கட்டுகள், அரிசி, சவ்வரிசி, ஆரரூட், உருளைக்கிழங்கு, கொழுப்பு நீக்கிய பால் போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேக வைத்த ஆப்பிளில் உள்ள பெக்டின் வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள கீரைகள் கொடுக்கப்படலாகாது. வயிற்றுப்போக்கு குறையத் தொடங்கும் போது, நார்ச்சத்துள்ள உணவை, சிறிது சிறிதாக கொடுக்கத் துவங்க வேண்டும். இதனால் மலம் வெளியேறுதல் எளிதாக நடைபெறும்.

தவிர்க்கப்பட வேண்டியவை

மசாலா பொருட்கள், முழுபயறு, பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள். குறைந்த அளவு பால், பால் மற்றும் ஸ்டார்ச் அற்ற உணவுகள்,

தாய்ப்பால் நிறுத்தப்படும்போது ஏற்படும் வயிற்றுப்போக்கு (Weanling Diarrhoea)

குறுகியகால வயிற்றுப்போக்கு இணை உணவு சீரணிக்காததால் ஏற்படுகிறது. இது இணை உணவு மிகச் சீக்கிரமாக குழந்தைகளுக்கு ஆரம்பிப்பதால் ஏற்படுகிறது. ஏனெனில், குழந்தைகளின் சீரண உறுப்புகள், சீரணத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்திச் செய்ய தயாராக இருக்காது. எனவே, உணவு சீரணிக்கப்படாமல், வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் நிறுத்த வயிற்றுபோக்கு உண்டாவதை குறைப்பதற்கான குறிப்புகள்

 • தாய்ப்பால் அளிப்பதை ஊக்கப்படுத்துதல்.
 • சிறந்த சுகாதாரமான உணவு (food hygiene)
 • குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
 • சுற்றுப்புற சுகாதாரம்.

மேற்கூறிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தாய்ப்பால் நிறுத்த வயிற்றுப்போக்கு உண்டாவதைக் குறைக்கலாம்.

வயிற்றுப்போக்கு உள்ள போதும், குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தல் வேண்டும். ஏனெனில், தாய்ப்பாலில் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பை அளிக்கக்கூடிய நோய் தடுக்கும் நிண நீரணு (Phagocytes) மற்றும் மற்ற உடல் பாதுகாப்பிற்கு உகந்த பொருள்களும் நிறைந்துள்ளது.

வாய்வழி நீர் ஈடு செய்யும் திரவத்துடன் (Oral Rehydration Solution - ORS) சம அளவு கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்த பாலை, வயிற்றுப்போக்கு நிற்கும்வரை அளிக்க வேண்டும். இது, அடிக்கடி மலம் கழித்தலை அதிகப்படுத்தினாலும், சீக்கிரத்தில் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்திவிடும். மோர், வயிற்றுப்போக்கு உண்டாகும் நுண்ணுயிரியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால், மோரையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பெரிய (Older) குழந்தைகளுக்கு, அரிசி சாதமும், பருப்பு வகைகளும் (Lentil) ஒத்துக்கொள்ளும். ஏற்கனவே சமைக்கப்பட்டு (Precooked) எளிதில் தயாரிக்கக்கூடிய தானிய பருப்பு கலவை அளிக்கலாம். வறுத்து அரைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உளுத்தம்பருப்பு மற்றும் பொடித்த சர்க்கரை இவற்றை 1:11:2 என்ற சதவிகிதத்தில் தானிய பருப்பு கலவையை கலந்து தயார் செய்து கொடுக்கலாம்.

பெரியவர்களுக்கான ஊட்டச்சத்து கவனிப்பில் முக்கிய இடம் வகிப்பது, திரவ மற்றும் அயனி திரவப்பொருள்களின் இழப்பை சரி செய்வது ஆகும். திரவ மற்றும் அயனித் திரவப்பொருள்களின் இழப்பினை சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த திரவ உணவினை வாய் வழியே உட்கொள்ளுதலை அதிகரித்தலின் மூலம் சரி செய்யலாம். வேக வைத்த ஆப்பிளில் உள்ள பெக்டின் வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு நின்றவுடன், ஸ்டார்ச் நிறைந்த உணவுகளான அரிசி, உருளைக் கிழங்கினையும், இதனைத் தொடர்ந்து புரதம் நிறைந்த உணவுகளையும் கொடுத்தல் வேண்டும். ஆரோக்கியமானவர்களுக்கு, கொழுப்புச்சத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும். நீண்டகால வயிற்றுப்போக்கின் போது, ஊட்டச்சத்துக்களின் தேவை வாய்வழியாக குழாய் செலுத்தியும், ஊசி வழியாகவும் பூர்த்தி செய்யப்படவேண்டும். வயிற்றுப்போக்கு குறையத் தொடங்கும் போது, நார்ச்சத்தினை உணவில் சேர்த்துக் கொடுப்பதன் மூலம், மலம் எளிதில் வெளியேறும்.

நோய் தடுக்கும் முறைகள்

 1. ஈ மொய்த்த மற்றும் மாசுபடிந்த உணவை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
 2. வெளியிடத்தில் உண்ணச் செல்லும்போது, சமைக்காத மற்றும் கைப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது.
 3. சமைத்து, சூடாக பரிமாறப்படும் அல்லது உடனே தயாரித்து பரிமாறப்படும் உணவுகளான சப்பாத்தி, டோஸ்ட்டட் ரொட்டி, இட்லி மற்றும் சமைத்த காய்கறிகள் போன்றவைகளை உண்பது பாதுகாப்பானது.
 4. குளிரூட்டப்பட்டு பின் பரிமாறப்படும் இறைச்சி, தயிர் மற்றும் மோர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 5. புத்தம்புது பழங்களின் தோல், உண்பவராலேயே உரிக்கப்பட வேண்டும்.
 6. சூடான தேநீர் மற்றும் கொதிக்க வைத்த நீரையே உட்கொள்ள வேண்டும்.
 7. பாதுகாப்பான குடிக்கக்கூடிய பானமான இளநீரை சுத்தமான ஸ்ட்ராவில் (straw) பருகவேண்டும்.

வாய் வழி நீர் ஈடுகட்டும் சிகிச்சை (Oral Rehydration Therapy):

அ) வீட்டில் தயாரிக்கப்படும் திரவம் (Home made Solution)

கொதிக்க வைத்து ஆறவைத்த ஒரு குவளைத் (tumbler) தண்ணீரில் ஒரு சிட்டிகை (Pinch) உப்பும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்க வேண்டும்.

ஆ) வாய் வழி நீரை ஈடுகட்டும் உப்பு கரைசல் (Oral Rehydration Salt Solution)

வயிற்றுப்போக்கு அதிக நாட்கள் காணப்படும்போது, உடலில் நீர் வற்றிப்போகிறது என்று அறிந்தால், அதனை உடனே சரி செய்ய வேண்டும். வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தால் ஆமோதிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட கரைசலை வாய் வழியே தருதல் விரும்பத்தக்கது குளுக்கோஸ் 20 கிராம், சோடியம் குளோரைடு 3.5 கிராம், ட்ரைசோடியம் சிட்ரேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு 29 கிராம் அல்லது சோடியம்பைகார்பனேட் 2.5 கிராம் மற்றும் பொட்டாசியம் குளோரைடு 15 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் கரைக்க வேண்டும்).

இந்த கரைசலின் மூலம் 90mEq சோடியமும், 20mEq பொட்டாசியமும், 80mEq குளோரைடும், 30mEq பைகார்பனேட்டும் கிடைக்கிறது. இக்கரைசல் சிறுகச்சிறுக, ஒரு தேக்கரண்டியின் மூலம் தரப்பட வேண்டும். இக்கரைசலானது அருந்தப்படும்போது, வேகமாக மலம் வெளியேறுவதைத் தடுக்கிறது.

மலச்சிக்கல் (Constipation)

ஒழுங்கற்ற, முழுவதும் வெளியேற்றப்படாத, கடினமான உலர்ந்த மலமே மலச்சிக்கல் எனப்படும்.

வகைகள்

மலச்சிக்கலில் மூன்று வகைகள் உள்ளன.

 1. மிதமான மலச்சிக்கல் (Atonic).
 2. தசை இறுக்க மலச்சிக்கல் (Spastic).
 3. அடைப்பு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் (Obstructive).

மிதமான (Atomic) மலச்சிக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் உண்டாகிறது

அ. திரவக் குறைவு நிலை

வியர்வை அதிகமாக சுரக்கும் காலங்களில், தேவையான அளவு தண்ணீர் குடிக்காதபோது இந்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பெருங்குடல் குடா (Colon)விலிருந்து தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் மலம் கடினமான, உலர்ந்த நிலையை அடைகிறது. எனவே மலம் கீழிறங்காமல் தங்கிவிடுவதால், மலம் வெளியேற தேவைப்படும் தன்னிச்சை செயல் தூண்டப் படுவதில்லை.

நார்ச்சத்து இல்லாமை

குறிப்பிட்ட உணவு வேளையில் உணவருந்தாமல் இருத்தல், உணவு உண்ணாமை (Fasting) அல்லது உணவைத் தவிர்த்தல் போன்ற தவறான உணவு பழக்கங்கள், குறைந்த அளவு சக்கையினை (Residue) உண்டாக்குகிறது. இதனால் மலம் வெளியேறுவதில்லை.

B- தொகுதி வைட்டமின்களின் குறைவு நிலை

தேவைக்கு குறைந்த அளவு B-தொகுதி வைட்டமின்கள் அடங்கிய உணவை உண்ணும்போது, மலம் வெளியேற்றும் தசைகளின் உறுதித்தன்மை (Tone) குறைகிறது. தேவைக்கு குறைவான அளவு பொட்டாசியம் சத்து நம் உணவிலிருந்து கிடைக்கும்போதும் அல்லது அதிக வீரிய மிகுந்த மலமிளக்கிகளை (Purgatives) உட்கொள்ளுவதனாலும் அதிகமாக பொட்டாசிய இழப்பு ஏற்படும்போதும், மலம் வெளியேற்றும் தசைகளின் உறுதித்தன்மை குறைகிறது.

ஓழுங்கற்ற பழக்கங்கள்

 • தாமதமாக எழுந்துகொள்ளுதல், ஒரே சீரான நேரத்தில் மலம் கழித்தலின்மை, சுகாதாரமற்ற கழிவறைகளில் மலம் கழிக்கச் செல்ல விருப்பமின்மை போன்ற காரணங்கள்.
 • தசை இறுக்க மலச்சிக்கல்- பெருங்குடல் குடாவின் தசைகள் அதிகமாக இறுகுவதால் ஏற்படுகிறது.
 • அடைப்பின் காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் - பெருங்குடல்குடாவில் கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது.

காரணங்கள்

தற்காலிக அல்லது நிரந்தர மலச்சிக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகிறது.

 1. சாப்பிடுதல், ஒய்வெடுத்தல் மற்றும் மலம் வெளியேற்றுதல் செயல்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்காதிருத்தல்.
 2. நீண்டகாலமாக மலமிளக்கிகளை உபயோகித்தல்.
 3. மூலத்தினால் மலம் கழிக்கும் போது வலி (Hemorrhoids) ஏற்படுதல்.
 4. போதிய அளவு உடற்பயிற்சி இல்லாமையால், குடல் பகுதி தசைகள் பலமில்லாதிருத்தல்.
 5. போதை மற்றும் தூக்க மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்.

அறிகுறிகள்

சீரற்ற முறையில் குறைந்த அளவு மலம் வெளியேறுவதால் தலைவலி, நாக்கில் வெண்மை படிந்து காணப்படுதல், மூச்சு விடுதலில் துர்நாற்றம் மற்றும் பசியின்மை ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள், மலம் முழுவதுமாக வெளியேறியவுடன் சரியாகிவிடும்.

திட்டஉணவு மாற்றங்கள் - அதிக நார்ச்சத்து திட்டஉணவு

சக்தி

சரியான அளவு சக்தி வயது, பாலினம் மற்றும் செய்யும் வேலைக்கேற்ப உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. புரதம் சுமார் 60-80 கிராம் புரதம் பரிந்துரைக்கப்படுகிறது.

கொழுப்புச் சத்து

கொழுப்புச் சத்து, பித்தநீர் சுரப்பதைத் தூண்டிவிட்டு, மலம் வெளியேற்றுவதை இலகுவாக்குகிறது. எனினும், எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

கார்போஹைட்ரேட்டுகள்

கார்போஹைட்ரேட்டுகள் செறிந்த காய்கறிகளையும், முழுப் பழங்களையும் தேவையான அளவு உட்கொள்ள வேண்டும்.

இவ்வகை உணவுகள் உறிஞ்சப்படாத நார்ப்பொருள்கள் செறிந்ததாக உள்ளது.

வைட்டமின்கள்

சீரான முறையில் மலம் கழித்தல் வேலையைச் செய்ய B-தொகுதி வைட்டமின்கள் உதவுகிறது.

தாதுஉப்புகள்

உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையிலேயே உள்ள நோயாளிகளுக்கு, மலம் எளிதாக வெளியேறுவதற்கு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளான காய்கறி சூப்புகள், பழச்சாறுகள் கொடுத்தல் வேண்டும். திரவ உணவுகள் : திரவ உணவுகள் தாராளமாக உட்கொள்ளலாம். சுமார் 10 குவளைகள் உட்கொள்ளலாம்.

அதிகாலை வேளையில் வெறும் வயிற்றில் இளம் சுடுநீர் பருகுதல் மலம் வெளியேறுதலுக்கு உதவுகிறது. நார்ச்சத்து முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் நார்ப்பொருள் நீரை கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை

தவிர்க்க வேண்டிய

உணவு

 

நார்ப்பொருள் செறிந்த உணவுகளான தோல்நீக்கப்பட்ட தானியங்கள்

தவிடு

காய்கறிகள்

பழங்கள்

முழுதானிய ரொட்டி

நார்ச்சத்து குறைவான உணவு


தவிட்டுடன் கூடிய தானியங்களை முதல் வாரத்தில் உட்கொள்ள வேண்டும். இதனை உண்பதற்கேற்றவாறு மாற்ற, இதனுடன் வேக வைத்த பழங்கள், காய்கறிகள், ஆரஞ்சு, கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்க்கலாம். இதிலுள்ள நார்ப்பொருள் நீரை அதனுள் தக்க வைத்துக்கொள்கிறது. முழு தானியத்தில் செய்த ரொட்டிகள் உபயோகிக்கப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தானியத்திலிருந்து தயாரித்த ரொட்டிகளைத் தவிர்த்திட வேண்டும். (உம்.) மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்துதல்.

இரைப்பை புண், உணவுப் பாதை புண் மற்றும் முன் சிறுகுடல் புண் - இவற்றிற்கான பெயர் விளக்கம்

உணவுப் பாதையில் இரைப்பை உள்ளது. இரைப்பையில், சீரணித்தலுக்காக, இரைப்பை நீர் (Gastric Juice) சுரக்கப்படுகிறது. இரைப்பை மியூக்கஸ் சவ்வில் இந்த நீர் வெறும் வயிற்றில் இருக்கும்போது அதிக நேரம் தங்கினால் ஏற்படும் புண்ணிற்கு இரைப்பை புண் என்று பெயர்.

இதனால் திசுக்கள் பாதிக்கப்பட்டு (Disintegration) அழிந்துவிடுகிறது. இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் புண்கள் காணப்பட்டாலும், அதிக அளவில் முன் சிறுகுடல் (Duodenum) பகுதியில் காணப்படுகிறது. வேறு இடங்களில் இந்த வகை புண்கள் ஏற்பட்டாலும், இதே அறிகுறிகள் காணப்படுகின்றன. ஒரே வகைச் சிகிச்சை முறையில் இப்புண்கள் குணமாகிறது.

முன் சிறுகுடல் புண்கள் (Duodenal ulcer)

திசுக்கள் சரியான நிலையில் இருந்தாலும், அதிக அளவு அமில சுரப்பால், இந்நிலை ஏற்படுகிறது. அதிக அளவு அமிலம் சுரத்தல், புறத்தோலின் உட்பக்கஞ்சார்ந்த (Parietal Cells) திசுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதாலும், இரைப்பையிலிருந்து வேகமாக வெளியேறுவதாலும் ஏற்படுகிறது. இரைப்பையிலிருந்து வேகமாக வெளியேறுவதால் கார-அமில நடுநிலையாக்கல் தன்மை குறைந்துவிடுகிறது.

இரைப்பை புண்கள்

ஊட்டம் குறைவதன் மூலம் மியூக்கஸ் சவ்வின் எதிர்ப்புத் தன்மை குறையும் போதும், மியூக்கஸ் சவ்வில் இரத்த ஓட்டம் குறையும் போதும், இரைப்பை சுரப்புகள், பெப்சின் சுரப்புகள் குறையும் போதும் இரைப்பை புண்கள் தோன்றுகின்றன.

இரைப்பைப் புண்கள் உருவாகுவதில் அமிலம் முக்கியமானதாக இருந்தாலும், திசுக்களின் பாதிக்கப்படும் (Sensitivity) தன்மையும் முக்கியமாகும். முன் சிறுகுடலில் ஏற்படும் புண்ணுக்கு, (Duodenal Ulcer) அதிக அளவு அமிலம் மற்றும் பெப்ஸின் சுரப்பது மட்டுமே முதன்மைக் காரணமாகும்.

இரைப்பை, முன்சிறுகுடல் சவ்வின் புண்களை அதிகப்படுத்தும் காரணிகள்

அ. பாக்டீரியா தொற்று

இரைப்பை புண்களுக்கு, இரைப்பை சவ்வில் ஏற்படும் தொற்றே காரணமாகும். இத்தொற்று ஹெலிக்கோபேக்டர் பைலோரி (Helicobacterpyroli) பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இவை எதிர் நுண்ணுயிரி அளிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஆ. மரபியல் காரணங்கள் (Genetic factors)

‘o’ வகை இரத்தம் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நோயாளியின் முதல் சொந்தத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு முன்சிறுகுடல் குடல்புண் காணப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

இ. பாலினம்

பெண்களை விட ஆண்கள் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஈ. வயது

20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இந்த வயதுகளில் தான், வேலை தேடுதலும், சொந்த பிரச்சனைகளும் அதிகமாக இருக்கும்.

உ. மன அழுத்தம் (stress)

அதிக படபடப்பு (nervous) மற்றும் மனஉளைச்சலால் பாதிக்கப்படுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. மன அழுத்தத்தின் வெளிப்பாடான கவலை, கோபம், பரபரப்பு போன்றவைகளால், இரைப்பையில் அமில சுரப்பு அதிகமாதலும், உடனே வேகமாக வெளியேறுதலும் நடைபெறுகிறது.

ஊ. வீரியம் மிகுந்த எரிச்சலூட்டும் காரணிகள்

கஃபைன், ஆஸ்பிரின் மற்றும் நிக்கோட்டின் போன்றவைகள் குடல் புண்கள் குணமாவதைத் தாமதப்படுத்துகிறது. மிளகாய், மிளகு, திடமான காபி மற்றும் தேநீர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதை அதிகரித்து, குடல்புண்ணை அதிகமாக்குகிறது.

எ. ஹைட்ரோகுளோரிக் அமிலம்

ஏ. பெப்ஸின்

ஐ. இரைப்பையிலிருந்து வேகமாக வெளியேறுதல்

ஒ. புகைப்பிடித்தல்

ஒ. மதுபானம்

இரைப்பை, முன்சிறுகுடல் சவ்வின் புண்களை பாதுகாக்கும் காரணிகள்

அ. புரோஸ்டாக்ளாண்டின்

ஆ இரைப்பையில் சுரக்கப்படும் பைகார்பனேட்

இ. மியூக்கஸிலுள்ள இரத்த ஓட்டம்.

அறிகுறிகள்

 • இரைப்பையின் மேற்புறத்தில் வலி ஏற்படுதல். உணவு உண்ட ஒரு மணி முதல் 3 மணிக்குப் பின்னர் நெஞ்சு எரிச்சலால், பசியெடுத்தல் போல் வயிறு இழுத்துப் பிடித்தல். இது ஒரு முக்கியமான அறிகுறியாகும்.
 • மந்தமான, குத்துதல் போன்ற, எரிச்சலூட்டுகின்ற வலி ஏற்படுதல். இவ்வலி, உணவு உட்கொண்டவுடன் மறைந்துவிடும்.
 • உடல்நலக்குறைவு (Discomfort) மற்றும் வயிற்றுப் பொருமல் வயிற்றின் மேல் பகுதியில் காணப்படும்.
 • குறைந்த அளவு புரதம் பிளாஸ்மாவில் இருக்கும்போது, துரித மற்றும் முழுமையாக புண்கள் குணமடைவது தாமதமாகிறது.
 • எடை குறைதல் மற்றும் இரும்புச்சத்து குறை இரத்தசோகையும் பொதுவாக காணப்படும்.

சிகிச்சையின் முக்கிய நோக்கங்கள்

 • அறிகுறிகளிலிருந்து விடுபட வைப்பது.
 • புண்களை குணமாக்குதல்
 • அறுவை சிகிச்சை போன்ற சிக்கலிலிருந்து பாதுகாத்தல்.

திட்ட உணவு மாற்றங்கள்

காரம், வாசனை, மசாலா (Bland) குறைந்த உணவு அளிக்கப்பட வேண்டும். காரம், வாசனை, மசாலா குறைந்த உணவு என்பது உள்ளுறுப்புகளை இயக்காத, வேதிவினைகளைத் தூண்டாத, வெப்பஞ்சார்ந்த எரிச்சலை ஏற்படுத்தாத உணவு என்று கூறலாம். எரிச்சலூட்டும் உணவுகள் என்பது சீரணிக்கப்படாத கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகும். (உம்.) முழு தானியங்கள், பழங்கள், பச்சைக் காய்கறிகள். இரைப்பை சுரப்புகளைத் தூண்டக்கூடிய உணவுகளுக்கு வேதிவினை எரிச்சலூட்டும் உணவுகள் என்று பெயர். (உம்.) மாமிச சாறுகள், கஃபைன், மதுபானங்கள் மற்றும் மசாலாக்கள். வெப்பஞ்சார்ந்த (Thermaly) எரிச்சலூட்டும் உணவுகள் என்பது அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ பரிமாறப்படுவது.

திட்ட உணவானது, ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், அதனையும் சரி செய்வதாக இருக்க வேண்டும். இது மட்டுமின்றி புண்கள் குணப்படுத்துதலைத் துரிதமாக்குவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக திட்டமிடப் பட்ட உணவானது, நோயாளியின் உணவுத் தேவையையும், உணவு ஒவ்வாமையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாலில் உள்ள அமினோ அமிலம் திசுப்புரதம் உருவாக உதவுகிறது. இத்திசுப்புரதம், புண்கள் குணமாவதற்கு உதவுகிறது. மிதமான அளவு கொழுப்பு உணவு சேர்த்துக்கொள்ளுவதால் இரைப்பையின் சுரப்புகள் குறைக்கப்படுகிறது. பொரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இவை எளிதில் சீரணிக்காது. மேலும் புண்கள் அதிகமாகக் காரணமாகிவிடும். அஸ்கார்பிக் அமிலம் புண்கள் ஆறுவதற்கு உதவுகிறது. எனவே கிச்சலி வகைப் பழச்சாறுகள், தக்காளி சாறுகள் கொடுக்கப்பட வேண்டும்.

திட்ட உணவு வழிமுறைகள்

 • நோயாளியின் உணவு எந்த வகையானாலும், சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
 • உணவு சாப்பிடும் நேரத்தைச் சீராக்கிக்கொள்ள வேண்டும். சிறு இடைவெளியில் குறைந்த அளவு உணவுகளை உட்கொள்ளுவது நல்லது.
 • உணவு உட்கொள்ளும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த மற்றும் குடும்பப் பிரச்சினைகளை, உணவு உட்கொள்ளும்போது மறத்தல் நல்லது.
 • உணவை மெதுவாகவும், நன்கு மென்றும் உண்ண வேண்டும். வேகமாக உண்ணுதல் இரைப்பை சுரப்பினை தூண்டிவிடும்.
 • வயிற்றில் உணவு இல்லாத போது (Empty Stomach), புகைப் பிடித்தலோ, காப்பி அருந்துதலோ அல்லது மதுபானம் குடித்தலோ கூடாது.
 • போதுமான உடல் மற்றும் மனம் சார்ந்த ஓய்வு தேவை.
 • வயிற்று அமிலத்தன்மை நீக்கும் மருந்தினை (antacid) உணவு உண்ட பிறகு ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள்ளாகவும், படுக்கைக்கு செல்லும் முன்பும் உட்கொள்ள வேண்டும்.

சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் - இரைப்பை புண்கள்

உணவில் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டியவை

 

உணவில் தவிர்க்கப்பட வேண்டியவை

 

பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி, முட்டை, நீராவியல் அவித்த மீன், சாதம் சேமியா கஸ்டர்டு, பொரி, சோள அவல், வேகவைத்த பயறுகள்.

 

மதுபானங்கள், திடமான டீ, காப்பி, கோலா பானங்கள், ஊறுகாய்கள், மிளகாய், மசாலாக்கள், பொரித்த உணவுகள், கேக், பழுக்காத பழங்கள், காய்கறிகள், வெங்காயம்.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR)

2.975
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top