பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / மருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை

மருத்துவமனையில் உள்ள திட்டஉணவு அமைப்பு துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் நலம் பேணும் திட்ட உணவு அமைப்பு

மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்குத் திட்ட உணவை வழங்குதலின் பொதுவான குறிக்கோள் - நிறைவான ஊட்டச் சத்துமிக்க, தரமான உணவினை மிக குறைந்த விலையில் அளித்தலாகும். உணவுப் பணித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கற்பனை வளம் மிக்கவர்களாகவும், புதுபுனைவு திறன் கொண்டவராகவும் (ingenuity), நோயாளியின் தேவைக்கேற்ப பலவித உணவுகளை நன்கு திட்டமிடுபவராகவும் இருத்தல் வேண்டும்.

திட்ட உணவு அமைப்பு துறை (Dietary Department)

 • மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உணவினை வழங்க, பல்வேறு பணிகளை ஒருமுகப்படுத்தி, அதற்கேற்ற சாதனங்களின் உதவியால், பணியாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. உணவுப்பணி கீழ்கண்டப் பணிகளை உள்ளடக்கியது. உணவுத் திட்டத்தை (menu) திட்டமிடுதல், உணவுப் பொருட்களை வாங்குதல், சமைத்த உணவினைப் பங்கிடுதல் போன்றவையாகும்.
 • உணவுப்பணித்துறையின் சிறப்பான செயலாக்கம், அதன் சூழ்நிலையை ஒழுங்குபடுத்தி சீரமைத்தல், அதன் சாதனங்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, உணவுத் துறையின் வகைப்பாடு மற்றும் அதன் வரவு செலவு திட்டம் போன்றவற்றை பொருத்திருக்கும்.
 • உணவுப்பணித்துறையின் இயல்பான வசதி வாய்ப்புகள், தரமிக்க உணவு சேவை, பணியாளர் ஊதியம் (labour cost) மற்றும் ஊழியர்களின் ஒழுங்குணர்வு (morale of Workers) போன்றவற்றில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 • உணவுத் துறையின் சீரான இயக்கத்திற்கு முக்கியமான அடிப்படை, அதன் பதிவேடுகளை நன்குப் பராமரித்தலாகும். உணவுப் பணித்துறையின் (Food Service) சேவைகளைத் தவிர, திட்டஉணவு மருத்துவ ஆலோசனை மையம், (diet clinic) புற நோயாளிகள் சேவை பிரிவை செயல்படுத்துதல், நோயாளிகளுக்குத் திட்ட மருத்துவ ஆலோசனை (diet counseling) அளித்தல், திட்ட உணவின் வழிமுறைகள் வலியுறுத்த உதவுதல் என அதன் பணிகள் விரிவடைகின்றன.
 • திட்ட உணவு அமைப்பு துறையின் வெற்றிகரமான செயற்பாடு, பொருத்தமான உபகரணங்களைக் கொண்டு திறமுடைய உணவு தயாரிப்பை மேற்கொள்வது ஆகியவை முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.

திட்ட உணவு வல்லுநர் - பணிகள் (Dietitian - duties)

திட்ட உணவு வல்லுநர் எனப்படுபவர் சத்துணவு மற்றும் திட்ட உணவு கல்வியில், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டக் கல்வி தகுதியுடன், சத்துணவு பற்றிய அறிவியல் சார்ந்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி உணவு வழங்குபவராகவும், உடல் நலம் பேணுதல் மற்றும் நோய்களின் தாக்குதல் போது பின்பற்ற வேண்டிய திட்ட உணவு கல்வியைத் தனி நபருக்கோ அல்லது குழுவினருக்கோ புகட்டுபவர் ஆவர்.

 • மருத்துவமனை மற்றும் நிறுவனங்களிலுள்ள தனிநபர் அல்லது குழுவினருக்கு தேவையான சிகிச்சை உணவுகளைத் திட்டமிடுதல், தயாரித்தல் மற்றும் அப்பணிகளை கண்காணித்தல்.
 • திட்ட உணவு கொள்கைகளுக்கு ஏற்றவாறு, உணவினை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை அறிவுறுத்தி, உகந்த உணவுத் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளுதல்.
 • திட்ட உணவு வல்லுநர், தான் சார்ந்துள்ள நிறுவனத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பொறுப்புடையவர்.

பொதுநல ஊட்டச்சத்து வல்லுநர்

 1. சமுதாயத்தில் காணப்படும் சத்துணவு மற்றும் உணவு சார்ந்த பிரச்சினைகளை மதிப்பிடுதல்.
 2. சத்துணவு திட்டங்கள் செயற்படுத்துதல்
 3. சமுதாயத்திற்கேற்ற சத்துணவு திட்டங்களில் பங்குப் பெறுதல்.
 4. உணவு தயாரித்து பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கும் நிறுவனங்களுக்கும், உணவு தயாரிக்க தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் ஆலோசகராக (consultant) பணிபுரிதல்.

நிர்வாக திட்டஉணவு வல்லுநர் (Administrative dietitian)

 1. உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் பல்வேறு பணிகளைத் திட்டமிட்டு, விரிவாக்கி, கட்டுப்படுத்தி மதிப்பிடுதல்.
 2. துறையின் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களையும் (plans) G&uus), முயற்சிகளையும், மனித வளங்களையும் திறம்பட இணைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துதல்.
 3. உணவு தயாரித்தலின் தரத்தை நிர்ணயித்து (Standards of food production) உணவு சேவை, சுத்தம் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையைப் பேணி பராமரித்தல்.
 4. திறமையான எழுத்தின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் சிறப்பாக தொடர்பு கொள்ளுதல்.
 5. புத்தொளிர் கல்வி திட்டங்களையும், பணி இடை கல்வியையும் (in-service educational programme) திட்டமிட்டு, செயல்படுத்தி, மதிப்பிடுதல்.
 6. நிகழ் காலத்தில் (current) நடைபெறுகின்ற உடல் நலம் சார்ந்த சத்துணவு ஆராய்ச்சியின் கருத்துக்களுக்கு விளக்கமளித்து (interprets), அதனை நடைமுறைப்படுத்தி மதிப்பிடுதல்.
 7. வாடிக்கையாளர் (client) ஏற்றுக் கொள்ளும் வகையில் உணவுத் திட்டங்களை வகுத்து அதனை மதிப்பிடுதல்.
 8. நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் சாதனங்களை வாங்குவதிலும் தரத்தை நிர்ணயித்து (specification) செயல்படுத்துதல்.
 9. புதிய உணவுப் பணித்துறையை தொடங்க வேண்டியிருப்பின் அதற்குத் தேவையான மனையமைப்பை வடிவமைத்து (layout design) அதற்கான சாதனங்களைத் தீர்மானித்தல்.

திட்ட உணவு ஆலோசகர்

நிர்வாகம் மற்றும் திட்ட உணவு மருத்துவ சிகிச்சையில் அனுபவமிக்கராதலால், அவர்

 • உணவுத் துறையை நன்கு கண்காணித்து, மதிப்பிட்டு, தரமான, ஊட்டச்சத்துமிக்க உணவினை வழங்குவார்.
 • விலைக் கட்டுபடுத்துதலுக்கு (cost control) தேவையான வரவு செலவு புத்தாய்வு திட்டங்களை (budget proposal) தீட்டி, அதற்கேற்றத் தொழில் நடவடிக்கைகளைச் (procedure) சிபாரிசு செய்வார்.
 • புதிய கல்வி திட்டங்களையும், பணியிடை கல்வி திட்டங்களையும் திட்டமிட்டு, ஒருமுகப்படுத்தி நடைமுறைப் படுத்துவார்.
 • புதிய உணவுப் பணித்தொடங்க வேண்டியிருப்பின் அதற்கான மனையமைப்பை வடிவமைத்து, ஏற்ற சாதனங்களை திட்டமிடுவார்.
 • உணவுப் பணித்துறையில் சுத்தத்தின் தரத்தை நிர்ணயித்து (standards for sanitation) சூழ்நிலையைச் சிபாரிசு செய்து கண்காணிப்பார்.
 • முன் மாதிரி உணவு திட்டங்களை உருவாக்குவார்.
 • உடல் நலம் பேணும் ஊட்டச்சத்து திட்டங்களை மதிப்பிட்டு, விரிவாக்கி, செயல் முறைப்படுத்தி, முற்று பெற்றவுடன் செயல்நிறை ஆய்வு (evaluation) மேற்கொண்டு, தொடர்ந்து செய்ய வேண்டிய செயல்களிலும் (folow-up) ஈடுபடுவார்.
 • கல்வி கற்பிக்க உதவும் சாதனங்களை (educational materials) உருவாக்கி, பயன்படுத்தி, நிறை ஆய்வு செய்வார்.
 • திட்ட உணவு அலுவலர்களுக்குத் தேவையான செயல் நிறைவேற்றப் பணிகளுக்கு (performance) வழிகாட்டுபவராகவும், மதிப்பிடுபவராகவும் செயல்படுவார்.
 • தன்னுடைய திறமையான பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் பொது மக்களிடம் ஆற்றல்மிக்கத் தொடர்புகள் ஏற்படுத்துவார்.
 • தற்காலத்தில் நடைபெறுகின்ற உடல் நலம் சார்ந்த சத்துணவு ஆராய்ச்சியின் கருத்துகளுக்கு விளக்கமளித்து, அதனை நடைமுறையில் செயல்படுத்தி மதிப்பிடுவார்.

திட்ட உணவு ஆலோசனையின் முக்கியத்துவம் மற்றும் நோயாளிக்கு கல்வி பயிற்சி அளித்தல்

 1. திட்ட உணவு ஆலோசனை (Counseling) மற்றும் நோயாளிக்கு கல்வி பயிற்சி அளித்தலின் முக்கிய குறிக்கோள், நோயாளிக்கு நோயின் தன்மையை புரிய வைத்தல், அதனால் விளையும் கேடுகளை விவரித்தல், நோயாளி நோயின் நிலையை ஏற்று கொள்ளுதல் மற்றும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலாகும்.
 2. நோயாளியைத் தனிநபர் சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தி, திட்டஉணவில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும், குறிப்பிட்ட சிகிச்சை முறையைப் பின்பற்ற வேண்டியிருப்பின் அதனைப் பற்றிய அறிவுரையையும் வழங்குவதாகும்.
 3. நோயாளி திட்ட உணவு ஆலோசனையின் போது, திட்ட உணவு (Diet) நோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்ளுகிறார்.
 4. முந்தைய காலங்களை விட நோய் வருமுன் உடலை காக்க வேண்டும் என்ற சீரிய சிந்தனை சமீப காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 5. இச்சிந்தனை, திட்ட ஆலோசனையின் மூலம் நோயினால் ஏற்படும் அபாய நேர்வு (risk) களைக் குறைக்கவும், தகுந்த ஆலோசனைகளை அளிக்கவும் வழி வகுக்கிறது.
 6. திட்ட உணவு வல்லுநர், நோயாளிக்கு இயல்பான (realistic) குறிக்கோள்களை அமைத்திட உதவி, உணவுத் திட்டத்தை திட்டமிடுதல், உணவு பொருட்களை வாங்குதல் மற்றும் உணவு தயாரித்தலில் வழிகாட்டினால், திட்டஉணவு ஆலோசனை திறம்பட செயல்படும்

திட்ட உணவு ஆலோசனையை நெறிப்படுத்த உதவும் வழிமுறைகள்

 1. திட்ட ஆலோசனை நிகழ்வுக்கு முன்பே நோயாளியின் மருத்துவ பதிவேடுகளை மீள்பார்வையிடுதல்
 2. திட்டஉணவு ஆலோசனை அமைதியான சூழ்நிலையில், (comfortable Setting) கவனத்துடன் செயல்படுத்துவது அத்தியாவசியமானது.
 3. திட்டஉணவு ஆலோசனை நேரத்தை முன் கூட்டியே குறித்தல்.
 4. திட்டஉணவு வல்லுநர் நோயாளியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, அவரிடம் பேசும் போது பெயர் சொல்லி அழைக்க வேண்டும்.
 5. உன்னிப்பாக கவனித்தல் - நோயாளியின் கண்களை நேராக பார்த்து, தொடர்பு கொள்ளல் வேண்டும்.
 6. நோயாளியின் உணர்வுகளையும், அவர் குரலின் தன்மையையும் கண்டறிய வேண்டும்.
 7. நோயாளி பேசும் போது அடிக்கடி இடைமறித்து (Interrupt) பேசாமல், தேவைப்படும் போது மட்டுமே, அதாவது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மட்டுமே, பேச வேண்டும்.
 8. நோயாளிகளின் மனதில் உள்ளவைகளை வெளி கொணர உதவும் கேள்விகளை (open ended) கேட்க வேண்டும்.
 9. நோயாளியிடமிருந்து முழுமையான செய்திகளைச் சேகரிக்கும் வரை திட்டஉணவு வல்லுநர் தன் அங்கீகாரத்தையோ அல்லது அங்கீகார இன்மையையோ வெளிப்படுத்தலாகாது. மருத்துவம் சார்ந்தச் சொற்களை (terms) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நோயாளிக்குத் தேவையான விளக்கங்கள் அளிக்க தயாராக இருக்க வேண்டும். இயல்பான குறிக்கோள்களை அமைத்திடல் வேண்டும். நோயாளியுடன் கலந்து பேசி அந்நோயாளிக்கென்று தனிப்பட்ட (individualized) திட்ட உணவை எழுதி கொடுக்க வேண்டும்.
 10. நோயாளி கேள்வி கேட்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருதல் வேண்டும்.
 11. திட்டஉணவு ஆலோசனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் தொடர்ந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்து, நோயாளியின் அடுத்த திட்ட ஆலோசனை நேரத்தை முன் குறிக்க வேண்டும்.

இந்திய திட்ட உணவு கழக செயல்பாடுகள்

இந்திய திட்டஉணவு கழகம் 1963-இல் சிகோபாலன் என்பவரை தலைவராகவும் கல்யாண்பாக்ஸி என்பவரை செயலாளராகவும், ஊட்டச்சத்து வல்லுநர்கள், திட்டஉணவு வல்லுநர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் போன்ற குழுவினரை இணைத்து நிறுவப்பட்டதாகும். ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல், உடல் நலம் பேணுவதில் உணவுதிட்டம் மற்றும் திட்ட உணவின் மேன்மையை வலியுறுத்தல், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை மருத்துவம் அளித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இக்கழகத்தின் நோக்கங்கள்

 1. ஊட்டச்சத்து கல்வியை ஊக்குவித்தல்.
 2. ஊட்டச்சத்து மற்றும் திட்டஉணவு சார்ந்த கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவித்தலில் (training) ஈடுபடுதல்.
 3. திட்டஉணவு வல்லுநரின் ஆர்வத்தையும் நலனையும் பேணி பாதுகாத்தல்.

IDA கழகத்தின் குறிக்கோள்கள்

 • ஊட்டச்சத்து மற்றும் திட்டஉணவு துறை சார்ந்த ஆராய்ச்சிகள், விரிவாக்கப் பணிகள் (extension education), தொடர் கல்வி (continuing education) போன்றவற்றைப் மேம்படுத்துதல்.
 • 'அப்லைடு நியூட்ரிசன்” (Applied Nutrition) போன்ற அறிவியல் பத்திரிக்கைகளை வெளியிடல்.
 • திட்டஉணவு வல்லுநர்கள் தங்களைத் தயாராக்கிக் கொள்ளவும், தனியாகத் தொழில் துவங்கவும் (private practice), திட்டஉணவு வல்லுநராகப் பதிவு செய்து கொள்ள எழுத வேண்டிய தேர்வுகளை நடத்துதல். கழக உறுப்பினர்களின் ஆர்வத்தையும் நலனையும் பேணிப் பாதுகாத்தல். வெளிநாட்டிலுள்ள திட்டஉணவுக் கழகங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இணைந்து (interaction) செயலாற்றுதல்.

கழகத்தின் செயல்பாடுகள்

புகழ் பெற்ற அறிவியலாளர்களைக் கொண்டு கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைத்திடல்.

ஆண்டிற்கொரு முறை நடைபெறம் சிறப்பு பேரவைகள், ஊட்டச்சத்து மற்றும் திட்டஉணவை பற்றிய அறிவைப் பரவச் செய்யும் மன்றங்களாக (forum) செயலாற்றுகின்றன.

சமீப ஆண்டில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் (seminar) ஊட்டச்சத்து கல்வியின் எல்லைகளை விரிவு படுத்துதல் பற்றியும். ஊட்டச்சத்து குறைநோய்களை (malnutrition), விலை குறைக்கப்பட்ட உணவளித்தல் (subsidary food) மூலம் தீர்வு காணல் பற்றியும். ஆரம்ப பள்ளி முதல் முதுகலை பட்ட கல்வி வரை ஊட்டச்சத்து கல்வி அமைத்திடல் பற்றியும். திட்டஉணவை பற்றிய பொதுவான பாடத்திட்டம் வகுத்து அதிலிருந்து குறிப்பிட்ட செயல் பாடத்திட்டங்களை அமைத்திடல் பற்றியும். நோய்வாய் பட்ட காலத்திற்கான திட்டஉணவு மேலாண்மை (Dietary Management) பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்

3.12727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top