பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை வளர்ப்பு பகுதி - 1

குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை எப்படி பராமரிப்பது போன்ற தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குழந்தை வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலான கடமை என்று இன்று நாம் சொல்லலாம். ஏனென்றால் குழந்தைகள் மீது தவறான விசயங்கள் நிறைய திணிக்கக்கூடிய சூழலில் இருக்கிறோம். எனவே அந்த மாதிரியான காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்வியல் சூழலும் அமைந்து போனதுதான் வேதனையான விசயம். குழந்தைகளை எப்படி பராமரிப்பது?, எப்படி வளர்ப்பது?, குழந்தைகளுக்கான மருந்துகளை எப்படி தேர்வு செய்வது? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.

kuzhandhai valrppu1

உரைமருந்து

அந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது என்றால் உரைமருந்து ஊற்றியாச்சா? என்று சொல்லுவோம். இந்த உரைமருந்து என்ன என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், வால்மிளகு, வெள்ளை மிளகு இதனுடன் மூலிகைச்சாறு, கற்பூரவல்லிச்சாறு, வெற்றிலைச்சாறு, துளசிச்சாறு, திருநீற்றுபச்சிலைச்சாறு இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து சாக்பீஸ் மாதிரி உருட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். குழந்தைக்கு உண்டாகக்கூடிய முதல் நோய் மாந்தம் என்று சொல்லுவோம்.

ஒரு குழந்தை பிறந்தவுடனே அந்த குழந்தைக்கு அமுதமான உணவுப்பொருள் என்னவென்றால், தாய்ப்பால். இந்தத் தாய்ப்பாலின் சுவையை ஒரு குழந்தை பாசத்தோடு பருகுவதுதான் அதன் இயல்பு. தன்னுடைய அம்மாவிடம் இருக்கக்கூடிய ஒரு நேரடி உள்ளத்தொடர்பு, உணர்வுத்தொடர்பு எல்லாமே அந்தத் தாய்பாலில் கிடைப்பதால் அக்குழந்தை வகை, தொகை இல்லாமல் முதன்முதலில் அதிகமாகக் குடிக்கக்கூடியது தாய்பால்தான். இந்தத் தாய்ப்பாலே குழந்தைக்கு மாந்தமாக மாறும். குழந்தை பிறந்தவுடனே நோய் தடுப்பூசி (Immunization Injection) போடுவதெல்லாம் கிடையாது. அந்தக் காலத்தில் இந்த உரைமருந்துதான் அவர்களுக்கு மிகச்சிறந்த நோய்தடுப்பு (Immunization).

kuzhandhai valrppu2

குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது என்றால் 6 மாதத்திற்கு தண்ணீரே ஊற்றாதே என்று பயமுறுத்தக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. தன்னிச்சையாக தன்னுடைய குழந்தையை வளர்த்தது என்ற காலகட்டம் சென்று, இன்று மருத்துவர் என்னசொல்கிறாரோ அதனடிப்படையில் குழந்தையை வளர்ப்பது இல்லையென்றால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற சூழல் இன்றைக்கு நிலவக்கூடியதாக இருக்கிறது. அந்த உரைமருந்தை தாய்ப்பாலில் மெதுவாக இளைத்து, அந்தத் தாய்ப்பாலை சங்கில் அரைசங்கு ஊற்றும்பொழுது அந்தக்குழந்தைக்கு முதன்முதலில் உண்டாகக்கூடிய மாந்தம் என்பது சரியாகும்.

மாந்தம்

ஒரு குழந்தைக்கு முதன்முதலில் வரக்கூடிய மாந்தம் தாய்ப்பாலில் வரும். இந்த மாந்தத்தால் குழந்தைக்கு தொண்டையில் சளி கட்டுவது, சளி அதிகமாவது, மூக்கு அடைத்துக்கொள்வது, மூச்சு விடமுடியாமல் சிரமப்படுவது இப்படியெல்லாம் சில சிக்கல்கள் வரும். அதனால்தான் கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக கத்தட்டும் அதன் பிறகு பால் கொடுத்தால் செரித்துவிடும் என்பதற்கு காரணம் என்னவென்றால் அப்பொழுதுதான் ஒழுங்கான பசியாக இருக்கும். இல்லையென்றால் பழக்கத்தின் அடிப்படையில் குடுப்பதால் நிறைய மாந்தம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு. சிறு வயதிலேயிருந்து நாம் மூலிகைகளைக் கொடுத்து பழக்கும்பொழுது இந்த மாந்தம் என்ற ஒன்று வராத சூழலை குழந்தைக்கு உருவாக்க முடியும். ஆறு மாதம் ஆனபிறகு குழந்தைக்கு துளசிச்சாற்றை பழக்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஒரு ஐந்து சொட்டிலிருந்து பத்து சொட்டு துளசிச்சாற்றை ஒரு குழந்தைக்கு ஆறுமாதம் கழித்து, வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கொடுத்து வரும்பொழுது கைக்குழந்தைகளை மிக எளிமையாக பராமரிக்க முடியும்.

எடுத்ததெற்கெல்லாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, nasal drops போடுவது அதாவது மூக்கில் சில மருந்துகளை போடுவது, குழந்தையை நாம் நிறைய கவனித்துக்கொள்வதின்பேரில் கண்டகண்ட மருந்துகள் கொடுப்பது, ஆக்கியவற்றினாலும் மருத்துவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளாலும் குழந்தைக்கு சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது. சின்ன சின்ன மருந்துகள் அதாவது துளசிச்சாறு என்பது உணவை அடிப்படையாகக்கொண்டது. அதைக்கொடுக்கலாம். அதேபோல் ஆறுமாதம் கழித்த குழந்தைகளுக்கு தூதுவலை சாறு கொடுக்கலாம்.

தூதுவலை ரசம்

எட்டு மாதம், ஒன்பது மாதம் வரும்பொழுது அரிசி சாதம் ஊட்டக்கூடிய அளவிற்கு குழந்தை வளர ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி நேரத்தில் குழந்தைக்கு நொய்யரிசியை நன்றாக குழைய வேகவைத்து கூடவே உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து இதை தாராளமாகத் தரலாம். சில குழந்தைகளுக்கு இந்த அரிசியும் உருளைக்கிழங்கும் கொடுப்பதால் ஜீரணசக்தி இல்லாமல் அப்பொழுதும் மாந்தம் உண்டாகலாம். அந்த மாதிரி மாந்தம் வருகிற பொழுது தூதுவலையை ரசமாக வைத்துக்கொடுக்கலாம். மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், முள் நீக்கிய தூதுவலை இவையனைத்தையும் லேசாக நெய்யில் வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து இதன் கூடவே தக்காளியையும் சேர்த்து ரசமாக வைத்து இந்த ரசத்தை ஒரு தேக்கரண்டியிலிருந்து இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைக்குக் கொடுக்கலாம். இணை உணவோடு தூதுவலை ரசம் கொடுக்கும்பொழுது உணவினால் பெறப்பட்ட அந்த மாந்தத்தை இந்த ரசம் முழுமையாக நீக்கி அந்தக் குழந்தைக்கு சளி இல்லாமல், இருமல் இல்லாமல் மூச்சில் ஏதும் பிரச்சினை இல்லாமல் நன்றாக வளரக்கூடிய சூழலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தூதுவலை கண்டிப்பாகக் கைக்கொடுக்கும்.

kuzhandhai valrppu11

தூதுவலை - மருத்துவ பயன்

தூதுவலை நன்றாக நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு மூலிகைப்பொருள். ஒரு பழமொழியே சொல்வார்கள், என்னவென்றால் “தூதுலை மாதுளை இருக்கும் வீட்டில் வாயிலும் மார்பிலும் களங்கமில்லை” என்று சொல்வார்கள். எந்த வீட்டில் தூதுவலை இருக்கிறதோ அந்த வீட்டில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் இருக்காது என்பது இந்தத் தமிழ் பழமொழியின் அர்த்தம். அதே போல் மாதுளை, மாதுளை இருக்கக்கூடிய வீட்டில் வயிற்றில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அர்த்தம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு தாராளமாக இதனை ஊட்டி பழக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தூதுவலையை உப்பு, மிளகாய், புளி வைத்து துவையலாக அரைத்து அந்தத் துவையலை நாம் கொடுத்து பழக்கும் பொழுது குழந்தைகளுக்கு சளி இருமல் இல்லாமல் பாதுகாக்க முடியும். நன்றாக அதீத வளர்ச்சியை உருவாக்க முடியும். அந்த வயதிற்கு தகுந்த வளர்ச்சியை உருவாக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். குழந்தைக்கு மாந்தம் இருக்காது.

kuzhandhai valrppu4

துரித உணவுகள்

இன்றைய குழந்தைகளை மூன்று வயதிலேயே நாம் கெடுத்துவிடுகிறோம். எப்படியென்றால் தொலைக்காட்சியைப் பார்த்து அதில் வரக்கூடிய சில உணவுப்பொருட்களை காண்பித்து இதை வாங்கிக்கொடு என்று குழந்தை அடம்பிடிக்கக்கூடிய ஒரு சூழலை நாம் வீட்டிலே கொண்டுவந்துவிடுகிறோம். எனவே அந்த மாதிரி பொருட்களை குழந்தைக்குக் கொடுக்கும்பொழுது பல்வேறு பிரச்சினை வரும். விளம்பரப்படுத்தக்கூடிய சில நூடுல்ஸை குழந்தைகள் சாப்பிடும்பொழுது வயிறு வலி என்பது மிக எளிமையாக வரக்கூடிய ஒரு சூழலாக இருக்கிறது. 3 வயது முடிந்து 4 வயது தொடங்கும் பொழுது எல்.கே.ஜி, யு.கே.ஜி என்று நாம் சேர்க்கப்போகிறோம். அந்த மாதிரி குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறு எங்காவது பெற்றோர்கள் வேலைக்கு செல்லக்கூடிய தருணங்களில் அவர்கள் உடனடியாக (Instant) என்ன உணவு செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். அந்த மாதிரி நேரங்களில் நூடுல்ஸ் போன்ற உணவுகளை நிறைய கொடுக்கிறார்கள். இந்த மாதிரி உணவுப்பொருள்களில் நிறைய மெழுகு(Wax) சார்ந்த பொருட்கள் அதிகமாக இருப்பதால், அது குழந்தையின் குடல்பகுதியில் முழுமையாக தங்கி வயிற்றுவலி, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடிய சூழல் உண்டு.

kuzhandhai valrppu5

கீரை - அத்தியாவசிய உணவு

எந்த ஒரு குழந்தைக்கும் கீரையைப் பழக்கப்படுத்தலாம். மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தினசரி ஏதாவது ஒரு கீரையை (அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, புளிச்சக்கீரை) ஒருவேளை உணவாகக் கொடுக்கலாம். கீரையை நன்றாக அவித்து சாறாக எடுத்து ரசத்தைக் கூட தண்ணீருக்கு பதில் சேர்த்துக்கொள்ளலாம். அந்த மாதிரி கொடுத்து பழக்கும் பொழுது கீரைகளிலிருந்து பெறக்கூடிய நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து இவையனைத்தும் ஒரு குழந்தையை நல்ல அழகோடும், இளமையோடும், பொலிவோடும் வளர்க்கக்கூடிய ஒரு விசயமாக இருக்கும்.

Broccoli and Spinach Baby Food Puree

துரித உணவுகளினால் வரும் பிரச்சினைகள்

நல்ல சுவையாக இருக்கிறது, சீக்கிரமாக முடிந்துவிடுகிறது என்பதற்காக செய்யக்கூடிய உணவுகள் குழந்தைகளின் வயிற்றைக் கெடுத்து, மாந்தத்திற்கு உட்படுத்தி அவர்களை நோயாளியாக மாற்றக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். சில நேரங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்று கொண்டுசெல்வோம் நாம் கொடுக்கக்கூடிய உணவு, சில நேரங்களில் food poison ஆகிவிடும். நான்கு வயதைத்தாண்டி ஐந்து, ஆறு வயது ஆகும்பொழுது பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய நிறைய குழந்தைகளுக்கு நாம் தரக்கூடிய உணவுகளாலேயே தொண்டையில் சதை வளர்ந்துவிட்டது என்பதை மிள எளிமையாக கேட்கமுடியும். எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கக்கூடிய குழந்தைகளுக்குக்கூட tonsils operation இன்றைக்கு மிக சாத்தியமாக நடக்கிறது. மருத்துவர்கள் இந்த tonsils ஆல் பிரச்சினை இல்லை, சதையில் இருக்கக்கூடிய (inflammation ஐ) கிருமி தொற்றை வெட்டி எடுத்துவிடுகிறோம், அதன் பிறகு tonsil சரியாகிவிடும் என்று சொல்வார்கள். குளிர்பானங்கள் சாப்பிடக்கூடிய குழந்தைகள், ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடிய குழந்தைகள், நிறைய பேக்கிங் ஃபுட் (கேக், பப்ஸ், சிப்ஸ்) சாக்லேட் ஃப்ளேவர் கலந்த கேக்கை குழந்தைகளுக்கு வாங்கி வாங்கி ஊட்டுவது இவையனைத்துமே நாமே பாசத்தின் அடிப்படையில் குழந்தைகளை கெடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

kuzhandhai valrppu6

இந்த உணவுகளை எல்லைமீறி அதிகமாக சாப்பிடும்பொழுது நுரையீரலின் வேலையைக் குறைக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டுசெல்லும். இதெல்லாம் கொடுத்து, அசைவத்தையும் நிறைய கொடுக்கும்பொழுதும் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு மூச்சு வாங்குவது, மூச்சு எடுக்க முடியாமல் தூக்கித்தூக்கி போடுவது அந்த நேரத்தில் மருத்துவமனையை நோக்கி அம்மாவும் அப்பாவும் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது இதெல்லாம் தேவையா? இதெல்லாம் ஏன் வருகிறது என்றால் நம்முடைய மாறுபட்ட உணவு கலாச்சாரத்தினால் வருவதுதான். குழந்தைகளுக்கு ஏற்புடைய மிக எளிதில் செறிக்கக்கூடிய நார்ச்சத்து உணவுகளை நாம் நிறைய கொடுத்துக்கொண்டு வந்தோம் என்றால் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் மிகவும் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். ஆனால் நாம் அதிலிருந்து நிறைய மாறுகிறோம்.

ஆதாரம் : Dr Arun Chinniah

Filed under:
2.98648648649
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
சிவா Oct 05, 2017 12:43 AM

நல்ல பயனுள்ள கட்டுரை மேலும் பயனுள்ள கட்டுரைகளை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்
இது போன்ற தகவல்களுக்கு நன்றி என்ற சொல்லில் முடிக்க இயலாது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top