பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளின் உளவியல் பிரச்சனைகள்

குழந்தைகளின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய தகவல்.

முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய ஒரு கணவன் முயற்சி செய்யும் போது முதல் மனைவியின் மனதில் என்ன உணர்வுகளைத் தோற்றுவிக்குமோ அதே உணர்வுகளை முதல் குழந்தையின் மனதில் தோற்றுவிக்கும். தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பறிபோவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை. அதே நேரத்தில் புதிய குழந்தையை கவனிக்கும் விஷயத்தில் காட்டும் அக்கறையை முதல் குழந்தையையும் கவனிக்கும் விஷயத்தில் பெற்றோர்களும், வீட்டில் உள்ள மற்றவர்களும், உறவினர்களும் காட்டுவதில்லை. இதனை கவனிக்கும் முதல் குழந்தை இதுவரை எனக்கு முழுமையாக கிடைத்து வந்த கவனிப்பை பறித்துக் கொண்டது புதிதாக வந்த குழந்தைதானே என நினைத்து அக்குழந்தையின் மீது வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறது. முதல் குழந்தைக்குத் தோன்றும் இம்மனநிலையை ‘உடன்பிறந்தோரிடம் நிலவும் பகைமை’ என உளவியல் கூறுகிறது. புதிய குழந்தையின் மீது பகைமை உணர்ச்சி அதிகமாகும் போது பெரிய குழந்தை யாருமில்லா நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பாப்பாவை கிள்ளி வைப்பது போன்ற நடத்தைகளில் ஈடுபடலாம். பிற்காலத்தில் இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து அடிக்கடி அடித்துக் கொள்வது, அதன்பின் பெற்றோரிடம் புகார் சொல்வது என பெற்றோருக்கு தீராத தலைவலியைக் கொடுக்கும். இரண்டு வயது முதல் நான்கு வயது வரையிலான கால கட்டத்தில் குழந்தைகளிடம் இப்பிரச்சனை அதிகரிக்கும்.

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். தாய் புதிதாகக் பிறந்த குழந்தையை கையில் வைத்திருக்கும்போது தாயை கட்டி அணைத்துக் கொள்ள முதல் குழந்தை ஓடிவரும் போது அதன் நெஞ்சில் கையை வைத்து தடுக்கும் தாய்மார்கள் உண்டு. அத்தோடு நிற்காமல் ‘இப்படி ஓடிவருகிறாயே, பாப்பா மீது விழுந்தால் என்ன ஆகும்’ தூரப்போ’ என துரத்துவதும் உண்டு. அப்போது தான் இது நாள் வரை ஓடிவந்து கட்டியணைத்தால் ஒன்றும் சொல்லாத அம்மா இப்போது மட்டும் துரத்துவது ஏன்? புதிய பாப்பா தானே அதற்கெல்லாம் காரணம் என்று சிந்திக்கும் குழந்தை பாப்பா மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகிறது. வீட்டுக்கு வரும் உறவினர், நண்பர்கள் என அனைவரும் புதிய குழந்தையைப் பற்றியே பேசுவது முதல் குழந்தையின் மனதில் உள்ள பகைமைக்கு தூபம் போடும். பின்நாட்களில் இரண்டு குழந்தைகளும் சண்டை போடும் போது பெற்றோர் தலையிட்டு முதல் குழந்தைக்கு பரிந்து பேசுவது இப்பகைமை உணர்ச்சியை எண்ணெய் விட்டு எரிய வைக்கும்.

பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம். முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.

இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவும்.

ஆதாரம்: ப்லாக்ஸ்பாட்

3.07142857143
Rathika Jul 25, 2018 03:05 PM

குழந்தை வளர்ப்பின்; முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய வளைதலம் > அனைத்து சந்தேகத்தை தீர்த்தது. மேலும் இரண்டு குழந்தை உள்ள வீட்டில் தாய் எப்படி நடந்துகொள்ளலாம் என்பது விரிவாக உள்ளது அனைவரும் பார்க்க வேண்டிய வெப்சிட் இது .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top