பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்

குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

தொற்று நோய்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு என்னென்ன தொற்று நோய்கள் பரவுகின்றன. அதில் இருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது ?

சளி, இருமல்

வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல் . காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு , கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.

காய்ச்சல்

இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு ,காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.

வயிற்றுப் போக்கு

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும் , கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்ட் வரலாம். அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதைப் போலவே எப்படிக் கொடுக்கிறோம் என்பதிலும் கவனம் தேவை.

சின்னம்மை

வேரிசெல்லா வைரஸால்  ஏற்படக் கூடியது. சிறு சிறு கொப்புளங்கள், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள்  வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.

மணல் வாரி அம்மை

இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம் , கண்கள் சிவந்து காணப்படும். மூக்கில் நீர் வடியும். தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும். வாய்ப்பு ண் , வயிற்றுப் போக்கு , நிமோனியா போன்ற  பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர விற்றமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.

மஞ்சள் காமாலை

பிறந்து 10 முதல் 15  நாட்கள் ஆன  பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான  செயல் திறன் பெறும். எனவே , குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள்  நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத்  தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக ஏற்படுவது மஞ்சள் காமாலை. கண்கள் மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிப்படும். குழந்தைகள் பசியில்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள். கல்லீரல் வீக்கம் அடைவதோடு சில சமயங்களில் முழுமையாகவே செயற்பட முடியாத நிலைக்கும் தள்ளப்படலாம். சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாகக் குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.

சிறுநீரகப் பிரச்சினை

குழந்தைகள்  சிறுநீர்  மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.  சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இது அதிகமானால் சிறுநீரோடு இரத்தமும் கலந்து வருடம் ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் ஆண் உறுப்பைச் சுற்றி இருக்கும் போர் ஸ்கின் இறுகிக் காணப்படும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் போர் ஸ்கின்னை அகற்றிவிடுவோம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் அதிகமாகக் கொடுக்கச் சொல்வோம்.

பராமரிப்பு

  1. பிறந்து ஆறு மாதங்களைக் கடந்து விட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளில் ஒரு லீட்டர் தண்ணீர் குடிக்கக் கொடுக்க வேண்டும். அது அவசியம் கொதிக்க வைத்து ஆறிய நீராக இருப்பது முக்கியம். இளநீர் , பழச்சாறு போன்றவையும் கொடுக்கலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சித் தன்மையைப் பெறும். மேலும் சிறுநீர் மூலமாக உடலில் இருக்கும் கிருமிகளும் வெளியேறிவிடும்.
  2. நுளம்புகள் முட்டையிடக் கூடிய பூந்தொட்டி போன்றவற்றில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளில் நுளம்பு வலைகளைப் பொருத்துவது அவசியம். இதனால் டெங்கு , மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
  3. கைகளைச் சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவிய பின்னரே குழந்தைகளுக்கான உணவைத் தயார் செய்ய வேண்டும். சமைப்பதற்குச் சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். பால் புட்டிகளைப் பயன்படுத்தும் ரப்பரை எவ்வளவு  தான் சுத்தம் செய்தாலும் அதில் கிருமிகள் இருக்கும். இந்தக் கிருமித் தொற்றினால் வயிற்றுப் போக்கு வாந்தி, காதில் சீழ் வடிதல், மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உருவாகும்.
  4. எனவே சங்கு, மேசைக் கரண்டி  அல்லது கப் மூலமாகக் குழந்தைகளுக்கு உணவு புகட்டலாம். குழந்தை  சிறுநீர்  மலம் கழித்தவுடன் உடனுக்குடன் சுத்தமான வேறு ஆடைகளை மாற்ற வேண்டும். துணிகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
  5. குழந்தைகளுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. காய்ச்சலின் போதும் இருமல் , தும்மல் வரும் சமயங்களிலும் கைக்குட்டையால் முகத்தை நன்றாக மறைத்துக் கொள்ளுங்கள்.

தடுப்பு ஊசிகள்

  1. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் என்கிற தடுப்பு ஊசியை குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு முறை போட வேண்டும்.  குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் கால அளவில் தொண்டை அடைப்பான் , கக்குவான் இருமல் ,ர ண ஜன்னிக்கான முத்தடுப்பு ஊசி , இன்ஃப்ளூயன்சா  பி தடுப்பு ஊசி, ஹெபடைடிஸ்  பி, தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதோடு போலியோ சொட்டு மருந்தும் கொடுக்க வேண்டும். மேலும் ஒன்றரை வயதில் முத்தடுப்பு முதல் ஊக்க ஊசி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா  பி ஊக்க ஊசி போட வேண்டும்.
  2. குழந்தையின் ஒன்பதாவது மாத முடிவில் மணல் வாரி அம்மைக்கான முதல் டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டும். 15 ஆவது மாதத்தில் எம்.எம். ஆர். ஊசி போட வேண்டும். ஒருவயது முடிந்த பின் மஞ்சள் காமாலை ஏ மற்றும் சின்னம்மைக்கான தடுப்பு ஊசி போட வேண்டும்.
  3. இரண்டு வயதில் டைபோய்ட் தடுப்பு ஊசி போட வேண்டும். நாலரை வயதில் முத்தடுப்பு  இரண்டாவது ஊக்க ஊசி போட வேண்டும். 10 வயதில் டெட்டானஸ்டொக்ஸைட் ஊசியும் 16 வயதில் டெட்டானஸ் டொக்ஸைடுக்கான இரண்டாவது ஊக்க ஊசியும் போட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 16 வயதில் ரூபெல்லா ஊசி போட வேண்டும்.

 

ஆதாரம் : விகடன் நாளிதழ்

 

2.93506493506
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top