பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீட்டு மருத்துவ சேவைகள்

வீட்டு மருத்துவ சேவைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இல்லத்தில் தாதியரின் பணி மிகவும் மகத்தானது. இப்பணியின் மூலமாக தொடர்ந்து தனிப்பட்ட மனிதனுக்கும், அவன் அவளின் குடும்பத்திற்கும், இதன் மூலமாய் சமூகத்திற்கும், சமூகத்தை சுமக்கும் நாட்டிற்கும், ஆரோக்கியமான மக்களை தருவதின் மூலம் நாட்டை பாதுகாக்கும் பெரிய பொறுப்பாளர்களாவார்கள். இத்தகைய தனிப்பட்ட மனிதனை கவனிப்பதின் மூலம் நோய்களை குறைத்து தேவையான மருத்துவ வசதிகள் அதாவது இறுதிக்கட்ட நோய் பராமரிப்பு கிடைக்கும்படி செய்வது இத்தகைய வீட்டு தாதியர்களின் சேவையாகும்.

குடும்பத்தில் கிடைக்கும் இத்தகைய சேவையினால் உதவிபெறும் நோயாளிக்கு அவனுடைய சூழ்நிலையில், அவனுடைய குடும்பத்தின் உதவியோடு, பயமற்ற உணர்வோடு, விரைவில் குணமாகக்கூடிய மனநிலையை உருவாக்கி ஆரோக்கியமாக வெளியே வர உதவி புரிவதில் தாதியரின் பங்கு மிகச் சிறந்தது. இத்தகைய சேவைகள் செய்ய திறமை வாய்ந்த அனுபவமுள்ள தாதியர் என்று யாரைச் சொல்வது? மற்றவரை புரிந்து கொள்ளக்கூடிய சமூக கட்டுப்பாடுகளை உணர்ந்த அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்களை அறிந்தது மட்டுமின்றி, உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, இல்ல சிகிக்சை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களே திறமை வாய்ந்த அனுபவமுள்ள தாதியர் ஆவர்.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் நோயாளிக்கு தொடர்ந்து கவனிப்பு சரியாக கிடைக்க வாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், இத்தகைய பணி மிகவும் வரவேற்கத்தக்கது. அக்காலத்தில் பெண்கள் வீட்டிலேயே இருந்த பெரியவர், நோயுற்றவர்களுக்கு கொடுத்து வந்த பணிவிடை இப்போது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரையறை (Definition)

குடும்பத்தில் தாதியரின் சேவை என்றால் சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் மருத்துவ உதவிகள் கிடைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பேணவும், அதை பாதுகாக்கவும், உடல், உள்ளம் உணர்வுகளை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவி செய்தலுமே ஆகும்.

இல்ல சிகிச்சையின் அம்சங்கள்

முற்காலத்தில் இல்ல பராமரிப்பு என்பது எளிமையான முறையில் நோயுற்றவரை வீட்டில் கவனிப்பதாகும். ஆனால் வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் நோயுற்றவரை பராமரிக்கும் தன்மை, தத்துவம் மற்றும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வருகிறது.

1886 ஆம் ஆண்டு வீடுகளை சந்திக்கும் செவிலிய சேவை ஐக்கிய நாடுகளில் உருவானது. தீவிர மற்றும் நீண்டநாள் கவனிப்பு தேவைப்படும் எல்லாவகை நோயாளிகளுக்கும் கவனிப்பு அளிக்கப்பட்டது. 1900ல் வீடுகளை சந்திக்கும் செவிலிய சங்கம் உருவாக்கப்பட்டது. மற்றும் பொது நல பிரிவுகள் விரிவுபடுத்தப்பட்டது.

1909ல் இல்லப் பராமரிப்பு வளர்ச்சியில் பெரிய பாதிப்பு மெட்ரோபோலிடன் ஆயுள் காப்பீட்டில் மில்லியன் கணக்கில் பாலிசிதாரர்களால் ஏற்பட்டது. இதில் மூன்றாவது நபர் சேவைகளுக்கு பணம் செலுத்துபவராவார். அதுவரையிலும் நோயாளிகள் பணம் செலுத்தினர்.

1935 சமூக பாதுகாப்பு சட்டம் முதலில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது, தாய் நலம், தொற்றுநோய்கள் மற்றும் பொது சுகாதார பணியாளர்களின் பயிற்சி சேவைகளை தெரிந்தெடுத்து உள்ளூர் நிதி நிறுவனங்கள் உதவி செய்தன. மேலும் ஏழை மற்றும் வயதானவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

எப்படிப்பட்ட சமூக பொருளாதார நிலையில் இருந்தாலும் 65 வயதிற்கு மேல் மெடிகிளைம் என்ற சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட்டது. ஏழை மற்றும் இயலாத அனைத்து வயதினருக்கு மெடிக்ளைம் அமைப்பு ஏதுவாக அமைந்துள்ளது. 1966 ல் மெடிக்ளைம் காப்பீடு பயனுள்ளதாகவும், புதிய புரட்சியை இல்லப்பராமரிப்பில் உருவாக்கியது.

அவை

i) செவிலிய மாதிரி சேவையை மருத்துவ துறைக்கு மாற்றியது.

ii) குறிப்பிட்ட தேவையான சேவைக்கு பணம் திரும்பப்பெறுதல்

iii) இல்லப்பராமரிப்பு சேவைக்கு உரிய பணத்தையும் மெடிகேர் மூலம் பெறலாம். அடுத்து 1983ல் இல்லப் பராமரிப்பு சேவையில் பெரிய உடன்படிக்கை ஏற்பட்டது. காங்கிரஸ் எதிர்கால பணம் செலுத்தும் முறைக்கு ஒரு சட்டத்தை உருவாக்கியது. எந்த மருத்துவமனை மெடிகேர் பணம் திரும்ப பெறும் முறையை பின்பற்றுகிறதோ அந்த மருத்துவமனைக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு மிகப்பெரிய மருத்துவ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வழங்கப்பட்டது. அது அந்த மருத்துவமனை நிர்ணயித்த கட்டணத்திற்கு குறைவாக வழங்கப்பட்டது.

* முடிந்த அளவு அவர்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சரியான அறிவுரைகளை அளித்தல்.

பயன்கள் (Purpose)

* நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளுதல்

* தேவையான சரியான சிகிச்சையளித்தல்

* வலிகளை குறைத்து நோயாளிகளுக்கு வசதிகள் அளித்தல்

* நோயாளிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் நம்பிக்கையளித்தல்

* வீட்டிலுள்ள பொருள்களை சுத்தமாக, சரியாக உபயோகிக்க உதவி செய்தல்

இல்ல சிகிச்சை இன்றியமையாதது. ஏனெனில் பெண்களும் வெளியில் வேலை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் சமூகத்தில் தொடர்ந்து குடும்பத்தினருக்கு நலவாழ்வு அளிப்பது முந்தைய காலத்தைப்போன்று இல்லை. ஏனென்றால் வளர்ந்து வருகின்ற தனிக்குடும்பங்கள் மற்றும் பெண்களே குடும்பத்தலைவிகளாக இருந்து குடும்பத்தை நிர்வாகிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர நோய் பராமரிப்பு வீட்டில் தேவைப்படுவதால் இது சமூகம் சார்ந்த பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் மிகவும் பின்தங்கிய நிலை மற்றும் மாற்றப்பட்ட கவனிப்பு சுகாதார நல பணியாளர்களை சார்ந்தது.

நோயாளிகவனிப்பு மற்றும் சுகாதார நல சேவையில் செவிலி ஒரு முக்கிய குழு உறுப்பினர். இல்ல சிகிச்சை பழங்காலத்தில் பொது மற்றும் சமூக சுகாதார சேவையாக இருந்தபோதிலும் இப்போது குறுகியது. இல்லத்தில் தாதியரின் சேவை என்பது முழுமையான ஒருங்கிணைந்த நல கவனிப்பு, தனிப்பட்ட இடங்களில் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஆரோக்கியத்தை பேணுதலும், பாதுகாத்தலும், அதிக அளவு சுகாதாரத்தின் மூலம் நோயை குறைப்பதாகும்.

கொள்கைகள் (Principles)

* குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல உறவுமுறைகளை வளர்த்துக் கொள்ளுதல்

* குடும்பத்திலுள்ள நபர்கள், அவர்களின் வேலைகள், படிப்பு, மதம், பழக்க வழக்கங்கள் போன்ற விவரங்களை சேகரித்தல்

* குடும்பத்திலுள்ள உடல்ரீதியான பிரச்சனைகளை கண்டறிந்து சேவை தேவையானவர்க்கு முன்னுரிமை அளித்தல்

* குடும்பத்தில் ஆரோக்கிய வாழ்விற்கு அவர்களுடன் திட்டமிடவும் அதை செய்து முடிக்கவும் உதவி செய்தல்

* தன் குடும்பத்திற்கு தாங்களே பொறுப்பேற்று, உடல் ஆரோக்கியம், சத்துணவு, மன ஆரோக்கியம் போன்றவற்றை பேண கற்றுக்கொடுத்தல்

விட்டு சேவை மையங்கள்

* பொது மருத்துவமனை

* மருந்தகம்

* உடற்பயிற்சி சிகிச்சை மையம்

* நோய்க்குறி ஆய்வகம் (Laboratory)

* குடும்ப ஆலோசனை மையம்

* மருத்துவ கருவிகளும் பொருள்களும் வினியோகிக்கும் மையம்

* பல் மருத்துவமனை

* சமூக ஆலோசனை மையம்

* சிறுதொழில் மையம்

* சத்துணவு ஆலோசனை மையம்

நோயுற்றவரை வீட்டில் பராமரித்தல்

வீட்டில் யாராவது நோயுற்றால், அவரைப் பார்க்க வரும்படி நலவாழ்வுப் பணியாளர் அழைக்கப்படலாம்,

1. அந்த நோயின் விளைவு என்ன என்று உணர்ந்துகொண்டு அந்த நோய் குடும்பத்திலும் மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கும் என்று அறிந்து சேவை புரிய வேண்டும்.

  1. தந்தையாக இருந்தால் கவலையும், குடும்பத்திற்குப் பாதுகாப்பு அற்ற உணர்வும் இருக்கும்.
  2. தாயாக இருந்தால் அந்த தாயே கவலைப்படுவாள் வழக்கமாக அவள் தான் குடும்பத்தை நிர்வகிக்கிறாள் என்பதால் வீட்டில் குழப்பம் இருக்கும். குழந்தைகள் கவலை, பாதுகாப்பின்மை ஆகிய உணர்ச்சியுடன் இருப்பார்கள்.
  3. ஒரு குழந்தையாக இருந்தால் தாய் மிகவும் கவலையடைவாள். மருத்துவப் பராமரிப்பு உதவியைத் தானே செய்ய விரும்புவாள்.
  4. வேறு உறவினராக இருந்தால் அவருடன் நல்லுறவு இருந்தால், குடும்பத்தாரின் மனப்பான்மை உதவிகரமானதாக இருக்கும். அவருடன் உள்ள உறவு நன்றாக இல்லை என்றால், அவரால் ஏற்பட்ட அதிகப்படியான சுமையை எண்ணி கோபம் அடைவர் ஒத்துழைக்காமலும் இருப்பர்.

2. மதிப்பீடு : நோயுற்றவரின் நிலை மற்றும் சூழ்நிலையை மதிப்பிட்டு முதலில் அது என்ன வகையான நோய் என்று கண்டுபிடிக்க வேண்டும்

அ.) நோயின் அடையாளங்களைப் பற்றி கேள்விகள் கேள்.

ஆ.) அவரைப் பரிசோதனை செய். வெப்பநிலை, நாடித்துடிப்பு, மூச்சுநிலை ஆகியவற்றின் பலம், பலவீனம், நிறம் மற்றும் பிற அறிகுறிகள் உட்பட சோதனை செய்.

இ. நோயாளிக்கு முடிந்த அளவு சிறப்பான பராமரிப்பு தர என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய். அந்தச் சூழ்நிலை, வசதிகள், உதவி செய்ய முன்வருவோர் ஆகியவை பற்றியும் சிந்தித்துப்பார்.

3. நோயாளியை பராமரிக்க திட்டமிடுதல்:

அ. அவர் அச்சத்தைப்போக்கும் உறுதிமொழி, அன்பு, அவரது ஒத்துழைப்பைப்பெறத் தேவைப்பட்டால் கண்டிப்பு

ஆ. நியாயமான அளவு வசதியுடன் அவருக்கு ஒய்வு. மற்றும் நல்ல காற்றோட்ட வசதி.

இ. படுக்கை, சுற்றுப்புறம் மற்றும் நோயுற்றவரின் சுத்தம் குறிப்பாக வாய் மற்றும் தோல்

ஈ. ஊட்டம் அளிக்கும் உணவு, மற்றும் குடிக்கப் போதிய அளவு திரவங்கள் கொடுக்கப்படவேண்டும்.

உ. தேவைப்படும் மருந்துகளும் சிகிச்சையும், மருந்தை எப்படிக் கொடுப்பது என்றும் எளிய சிகிச்சைகள் அளிப்பது எப்படி என்றும் அவரது உறவினர்களுக்குக் கற்றுக்கொடு.

ஊ. தொடர்காப்புப் பராமரிப்பு (Follow-up Care) பற்றியும் எதிர்காலத்தில் நலமுடன் இருப்பது எப்படி என்றும் கற்பித்தல்

4. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுதல்:

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, குடும்பத்தாருக்கும் கிராம நலவாழ்வு வழிகாட்டிக்கும் (VHG) நலவாழ்வு மற்றும் நோயாளியைப் பராமரிக்கும் தனித்திறமைகளையும் கற்றுக்கொடு. நோய்க்கு காரணம், சுத்தம் மற்றும் நுண்மம் தீர்த்தல் ஆகியவற்றிற்குக் காரணங்கள், நல்ல காற்றோட்ட வசதி, சரியான உணவு, படுத்திருக்கும் நிலையை மாற்றுதல் போன்ற செவிலிப் பராமரிப்பு முதலியவை பற்றி நல்வாழ்வுக் கல்வியளித்தல் வேண்டும்.

5. மீண்டும் பார்வையிடச் செல்லுதல் :

நோயாளியின் நிலையையும் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் செவிலியர் பராமரிப்பையும், மற்றும் நலவாழ்வுப் போதனை பின்பற்றப்படுகிறதா, என்பதையும் சோதனைச் செய்யத் திரும்ப திரும்பப் பார்வையிட செல்ல வேண்டும்.

வயது முதிர்ந்தவரை வீட்டில் பராமரித்தல்

ஒரு தாத்தா அல்லது பாட்டி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வது, ஒரு சுமையாக இருக்கத் தேவையில்லை. பெரும்பாலான இடங்களில் வயதான ஒருவர், அந்தக் குடும்பத்துக்கே பெரிய உதவியாக இருக்கிறார்.

நலவாழ்வுப்பணியாளர் அந்த குடும்பத்துக்கு நண்பர் என்ற முறையில், அந்த வயதானவரும், மற்ற குடும்ப உறுப்பினர்களும், சரிப்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவும், அதனால் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியுடன் இருக்கவும் உதவ முடியும். வயதானவருக்கு உடல் வலிமை குறைந்திருக்கும். மற்றும் பார்வைக்குறைவு, காது கேட்பது குறைவு, பற்கள் இல்லாமல் இருப்பது, நினைவாற்றல் குறைவு போன்ற குறைபாடுகள் அவருக்கு இருக்கலாம். அதற்கு மாறாக, அவர்கள், நல்லறிவு மற்றும் அமைதி ஆகியவற்றைப் பல சமயங்களில் வழங்க முடியும்.

குழந்தைகளுக்கு வேடிக்கைகள் காட்டவும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கவனித்துக் கொள்ளவும் வயதானவர்களுக்கு நேரம் இருக்கிறது.

சில இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தாத்தா பாட்டியிடமே நீண்ட காலத்துக்கு விட்டு வருகிறார்கள்.

மக்கள் உடலாலும் மனதாலும் சுறுசுறுப்பாக இருந்து, நன்றாக சாப்பிட்டு, ஆனால் எடை மிகுதியாகாமல் இருந்து, புகைபிடிப்பதையும், அதிகமாகக் குடிப்பதையும் தவிர்த்து எப்படி தளர்ந்து ஓய்வு கொள்ளுவது (relax) மற்றும் அதிக வேலை செய்யாதிருப்பது என்று தெரிந்திருந்தால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் முதிர்வயது உட்பட உடல் நலத்துடன் இருப்பார்கள்..

வயதானவர்களின் நல்வாழ்வுப் பிரச்சனைகள்

வயதானவர்களுக்கு இருக்கும் ஒரு வகைப்பிரச்சனை அதிக இரத்த அழுத்தத்தால் வருவதாகும். உடல்நலம் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தால் இதை தவிர்க்க முடியும். அதிக இரத்த அழுத்தத்தின் விளைவாக இருதய நோய் அல்லது பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படலாம்.

வயது முதிர்ந்தவர்களின் பிற பிரச்சனைகள், மூட்டுகளில் வலி (Rheumatoid Arthritis) நெடுநாள் இருக்கும் இருமல், கால்களில் வீக்கம் இதில் சில சமயம் வெடிப்புப்புண்கள் எளிதில் குணமடையாதவை. வயதானவர்களுக்கு ஆண்பால் உறுப்புச் சுரப்பிகள் பெரிதாகி இருக்கலாம், மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கலாம்.

வயது முதிர்ந்தவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும், முடிந்த அளவு சுறுசுறுப்பாக இயங்கவும் சுதந்திரமாக இருக்கவும், அவர்களில் நலவாழ்வு பிரச்சினை உடையவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவரிடம் ஒப்படைப்புச் செய்யவேண்டும். அவர்கள் முழுமையாக குணமடையாமல் போகலாம், அல்லது மருத்துவத்தின் உதவியால் அதன் நோய் அறிகுறிகளிலிருந்து பெரும்பாலும் நிவாரணம் பெறலாம்.

கண்பார்வை அவருக்குப் பிரச்சினையாக இருந்தால் வயது முதிர்ந்த அவர் கண் பரிசோதனை செய்து கொண்டாரா என்று கேள். கண்ணாடி போட்டுக் கொள்ளுவது அதற்கு உதவியாக இருக்கலாம். அல்லது கண்புரை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை பெற உதவலாம்.

காது கேட்பதில் பிரச்சனை இருந்தால், வயது முதிர்ந்த அவருக்கு காது கேட்கும் கருவி ஓர் உதவியாக இருக்கும். பற்கள் விழுந்துவிட்டிருந்தால் வயது முதிர்ந்த அவரை பல் மருத்துவர் ஒருவரிடம் ஒப்படைப்பு செய்து 'வாய்ப்பல்' வரிசை பொருத்தச் செய்யலாம். இதன் பலன் அவருக்கு உணவு செரிமானம் ஆவதிலும் திருத்தமாக பேசுவதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.

முதியோரைப் பராமரிப்பதில் குடும்பத்தாருக்கு நல்வாழ்வுக் கல்வி

1. வயதானவர்கள் முடிந்த அளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கவும், வீட்டுக்கு உதவியாக இருக்கவும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும்.

2. முடிந்த அளவு, குடும்ப நடவடிக்கைகளிலும் முடிவுகள் எடுப்பதில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளவும்.

3. அவர்களது வயது முதிரமுதிர, பலவீனம் அதிகம் ஆக ஆக அவர்கள் பிறரைச்சார்ந்து இருக்க தங்களைத் தாங்களே சரி செய்து கொள்ள அவர்களுக்கு உதவும்.

4. உடல் பலவீனமாக இருந்தாலும், நிலையான பயிற்சியினால் வயது முதிர்ந்தவர்களின் மனம் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் ஆற்றல் உடையதாகவும் இருக்கும்.

5. வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவு உண்ண விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஊட்டம் தரும் உணவு தேவை.

6. விபத்துக்களுக்கு உள்ளாக நேரிட அதிக வாய்ப்புகள் உண்டு. பார்வை அல்லது காது கேட்டல் பலவீனம் அடைந்து இருப்பதால் அல்லது எலும்புகள் நொறுங்கும் தன்மை அடைந்திருப்பதால் வயது முதிர்ந்தோர் நடக்கும்போது குறிப்பாக வேகமான போக்குவரத்துள்ள பொதுச் சாலைகளில் நடக்கும்போது, அவரைவிட வயதில் இளையவர் ஒருவர் அவருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. வயது முதிர்ந்தவர்களுக்கு குளிர் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். வெதுவெதுப்பாக்கும் உடைகள் அவர்களுக்குத் தேவை.

8. அவர், வாழ்க்கையெல்லாம் கடைபிடித்த பழக்கங்கள், அவரது விருப்பு வெறுப்புகள் முடிந்த அளவு மதிக்கப்படவேண்டும். இது அவர் மகிழ்ச்சியாகவும் வசதியாக இருக்கவும் உதவும். திடீரென அவற்றை மாற்றுவது அவரை பெரிய அளவில் பாதிக்கலாம்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக, வயதானவர்களுக்குத் தேவை, அவர்களுக்கு பிறரால் அன்பு செலுத்தப்படுவது., அவர்களைப் பற்றி கவனம் செலுத்துவது. வெறுமனே கவனிக்கப்படுகிறார்கள் என்பது அல்ல. அந்த வயதான வாழ்க்கை துணைவர்களில் ஒருவர் இறந்த பிறகு மற்றொருவர் இருக்கலாம். நிரப்பப்பட தேவையான அந்த இடம் காலியாக விடப்பட்டிருக்கும்.

ஊனமுற்றவரை வீட்டில் பராமரித்தல்

ஊனமுற்றவர்கள் என்றால் முடவர்கள் அல்லது பக்கவாதம் உள்ளவர்கள் என்றுதான் மக்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். ஆனால் வேறு சில உடல் ஊனங்களும் உள்ளன. அவை குருடு மற்றும் செவிட்டுத்தன்மைகள். மன ஊனங்களில் பல வகைகளும் கூட உள்ளன. அவை மன வளர்ச்சி குன்றி இருத்தல் மற்றும் சுரப்பிக்கோளாறு காரணமாக உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றிப்போதல் போன்றவை. ஊனமுற்றவர்கள் குழந்தைகளாக இருக்கலாம். அல்லது எந்த வயது உடையவர்களாகவும் இருக்கலாம்.

பிரச்சினை பற்றி சிந்தித்தல் :

சில குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடனேயே பிறக்கின்றன. இதற்கு யார் மேலும் குற்றம் சுமத்த முடியாது. இதற்குக் காரணம் தெரியாமல் இருக்கலாம்.

சில ஊனங்களைக் கீழ்கண்ட வழிகளில் தடுக்கமுடியும்.

1. தான் மணம் செய்து கொள்ளப்போகும் பெண் ஆண் தனக்கு நெருங்கிய உறவினராக இல்லாமல் இருக்கும்படி தேர்ந்தெடுத்தல்.

2. கருவுற்ற பெண்கள் : அயோடின் கலந்த உப்புடன் கூடிய ஊட்டமுள்ள உணவு உட்கொள்ளுதல்

* தேவையற்ற மருந்துகளையும் மது மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்தல்.

* ஜெர்மன் தட்டம்மை உள்ள எவருடனும் பழகாமல் இருத்தல்.

3. பயிற்சி பெற்ற மருத்துவப் பெண்கள் பிரசவம் பார்த்துக் கொள்ளுதல்

4. குழந்தையின் உடல், மன வளர்ச்சி முறையாக இருக்க அதற்கு தாய்ப்பால் மற்றும் ஊட்ட உணவு தருதல்.

5. கைக் குழந்தைகளுக்கு நோய்த்தடை காப்புகள் குறிப்பாக வாய்வழியாக இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து அளித்தல்.

6. காது, கண்களில் வரும் பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே கவனிப்பு மற்றும் அடர் வைட்டமின் A குழந்தைகளுக்குத் தருதல்.

7. விபத்துகள் ஏற்படாது தடுத்தல். விபத்துக்கள் ஏற்பட்டால் முதலுதவியும் முறையான பராமரிப்பும் தருதல்.

ஊனமுற்றவரைப் புரிந்து கொள்ளுதல்

ஊனமுற்றவர்கள், பல காரணங்களினால் உளவியல் பிரச்சினைகளை உண்டாக்கிக் கொள்வார்கள். அவைகளில் சில பின்வருமாறு :

1. மனிதர்கள் இயல்பாகச் செய்யும் சில செயல்களைத் தாங்கள் செய்யமுடியாமல் மனம் உடைதல் (எ.டு) முடமான குழந்தைகள் ஓடித்திரிய முடியாது. அந்த மனிதர் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ள அவருக்கு உதவி தேவைப்படும்.

2. சமுதாயத்தின் தவறான மனப்பான்மை, ஒரு வேளை குடும்பத்தின் மனப்பான்மையே கூட தவறாக இருக்கும். ஊனம் என்பது விதியின் காரணமாக அல்லது ஒரு சாபத்தால் வருவது என்று மக்கள் நினைக்கலாம். அதனால் ஊனமுற்றவர் கவனிக்கப்படாமலும் ஒதுக்கப்பட்டும் இருப்பார்.

3. ஊனமுற்றவர்களில் சிலர் பிச்சையெடுக்கத் தொடங்குகிறார்கள் மற்றும் பயனுள்ள குடிமக்களாக வாழ முயற்சிப்பதில்லை .

4. படிக்கவோ, தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவோ ஊக்குவிக்கப்பட்டவர்கள். வேலை கிடைக்காத பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அதனால் சமுதாயத்தின் மேல் அவர்களுக்கு கசப்பு ஏற்படுகிறது.

விதிமுறைகள்

ஒவ்வொரு குடும்பத்தினருடன் நட்பு நிறைந்த அணுகுமுறையை மேற்கொண்டு, அவர்கள் மற்றவர்களுடனும், சமுதாயத்துடனும் நட்புடன் இருக்க உதவ வேண்டும்.

குடும்பத்தின் அளவு, வேலை, கல்வி, மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுப்பண்புகளை சேகரிக்க வேண்டும்.

அந்த வீட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நலவாழ்வுப் பிரச்சனையைக் கண்டுபிடி. அவர்களுடைய குடும்ப பிரச்சனையைக் குறித்து விவாதித்து அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைக் கண்டுபிடி. குடும்பத்தினருக்கு திட்டமிடுவதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் உதவி செய்.

குடும்பத்தினருக்கு அவர்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் குடும்பத்தின் சுற்று சூழல் சுகாதாரம் மற்றும் ஊட்டசத்துக்களை மேம்படுத்த வேண்டும்.

திறமையான தாதியரின் பண்புகள்

வீட்டு சேவை

தாதியர் தனக்குரிய பயிற்சி முடித்து அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். சரியான செயல்முறைகளை முறையோடு, தொற்று நீக்கி, மிகவும் சுத்தமான முறையில் செய்தலும், ஒழுக்க கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிப்பவராகவும், சூழ்நிலைகளை ஆராய்ந்து உடனே திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றுபவராகவும் முதலுதவி செய்யத் தெரிந்தவராகவும் வேலை செய்யுமிடத்திற்கேற்ப அவர்களின் சமூக அமைப்புகளை தெரிந்தவராகவும் இருந்தல் அவசியம்.

உடற்பயிற்சி சிகிச்சை

செயல் இழந்த, செயல் குறைந்த உடற்பகுதிகளுக்கு நேரடி அல்லது மறைமுகமான பயிற்சி தந்து அவ்வுறுப்பிற்கான செயல் செய்ய உதவுபவர். அவர் கைத்தேர்ந்த பயிற்சி பெற்றவராகவும், தன்னுடைய பெயரை அரசாங்கத்தில் பதிவு செய்து அதற்குரிய உரிமம் பெற்றவராகவும், சரியான திறமையும், சிகிச்சைக்குரிய ஆயுதங்கள் உடையவர்களாகவும் இருப்பர்.

மொழி பேச்சு சிகிச்சை

மருத்துவத் தொழிலில் இவர்கள் பங்கும் குறைவற்றது. பொதுவாக பக்கவாதம், அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு பிறகு பேச்சு இழந்தவர்களுக்கு குரல் பயிற்சி அளித்து மறுவாழ்வு தர திறமையுள்ளவர்கள்.

வேலைகளை கற்றுத்தரும் சிகிச்சை (Occupational Therapy)

இத்தகைய சிகிச்சை என்பது வாழ்க்கைக்கும், திறமைக்கும் ஏற்ற செய்முறை வேலைகளை முறைப்படி தகுந்த நோயாளிகள், நோயினின்று மீண்டு வருபவர்கள், குணமானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அறிவில் குறைபாடு உள்ளவர்கள், உடலில் குறைபாடு உள்ளவர்கள் தாங்களாகவே சிறுதொழில் செய்து தங்கள் நேரத்தையும், சக்தியையும் மற்றவர்களுக்கு பாரம் இல்லாமல் தங்களை தாங்களே தன் காலில் நிறகப்பழகும் பயிற்சி. இத்தகைய பயிற்சி தேர்ந்த பலகலை பயின்ற குறிப்பிட்ட திறனுள்ளவர் தேசிய வேலை தேர்வு மையத்தில் தேர்ச்சியடைந்து தன் தகுதியை பதிவு செய்த ஒருவரே செய்ய இயலும்.

ஆரோக்கிய சமூக சேவை மையம்

இத்தகைய சமூக சேவகர் முதுகலை சமூகவியல் படித்து, இதற்குரிய பாடப்பிரிவை தகுதிப்படிப்பாக்கி சமூகத்தில் தேவைப்பட்ட குடும்பங்களில் உணர்வு ரீதியான, சமூக ரீதியான நோய்களுக்கான ஆலோசனையும் குடும்ப சம்பந்தமான சமூக பிரச்சனைகளை சரியான கோணத்தில் பார்க்கவும், சுற்று சூழலிலுள்ள ஆரோக்கிய குறைப்பாட்டிற்கான காரணங்களை கண்டறிந்து. ஆலோசனை வழங்குபவர்.

குடும்ப ஆலோசனை மையம் :

இத்தகைய சேவை செய்ய சாதாரண மக்களே போதுமானவர்கள். ஆனால் இவர்கள் சேவை மருத்துவ உலகத்தித்திற்கு புது புத்துணர்வு தருவதாக உள்ளது. ஏனெனில் மற்றவர்களையே சார்ந்து வாழ வேண்டியுள்ள குழந்தை மற்றும் பெரியவர்களை வீட்டிலேயே கவனிக்கும் மிகப்பெரிய பொறுப்புடையவர்கள்.

போகமுடியாத இடத்தில் சேவை மையங்கள் (Out reach service)

இந்த சேவையை வரையறுக்க வேண்டுமானால், இயற்கை சூழலில் உள்ள அடிப்படை ஆரோக்கிய தேவைகளை, தெருவில், வீட்டில் கூட்டங்களில் மக்கள் சேருமிடங்களில் கிடைக்கச் செய்து மருத்துவ வசதிகள் எட்டாத நிலையுள்ளவர் களுக்கும். கிடைக்கச் செய்வதே. இத்தகைய சேவை செய்பவர் செவிலியரோ, அல்லது இதற்குரிய பயிற்சி பெற்றவரோ, இளையவர்களோ, அனுபவசாலியாகவோ இருக்கலாம். இத்தகைய இடங்களிலுள்ள மக்களின் தேவைகளை ஆராய்ந்து, சரியான மக்களுக்கு, சரியான சிகிக்சையைதர உதவிசெய்யும் மையம்.

வரையறை (ORS)

போக முடியாத இடத்தின் சேவை என்பது ஒரு நிறுவனத்தில் (அ) ஒரு குழுமத்தில் உள்ள தனிப்பட்ட நபரின் ஆக்க பூர்வமான எண்ணங்களும் செயல்களும் பொது மக்களுக்காகவும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளருக்காகவும் செய்யப்படும் சேவையாகும்.

நோய் தணிக்கும் கவனிப்பு

நோய் தணிக்கும் கவனிப்பு என்றால் தேவைப்பட்டவருக்கு வலியை நோயின் அறிகுறிகளை குறைத்து நோயை குணப்படுத்த முயல்வதே இதன் முக்கிய குறிக்கோளாகும். இதன் மூலமாய் குணமானவர்களின் வாழ்வில் தரத்தை உயர்த்துவதும் அவர்களை வாழ்விப்பதும் இதில் அடங்கும்.

வளர்ந்த பருவத்தினருக்கான 24 மணி நேரக் கவனிப்பு (Adultdaycare service)

இத்தகைய கவனிப்பு ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும். உடல் நலம், மனநலம், ஆரோக்கிய பராமரிப்பு, மறுவாழ்வு, ஜீவனாதாரம் கொடுத்து, சமூகத்தில் சரியான வாழ்க்கையை உறுதிபடுத்தும் மையமாகும். இத்தகைய மையத்தின் கீழ் கீழ்கண்ட பொறுப்புகளை கர்வத்தோடு சுமக்கிறது. அவைகளாவன.

* ஆரோக்கியத்தை மதிப்பிடுதல்

* மருந்து வினியோகம்

* சிகிச்சையில் பொழுது போக்கு

* குழு செயல்பாடுகள்

* நோயாளிகளை கையாளுதல்

• போக்குவரத்து

* தாதியர் மேற்பார்வை

* குளிப்பிடம், கழிப்பிடம் மற்ற இடங்களை நிர்ணயிப்பதில்

* மற்றவருடன் கலந்து பழகும் முறை

* சத்துணவு மதிப்பீடு

* கவனிக்கும் முறையில் பட்டியல்

இத்தகைய அரிய சேவைகளை பெறுபவர் வயதில் பெரியவர்கள் கை கால் ஊனமுற்றவரும் முதியவர்களுமே ஆவர்.

நோயுற்றவர்களை கவனிக்கும் மையங்கள்

இந்த மையங்களில் சாதாரண நோயிலிருந்து மனரீதியான பிரச்சனைகளை கையாளக் கூடிய அனுபவ மிகுந்த மேலாளர்கள் மனவியல் நிபுணர், வேலைகளை கற்றுக் கொடுக்கும் சிகிச்சையாளர், உடல் பயிற்சி சிகிச்சை நிபுணர், சமூக தொண்டர், மறுவளர்ச்சி பணியாளர் மற்றும் உதவியாளர்களைக் கொண்ட இந்த மையம் 1988ல் துவங்கப்பட்டது.

உதவும் மையங்கள் (Supportive Service) :

உதவும் மையங்கள் எந்தவித ஜாதி, மதம், இனம் என பாகுபாடு இல்லாமல், உடல் நலம் மனநலம் பாதித்தவர்களுக்கும், அனைத்து மக்களுக்கும், எல்லாவித சிகிச்சைகளும் கிடைக்க உதவி செய்கிறது.

சமூக தொண்டர்கள் மையம் (Social Worker Service)

சமூக தொண்டர் நல்ல பயிற்சி பெற்றவரும், ஆரோக்கிய பிரிவில் பயின்றவருமாவார். இவர் வாழ்க்கை பிரச்சனைகளை கையாளும் திறமையுள்ளவராவார். உதாரணமாக குடும்பங்களின் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு ஏற்படும் மனப்பதட்டம், நோயினால் ஏற்படும் கலக்கம், உறவு முறைகளில் ஏற்படும் குழப்பம் கருத்துப் பரிமாற்றம், மற்றும் சமூகத்தில் கிடைக்கும், மருத்துவ உதவிகள் என பலவகை பிரச்சனைகளை தீர்க்கும் மன வலிமையுள்ளவர்.

போகமுடியாத இடத்தில் கல்வியறிவு :

ஆரோக்கியத்தை பாதுகாக்க அதைப்பற்றின அறிவை போதிக்க பொது கழகத்தைச் சேர்ந்த கைதேர்ந்த ஆசிரியர்கள் அவர்கள் சேவைச் செய்யப்போகும் சமூகத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து தேவையான அறிவுரைகள் கூறுவதுடன் கல்லூரி மாணவர்களையும் இப்பணிக்கு உதவி செய்ய அமைத்துக்கொள்வர்.

மருத்துவ ரீதியான சமூக சேவைகள் (Medical Social Service) :

தனி நபர்கள், கணவன், மனைவி, குடும்ப நபர்களில் ஏற்படும் சமூக மனரீதியான மரபு வழியாக ஏற்படும் நோய்களிலிருந்து வெளியே வரும் வழிமுறைகளை அடைய உதவுபவர்கள்.

இவர்களின் மூக்கிய பங்குகள்

* நோயாளி மற்றும் குடும்ப நபர்களுக்கு உடல் நலதை கவனிக்க தேவையான திட்டங்களையும் வசதிகளையும் அறிவுறுத்துதல்.

• தீராத தொடர் நோயால் வாடுபவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ உதவிகள் பற்றிய விவரம் கூறுதல்.

* சரியான துறையின் மூலமாக சட்ட உதவி செய்தல்

* வயதானவர்களுக்கு தேவையான மறுவாழ்வு மையங்களுக்கு வழிகாட்டுதலும், மருத்துவமனையில் சேர்த்தலும் போன்ற உயரிய பணிகள் இவர்களதே.

மறுமலர்ச்சி மையங்கள் (Rehabilitation Services)

மறுமலர்ச்சி மையங்கள் என்பது உடலால் மனதால் சேவை செய்ய இயலாமல் (மாற்றுகிறனாளர்கள்) மறுமலர்ச்சி வாழ்வு கொடுத்து சமூகத்தில், குடும்பத்தில் அவர்களுக்குரிய உரிமைகள் திறமைகள் அறிய செய்தல்.

இதன் நோக்கங்கள்

* சமூகத்திலுள்ள மாற்றுதிறனாளிகளை கண்டறிதல்

* அத்தகைய மக்களுக்கு தேவையான மறுவாழ்வு அளித்தல்

* விழிப்புணர்வு கொடுத்து அவர்களின் அறிவுக்கண்ணை திறத்தல்.

* அதிகமான பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்

இதன் குணநலன்கள்

* ஊனத்தை குறைப்பதும், மாற்றுதிறனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதும்

* தனக்குத்தானே சம்பாதிக்கும் திறமையளித்தல்

– சுதந்திரமாக இருக்க கற்றுக் கொடுத்தல்

- சமூக சுதந்திரம் - உரிமை கேட்டல்

- பொருளாதார சுதந்திரம் (தனக்கான வருவாய்)

- உடல் ரீதியான சுதந்திரம்

- தின வேலைகளை செய்வது

- மனரீதியான சுதந்திரம், பிரச்சனைகளை தீர்ப்பது, முடிவுகளை எடுப்பது.

* நோயாளியைச் சார்ந்ததான மறுமலர்ச்சி திட்டம் தீட்டுவது.

* அனைத்து ரீதியிலும் அதாவது மன, உடல், உணர்ச்சி, சமூகம் ரீதியான வசதிகள் அனைத்தும் கற்றல்

மறுமலர்ச்சி மையத்தின் கொள்கைகள் (Principles of Rehabilitation)

* சமூதாயத்தில் கிடைக்கக்கூடிய சாதனங்களையே உபயோகித்தல்

* சமூதாயத்திற்க்கும், குடும்பங்களுக்கும் மாற்று திறனாளிகளின், திறமைகளையும், அவர்களை எவ்வாறு பயனுள்ளவர்களாக மாற்றுவது என்ற கல்வியறிவையும் போதித்தல்.

* மாற்று திறனாளிகளுக்கான திட்டமிடுதல், முடிவெடுத்தல், மதிப்பீடுகளில் சமூகத்தினையும் கலந்து கொள்ள செய்தல்.

* தேசிய மாவட்ட மருத்துவ செயல்பாடுகளில் வசதிகளை அதிகரித்து அவைகளை சரியாக உபயோகிக்க உதவுதல்.

* ஓற்றுமை, கல்வி, ஆரோக்கியம், சமூக கலாச்சாரம் - இவைகளை சரியாக உபயோகப்படுத்தி கொள்ளுதல்.

மறுமலர்ச்சி மையத்தினால் ஏற்படும் நன்மைகள் (Advantage of Rehabilitation)

* குறைந்த செலவு

* சமூக உதவி, பொருளுதவி கிடைக்கும்

* தரம் மிகுந்த சேவைகள்

* அனைத்து ரீதியான ஆரோக்கியத்திற்கு உறுதி

சமுதாயமும் மறுமலர்ச்சி மையமும்

சமுதாயத்தின் ஒத்துழைப்போடுதான் அரசாங்கம் மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், முடிவுகள், மதிப்பீடுகளை செய்ய வேண்டும். ஏனெனில் மக்களின் ஒத்துழைப்புதான் பல திட்டங்களை வெற்றியடைய செய்கின்றது. ஆனால் முதலில் சம்பந்தப்பட்ட குடும்பங்களையும், உரிமையடைந்த நபர்களையும் இத்தகைய திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தருதல் வேண்டும். இவர்கள் முன்னேற ஒவ்வொரு தனிப்பட்ட சமூதாயத்தினரும் தங்களுடைய ஒத்துழைப்பை தர வேண்டும் ஏனெனில் அரசாங்கம் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் பரவியிருப்பதை தவிர்க்க வேண்டும். இதைதவிர அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நிதி சரியான முறையில் உபயோகிக்கப்பட வேண்டும். இவை இரண்டையும் சரியாக செய்யும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்விலும் வசந்தம் வரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top