பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கல்லீரல் / கல்லீரல் - தெரிந்து கொள்ள வேண்டியவை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்லீரல் - தெரிந்து கொள்ள வேண்டியவை

கல்லீரல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆட்கொல்லி நோய்களில், மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது முன்னிலையில் இருந்தது, மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இந்த நோய் பாதிக்கப் பட்டவர்கள் 15 ஆண்டுகள் வரை சாதாரணமாக மாத்திரை மருந்தகங்கள் உதவியுடன் வாழ முடிந்தது.

அடுத்தது சிறுநீரகம் பாதிப்பு அடைந்தால் கூட டயலைசிஸ், அதாவது செயற்கை முறையில் இரத்தம் சுத்திகரிப்பு செய்து ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். ஆனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் இந்த மாதிரி எந்த துணை உதவியும் கிடையாது. ஒரு மாதம் முதல் அதிக பட்சம் இரண்டு வருடங்கள் மட்டுமே வேறு எந்த வித பிரச்சனை இல்லாமல் உயிர் வாழ முடியும், இடையில் கூட சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு இருக்கும் பட்சத்தில் வாழ் நாள் இன்னும் குறையத் தொடங்கும். அதனால் வரும் முன் காப்பது மட்டுமே, இல்லை இருப்பதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுவது மட்டுமே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

கல்லீரல்

இது உடம்பில் உள்ள மிகப் பெரிய உறுப்பு. சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்பு கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத் தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.

இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு நடுவில் பித்த நீர் பை வைக்கப்பட்டு இருக்கும். சிறுநீரகம் சிறுநீர் உருவாக்குவது போல இது பித்த நீர் உருவாக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்த நீர் இருக்கும். சாப்பிடும் போது உணவுடன் கலந்து கொண்டு வயிற்றில் இருந்து வரும் அமிலம் கலந்த உணவை காரத் தன்மையால் சமன் செய்த பிறகே அந்த உணவிற்கு செரிமானத் தன்மை கிடைக்கிறது.

இந்த நீர் தான் சில சமயம் வெறும் வயிற்றில் வாந்தி வந்தால் மஞ்சள் நிறத்தில் வெளியே வரும். ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும் போது அதில் உள்ள சத்துக்கள் உறியப் பட்டுக் குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரல் வருகின்றது.

சத்துக்கள்

செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும் போது அதில் உள்ள சத்துக்கள் உறியப் பட்டுக் குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரலுக்கு வருகின்றது.

சத்துக்கள் என்றால்

  • ஒரு கட்டடம் கட்ட தேவையான அடிப்படை மூலக்கூறுகள், செங்கல், சிமெண்ட், மற்றும் நீர். மரம் மற்ற பொருட்கள் எல்லாம் துணைப் பொருட்கள். இதைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய அளவில் வேண்டுமென்றாலும், எழுப்பிக் கொள்ளலாம். அதே போல் நாம் சாப்பிடும் எல்லா வகையான உணவும், கார்போஹைட், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்களால், கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • திட, திரவ உணவுகள், சைவ மற்றும் அசைவ உணவு எல்லாவற்றிலும் இவை மட்டுமே உள்ளது, கலந்து இருக்கும் விகிதம் மட்டுமே மாறுபடும்.
  • நாம் உணவு சாப்பிட்ட பின் அதை உடைக்கும் பணி வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஆரம்பிக்கிறது. மெல்லும் போது, உணவு உடைக்கப் பட்டு நொதிகள் கலந்து வேலை செய்ய ஏதுவாகின்றது.
  • இது இரைப்பை வழியாக செல்லும் போது, ஆசிட் ஊற்றி தரையை கழுவப்படும் போது எவ்வாறு அழுக்குகள் இல்லாமல் சுத்தப்படுத்தப் படுமோ அதே மாதிரி உணவில் இந்த அடிப்படை கூறுகள் தவிர மற்றவை சுத்தம் செய்யப்படுகின்றது.
  • அமிலம் கலந்த உணவை சிறு குடலில் அதன் ph தன்மை நிலைப்படுத்துவதற்காக அதனுடன், கல்லீரல் இருந்து வரும் பித்த நீர் கலக்கப்படுகிறது. பித்த நீர் சமன் படுத்துவதுமட்டும் இல்லாமல், எண்ணெய் பிசுக்கு நீக்கும் டிடர்ஜெண்ட் சோப்பு போல, உணவில் கலந்து உள்ள கொழுப்புக்களை, கரைக்கிறது.
  • அதன் பின், அதில் கணையத்தில் இருந்து வரும் என்சைம் அதாவது, நொதிகள் உணவுடன் கலந்து, வேதியியல் செரிமானம் (chemical digestion) அதை அணு அணுவாக, உடைக்கிறது.
  • கார்போஹைட்ரேட்-டின் அடிப்படை மூலக்கூறு, குளுக்கோஸ்.
  • புரதம் அமினோ அமிலமாகவும், (amino acid) கொழுப்பு சத்து, கொலஸ்டிரால், மற்றும் கொழுப்பு அமிலம் (fatty acid) ஆக பிரிக்கப் பட்டு உறியப் பட்டு சிறு குடலில் உள்ள இரத்த நாளங்களின் மூலம் கல்லீரலுக்கு வருகின்றது.
  • இங்கே இதன் வேலை முடிந்த பின்னர் தான் இருதயம் மூலம் உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு செல்கிறது
  • கிட்டத்தட்ட வாய் வழியாக உட்கொள்ளப்படும் உணவு, மருந்து மற்றும் மது எல்லாமும் கல்லீரல் மூலம் பரிசோதிக்கப்பட்டு, தேவை இல்லாதவை நீக்கப்பட்டு அதன் பின் தான் உடலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

நுண் கட்டமைப்பு (microscopic structure)

கிட்டத்தட்ட வாய் வழியாக உட்கொள்ளப் படும் உணவு, மருந்து மற்றும் மது எல்லாமும் கல்லீரல் மூலம் பரிசோதிக்கப்பட்டு, தேவை இல்லாதவை நீக்கப்பட்டு அதன் பின் தான் உடலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

கல்லீரலை ஓரு சிறு நீர்த்தொட்டி ஆக உருகவம் படுத்திக் கொள்ளவும், தொட்டிக்கு நீர் உள்ளே வரவும், நீர் வெளியேறவும் குழாய்கள், உள்ளே வரும் நீரும், வெளியேறும் நீரும் சம அளவில் இருந்தால் மட்டுமே தொட்டியில் அழுத்தம் ஓரே சீராக இருக்கும். இல்லை என்றால், அழுத்தம் அதிகமாகி உடைய வாய்ப்பு உள்ளது.

வழக்கமாக உடலில் சுத்த இரத்தம் ஒடும் குழாய்கள் – தமனி (artery) அசுத்த இரத்தம் ஒடும் குழாய்கள்- சிரை என்று (veins) இரண்டு வகை உண்டு. எல்லா உறுப்பும் சுத்த இரத்தம், தமனி வழியாக உள்ளே எடுத்துக் கொண்டு அதன் வேலை முடிந்ததும், கழிவுகளும் சேர்த்து சிரை வழியே வெளியே வரும். ஆனால் கல்லீரல் இதற்கு விதி விலக்கு, இங்க உள்ளே வரும் இரத்தம் 70% சதவிகிதம் portal vein மூலமும் 30% மட்டுமே ஈரல் தமனி (hepatic artery) மூலம் வருகிறது. சிறு குடலில் இரைப்பை (stomach), உணவுக்குழாய் (esophagus), மண்ணீரல் (spleen), கணையம் (pancreas), பெருங்குடல் (large intestine) ஆகியவற்றிலிருந்து வெளியே வரும் அனைத்து அசுத்த இரத்தமும், போர்ட்டல் சிரை மூலம் கல்லீரலுக்கு வருகின்றது.

இந்த நீர்த் தொட்டியாக அறுங்கோணம் வடிவில் உள்ள ஒரு சைக்கிள் சக்கரத்தை நினைத்து கொள்ளுங்கள். டயர் மாதிரி போர்ட்டல் சிரை சுத்தி இருக்கின்றது. அதிலிருந்தது கிளைகள் மூலம் இரத்தம் சைக்கிள் கம்பிகள் வடிவில் நடு மையம் நோக்கி வருகின்றன. நடு மையத்தில் central vein அந்த இரத்தம் உள் வாங்கி ஈரல் சிரை (hepatic vein) வழியாக, இருதயம் நோக்கி மகா சிரை (inferior vena cava) நோக்கி அனுப்புகிறது. இப்பொழுது அந்த சைக்கிள் கம்பிகள் வடிவம் வருவோம். அந்த இடத்தில் தான் ஈரல் செல்கள் (hepatocytes) வரிசையாக அடுக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், கல்லீரலின் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது.

ஈரல் செல் (hepatocyte) கல்லீரலின் அடிப்படை அலகு ஆகும். இது நாம் சிறு வயதில் படித்த செல் அமைப்பிற்கு ஒத்தது தான். செல் சுவர் (cell membrane) மைட்டோ காண்ட்ரியா (mito chondria), சைட்டோ பிளாசம், மற்றும் நியூக்ளியஸ் என்ற பாகங்கள் உடையது. ஏன் இவ்வாறு பிரித்து கூறப்பட்டுள்ளது என்றால் இவை எல்லாம் தனித்தனியாக வேலை செய்கின்றன.

ஈரல் செல் (hepatocytes) தவிர, பித்த நீர் நாள செல்கள் (cholangio cytes), கிருமி அழிக்கும் செல்கள் (macrophages) போன்றவைகளும் உள்ளது.

இவைகள் பற்றி தெளிவாக ஏன் சொல்லுவதென்றால், ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு இடத்தை தாக்குகிறது, இதனால், ஒவ்வொரு நோய்க்கும் தனியாக மருந்துகள் தேவைப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் வெளியே மஞ்சள் காமாலை நோய் (jaundice) என்று ஒற்றை வரியில் அடங்கி விட்டது. அதனால் தான் மஞ்சள் காமாலை நோய்க்கு, இவ்வளவு காரணங்கள். அதனால் தான், முதலில் இங்கே பாதிக்கப்பட்ட இடம் மற்றும் செல் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்னர் மட்டுமே வைத்திய முறை பற்றி முடிவு செய்ய வேண்டும்.

குடலில் இருந்து வரும் சத்துக்கள், மூலப் பொருட்கள் ஆக கொண்டு வளர் சிதை மாற்றம் செய்து உடலுக்கு தேவையான பொருட்களாக மாற்றுவதில், ஈரல் செல் (hepato cyte) தான் முக்கிய பங்கு ஆற்றுகிறது. முதலில் கார்போஹைட்ரேட் வளர் சிதை மாற்றம். (Carbohydrate metabolism) நாம் சாப்பிடும் உணவில் பெரும் பங்கு வகிப்பது இது. அரிசி முழுவதும் கார்போஹைட்ரேட்டினால் மட்டுமே ஆனது. சோறு ஆனது, அதன் அடிப்படை அலகு, குளுக்கோஸ் ஆக, குடலில் பிரிக்கப்பட்டு, இரத்தம் மூலம் கல்லீரலுக்கு வருகின்றது. இது எப்பவும் ஓரே அளவாக இருப்பதில்லை. நன்றாக சாப்பிடும் போது, மிக அதிக அளவிலும், சாப்பாடுக்கு இடைப்பட்ட நேரங்களில் குறைவாகவும், விரத நாட்களில், ஒன்றும் இல்லாமலும் இருக்கிறது. அந்த நேரங்களில், உடம்பில் மற்ற பாகங்களுக்கு செல்லும் இரத்தத்தில், சர்க்கரை அளவை ஓரே சீராக சம நிலையில் வைத்து இருக்கும் பொறுப்பு கல்லீரல் சார்ந்தது. சாப்பிட்டு முடிந்ததும், அதிக அளவில் வரும் குளுக்கோஸ், கிளைகோஜன் (glycogen) ஆக மாற்றம் செய்யப்பட்டு இதில் சேமித்து வைக்கப்படுகின்றது. இடைப்பட்ட நேரங்களில், உணவு எடுக்க தாமதமாகும் போது அல்லது விரத காலங்களில் இதை மீண்டும் குளுக்கோஸ் ஆக, மாற்றி ஓரே சீரான நிலையை அடைய வைக்கிறது. அதனால் கல்லீரல் உடல் சக்தியின் சேமிப்பு கிடங்கு என்று சொல்லலாம். அதனால் தான் கல்லீரல் பாதிக்கப்படும் போது அதிக அளவு கரும்புச் சாறு போன்ற குளுக்கோஸ் நிறைய உள்ள உணவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.

புரதச் சத்து வளர்சிதை மாற்றம் (protein metabolism)

அசைவ உணவு, பருப்பு மற்றும் புரதம் சத்து நிறைந்த உணவுகள் உட் கொள்ளும் போது, அது அமினோ அமிலம் ஆக குடலில் சிதைக்கப்படும் போது, அம்மோனியா (NH4) எனப்படும் வாயு உருவாகிறது. இந்த வாயு இரத்தம் மூலம் மூளையைத் தாக்கி அதனை செயல் இழக்க செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கல்லீரல் இதை வேதி வினைகள் மூலம் யூரியா ஆக மாற்றி பித்த நீர் மூலம், மலத்துடன் வெளியேற்றி விடுகிறது. கல்லீரல் பாதிக்கப்படும் போது இந்த பணி சரி வர நடக்காத காரணத்தினால், அம்மோனியா முளையைத் தாக்கி, அதன் சுதாரிப்பு தன்மையை படிப்படியாக இழக்கச் செய்கிறது (hepatic encephalopathy). இதனால் மட்டுமே, அந்தக் காலங்களில் புரதச் சத்து உள்ள உணவு குறைந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அசைவ உணவுகள் தவிர்த்து பத்தியம் மேற் கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப் பட்டது. கல்லீரல் பாதிப்பு சரியான பிறகு எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு புரதச் சத்து கல்லீரல் உள்ளே வரும் போது, அவை கொழுப்பாக மாற்றி சேமிக்கப் படுகின்றது.

கொழுப்பு வளர் சிதை மாற்றம் (Lipid metabolism.)

கொலஸ்ட்ரால் உருவாக்குதல், மற்றும் கொழுப்பு அமிலங்களை உடைத்து உடலுக்கு தேவையான சக்தியை வழங்கல், லைப்போ புரோட்டின் தயாரித்தில் போன்றவை முக்கியமான வேலைகள் ஆகும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள எந்த ஒரு சத்தும் அடுத்த வகையாக மாற்றிக் கொள்ள கல்லீரலால் முடியும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தால் கூட இரத்ததில் எப்படி கொலஸ்டிரால் அதிகம் உள்ளது என்று சந்தேகம் படுவர்களுக்கு உள்ள பதில் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : டாகடர் விகடன் மாத இதழ்

ஆக்கம் : Dr. M. ராதா – Consultant hepatologist and gastroenterologist

2.96296296296
அ.ஜாக்குலீன் மேரி Mar 18, 2019 02:55 PM

எனக்கு கல்லீரலில் கொழுப்பு உள்ளது டெஸ்டு செய்யப்பட்டுள்ளது அதன் விளக்கம் வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top