অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டான்சிலுக்கான ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்

டான்சிலுக்கான ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்

ஆயுர்வேத அணுகுமுறை

நவீன மருத்துவத்தில் ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பார்கள். மருந்துகளுக்குச் சரிப்பட்டு வரவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிடுவார்கள். டான்சில்ஸ் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பிறகு சளியோ, இருமலோ மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. அழற்சி மாறிய பிறகே இதைச் செய்வார்கள்.

ஆயுர்வேதத்தில் இது கபம் சார்ந்த நோயாகவும், துண்டிகேரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

# இந்த நோயாளிகளுக்குச் சிற்றரத்தை சூரணம், எலுமிச்சம் பழச் சாறில் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்துத் தொண்டைக்கு வெளியே சூடாக்கி பற்றுப்போட வேண்டும்.

# நொச்சியிலையை வெந்நீரில் கொதிக்க வைத்து ஒரு துணியை அதில் முக்கிப் பிழிந்து, சிறிது கற்பூரமும் சேர்த்து ஒத்தடம் கொடுக்கலாம்.

# கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருங்காலி, அதிமதுரம், ஏழிலம்பாலை போன்றவற்றைக் கஷாயம் வைத்து இளஞ்சூட்டில் அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.

# உள்ளுக்குச் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை சூரணத்தைத் தேன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

# இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவு (தண்ணீர், சூப்) எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.

# கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து, அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்துத் தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.

# இந்த மாதிரியான நேரத்தில் பேச்சைக் குறைப்பதும் அவசியம்.

# அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

# ஆடாதோடை இலை, வேர் சம அளவு எடுத்து அத்துடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குறையும்.

# இஞ்சிச் சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல், நெஞ்சில் கபம் சேருதல் குறையும்.

# இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி ஆகிய மூன்றையும் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

# கற்பூரவல்லியின் சாறு 10 மி.லி. எடுத்து, தேன் சேர்த்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

# கடுகைப் பொடி செய்து தொண்டையில் பற்று போட்டால் தொண்டை வலி குறையும்.

# கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்துப் பற்று போட்டால் வலி குறையும்.

# நோய் சற்றுக் குணமடைந்த பிறகு மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்து காந்தம் நெய், சியவனபிராச லேகியம், வெண்பூசணி லேகியம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

# தலைக்கு நொச்சித் தைலம், துளசித் தைலம் போன்றவற்றைத் தேய்த்துக் குழந்தையைக் குளிப்பாட்டலாம்.

# வைட்டமின் சி உள்ள மஞ்சள், ஆரஞ்சு, காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு அதிகம் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

# இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும் மிளகையும் மென்று சாப்பிடலாம்.

# பாலில் மஞ்சள் தூள், தேன், பொடித்த மிளகு ஆகியவற்றைப் போட்டு இரவு படுக்கும்போது அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.

# கடுக்காய் தோல் சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கிவிட வேண்டும்.

# சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடத் தொண்டை கரகரப்பு குறையும். அல்லது பூவரச வேர், பட்டைக் கஷாயம் செய்து கொப்பளித்துவரத் தொண்டை தொடர்பான பிணி குறையும்.

மேலும் சில பிரச்சினைகள்

தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip), டான்சிலுக்கு மற்றொரு காரணம். தொண்டை தடிமன் போன்ற நோய்கள் ஏற்படும்போது மூக்கில் நீராக ஓடுவதை உணரலாம்.

இரைப்பையில் இருக்கும் அமிலம் மேலெழுந்து வருவது தொண்டை வலிக்கு மற்றொரு முக்கியக் காரணம். இதை மருத்துவத்தில் Gastro esophageal reflux என்பர். நெஞ்செரிச்சல், உணவு மேலெழுந்து வருதல், புளித்த ஏப்பம், வாயில் அமிலச் சுவை போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமல், ஆஸ்துமா ஏற்படுவதும் உண்டு.

சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவு வகைகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. குளிர் காய்ச்சல் ஏற்படலாம். சளி, எச்சில், கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.

சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கிவிட வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடும்போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும்.

தவிர்க்க வேண்டியவை

# தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ஆற்றில் குளித்தல், எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுதல், புளித்த தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

# குளிர்ச்சியான எண்ணெய்ப் பசையுள்ள பதார்த்தங்களைத் தவிர்ப்பது ரொம்ப நல்லது.

# குளிர்பானம், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பால், மோர் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சர்க்கரை சேர்த்த இனிப்புப் பண்டங்களையும் சாப்பிட வேண்டாம்.

கேள்வி பதில்கள்

'டான்சில்' என்றால் என்ன?

'டான்சில்' என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. அது, வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இருபுறமும் உள்ள, 'டான்சில்,' நாக்கு அடியில் உள்ள 'டான்சில்', மூக்குக்குப் பின்னால் உள்ள, 'டான்சில்' என, மூன்று வகைகள் உள்ளன.

குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டால், 'டான்சிலைட்டிஸ்' ஏற்படுமா?

ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ச்சியான தண்ணீர் போன்றவை, 'டான்சிலைட்டிஸ்' வீக்கத்திற்கு உதவி செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும் போது, அந்த குளிர்ச்சியானது 'டான்சில்' ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும். இந்த செயலானது, 'டான்சிலைட்டிஸ்'களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

'டான்சிலைட்டிஸ்' வகைகள் உள்ளனவா?

'டான்சிலைட்டிஸ்' இரண்டு வகைப்படும். ஒன்று, திடீர் வீக்கம்; மற்றொன்று, நாள்பட்ட வீக்கம். முதல் வகையில், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு கழுத்தில் நெரி கட்டும். இதற்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

நாள்பட்ட 'டான்சிலைட்டிஸ்' பாதிப்புகள் என்ன?

நாள்பட்ட, 'டான்சிலைட்டிஸ்' பாதிப்பினால் நோய் எதிர்ப்பு சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடும். கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகி விடும். இதனால் காய்ச்சல் அடிக்கடி வரும். வலி நிரந்தரமாகி விடும். 'டான்சிலில்' சீழ்பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். இதனால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிப்படையும். காது கேட்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.

'டான்சில்' வீங்குவது ஏன்?

உணவுகளின் மூலம் உட்புகும் கிருமிகள் சக்தி வாய்ந்தவையாக இருந்தால், முதலில், 'டான்சில்'கள் பாதிக்கப்படும். காய்ச்சல், சளி பிடிக்க துவங்கும் முன், தொண்டை வலிப்பது இந்த காரணத்தால் தான். ஒட்டுமொத்த, 'டான்சில்'களும் அந்த கிருமிகளோடு போராடும் போது, 'டான்சில்'கள் மொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் 'டான்சிலைட்டிஸ்' என்பர்.

ஆதாரம் : நலம் வாழ பத்திரிகை - டாக்டர் எல். மகாதேவன்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate