অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வாதக்காய்ச்சல் நோய்

வாதக்காய்ச்சல் நோய்

வாதக்காய்ச்சல் நோய்

குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease). நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.

குழந்தைகளை மட்டுமல்லாது சில சமயங்களில் பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது.

தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் (TONSILS) என்ற உறுப்புகளின் அழற்சியாகவே குழந்தைகளிடத்தில் வாதக் காய்ச்சல் நோய் தன் தாக்குதலைத் தொடங்குகிறது. தொடக்க நிலையில் தொண்டை அழற்சி, காய்ச்சல், மூட்டு விக்கம் போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தவுடன் தொடக்க நிலையிலேயே தக்க மருத்துவ முறைகளின் மூலம், இதைக் கட்டுப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் இதயம் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

காரணங்கள்

எல்லாவகையான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வாதக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கை (Streptococci) என்ற ரத்தத்தைச் சிதைக்கும் தன்மையுள்ள நுண்ணுயிர்தான் இந்தக் காய்ச்சலை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம், குடியிருக்கும் வீட்டின் சுகாதார நிலை, சுற்றுச்சூழலின் தன்மை, சாப்பிடும் உணவின் தன்மை போன்றவை வாதக் காய்ச்சல் நோய்க்கான முகாந்திரத்தை அமைத்துக் கொடுக்கின்றன. போதிய காற்றோட்டம், போதிய சூரிய வெளிச்சம் இல்லாத நெருக்கடியான குடியிருப்புகளில் வாழ்வது வாதக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான நுண்ணுயிர்களை நன்றாகச் செழித்து வளர்ந்து பெருகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

இதுபோல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட முடியாத மக்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வாதக் காய்ச்சல் நோய் வரவாய்ப்புகள் அதிகம் உண்டு.

வாதக் காய்ச்சலை நுண்ணுயிரிகள் எப்படி ஏற்படுத்துகின்றன?

மேலே சொன்ன வழிகளில் வெளியில் இருந்து உடலுக்குள் நுழைய நுண்ணுயிர்கள் முயற்சிக்கின்றன. நமது உடலில் உள்ள நுழைவாயிலில் பல வகையான தற்பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அவை நுண்ணுயிர்கள் உள்ளே நுழையமுடியாத வகையில் அவற்றை அழிக்க முயற்சிக்கின்றன. இத்தகைய தற்பாதுகாப்புப் பணியில் தைமஸ் (Thymàv) போன்ற பலசுரப்பிகளுக்கு முக்கியமான பொறுப்பு உண்டு.

இந்தச் சுரப்பிகள் நோயை உண்டாக்கும் தீய நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள ஆன்டிபாடிஸ் (ANTIBODIES) எனப்படும் எதிர்ப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.

இவ்வகையான எதிர்ப்பொருள்கள்தான் தொண்டையில் உள்ள தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கும் போராட்டத்தில் இறங்குகின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற ஒரு புத்திசாலித்தனமாக அணுகுமுறையை நுண்ணுயிர்கள் பின்பற்றுகின்றன.வாதக் காய்ச்சலை  ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் மூலக்கூறுகளின் அமைப்பும், நமது உடலில் உள்ள மூட்டுத் திசுக்களிலும் இதய வால்வுகளின் திசுக்களிலும் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.

இதனால் நமது உடலில் உள்ள எதிர்ப்பொருள்கள் நுண்ணுயிர்களை மட்டும் அழிப்பதோடு அல்லாமல் அதே போன்ற மூலக்கூறு அமைப்புகளைக் கொண்ட திசுக்களையும் அழித்துவிடுகின்றன. அந்த வகையில் இதயத்தின் வதல்வுகளில் உள்ள திசுக்களையும் தவறாக அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக நமது உடலில் உள்ள இதயத்தின் வால்வுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக வாதக் காய்ச்சல் நோயால் ஈரிதழ் வால்வும், மகாதமனி என்ற மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள்தான் இதயத்தின் தூய்மையான ரத்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்த மிகவும் துணையாக உள்ளன.

இரண்டு வகையான பாதிப்புகள்

முதலாவதாக இதய வால்வுகள் நன்கு செயல்பட வேண்டும் என்றால் இந்த வால்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் நார்த்தசைகள் நன்கு விரிந்து செயல்பட வேண்டும்.

ஆனால் வாதக்காய்ச்சல் நோயானது இந்த வால்வுகளை சிதைத்து அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. வால்வுகள் சிதைவடைவதால் தங்களின் நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிப்போய்விடுகின்றன. இதைத்தான் வால்வுகளின் குறுக்கம் என்கிறார்கள். இவ்வாறு வால்வுகளின் குறுக்கம் காரணமாக ரத்த ஓட்டமானது தடைபட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.

சில சமயங்களில் வாதக் காய்ச்சல் நோயானது இதய வால்வுகளைச் சிதைத்து வால்வுகளின் இதழ்களை அளவுக்கு மீறி விரிவடையச் செய்கின்றன. இதனால் ரத்தக் குழாய்களுக்கு மொத்த ரத்தமும் செல்லாமல் இதய அறையில் லேசாகக் கசிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக ரத்தக் குழாய்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இவ்வாறு வால்வுகள் விரிவடையும் நிலையை வால்வுகளின் செயலற்ற தன்மை (INCOMPETENCE) என்பார்கள்.

இந்தியாவில் வாதக் காய்ச்சல் நோய் என்பது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதோடு மக்களின் வாழ்க்கைத்தரம், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழலின் தன்மை, தட்பவெப்ப நிலை இவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாய பொருளாதாரத் தொடர்புடைய பிரச்சனையாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஏனெனில் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணிகள் நம் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால்தான் இந்தியாவில் மட்டும் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாதக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உலக அளவில் குழந்தைகளில் எண்ணிக்கையில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெரும்பான்மையான குழந்தைகள் போதுமான சுகாதார வசதிகளும், கழிப்பறை வசதிகளும், காற்றோட்டமும் இல்லாத, மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தூய்மையான நீரும் கிடைக்காத நிலையும் அவர்களின் ஆராக்கியத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன.

மேலும் பெரியம்மை, போலியோ எனப்படும் இளம் பிள்ளைவாதம், கக்குவான் இருமல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தடுப்பு ஊசிகளைப்போல், வாதக்காயச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்னொரு பிரச்சனை என்னவெனில் வெறும் மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கும் சிகிச்சை முறையைக் கொண்டு வாதக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்க முடியாது. சுகாதாரப்பராமரிப்பு, குடிநீரின் தன்மை போன்ற பலவகையான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பன்முக வடிவம் கொண்ட சமூகப் பொருளாதார முகங்கள் கொண்ட சிகிச்சை முறையால்தான் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனவே இதைத் தடுக்க தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய அளவிலான திட்டம் மிகவும் இன்றியமையாதது.

ஆதாரம் : தினகரன்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate