অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரக இரத்தக் குழாய்களுக்கான ஆஞ்சியோகிராம்.

சிறுநீரக இரத்தக் குழாய்களுக்கான ஆஞ்சியோகிராம்.

ஆஞ்சியோகிராம் (Angiogram) என்றால் என்ன?

நம்மில் பலர் இதயத்திற்கு சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் கொரோனரி தமனிகளை (Coronory Arteries)யும் அதன் கிளைகளையும் படம் பிடித்துக் காட்டும் கொரோனரி ஆஞ்சியோகிராம் (Coronory Angiogram) என்ற மருத்துவப் பரிசோதனையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். சாதாரணமாய் ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனையில் சில முக்கிய தமனிகள் அல்லது முக்கியமான உறுப்புக்களின் தமனிகளைப் பற்றி அறிய அவைகளுக்குள்ளேயே ஒரு பிரத்யேக மருந்தைச் செலுத்தி ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கும் போது அவை ஒரு மரத்தின் கிளைகளைப் போலத் தெரியும். இதே போல நாம் சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்களை படம் பிடித்து பார்ப்பதையே சிறுநீரக ஆஞ்சியோகிராம்  (Renal Angiogram) என்று கூறுகின்றோம்.

இதற்கு நுண்கதிர்பட நிபுணர் (Radiologist)  தொடை அல்லது சில சமயம் கைகளிலுள்ள இரத்தக் குழாய்கள் வழியாக ஒரு நுண்ணிய பிரத்யேக ப்ளாஸ்டிக் குழாயை  (Vascular Catheter)  செலுத்தி அதை சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்களுக்குள் கொண்டு சென்று அதன் வழியே கான்ட்ராஸ்ட் (Contrast) எனப்படும் ஒரு சிறப்பு மருந்தை செலுத்தி அது சிறுநீரக இரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது அதை எக்ஸ்-ரே மூலம் படம் பிடித்து பின்னர் அதை ஆய்வு செய்து அளிப்பார்.

எதற்கு சிறுநீரகங்களின் இரத்தக் குழாய் அமைப்பை படம் பிடித்து பார்க்க வேண்டும்?

சிறுநீரகங்களுக்கு செல்லும் சிறுநீரக தமனிகளின் அமைப்பில் கோளாறு, சுருக்கம் இதனால் உயர் இரத்த அழுத்தம், சிலவகை சிறுநீரக செயலிழப்புகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கானில் ஒரு பக்க சிறுநீரகம் சுருங்கி காணப்படுதல்-அதன் காரணத்தைக் கண்டறிய என்ற பல காரணங்களுக்காக சிறுநீரக ஆஞ்சியோகிராம் தேவைப்படுகின்றது. சிறுநீரக மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறுநீரகங்களை தானமாக தருபவர்களின் சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்களின் அமைப்பை தெளிவாகத் தெரிந்து கொள்ள சிறுநீரக ஆஞ்சியோகிராம் தேவைப்படும்.

இது எவ்வாறு செய்யப்படுகின்றது?

ஆஞ்சியோகிராம் பரிசோதனை ஊடகக் கதிர் நிபுணர்களால் (ரேடியாலஜிஸ்ட்- Radiologist) காத்-லாப் (Cath Lab) என்ற பிரத்யேக பரிசோதனை அறையில் வைத்தோ அல்லது சீ-ஆர்ம் (C-Arm) என்ற சிறப்பு எக்ஸ் ரே மெஷின் உள்ள ஒரு சிறப்பு அறையில் வைத்தோ செய்யப்படும்.. பெரும்பாலும் ஒருநாள் உள்நோயாளியாக இருக்க வேண்டி வரும். நீங்கள் ஆஞ்சியோகிராம் செய்யப்படும் அறைக்கு மருத்துவக் கவுன் அணிந்து கொண்டு செல்லப்படுவீர்கள் அங்கே ஒரு நீள மேஜையில் படுக்க வைக்கப்பட்டு உங்கள் தொடையில் கிருமி நாசினிகள் தடவப்பட்டு சுத்தமாக்கப்படும். பிறகு அந்த இடம் சுத்தமான துண்டுகளால் மூடப்பட்டு வலியை மரக்கச் செய்யும் ஊசி மருந்து செலுத்தப்டும். ஊசி செலுத்திய இடத்தில் எதுவும் உணர்ச்சி இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு தொடையில் உள்ள ஒரு தமனி வழியாக ஒரு சிறப்பு ஊசியை செலுத்துவார். அதன் வழியாக காதிட்டர் எனப்படும் ஒரு மெல்லிய மென்மையா ப்ரத்யேக ப்ளாஸடிக் குழாயை  செலுத்துவார்.

எக்ஸ்-ரே மானிட்டரில் பார்த்துக் கொண்டே காதிட்டரின் நுனி சிறுநீரகங்களின் தமனிக்குள் நுழையச் செய்வார் பிறகு அதன் வழியாக கான்ட்ராஸ்ட் எனப்படும் பிரத்யேக மருந்தை செலுத்துவார். இந்த மருந்து செலுத்தப்படும் போது சிலர் உள்ளுக்குள் வெப்பமாக உணர்வார்கள் சிலருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றும் ஆனால் இந்த உணர்வுகள் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் அந்த மருந்தை செலுத்திய உடன் பல பிரத்யேக எகஸ் ரே படங்கள் உங்கள் சிறுநீரகங்கள் உள்ள பகுதியை வைத்து எடுக்கப்படும் எடுக்கப்பட்டு முடிந்தவுடன் உள்ளே செலுத்தப்பட்ட காதிட்டர் ட்யூப் வெளியே எடுக்கப்படும். எடுக்கப்பட்ட இடத்தில் இரத்தக்கசிவு வராமல் இருக்க 10 நிமிடங்கள் அழுத்தம் கொடுக்கப்பட்டு பின்னர் அங்கே ஒரு ப்ளாஸ்டர் பொறுத்தப்படும்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பின்னர் உடனே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்தல்

உங்களுக்கு சிறுநீரகங்களின் தமனிகளில் சுருக்கமோ அல்லது அடைப்போ இருப்பதாக சந்தேகித்து அதற்காக சிறுநீரக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் அவ்வாறெனில் உங்களில் முன்பே சம்மதம் கேட்டோ அல்லது ஆஞ்சியோகிராம் செய்யும் போதே சம்மதம் கேட்டோ சுருக்கம்/அடைப்பை அப்போதே சரி செய்யும் ஆஞ்சியோப்ளாஸ்டி என்ற சிகிச்சையை சில சமயம் நீங்கள் உடனே கூட செய்து கொள்ளலாம் அப்போது காதிட்டர் வழியாக ஒரு சிறப்பு பலூன் உள்ளே செலுத்தப்பட்டு சுருக்கம்/அடைப்பு உள்ள இடம் விரிவுபடுத்தப்படும்.  மீண்டும் சுருக்கம் / அடைப்பு வராமல் இருக்க இப்போது பிரத்யேக ஸ்டென்ட் (Stent) எனப்படும் சிறப்பு ட்யூபுகளும் பொறுத்தப்படும். இந்த சிகிச்சைக்கு பின்னர் உங்கள் சிறுநீரகத்தின் செயல்திறன் அதிகரிக்கவும் உயர் இரத்த அழுத்தம் குறையவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

பரிசோதனை முடிந்த பிறகு என்ன நடக்கும்?

நீங்கள் உங்கள் அறைக்கு திரும்ப அழைத்து வரப்படுவீர்கள். 4-6 மணி நேரம் நீங்கள் படுக்கையை விட்டு எழாமல், காலை ஆட்டாமல் படுத்திருக்க வேண்டும். தும்மலோ இருமலோ வந்தால் காதிட்டர் எடுத்த இடத்தில் உள்ள ப்ளாஸ்டரை பிடித்துக் கொண்டு செய்யும்படி சொல்லப்படும் அடிக்கடி உங்கள் நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் கண்காணிக்கப்படும். காதிட்டர் செலுத்திய இடத்தில் இரத்தக் கசிவோ, வீக்கமோ வருகின்றதா என்றும் கண்காணிக்கப்படும். எந்த சிக்கலும் இல்லை என்றால் நீங்கள் மறுநாள் வீடு திரும்பலாம். சில மருத்துவமனைகளில் அன்றே கூட திரும்பலாம்.

சிக்கல்கள்

சிலருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய காதிட்டர் செலுத்தும் இடத்தில் இரத்தக் கட்டோ இரத்தக் கசிவோ ஏற்படலாம் அதனால் தான் பரிசோதனை முடித்தவுடன் 4 மணி நேரம் அசையாமல் படுக்கச் சொல்வது நீஙகள் வீட்டிற்கு சென்ற பின்னரும் 2 நாட்களுக்கு அதிக எடை உள்ள பொருள் எதையும் தூக்கக் கூடாது. சிலருக்கு காதிட்டர் செலுத்தப்பட்ட இடத்தில் சிறிது வலியும் வீக்கமும் இருக்கலாம். பொதுவாக இது சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு இந்த பரிசோதனையில் கொடுக்கப்படும் கான்ட்ராஸ்ட் மருந்து சிறுநீரகங்களைப் பாதித்து இரத்தத்தில் கிரியேட்டினின் என்ற உப்பின் அளவை அதிகப்படுத்தக் கூடும். இதைத் தவிர்க்க இரத்த குழாய்கள் மூலம் மருத்துவத் திரவங்கள் கொடுக்கப்படும். நீங்களும் அதிக நீர் குடித்து இந்த மருந்தை சிறுநீர் வழியாக சீக்கிரம் வெளியேற்ற அறிவுறுத்தப்படுவீர்கள்.

இப்பரிசோதனையின் முடிவுகள் எப்போது கிடைக்கும்?

இப்பரிசோதனை முடிந்த உடனேயோ அல்லது அடுத்த நாளோ உங்களுக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே படங்களைப் பார்த்து ஆராய்ந்து சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்களைப் பற்றிய பரிசோதனை அறிக்கையை உங்கள் ரேடியாலஜிஸ்ட் தருவார். இந்த அறிக்கையை நீங்கள் எடுத்துச் சென்று உங்கள் சிறுநீரக மருத்துவரிடம் சமர்ப்பித்தால் அதை அவரும் பார்த்து உங்கள் சிறுநீரக இரத்தக் குழாய்களைல் உள்ள பாதிப்பு அதற்கான சிகிச்சை பற்றி விளக்கமாக கூறுவார்.

CT ஆஞ்சியோகிராம் (3-D Spiral CT Angiogram) MRI ஆஞ்சியோசிராம் (MRI Angiogram)

தற்போது ஆஞ்சியோகிராம் செய்ய புதிய நவீன முறைகளாக 3D ஸ்பைரல் CT ஆஞ்சியோகிராம் (3-D Spiral CT Angiogram) MRI ஆஞ்சியோசிராம் (MRI Angiogram) வந்துள்ளன. இந்த பரிசோதனைகளில் காதிட்டரை இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி கான்ராஸ்ட் மருந்தை செலுத்த வேண்டியதில்லை என்பதால் இதனால் வரும் மருத்துவச் சிக்கல்களை தவிர்க்கலாம். இந்த பரிசோதனைகளின் முடிவுகள் முந்தைய ஆஞ்சியோகிராம் முடிவுகளுடன் பெருமளவு ஒத்துப் போகின்றன என்றாலும் சிலசமயம் சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்களைப் பற்றி மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள குறிப்பிட்ட சிலருக்கு காதிட்டர் செலுத்தி செய்யப்படும் ஆஞ்சியோகிராம் தேவைப்படும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate