অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும்

சிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும்

சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) நோயாளிகளுக்கு இரத்த சோகை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். அதிலும் கண்டிப்பாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்களுக்கு 100 % இருக்கும்.

இரத்த சோகை என்றால் என்ன?

  • நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் சிவப்பு வண்ண நிறமிதான் இரத்தத்தில் ஆக்சிஜன் எனப்படும். பிராண வாயுவை உடலெங்கும் சுமந்து செல்கின்றது.  எந்த காரணத்தால் இதன் அளவோ அல்லது அதைக் கொண்டுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அது இரத்த சோகை (ANEMIA) என்று அழைக்கப்படுகின்றது.
  • இவ்வாறு குறைவதால் உடலில் உள்ள பல உறுப்புகளுக்கும் பிராண வாயுவின் விநியோகமும் பாதிக்கப்படுகின்றது.  இதனால் சக்தி, செயல்திறன் குறைக்கின்றது.  இவை உடல் வெளுப்பு, தளர்ச்சி, பலவீனம், சோர்வு, அதிகம் வேலை செய்தால் மூச்சிரைப்பு, என பல விதமாக வெளிப்படலாம்.
  • இரத்தச் சோகைக்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக உடலில் இரும்புச் சத்து குறைவு, B-வகை விட்டமின் சத்துக்கள் குறைவு, கண்ணுக்கு தெரிந்து அல்லது தெரியாமல் இரத்த சேதம் என இன்னும் பல காரணங்கள் உண்டு. ஆனால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு இரத்த சோகை வர ஒரு பிரத்யேக காரணம் உண்டு.  இவற்றோடு மேலே கூறிய சத்துக் குறைவுக் காரணங்கள் இரத்த சேதம் ஆகியனவும் கூட இருக்கலாம்.
  • நம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் தொடை, இடுப்பு போன்ற பெரிய எழம்புகளில் உள்ள மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகின்றன. உற்பத்தியான சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு இரும்பு சத்து போன்ற பல விதமான சத்துக்களுடன் சிறுநீரகத்தில் இருந்து உற்பத்தியாகும் எரித்ரோபாய்ட்டின் (ERYTHROPOIEITIN) எனப்படும் சத்தும் தேவை. சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறுநீரகத்தின் பல வித பணிகளுடன் இந்த வேலையும் பாதிக்கப்பட்டு எரித்ரோபாய்ட்டின் உற்பத்தி படிப்படியாக குறைந்து விடுகின்றது.
  • இதனால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அவைகளில் உள்ள ஹீமோக்ளோபினின் அளவு படிப்படியாக குறைந்து விடுகின்றது.  இதனை நாம் இரத்தச் சோகை அல்லது இரத்தக் குறைவு - அனீமியா என்று சொல்கின்றோம்.  கிட்னி ஃபெயில்யரில் இரத்தச் சோகைக்கு எரித்ரோபாய்ட்டின் குறைவு தவிர வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்றாலும் முக்கிய காரணம் இதுதான் மற்ற காரணங்கள் முன்பு கூறியிருந்தது போல் இரும்புச் சத்து குறைவு, விட்டமின்கள் குறைவு, குடல் வழியே கண்ணுக்கு தெரியாமல் இரத்த சேதாரம், டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிலுள்ள இரத்த சேதாரம் ஆகியன கூடுதல் காரணங்களாகும்.

விளைவுகள்

இரத்த சோகையில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை / அவற்றினுள் உள்ள ஹீமோக்ளோபின் அளவு இவை சாதாரணமாக இருக்க வேண்டிய அளவை விட வெகுவாக குறைந்து விடுகின்றன.  இதனால் இரத்த சிவப்பணுக்கள் வழியாக ஆக்சிஜன் மற்ற உறுப்புகளுக்கு சென்று சேர்வது தடைபடுகின்றது.  முக்கியமாக மூளை, இதயம் , தசைகள்.  இதனால் நிறம் வெளுத்தல், சோர்வு சக்தியின்மை, கவனக் குறைவு ஆகியன ஏற்படலாம்.  நீண்ட கால விளைவாக இதய பலவீனம், செயலிழப்பு உண்டாகலாம்.  இதனால் சிறிது அதிகமான உடல் வருத்தி செய்யும் வேலைக்கு கூட மூச்சுத் திணறல் உண்டாகலாம்.

கண்டறியும் முறை

  • சிறுநீரக செயலிழப்பு உள்ள ஒவ்வொருவருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த அளவு இவற்றை கண்டறியும் சில பரிசோதனைகளை சிறுநீரக மருத்துவர் செய்திருப்பார். ஒரு சில வியாதிகளால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்புகள் தவிர மற்ற எல்லா வகை கிட்னி ஃபெயில்யரிலும் அதன் தீவிரத்தைப் பொறுத்து கண்டிப்பாக இரத்த சோகை இருக்கும்.  இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு ஹெமடோக்ரிட் (HEMATOCRIT) என்று அளக்கப்படும்.  இது சாதாரணமாக 40-45% இருக்கும். பெண்களுக்கு சிறிது குறைவாக இருக்கும்.  சிவப்பு நிறமியான ஹீமோக்ளோபின் அளவும் அளக்கப்படும்.  இதன் அளவு 12-15 கிராம் ஆண்களுக்கும் 12-14 கிராம் பெண்களுக்கும் இருக்கும்.  இரத்தத்தில் உள்ள க்ரியேட்டினின் அளவைப் பொறுத்து ஹீமோக்ளோபின் அளவு குறையும்.  எனவே இவ்வளவுகளை வைத்தே இரத்த சோகை உண்டா அதன் கடுமை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
  • இதைத் தவிர இரத்தத்தை ஒரு சொட்டு எடுத்து அதை ஒரு கண்ணாடி துண்டில் மெல்லிய படலமாக்கி உறுப்பெருக்கியில் பார்க்கும் போது (PERIPHERAL SMEAR) இரத்த சிவப்பு அணுக்கள் எவ்வாறு காட்சியளிக்கின்றன என்பதை வைத்து சில காரணங்களை கண்டறியலாம். உதாரணமாக விட்டமின் குறைவு, மேலும் இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய ஃபெர்ரிடின் (FERRITIN) என்ற சத்தின் அளவும் பரிசோதிக்கப்படும்.  இவற்றை வைத்து இரத்த சோகையின் கடுமை அதன் காரணங்கள் ஆகியவற்றை கண்டறியலாம்.

சிகிச்சை முறை

  • முன்பே கூறியிருந்தது போல கிட்னி ஃபெயில்யரில் இரத்த சோகையின் முக்கிய காரணம் எரித்ரொபாய்ட்டின் குறைவுதான்.  தற்போது இந்த சத்தை ஆய்வகத்திலேயே செயற்கை முறையில் உண்டாக்க முடியும் முன்பு விலை மிகவும் அதிகமாக இருந்த இந்த மருந்து இப்போது ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கின்றது.
  • இந்த மருந்தை ஊசியாக வாரம் 1-2 முறை தோலிற்கு கீழ் போட்டுக்கொள்ள வேண்டும்.  ஹீமோடயாலிசிஸ் செய்பவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது இதை போட்டுக் கொள்ளலாம்.  டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு முன்பு உள்ளவர்கள் இதை தாங்களே போட்டுக் கொள்ளக்கூட பழகிக் கொள்ளலாம்.
  • இம்மருந்தோடு இரும்புச் சத்து மாத்திரைகளாகவோ அல்லது பலருக்கும் குறிப்பாக டயாலிசிஸ் செய்பவர்க்கு நரம்பு வழியாக இரும்பு சத்தை செலுத்தும் போது உங்களுக்கு இந்த மருந்துக்கு அலர்ஜி உள்ளதா என்பதை அறிய கொஞ்சம் டெஸ்ட் டோஸ் என செலுத்திப் பார்த்து எதுவும் தொந்தரவு இல்லை என்றால் மட்டுமே முழு மருந்தையும் கொடுப்பார்கள்.  நரம்பு வழியாக இரும்புச் சத்து மருந்தை மருத்துவமனையில் மட்டுமே வைத்து கொடுக்க வேண்டும்.  இதைத் தவிர இரத்த உற்பத்திக்கு தேவையான B வகை விட்டமின்கள் முக்கியமாக B-12, B-6 ஆகிய மருந்துகளும் மாத்திரைகளாகவோ அல்லது ஊசி மூலம் டயாலிசிஸின் போதோ செலுத்தப்படும்.
  • இம்மருந்துகளை ஆரம்பித்த பிறகு சில வாரங்கள் அல்லது 1-2 மாதங்களுக்கு பிறகே நீங்களே அதன் நற்பலன்களை உணர முடியும்.  நீங்கள் நன்கு ஆரோக்யமாக உணர்வீர்கள்.  வேலைத்திறன் அதிகரிக்கும்.  நமைச்சல் குறையும், சோர்வு, தளர்ச்சி, ஆகியன சரியாகும்.  மேலும் ஹீமோக்ளோபின் அதிகமாவதால் இதயத்திற்கு ஆக்சிஜன் செல்வது அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைந்து விடும்.  அதன் முன்பே மருத்துவர் வாரா வாரம் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிப்பதன் மூலம் மருந்து சரியாக வேலை செய்கின்றதா? அதன் அளவு உங்களுக்கு சரியானதா அதிகமா? குறைவா? என்று அதற்கு தகுந்தபடி மாற்றங்கள் செய்வார்.  மேலும் சிலருக்கு இச்சிகிச்சையை ஆரம்பித்து இரத்த அளவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கலாம். சில சமயம் இரத்த அழுத்த மருந்துகளை மாறுதல் செய்ய வேண்டி வரும் பொதுவாக எரித்ரோபாய்ட்டின் மருந்தை ஊசி மூலம் செலுத்தும் போது எந்த தொந்தரவும் உண்டாவதில்லை.  சிலருக்கு ஊசி போட்டதூடன் கொஞ்சம் வலி உண்டாகலாம்.  இன்னும் சிலருக்கு சிறிது நேரம் கழித்து குளிர் ஜுரம் உண்டாகலாம் பொதுவாக இவற்றால் மருந்தை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
  • இவர்கள் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் மாத்திரைகளை தவறாமல் எடுத்தக் கொள்வதன் மூலம் டயாலிசிஸ் செய்பவரானால் அதனை சரியாக மருத்துவ ஆலோசனைபடி செய்வதன் மூலமும் ஓரளவு இரத்த அளவு குறைவதன் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.  அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ் (ANABOLIC STEROIDS) எனப்படும் வகையைச் சேர்ந்த சில ஊசி மருந்துகள் வாரம் ஒரு முறை செலுத்திக் கொள்வதால் சில சமயம் ஓரளவு உற்பத்தி ஆகலாம்.  இவற்றின் விலை குறைவுதான். இளவயதுள்ள பெண்களுக்கு இந்த மருந்து ஆண்மைத் தன்மையை உண்டாக்கும் என்பதால் கொடுக்க இயலாது.  ஆனாலும் ஒரு நிலையில் இரத்த மிகவும் குறைந்து விட்டால் (<9 கி.க்கு கீழ்)  மாற்று இரத்தத்தை அவ்வப்போது செலுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
  • இவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிடுபவராக இருப்பின் முடிந்த வரை இரத்தம் கொடுக்காமல் எரித்ரோபாய்ட்டின் ஊசி மூலம் இரத்த அளவை அதிகப்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

கேள்வி பதில்கள்

1. நெஃப்ரடிஸ் என்றால் என்ன?

பாக்டீரியாவால் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ அது வீங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சிறுநீரகத்தில் பாக்டீரியா தோன்றி அதனால் வீக்கம் உண்டாவதைத்தான் நெஃப்ரடிஸ் என்கிறார்கள். காய்ச்சல், சிறுநீரகப் பகுதியில் வலி, சிறுநீர் போகும் போது எரிச்சல் ஆகியவை சில அறிகுறிகள். நிறைய திரவங்களை உட்கொள்வது, ஆன்டிசெப்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவை சில சிகிச்சைகள்.

2. சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டால், அவற்றை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவர முடியுமா?

முடியாது என்பதுதான் இப்போதைய நிலை.

3. அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உடலில் சேரும் சோடியத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. இதை எப்படிச் செய்யலாம்?

  • ஊறுகாய் வேண்டாம்.டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
  • கேக், பிஸ்கட் வேண்டாம் (இவற்றில் பேக்கிங் பவுடர், சமையல் சோடா போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள்) அப்பளம், வடா, சிப்ஸுக்குத் தடா.
  • பாட்டிலில் விற்க்கப்படும் ஜூஸ் வகைகளுக்கும் நோ.
  • (மீன்) உலர்த்தப்பட்டு விற்கப்படுபவற்றைத் தவிர்த்து விடலாம்.

ஆதாரம் : தினகரன் நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate