অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

நீண்டநாட்கள் வந்து தாக்கும் நோயால் சிறுநீரகங்கள் மெல்ல மெல்லவே செயலிழக்கின்றன. இது ஏற்பட பல மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக உடலும் அதற்கேற்ப இசைந்து கொடுத்து வாழ்கிறது. இந்த காரணங்களால், நீண்ட நாட்கள் இந்த நோயின் தாக்கம் உடையவர்களுக்கு வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளும் தென்படுவதில்லை. ஆனால் அதற்குள் சிறுநீரகங்கள் நன்றாகப் பழுதடைந்துவிடுகின்றன.

சிறுநீரகங்கள் எத்தனையோ செயல்பாடுகளைச் செய்கின்றன. ஆகவே நோயின் அறிகுறிகள், அதன் தீவிரத்தை பொறுத்து அமைகின்றன. இது ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபட்டு இருக்கும்.

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் யாவை?

நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். சிறுநீரக செயல்பாடு மற்றும் GFR (Glomerular Filtration Rate) அளவை பொறுத்து நாள்பட்ட சிறுநீரக நோய் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. இரத்த பரிசோதனையின் பொழுது இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினைனின் மதிப்பை வைத்து GFR அளவை கணக்கிடலாம்.

முதல் நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 90-100%)

அறிகுறிகள் இல்லாமல் வரும் இந்த நோயின் ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பழுதடைவதில்லை. (சீரம் கிரியேட்டினைன் சாதாரண நிலையிலேயே இருப்பதாகக் காண்பிக்கும்) இந்த நிலையில் வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகளின் மூலமே இதைக் கண்டு அறியப்படும். அல்லது பிற நோய்களுக்காக எடுக்கப்படும் சோதனைகளின் பொழுது தற்செயலாக இந்த பரிசோதனையையும் செய்து கண்டறியலாம். நோயின் இந்த நிலைக்கு ஒரு சிறு தகவலை எடுத்துச் சொல்லும் வகையில் இருக்கக் கூடியது, சிறு நீரில் புரோட்டீன் இல்லாமை ஆகும். எக்ஸ்ரே மூலம் பார்த்தால் சிறுநீரகம் பழுது பட்டிருப்பது தெரியும். அதை MRI அல்லது CT ஸ்கேனிலும் பார்க்கலாம்.

இரண்டாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 60-89%)

மிதமான தாக்கமே உடைய நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சிலருக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உயர் இரத்த அழுத்தம், மற்றும்  சிறுநீரில் சீரம் கிரியேட்டினைனின் அளவு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மூன்றாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 30-59%)

நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாமலேயே இருக்கும் அல்லது சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அவற்றுடன் சிறுநீரில் சீரம் கிரியேட்டினைனின் அளவு அதிகரித்து  ஒரு சில அசாதாரண படிவங்களைக் காணலாம்.

நான்காவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15-29%)

இது சற்று தீவிரமான நிலையாகும். இந்த நிலையில் நோயின் தாக்கத்தை பொறுத்தும் இதர நோய்களின் வீரியத்தை பொறுத்தும் அறிகுறிகள் மாறுபட்டு காணப்படும்.

ஐந்தாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15% க்கும் குறைவு)

மிகவும் தீவிரமான நிலை என்று சொல்லலாம். இதில் மிதமான நிலையிலிருந்து, மிக மோசமான நிலை வரை பலதரப்பட்ட அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தைக் விளைவிக்கும் அறிகுறிகளும் இருக்கும். ஒரு சிலருக்கு டையாலிஸிஸ் செய்தே ஆக வேண்டிய நிலை உருவாகும்.

சிறுநீரக நோய்களைக் குறிக்கும் பொதுவான அறிகுறிகள்

  • பசியின்மை, வாந்தி எடுத்தல்
  • நலிவான உடல்நிலை, எடை குறைதல்.
  • கால்களின் கீழ் பாகம் வீக்கம் அடைதல்
  • முகத்தில் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படுதல்.(குறிப்பாக காலை நேரத்தில்)
  • உயர் இரத்த அழுத்தம், அதிலும் கட்டுப்படுத்த முடியாத அளவில் அல்லது இள வயதில் ஏற்படுதல்
  • தோல் நிற மாற்றம் (வெளுத்துப்போதல்).
  • தூக்கம், கவனக் குறைபாடு, மற்றும் மயக்க நிலை.
  • அறிப்பு, சதைப் பிடிப்பு, அல்லது ஓய்வின்மை.
  • பக்கவாட்டுப் பகுதியில் வலி ஏற்படுதல்
  • வழக்கத்திற்கு மாறாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
  • எலும்பு வலி, வயதானவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு.
  • பாலியல் இன்பத்தில் நாட்டமில்லாமை, ஆண்குறி விறைப்புடன் இல்லாமல் இருத்தல், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுதல்

இந்நோயுடையவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அறிதல் எப்படி?

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கீழ்கண்ட காரணங்களால் நாள்பட்ட சிறுநீரக நோய் வரலாம்

  • 30 க்குக் குறைவான அல்லது 50 க்கு அதிகமான வயது
  • உயர் இரத்த அழுத்தம் (அதாவது 200/120 க்கும் அதிகமாக இருந்தால்)
  • முறையான மருத்துவத்திலும் கட்டுப்படுத்த முடியாத உயர் இரத்த அழுத்தம்
  • இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட கண்பார்வைக் கோளாறுகள்
  • சிறுநீரில் புரோட்டீன் இருத்தல்
  • வீக்கம், பசியின்மை, மற்றும் உடல்நலிவு

இந்நோயின் முற்றிய நிலையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?

  • நுரையீரலில் திரவம் சேர்வதால் மார்பில் வலி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்.
  • உயர் இரத்த அழுத்தம்.
  • வாந்தி எடுத்தல்
  • மிகவும் பலவீனமடைதல்
  • மைய நரம்பு மண்டலம் தாக்கப் படுதல் : குழப்பம், தூக்கம், வலிப்பு மற்றும் கோமா நிலையை அடைதல்
  • இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருத்தல். (hyperkalemia) இது இருதயத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
  • இருதயத்தைச் சுற்றி இருக்கும் மெல்லிய உரை வீங்கி விடுதல் (Pericarditis எனப்படும் நோய்)

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புடைய நோயாளி எப்பொழுது மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்?

நோயாளி உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். இல்லையெனில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படக்கூடும்.

  • காரணமின்றி திடீரென எடை கூடுதல், சிறுநீரின் கனஅளவு குறைதல், மூச்சு திணறல் அல்லது படுக்கையில் படுத்திருக்கும் பொழுது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்
  • ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறுநீரகம் சுருங்கிக் காணப்படுதல்
  • மார்பில் வலி, சீரற்ற இதய துடிப்பு
  • காய்ச்சல், வயிற்றுப் போக்கு, பசியின்மை, மிக மோசமாக வாந்தி எடுத்தல், வாந்தியில் இரத்தமும் காணப்படுதல்
  • தசை பலவீனமடைதல்,
  • குழப்பம், மயக்கம் அல்லது உடல் பதை பதைப்பு
  • முறையாக கட்டுப்படுத்தப் பட்ட இரத்த அழுத்தம் திடீரென மோசமான நிலைக்குப் போதல்
  • சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளிப்படுதல் அல்லது அதிக இரத்த சேர்ந்து வெளிப்படுதல்

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate