பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக நுண்தமனி அழற்சி – IgA நெப்ரோபதி

சிறுநீரக நுண்தமனி அழற்சி – IgA நெப்ரோபதி பற்றிய தகவல்

நெப்ரோபதி

நெப்ரோபதி (NEPHROPATHY அல்லது க்ளாமெருலோ - நெப்ரிடிஸ் (GLOMERULONEPHRITIS) எனப்படும் சிறுநீரக நுண்தமனி (க்ளாமெருலஸ் - GLOMERULUS) அழற்சி வியாதிகள் பலவகைப்படும் (பார்க்க சிறுநீரக நுண்தமனி அழற்சி)

இவை சிறுநீரகத்தின் அடிப்படை அலகான் க்ளாமெருலஸ் அல்லது நெப்ரான் (NEPHRON) எனப்படும் நுண்தமனியை பிரதானமாக பாதிக்கின்றன. சிறுநீரகத்திற்குள் செல்லும் இரத்தத்தில் உள்ள கழிவுகள் இந்த அடிப்படை சுத்தீகரிப்பு அலகுகளின் வழியாகச் செல்லும் போதுதான் பிரித்தெடுக்கப்பட்டு பலவகையிலும் வடிகட்டப்பட்டு நுண்துளிகளாக சிறுநீராக மாற்றப்பட்டு சிறுநீர்ப்பைக்கு அனுப்பபடுகின்றன.

இந்த அடிப்படை அலகுகளே பாதிக்கப்படுவதால் சிறுநீரகத்தின் அனைத்துப் பணிகளும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து படிப்படியாக பாதிக்கப்படுகின்றன. இவ்வகை சிறுநீரக நுண்தமனி அழற்சிகளில் மிகவும் அதிகமாக வருவது இந்த  IgA  நெப்ரோபதி வியாதியாகும்.

IgA (Immunoglobin A என்பதன் சுருக்கம்) என்பது ஒரு வகை கிருமி எதிர்ப்பு சத்தாகும். இதே போன்று IgM,IgG,IgE,EgD  என பலவகை கிருமி எதிர்ப்புப் பொருட்கள் நம் இரத்தத்தில் லிம்போசைட் (LYMPHOCYTE)எனப்படும் ஒருவகை நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களால் சுரக்கப்படுகின்றன.

பலவகை நோய்க்கிருமிகள் நம் உடலைத் தாக்கும் போது அவற்றோடு ஒட்டி இணைந்து அக்கிருமிகளுக்கு விஷம் போல செயல்பட்டு கிருமிகளை செயலிழக்கச் செய்து நம் உடலை நோய்க்கிருமிகளிலிருந்து காப்பாற்றவே இவ்வுயிர்ச் சத்துக்கள் உள்ளன.

இதில்  IgA  எனப்படும் கிருமி எதிர்ப்புச் சத்து (ANTIBODY) இரத்தத்திலும் குடல், மூச்சுக்குழல், சிறுநீரகத்தாரை போன்ற நம் உடலில் வெளிமண்டலத்தோடு தொடர்புடைய இடங்களிலும் அதிகமாக சுரக்கப்படுகின்றது. நம் ஒவ்வொருவரின் உடலிலும் இந்த IgA எனப்படும் உயிர்ச்சத்து உள்ளது. இது நோய்க்கிருமிகளோடு மட்டும் ஒட்டி அவற்றை அழிக்க உள்ள நம் உடலின் ஒரு பாதுகாப்புக் கருவி ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த IgA உயிர்ச் சத்து சிறுநீரகங்களின் நுண்தமனிகளில் ஒட்டி அவற்றை செயலிழக்கச் செய்து ஒரு நோயாக காரணமாகி விடுகின்றது. எதனால் இந்த ஒரு சிலருக்கு மட்டும் இவ்வாறு  IgA  அவர்களின் சிறுநீரகத்தையே பாதிக்கும் ஒரு தீய சக்தியாக மாறி விடுகின்றது என்பது இன்னும் தெரியவில்லை. இவ்வகை பாதிப்பு ஒவ்வாமை எனப்படும் அலெர்ஜி வகைகளைச் சார்ந்த வியாதி எனக் கொள்ளலாம்.

நெப்ரோபதியின் அறிகுறிகள்

IgA நெப்ரோபதியின் வியாதியில் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் கழிக்கையில் வலியில்லாமல் இரத்தமாக வருவது முதல் அறிகுறியாக இருக்கும் பலமுறை இது தொண்டை வலி, இருமல் சளியைத் தொடர்ந்து வரும். சிலருக்கு வயிற்றுப் போக்கு, அபூர்வமாக கடின உடற்பயிற்சியைத் தொடர்ந்து கூட வரலாம் இரத்தம் கலந்த சிறுநீர் லேசாக கலங்கலாகத் தோன்றலாம் பால் இல்லாத தேநீர் போன்ற பழுப்பு நிறம் சிலருக்கு நல்ல சிவப்பு நிறம் என்றும் தோன்றலாம் பொதுவாக இது வலி இல்லாமல் வரும் சிலருக்கு சிறுநீரகங்கள் உள்ள பகுதியில் லேசான வலி வரலாம். சிறுநீரில் சிலருக்கு கண்ணுக்கு தெரியும் அளவு இரத்த ஒழுக்கு விட்டு விட்டு வரும் இடையில் சிறுநீர் தெளிவாக தோன்றினாலும் அதனை எடுத்து உறுப்பெருக்கியில் (MICROSCOPE) பரிசோதித்து பார்த்தால் அதில் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக இருப்பது தெரிய வரலாம் சிலருக்கு சிறுநீரில் இரத்த அணுக்கள் வராமல் கூட போகலாம்.

இன்னும் சிலருக்கு சிறுநீரில் புரத ஒழுக்கு (proteinuria) வரலாம். இது சிறுநீரை பரிசோதிக்கும் போது தெரிய வரும் இந்த புரத ஒழுக்கு மிக அதிகமாக இருந்தால் அது நெப்ரோடிக் சின்ட்ரோம் எனப்படும் பாதிப்பாக மாறி அவருக்கு உடலில் நீர் கோர்த்து முதலில் கணுக்கால் பின்னர் கால், கை, முகம் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் என தொந்தரவாக தெரிய வரும் சிலருக்கு முதன் முதலில் உயர் இரத்த அழுத்தம் கண்டு பிடிக்கப்பட்டு அதன் காரணத்தை ஆராயும் போது இது தெரிய வரலாம்.

உறுதி செய்யும் முறை

உங்களுக்கு மேற்கூறிய தொந்தரவுகள் இருந்தால் அதற்கு IgA நெப்ரோபதி காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக உங்கள் சிறுநீரக மருத்துவர் கருதக் கூடும் முதல் கட்டமாக சிறுநீர்ப் பரிசோதனை இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புக்களின் அளவு ஆகியவற்றையும் சிறுநீரில் 24 மணி நேர புரத ஒழுக்கு எவ்வளவு என்ற பரிசோதனையையும் செய்து விட்டு கடைசியாக சிறுநீரக சதை துணுக்கு பரிசோதனை (KIDNEY BIOPSY) என்ற பரிசோதனையை அவர் செய்வார்.

இதில் உங்களுடைய இரு சிறுநீரகங்களில் ஒன்றிலிருந்து ஒரு சிறு துணுக்கு (BIT) எடுக்கப்பட்டு அது பரிசோதனைசாலையில் உறுப்பெருக்கியில் பரிசோதிக்கப்பட்டு அதில் IgA என்ற நோய் எதிர்ப்பு உயிர் சத்து ஒட்டிக் கொண்டுள்ளதா? என்பதும்  ஆராயப்படும்.  வேறு வகை பாதிப்புகளும் இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு விடும்.

IgA நெப்ரோபதி வியாதி யாருக்கு வரும்?

இவ்வியாதி எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிகமாக சிறுவயதினருக்கும் (20-30 வயது) ஆண்களுக்குமே அதிகமாக வருகின்றது. குழந்தைகளுக்கும் இது வரலாம். வயதானவர்களுக்கு அபூர்வமாகவே வரும். அவர்களுக்கு இவ்வியாதி உயர் இரத்த அழுத்தமாகவும், சிறுநீரக செயலிழப்பாகவுமே அதிகமாக வெளிப்படுகின்றது. பொதுவாக ஒரு குடும்பத்தில் நோய் வந்த நபரல்லாது மற்றவர்களை இந்நோய் பாதிப்பதில்லை. எனவே குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுக்கும் இந்நோய் வந்து விடுமோ என்று அஞ்சத்தேவையில்லை.

சிறுநீரக செயலிழப்பு

இவ்வியாதி உள்ளவர்களில் முக்கால் வாசி பேருக்கு சிறுநீரக செயலிழப்பு வருவதில்லை. நான்கில் ஒருவருக்கு சிறுநீரகம் அதிகமாக பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு (KIDNEY FAILURE)  வரலாம். அதுவும் இது படிப்படியாக முன்னேறி முற்றிய செயலிழப்பாக மாற பல வருடங்கள் வரை பிடிக்கும். சிலருக்கு சில மாதங்களிலேயே வேகமாக இந்த வியாதி முன்னேறி முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறலாம்.

சிலருக்கு ஆரம்பத்திலேயே அதிகமான சிறுநீரக பாதிப்பின் அடையாளங்களாக சிறுநீரில்  அதிக புரத ஒழுக்கு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சிறுநீரக வேலைத் திறனின் அடையாளங்களான யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு அதிகரிப்பு ஆகியன இருந்தால் சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. மேலும் சிறுநீரக சதை துணுக்குப் பரிசோதனையில் சிறுநீரகத் திசுக்களான நுண்தமனிகள், இரத்தக் குழாய்கள், போன்றவை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் பொறுத்து அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு வருமா என்பதை ஓரளவிற்கு கணிக்கலாம். என்றாலும் இவருக்கு இப்போது சிறுநீரக செயலிழப்பு வரும், இந்த காலத்தில் அது முற்றிய செயலிழப்பாக மாறி டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிற்சை செய்து கொள்ள வேண்டி வரும் போன்றவற்றை யாராலும் மிகச் சரியாக கணிக்க முடியாது. எனவே இந்நோய் உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். முறையான இடைவெளிகளில் சிறுநீர், இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு ஆகியவற்றை பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

சிகச்சை முறை

சிலருக்கு தானகவே இந்த வியாதியின் தீவிரம் குறையலாம். சிறுநீரில் இரத்த அணுக்கள் முற்றிலும் இல்லாமல் குறைந்து கூட போகலாம். இந்த நிலை அப்படியே நீடிக்கலாம். அல்லது சிலருக்கு சிலகாலம் கழித்து மீண்டும் திரும்ப வரலாம். எனவே வியாதி குறைந்தது போல தோன்றினாலும் இவர்கள் தொடர்ந்து சிறுநீரக மருத்தவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

IgA நெப்ரோபதி உள்ள சிலருக்கு அடிக்கடி சிறுநீரில் இரத்தமாக வரலாம். அதுவும் பொதுவாக படிப்படியாக குறைந்து விடும். சிலருக்கு இவ்வாறு சிறுநீரில் இரத்தமாகப் போகும்போது சிறுநீரக செயலிழப்பு தற்காலிகமாக ஏற்படலாம். ஆனால் அது ஓரிரு வாரங்களில் முழுமையாக சரியாகி விடும். ஆனால் இவ்வாறு இல்லாமல் 25% பேருக்கு வருடக்கணக்கில் ஏற்படும்  சிறுநீரக செயலிழப்பு என்பது தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி முற்றிய செயலிழப்பாக மாறி டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிற்சை என்பது தேவையாகி விடும்.

இல்லை. ஆனால் இதனோடு தொடர்புள்ள வேறொரு வியாதியான ஹெனாக்-ஷான்லின்’ஸ் பர்ப்யூரா (HSP – Henoch – Schonleins’s purpura) எனப்படும் வியாதியில் சிறுநீரகங்கள், தோல், மூட்டுக்கள், குடல் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம். இவர்களின் சிறுநீரகங்கள், தோல் ஆகியவற்றில்  IgA உயிர்ச்சத்து காணப்படும். இது பொதுவாக குழந்தைகளை பாதிக்கின்றது.

லேசான பாதிப்புதான் என்பது சிறுநீரக மருத்துவரால் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு வேறெதுவும் மாற்றங்கள் வேண்டியிருக்காது. எந்த உணவினாலும் இது வருகின்றது என்று நிருபிக்கப்படவில்லை. ஆரோக்யமான உணவுகளை உண்ணலாம். புகைப் பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்தவும். சிலருக்கு உடற்பயிற்சியில் சிறுநீரில் இரத்தம் அதிகமாக வெளியேறுகின்றது என்று தோன்றினால் அவற்றை தவிர்க்கவும். மற்றபடி சாதாரண செயல்களை செய்யலாம். சிறுநீரக செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சில ஆகார மாற்றங்கள் பரிந்துரைக்கப்படலாம்.

IgA  நெப்ரோபதி எவ்வாறு செய்யப்படுகின்றது?

சிறுநீரகங்களின் நுண்தமனி ஜல்லடைகளில் (நெப்ரான்களில்) ஒட்டிக் கொண்டு அவைகளை செயலிழக்கச் செய்யும் IgA  உயிர் சத்துக்களை அவைகளில் இருந்து நீக்கி மீண்டும் அவற்றில் படிய விடாமல் செய்யத் தக்க மருத்துவம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. ஆனால் நோயையும் நோயின் அறிகுறிகளையும் ஓரளவு கட்டுப்படுத்தி சிறுநீரகங்களின் ஆயுளை பலகாலம் நீட்டிக்கச் செய்யும் பல வகை மருத்துவ முறைகள் உண்டு.

சிறுநீரில் இரத்தம் வருவது இந்நோய் உள்ளவர்களை பெரிதும் பயமுறுத்தும் ஒரு நிகழ்வாகும். பார்த்தால் மிக அதிக இரத்தம் சிறுநீரில் வீணாவது போல தோன்றினாலும் உண்மையில் இவர்களுக்கு சிறுநீரில் வீணாகும் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவே ஆகும். ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு துளி இரத்தத்தைச் சேர்த்து பார்த்தால் தண்ணீர் முழுவதும் சிவப்பாகத் தோன்றும். அதுவும் இவ்வாறு வரும் இரத்தமும் சில நாட்களில் குறைந்து தெளிவாகி விடும் எனவே சிறுநீரில் இரத்தம் வருவது குறித்து இவர்கள் பயப்படவோ அதற்கு தனி வைத்தியம் என்றோ தேவையில்லை.

சிறுநீரில் இரத்தம் வருவது என்பது சிலருக்கு தொண்டை வலி, சளி இருமல், டான்சில் வீக்கம் இவற்றைத் தொடர்ந்து வரலாம். அப்போது சளி இருமல் தொந்தரவிற்கான பொதுவான மருந்துகள் தந்தால் போதுமானது. ஒருவருக்கு அடிக்கடி டான்சில் வீக்கம் வந்து அதனால் சிறுநீரில் இரத்தம் வருவதும் அடிக்கடி வந்தால் டான்சில் நீக்கும் அறுவை சிகிற்சை சில சமயம் பரிந்துரைக்கப்படலாம். ஆனால் இது டான்சில் தொந்தரவிற்கான சிகிற்சைதான். இதனால் IgA  நெப்ரோபதி சரியாகும் என்று  நிரூபிக்கப்படவில்லை.

எதிர்ப்பு அணு சக்தி குறைக்கும் மருந்துகள்

IgA  நெப்ரோபதி வியாதி நோய் எதிர்ப்பு உயிர்ச் சத்தான IgA சற்றே முறை தவறி செயல்படுவதால் வருகின்றது என்பது இப்போது நன்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று. எனவே இந்த IgA  உயிர் சத்தை உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப்பு அணுக்களை கட்டுப்படுத்தும்  சில வகை மருந்துகளான ஸ்டீராய்ட், சைடோடாக்சிக் (CYTOTOXIC) எனப்படும் வகை மருந்துகளான எண்டாக்சான், அசோரான் எனப்படும் மருந்துகள் இந்த வியாதிக்கு பலனளிக்கக் கூடும் என்று பரிசோதித்து பார்த்ததில் தீவிரமாக  IgA   நெப்ரோபதியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு (உதாரணமாக ஆரம்பத்திலேயே சிறுநீரக செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம்) இந்த வகை மருந்துகள் சிறுநீரக பாதிப்பின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்தி முற்றிய சிறுநீரக செயலிழப்பு வரும் காலத்தை பல வருடங்கள் தள்ளிப் போட உதவுகின்றன என்பது நிருபணமாகி உள்ளது. ஆனால் இம்மருந்துகள் தனிப்பட்ட ஒரு IgA  நெப்ரோபதி நோயாளிக்கு எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை நாம் முதலிலேயே யூகிக்க முடியாது. இவ்வகை மருந்துகள் பயாப்சி பரிசோதனைக்குப் பிறகு சிறுநீரக மருத்துவதினால் முடிவு செய்யப்பட்டு அவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை மருந்துகளால் பலவகையான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. இவற்றைப் பற்றியும் நீங்கள் ஒரு சிறுநீரக மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம். தற்போது புதிதாக வந்துள்ள மைகோபீனோலேட் போன்ற மருந்துகள் இந்த வியாதிக்கு நல்ல பலனளிப்பதாக ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர சிலவகை ஆழ்கடல் மீன்களில் அதிகமாக உள்ள ஒமேகா–3 கொழுப்பெண்ணை எனப்படும் ஒரு வகை உயிர்ச்சத்து  IgA  நெப்ரோபதியில் சிறுநீரகங்களை ஓரளவு பாதுகாப்பதாக ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைகள் இப்போது மாத்திரைகளாக கிடைக்கின்றன.

இதைத்தவிர உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை நன்கு கட்டுப்படுத்தி வைப்பது. சிறுநீரக செயலிழப்பு வந்த பிறகு அதற்குரிய ஆகார மாற்றங்கள், கொழுப்புச் சத்து அதிகமிருந்தால் அதை மருந்துகள் மற்றும் ஆகாரக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்துவது போன்ற சிகிற்சை முறைகளை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பு முற்றுவதை பல வருடங்கள் தள்ளிப் போடலாம். அப்படியும் முன்பே குறிப்பிட்டிருந்தபடி சிலருக்க படிப்படியாக முற்றிய செயலிழப்பு நேரிடும் போது அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிற்சை அல்லது ஹீமோடயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிற்சை மூலமும் அவர்களின் வாழ்நாளை மேலும் பல வருடகாலம் நீட்டிக்க முடியும் என்பதால் இவர்கள் இந்த நோயைப்பற்றி எந்த பயமுமின்றி வாழலாம்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர்

2.90322580645
பேகம் Nov 06, 2017 12:05 AM

எனக்கு
நெப்ரோபதி
உள்ளது வயது 22 நான் குழந்தை பெறலாமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top