অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரில் இரத்தமாக போகுதல்

சிறுநீரில் இரத்தமாக போகுதல்

சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன?

பல காரணங்களால் சிறுநீரில் இரத்த சிவப்பு அணுக்கள் கலந்து வருவதை சிறுநீரில் இரத்தம் அல்லது ஹெமச்சூரியா (Heamaturia) என்று ஆங்கிலத்தில் சொல்கின்றோம். பெரும்பாலும் இது கண்ணுக்கு தெரியாத அளவு சிறுநீர்ப் பரிசோதனையில் உருப்பெருக்கியிலோ அல்லது டிப்ஸ்டிக்ஸ் (Dipstix) எனப்படும் பரிசோதனையில் மட்டுமே கண்டுபிடிக்கப்படும்.  சில சமயம் சிறுநீரில் அதிக இரத்தம் போகும் போது சிறுநீர் சிவப்பாகவோ அல்லது பழுப்பு (பாலில்லாத டீ) கலரிலோ போகலாம்.

காரணங்கள்

பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells)  வெளியே வருவதில்லை.  இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம்.

  • சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக நுண்தமனி அழற்சி Glomerulonephritis)
  • சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள் (Cysts in Kidney)
  • சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Benign and Cancerous tumours in Kidney)
  • சிறுநீரகங்களில் கற்கள் (Kidney Stones)
  • சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் (Kidney Infections)
  • சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை  வியாதிகள் (Inherited disorders of Kidney)
  • உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள் (Stones, tumours, infections of Ureters)
  • சிறுநீர்ப்பையில் கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் (Stones, tumours, infections of Bladder)
  • ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in Prostate Gland)
  • அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்- Warfarin)  வரலாம்.
  • சிறுநீரில் இரத்தம் கீழ்கண்ட சமயங்களில் மட்டும் அவ்வளவு முக்கியமானதில்லை.
  • பெண்கள் மாத விடாய் சமயத்தில் செய்யப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனை
  • சிறுநீரில் கிருமித் தாக்கத்தின் போது செய்யப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனை
  • நன்கு தெரிந்த சிறுநீரை சிவப்பாக்குகின்ற சில மருந்துகளை எடுக்கும் போது (உதாரணம்-ரிபாம்பிசின்- Rifampicin)
  • அதீத உடற்பயிற்சியின் போது மட்டும் வருகின்றது.

பரிசோதனைகள்

சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சிலருக்கு கீழ்கண்ட பரிசோதனைகள் தேவைப்படும்.

  • இரத்தத்தில் முழு அணுக்களின் சோதனை.
  • சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை அறிய உதவும் யூரியா, கிரியேட்டினின் போன்ற பரிசோதனைகள்.
  • சிறுநீரில் புரதம் மற்றும் கிருமி உள்ளதா என்பதை அறிய உதவும் பரிசோதனைகள்(Urine Culture)
  • சிறுநீரகங்களில் கட்டிகள், கற்கள் உள்ளதா என்பதை அறிய உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கான்
  • சில சமயம் சிறுநீரகப்பை சிறுநீர்க் குழாய்களை உள்ளிருந்து பார்க்க உதவும் சிறுநீரக உள்நோக்கி கருவி பரிசோதனை (சிஸ்டோஸ்கோபி- Cystoscopy)
  • இவைகளும் தனிப்பட்ட நோயாளியின் உடல்நிலையை அனுசரித்து தேவைக்கு தகுந்தபடி செய்யப்படும். இவைகளில் எல்லாம் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் சிலருக்கு சிறுநீரக சதைக் துணுக்கு பரிசோதனை (கிட்னி பயாப்ஸி- Kidney Biopsy) தேவைப்படும். அதிலும் சிறுநீரில் புரதம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக உயர் இரத்த அழுத்தம் ஆகியன உள்ளவர்களுக்கு முக்கியமாக தேவைப்படலாம்.
  • சிறுநீரக சதை துணுக்கு பரிசோதனை
  • சிறுநீரில் இரத்தம் என்பதற்கு என்று தனியாக சிகிச்சை தேவையில்லை. ஆனால் அது எதனால் வந்தது என்று அறிந்து மூல காரணத்தை சரியாக சிகிச்சை செய்ய வேண்டும்.

சில சமயம் எல்லா பரிசோதனைகளுக்கு பின்பும் சிலருக்கு சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இவர்களுக்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆனால் சில மாதங்களுக்கு மாதா மாதம் சிறுநீர்ப் பரிசோதனை, இரத்த அழுத்தம் அவ்வப்போது சிறுநீரக செயல்திறன் பரிசோதனைகள் சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் செய்து பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate