অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அம்மை நோய் - உணவு முறை மற்றும் சிகிச்சை

அம்மை நோய் - உணவு முறை மற்றும் சிகிச்சை

அம்மை நோய்

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.  வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது. அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன. பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம். இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம். தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

டயட்

  • அம்மை நோய் தண்ணீர் மற் றும் காற்றில் உள்ள வைரஸ் மூலம் வெயில் காலங்களில் பரவுகிறது. உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போதும் இந்த வைரஸ் தாக்கலாம். அம்மையில் பெரியம்மை, சின்னம்மை என வகைகள் உள்ளன. ஒரு வாரத்துக்கு அம்மை நோய் தீவிரமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து விடும். அம்மை நோய் பரவும் காலங்களில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவு வகைகள் எடுத்துக் கொள்ளலாம்.
  • அம்மை நோய் தாக்கியவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம். நோய் துவங்கிய உடன் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி சாப்பிடலாம். பழச்சாறு கள், பால் குடிப்பதும் நல்லது.
  • அம்மை நோய் தாக்கத்தின் போது ஏற்படும் காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளாக சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்புதான் எடுக்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறுகள் அருந்தலாம்.
  • இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அம்மை நோய் விரைவில் குணம் அடையும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. அரிசி, வெள்ளை உப்புமா போன்ற மாவுச் சத்து உள்ள உணவுப் பொருட்கள்  சாப்பிட ஏற்றவை. தேங்காய், மசாலா வகைகளை உணவில் சேர்ப்பதை தடுக்க வேண்டும். பட்டை, கிராம்பு, சோம்பு, அசைவ உணவு வகைகள், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், அதிக புரதம் உள்ளவைகளும் இந்த சமயத்தில் எதிரிகளே. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் அவசியம்.

ரெசிபி

ஆரஞ்சு சாதம்

பச்சரிசி ஒரு கப், ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன், சீவிய ஆரஞ்சு பழத் தோல் 1/4 டீஸ்பூன், ஆரஞ்சுப் பழத்தை சாறு எடுத்துக் கொள்ள வும். அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து அரிசியை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் கால் டீஸ்பூன் நெய் விட்டு ஆரஞ்சுப்பழத் தோலை வறுத்து அதில் உப்பு, சர்க்கரை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறவும். இறுதியில் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். இனிப்பு, உப்பு, புளிப்பு கலந்த சுவையில் இருக்கும்.

ரொட்டி உப்புமா

ரொட்டி துண்டுகள் 10 எடுத்து நறுக்கி கொள்ளவும். தக்காளி 2, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, சீரகம் 1 டீஸ்பூன், மல்லித் தழை மற்றும் உப்பு தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகத்தை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடித்த ரொட்டி துண்டுகளைப் போட்டு உப்புமா போல வறுக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ரவா இட்லி

வெள்ளை ரவை 1 கப், தயிர் ஒரு கப், தக்காளி சாஸ் 2 டீஸ்பூன், தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், ஆகியவை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வெள்ளை ரவையில் தயிர், தக்காளி சாஸ் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து ரவைக் கலவையில் உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இட்லி போல வேக வைத்து எடுக்கவும்.

பாட்டி வைத்தியம்

  1. லேசாக உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் சோர்வு தீரும்.
  2. அம்மை நோய் குணமடைந்த பின் வெள்ளரிப் பழத்துடன் நாட்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கும்.
  3. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு, வெங்காயம் இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.
  4. அம்மை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் தணிய வேப்பிலை, நெய், தேன் மூன்றையும் சேர்த்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே குறையும்.
  5. வேப்பிலை, நெல்லி முள்ளி இரண்டையும் அரைத்து வெண்ணெய் கலந்து உடலில் பூசிக் கொண்டால் அம்மை அரிப்பு குணமாகும்.
  6. வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமாகும்; தூக்கமும் வரும்.
  7. வேப்பமரப் பட்டை, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து பசும்பால் சேர்த்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
  8. அம்மை நோய் குணமான பின்னர் ரோஜா, செம்பருத்தி, சிறுபருப்பு, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலின் அழகு கூடும்.
  9. மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டால் காய்ச்சல் உடனடியாக குணமாகும்.
  10. முருங்கை வேரை பாலில் கொதிக்க வைத்துக் குடித்தால் இழந்த சக்தியை பெறலாம்.
  11. மருதம் பட்டை, வேப்பம் பட்டை இரண்டையும் சம அளவில் அரைத்து சாப்பிட்டால் கிருமித் தொற்று ஏற்படாது.

ஆதாரம் : தி - இந்து நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate