অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

காசநோயிற்கான குறிப்புகள்

காசநோயிற்கான குறிப்புகள்

காச நோய்

காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காச நோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது. பெரும்பாலனவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.

நோய் பரவும் முறை

இது மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.

காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.

காச நோயின் அறிகுறிகள்

  • விட்டு விட்டு காய்ச்சல்
  • மூன்று வாரம் அல்லது அதற்கும் அதிகமான வாரங்கள் இடைவிடாத இருமல்
  • சுவாசிப்பதில் பிரச்சனை

காச நோய் பற்றி அறிந்து கொள்வதற்கான பரிசோதனை

  1. சளி பரிசோதனை
  2. மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
  3. மாண்டோ (MANTOUX) பரிசோதனை

மேற்கூறிய பரிசோதனைகள் அனைத்தும் அரசு காசநோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் உள்ளன. சளி நுண்ணோக்கிப் (SPUTUM MEROSCOPIC) பரிசோதனை திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்ட (RNTCP) மையங்களில் செயல்படுகிறது.

மைக்ரோஸ்கோபிக் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு ஒரு மையம் என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் சளி (SPUTUM) பரிசோதனை செய்வதற்கு பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பநர் உள்ளார்.

இன்று எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு காரணமான முக்கிய நோய் காச நோய். எச்.ஐ.வி கிருமி உள்ளவர்களது உடல் நிலை எந்த நோயாக இருந்தாலும் உடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளும். எனவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு எளிதில் காச நோய் தொற்றுகிறது. மேலும், காசநோய், எச்.ஐ.வி கிருமிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆகவே எச்.ஐ.வி கிருமிகள் பெருகும் நிகழ்வும் நடைபெறுகிறது. எனவே எச்.ஐ.வி உள்ளவர்கள் காச நோய் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். காச நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தேவையான பரிசோதனைகளைச் செய்து காசநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காசநோய் இருந்தால் முறையாக டாட்ஸ் (DOTS) சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை முடியும்வரை தொடர வேண்டும். HIV உள்ளோர்க்கு வரும் காசநோயைத் தகுந்த சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சிறுபிள்ளைகளில் காசநோய்

  • சிறுபிள்ளைகளில் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
  • கீழ்கண்ட சூழலில் வாழும் சில குழந்தைகளில், காசநோய் மற்றவர்களை விட அதிக அளவில் தொற்றக்கூடிய அபாயம் உண்டு

- காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.
- எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட சிறு பிள்ளைகள்
- மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூக சூழ்நிலையில் உள்ள சிறு பிள்ளைகள்.

நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்

(எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்) எக்ஸ்ட்ரா பல்மோனரி காசநோய் என்பது நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.

அறிகுறிகள்

நோய்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள் - லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும். எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை.

நோய் பரவும் முறை:

  • முதன்மை நோய்த்தொற்றின் போது, இந்நோய்பரப்பும் பாக்டீரியா இரத்தம் மற்றும் நிணநீர் மண்டலம் மூலம் நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. நோய் தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருப்பின், இந்நோய்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு இருப்பின், இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிவிடுகின்றன. இந்நோயினை தோற்றுவிப்பதற்கு முன்பு, சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை, தங்கள் இனப்பெருக்கத்தினை பாக்டீரியாக்கள் செய்து கொள்கின்றன.
  • இருமல் மூலம், நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்கள் சளி வழியாக வெளிவரும். அப்படி வரும் சளியினை விழுங்கும் போது, கழுத்துபகுதியில் உள்ள நிணநீர் நாளமுடிச்சுக்கள் மற்றும் வயிறு, குடல் போன்ற பகுதிகளுக்குள் பாக்டீரியாக்கள் செல்கின்றன.
  • நோய் தொற்று கண்ட விலங்குகளின் பாலில் உள்ள மைக்கோபாக்டீரியம் போவிஸ் எனும் நோய் கிருமிகளால் பாலின் மூலம் இந்நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்நோய் தொற்று ஏற்படும் பொதுவான பகுதிகள்

  • நிணநீர் முடிச்சுகள் மற்றும் சீழுடன் உள்ள கட்டிகள் - குறிப்பாக கழுத்தை சுற்றியுள்ள பகுதிகள்.
  • எலும்பு மற்றும் மூட்டுக்கள் - இப்பகுதி பாதிப்பு ஏற்பட்டால், நோயாளிகளில் பாதிப்பேருக்கு முதுகெலும்பு முற்பகுதி பாதிக்கப்படுகிறது.
  • பெண்களில் கர்ப்பப் பை, ஆண்களில் விதைப்பையில் உள்ள எபிடிடைமிஸ் எனப்படும் இனப்பெருக்க உறுப்பு பகுதி பாதிக்கப்படுகிறது. இருபாலரிலும், சிறுநீரகம், சிறுநீரகக்குழாய்கள் அல்லது சிறுநீர்ப்பை நோய் பாதிக்கிறது.
  • வயிறு, குடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிடோனியம் எனப்படும் சவ்வுப்பகுதி பாதிக்கப்படலாம்.
  • மூளை பகுதி (மெனிஞ்ஜைடிஸ்) - பாதிப்பு சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், விரைவில் மரணத்தைத் தோற்றுவிக்கும்.
  • பெரிகார்டியம் (இதய உறை) - பாதிக்கப்படும் போது, இதயம் சுருக்கமடையச் செய்கிறது.
  • தோல்- பாதிப்பு பல வடிவங்களில் ஏற்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காச நோய் ஏற்பட காரணம் என்ன?

காச நோய் ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. எந்த மனிதர் வேண்டுமானாலும் காச நோயால் பாதிக்கப்படலாம். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன. இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். ஒருவரின் உடலில் சென்ற காச நோய் கிருமி காச நோயை ஏற்படுத்தாது. உடலில் செயல் இழந்த காசநோய் கிருமி உள்ளோர் உடனே நோய்வாய்படுவதில்லை. அவர்களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது செயலிழந்து இருக்கும் காசநோய் கிருமிகள் செயல்படத் தொடங்கிவிடும். ஆகவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

காச நோயின் குறிப்பான அறிகுறிகள், மூன்று வாரத்திற்கு மேல் தொடரும் இருமல், சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல், எடை குறைவு அல்லது பசியின்மை போன்றவை ஆகும். மேற்கூறிய ஏதாவது அறிகுறி ஒருவருக்கு மூன்று வாரதிற்கு மேல் நீடித்தால், அவர் அருகிலிருக்கும் டாட்ஸ் காச நோய் மையம், அல்லது சுகாதார மையத்திற்கு சென்று சளியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

காச நோயை கண்டு பிடிக்க எத்தகைய பரிசோதனைகள் செய்ய வேண்டும், மற்றும் அவை எங்கு செய்யப்படும்?

காச நோயை கண்டுபிடிக்க சளியில் காசநோய்க்கான கிருமி உள்ளதா என்று தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். நாட்டின் பகுதிகளில் டாட்ஸ் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.

நன்றாக இருமிய பின் வரும் சளியைதான் பரிசோதனைக்கு தரவேண்டும். முக்கியமாக சளிக்கு பதிலாக உமிழ் நீரை தரக்கூடாது. பரிசோதனைக்கு உமிழ் நீரை தந்தால் நோயை கண்டுபிடிக்க முடியாது.

காச நோய்க்கான சிகிச்சை என்ன?

காச நோய் எதிர்ப்பு மருந்துகளை தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமையாக குணமடையக்கூடியது. காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்து எடுத்துகொள்ள வேண்டும். சில நோயாளிகளுக்கு மருந்துகளை ஒரு வருடத்திற்கு கூட தொடர வேண்டிய நிலை வரலாம். முக்கியமாக மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை நிறுத்த வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து கொள்ளாத நோயாளிகளுக்கு இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.

இந்த காச நோய் குணப்படுத்தகூடியதா?

தேவையான காலங்களுக்கு, முறையாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் சிகிச்சையை எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமயாக குணமடையக்கூடியதே. காச நோய் கிருமிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த பல்வேறு வகையான நுண்ணுயிர்க் கொல்லி / கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவைப்படுகிறது. காசநோய்க் கிருமிகள் படிப்படியாகத்தான் அழிக்கப்படுகிறது. எனவே குறிப்பிட்ட காலம் வரையிலும் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். மருந்து உட்கொண்ட சில வாரங்களில் உடல் நன்றாக குணமடைய தொடங்கும். அப்பொழுது இடையில் மருத்துவ சிகிச்சையை நிறுத்துவதால் உடலிலுள்ள காசநோய்க் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ சிகிச்சை முழுமையாக மேற்கொள்வது மிகவும் அவசியம். எனவே நோயாளி தொடர்ந்து மருந்து உட்கொள்வதை மற்றவர் மேற்பார்வையிடும் ஒரு மருத்துவ சிகிச்சை முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இது ஆங்கிலத்தில் டாட்ஸ் (DOTS) என்று அழைக்கப்படுகிறது. இந்த DOTS மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

காச நோயை எவ்வாறு தவிர்க்கலாம்?

காச நோயாளி வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, அல்லது அங்கங்கு துப்பினாலோ,அவர்களின் எச்சில் மூலம் காச நோய் பரவுகிறது. அதனால் நோயாளிகள் இருமும்பொழுதும் அல்லது தும்மும்போதும் எப்போதும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

நோயாளிகள் அங்கங்கு துப்பக்கூடாது மற்றும் இருமும் போது கைக்குள் ஸ்பிடூன் வைத்து கொள்ள வேண்டும். வீட்டிலும் நோயாளிகள் மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.

காச நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அதை கண்டு பயப்படாமல் இருப்பதும், நோயை மறைக்காமல் இருப்பதும் மிக முக்கியம். குறிப்பிட்ட நபர் தன்னை பரிசோதித்து கொள்வதும் தேவையான ஓய்வு எடுத்து கொள்வதும் அவசியம்.

காச நோயாளிக்கு தரவேண்டிய உணவு என்ன?

காச நோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த வகை உணவையும் சாப்பிடலாம். காச நோயாளிக்கு எவ்வித வித்தியாசமான உணவுகளும் தேவையில்லை. குறிப்பிட்ட நபருக்கு பிரச்சனை தரக்கூடிய எந்த உணவையும் தவிர்க்கவேண்டும்.

காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் என்ன?

காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காச நோய் - செய்யவேண்டியதும் மற்றும் செய்யக்கூடாததும் யாவை?

செய்யவேண்டியது.

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.
  • அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.
  • டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்க கூடாது.
  • டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
  • மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.
  • டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

டாட்ஸ் என்றால் என்ன?

டாட்ஸ் என்பது குறுகிய கால நேரடி கவனிப்பு பரிசேதனையாகும். டி.பி.-யை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் உலகெங்கும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் இது சிறப்பான வழிமுறையாக பெயர் பெற்றது. இது ஐந்து உட்கூறுகளை உள்ளடக்கியது:

  • தேசிய காசநோய் கட்டுபாடு திட்டத்திற்கான அரசியல் உறுதிமொழி
  • நுரையீரல் காசநோயின் அறிகுறிகளுடன், மிக முக்கியமாக தொடர்ந்து மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருமலுடன், சுகாதார மையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்றுகிருமிகளை கண்டறியும் நுண்ணோக்கி பரிசோதனை மையம்.
  • தடையில்லாமல் தொடர்ந்து காச நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல். எதிர்பார்க்கதக்க, உயர்தர காசநோய் எதிர்ப்பு மருந்துகளை சுகாதார மையங்கள் மூலம் காச நோயாளிக்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கச் செய்வதின் உருவாக்கம்தான் டாட்ஸ் செயல்முறையின் முக்கிய அம்சமாகும்.
  • குறைந்தபட்சம், ஆரம்பக்கட்ட சிகிச்சையின் பொழுது நேரடியான கண்காணிப்பு, சுகாதார ஊழியர்கள் நோயளிகள் மிகவும் சக்திவாய்ந்த கூட்டு மருந்துகளை தொடர்ந்து விழுங்குவதை கவனிப்பது மற்றும் ஆலோசனை அளிப்பது போன்றவை டாட்ஸ் செயல்முறையின் பகுதியாகும்.

டாட்ஸ் முறையின் சிறப்புகள் என்ன?

  • டாட்ஸ் 95 சதவிதம் நோயாளிகளை குணமாக்குகிறது.
  • வியாதியிலிருந்து நிச்சயமாகவும் விரைவாகவும் குணமடைய டாட்ஸ் உறுதி அளிக்கிறது.
  • இந்தியாவில் 17 இலட்சம் நோயாளிகளின் வாழ்க்கையை டாட்ஸ் மாற்றியுள்ளது.
  • வறுமையை அகற்றவும், உயிர்களை காக்கவும் நோயின் கால அளவை குறைக்கவும் டாட்ஸ் ஒரு சிறப்பான வழிமுறையாகும். மேலும் சில ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு இழப்பை ஏற்படுத்தும் புதிய தொற்று நோய்களையும் தடுக்க உதவுகிறது.
  • எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்ட காசநோயாளிகளின் வாழ் நாளை டாட்ஸ் நீட்டிக்கிறது.
  • டாட்ஸ், நோயாளிக்கு தடையில்லாமல் காசநோய் எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நோயாளிகளின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம், சிகிச்சை பலன் அளிக்காமல் போவதை தடுப்பதுடன், பன்மருந்து எதிர்ப்பு காசநோய் ஏற்படுவதையும் தவிர்கிறது.
  • டாட்ஸ் உடல் நல சேவைகள் சென்றடைவதை அதிகப்படுத்துகிறது. இந்த டாட்ஸ் வழிமுறைகள் வெளிப்புற உடல் நல சேவைகள் மேம்பாட்டை ஊக்குவிக்க மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது.
  • டாட்ஸ் இலவசமாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் கிடைக்கிறது.

மருந்து எதிர்ப்பு காசநோய் என்றால் என்ன?

சாதாரன காசநோய்க்கு கொடுக்கப்படும் வழக்கமான நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு குணம் அடையாமல் உருவாகும் ‘மருந்து எதிர்ப்பு காசநோய்’ தான், மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நோயாளிகள் தொடர்ச்சியற்ற மற்றும் முழுமையடையாத சிகிச்சை முறைகள்தான் மருந்து எதிர்ப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. தொடர்ச்சியாகவும் முழுகால அளவும் காசநோய் எதிர்ப்பு மருந்தை சாப்பிடுவதன் மூலம் எம்.டி.ஆர். காசநோயை தவிர்க்கலாம். இந்த வகை காசநோய் மிகவும் செலவுமிக்கது. மேலும் இது பயனளிக்காமல் போவதுடன் சிகிச்சையின் காலகட்டம் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கப்படலாம்.

டி.பி. மற்றும் ஹச். ஐ. வி. க்கான உறவுநிலை எப்படிபட்டது?

யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் தொற்று ஏற்படலாம். ஹச்.ஐ.வி உள்ள மனிதர்கள் காச நோயால் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எச். ஐ. வி.-யால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்த பாக்டீரியா வளர்ந்து பன்மடங்காகலாம். இது காச நோய் வியாதியாக மாற்றமடைகிறது.

கடைசியாக மாற்றப்பட்டது : 5/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate