অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தலைவலி வகைகள்

தலைவலி வகைகள்

தலைவலி

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம்.

மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது. பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம். பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

சாதாரண தலையிடியானது தலையில்  அமைந்துள்ள (முகம் உட்பட) தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்

அத்துடன், உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையளற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக் கட்டிகள் போன்றவற்றின் அறிகுறிக்யாகவும் தலையிடி ஏற்படுகின்றது.

பெண்களிடையே மாதவிலக்கு காலங்களில் காணப்படும் மிகப் பெரும்பாலான தலிவலிகளுக்கு, பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின் ஏற்ற இறக்கமே காரணமாகும்.

பொதுவாக சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிறின், பரசித்தமோல், இபுபுரோபின், போன்ற வலிநீக்கி மாத்திரைகளே போதுமானதாக இருக்கக்கூடும்.

ஆனால், சில குறிப்பிட்ட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். இத்தலைவலியானது, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்ற ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் கண்டறிய முடியுமானால் அவற்றை  தவிர்ப்பதன் மூலம் தலையிடி ஏற்படாது தடுக்கலாம்.

தலைவலி வகைகள்

1. மன உளைச்சல் தலைவலி

2. சைனஸ் – தலைவலி

3. விபத்துகளுக்குப் பின்னால் ஏற்படும் தலைவலி

4. தமனிகள் தொடர்பான தலைவலி

5. தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி

6. வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலி

7. தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி.

8. தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் பிரச்சனைகளால் வரும் தலைவலி

9. குழந்தைகளுக்கு வரும் தலைவலி

10. வயதானவர்களுக்கு வரும் தலைவலி

11. ஒற்றைத் தலைவலி

மன உளைச்சல் தலைவலி

கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.

இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.

சைனஸ் தலைவலி

மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும். முன் மண்டை முழுவதும் பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.

தமனிகள் தொடர்பான தலைவலி

மூளைக்கு குளுக்கோசும் ஆக்ஸிஜனும்தான் உணவு. இவை ரத்த நாளங்கள் (தமனி) வழியே மூளைக்குக் கிடைக்கின்றன. இவை செல்லும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மூளைக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காது. அப்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த தமனிகளின் பாதையில் கொழுப்புக் கட்டிகள் அடைத்துக் கொள்வதால் இந்தக் குழாய் இறுகி, ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் தடைபட்டுப் போகலாம். அப்போது அதன் அறிகுறிகளும் தலைவலியும் ஏற்படுகின்றன.

இரத்தக் கசிவால் ஏற்படும் தலைவலி

ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது அதிக அழுத்தம் காரணமாக வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது திடீரென அவருக்கு மண்டையைப் பிளப்பது போல தலைவலி ஏற்படும். இதுவே நீண்ட நேரத்திற்கு ரத்தக் கசிவு இருந்தால் மூளை வீங்கத் தொடங்கும்.

வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலி

சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் தலைவலி ஏற்படும். அதோடு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், ரத்த சோகை, இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்.

தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி

எச்.ஐ.வி கிருமிகள் தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மூளையில் மெனிஞ்சைடிஸ் மற்றும் கட்டிகள் தாக்கத்தாலும் தலைவலி ஏற்படும். மூளையின் உள்ளே தொற்றுகளின் தாக்கத்தால் அழுத்தம் அதிகமாகிறது. அதனால் உள்ளே நாளங்கள் இழுக்கப்பட்டு தாங்கமுடியாத தலைவலி ஏற்படும். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பக்கூடிய இந்த வலி தலையை முன்னோக்கி குனியும்போது அதிகரிக்கும்.

ஒரே நாளில் பலமுறை விட்டுவிட்டு வரும் க்ளஸ்டர் (Cluster) தலைவலி

தூங்க முடியாமல் கண் இமைகள் படபடத்து அடித்துக் கொள்ளும். வியர்த்துக் கொட்டும். காலை, மதியம், மாலை என்று எப்போது வந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சரியாகத் தாக்கும். நோயாளிக்கு அதிக எரிச்சலைக் கொடுக்கும். படுத்துக் கொண்டு இருப்பதைவிட உட்கார்ந்தால் சற்று சௌகரியமாக இருக்கும். இருட்டான அமைதியான அறையை நோயாளிகள் நாடுவார்கள். கண்ணைச் சுற்றியுள்ள தமனிகளின் அசாதாரணத் தன்மையால் இந்த வலி ஏற்படுகிறது.

நீண்ட நாள் தலைவலி

மாதம் 15 நாட்களுக்குத் தலைவலி வந்து தொல்லை தருகிறது. வலியின் தீவிரம், இடம், தன்மை என்று அதன் ஒவ்வொரு தாக்கத்திலும் வேறுபடும். அதுமட்டுமின்றி தலைவலியுடன் வயிற்றுப் புரட்டல், வாந்தி, எரிச்சல், மனச்சோர்வு, ஞாபகத்திறனில் பிரச்சனை, பதட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளும் இவர்களுக்கு இருக்கலாம்.

தலையில் அடி மற்றும் அது சார்ந்த தலைவலி

தலையில் சாதாரண காயம் ஏற்பட்டு அடிபட்ட 30 நிமிடங்களுக்குள் நினைவிழப்பு ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும்கூட இந்த தலைவலி தொடர வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்பட்டு 1 வாரம் முதல் 3 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வலி ஆரம்பிக்கலாம்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/13/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate