অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

பற்கள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

ஈறு நோய்கள்

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.

பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை

வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை

சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.

பல்சீரமைப்பு

பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ள போது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும், வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பல் சீரமைப்புக்கான சிகிச்சை

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.

பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

  1. பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.
  2. பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
  3. பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.
  4. வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
  5. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
  6. தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

கேள்வி பதில்கள்

வாயில் உருவாகும் நோய்களால் உணவுக்குழலுக்கும் பாதிப்பு ஏற்படுமா?

வாயில் உண்டாகும் நோய்கள், உணவுக்குழலையும் பாதிக்கின்றன. தொடர்ந்து நோய்க்கிருமிகளை விழுங்குவதன் மூலம், வயிற்றுப்புண் ஏற்படுவது ஒரு எடுத்துக்காட்டு.

நோய்வாய்ப்பட்ட பற்களால் ஏற்படும் தீமைகள்?

ஈறு நோயை கவனிக்காவிட்டால், அந்நோய் முற்றி, ஈறுகளில் சீழ் படிந்துவிடுகிறது. அதனால், சம்பந்தப்பட்ட எலும்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீழ் வடிவதன் மூலம், பற்களில் உள்ள ரத்த நாளங்கள் மூலம், நோய்க்கிருமிகள், உடலின் மற்ற பாகங்களுக்கு சென்று, அவற்றின் இயக்கங்களுக்கு தடையாக உள்ளன.

எவ்வகை சரும நோய்களுக்கு இப்பாதிப்பு காரணமாகிறது?

படை, சிரங்கு, பொடுகு, டீனியா முதலான முக்கிய பல சரும வியாதிகளுக்கு, பல் நோய்கள் காரணமாகின்றன.

ஒரு பல் கிருமிகளால் பாதிக்கப்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

பற்கள் பாதிக்கப்பட்டு, அவை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டால், பற்களை உடனே அகற்றிவிடுவது நல்லது. அவற்றால், உடலின் பொதுநலம் பாதிக்கப்படுவதை விட, அதை அகற்றிவிட்டு செயற்கை பல் வைப்பதே நல்லது.

ஆதாரம் : அரசு பல்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate