অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அவயவவீக்கம்

அவயவவீக்கம்

அறிமுகம்

இது நிணநீர் ஓட்டத் தடை என்றும் அழைக்கப்படும். நிணநீர் மண்டலத்தின் செயல்பாட்டுக் குறைவால் ஆங்காங்கே பாய்மங்கள் தேங்கி திசுக்கள் வீக்கம் அடைகின்றன. இடைத்திசு பாய்மங்களை நிணநீர் மண்டலம் நெஞ்சு நாளத்துக்குத் திருப்பி அனுப்புகிறது. பின் அவை இரத்த ஓட்டத்திற்குள் கலந்து அங்கிருந்து மீண்டும் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது.

இரண்டு முக்கிய வகையான அவையவ வீக்கங்கள் உள்ளன:

முதனிலை அவயவவீக்கம்

கோளாறான மரபணுக்களால் ஏற்படும் இவை பிறப்பில் அல்லது வயதுக்கு வந்தபின் உருவாகிறது.

இரண்டாம் நிலை அவயவவீக்கம்

தொற்று, காயம், அதிர்ச்சி அல்லது புற்று நோயால் நிணநீர் மண்டலம் பாதிக்கப்படுவதால் உண்டாகிறது.

நோயறிகுறிகள்

அவயவங்கள் முழுவதிலும் ஏற்படும் வீக்கமே முக்கிய அறிகுறி.

பிற அறிகுறிகளாவன:

  • பாதிக்கப்பட்ட அவயவம் கனமாகவும் வலியுடனும் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட அவயவம் சிறிது அசைவை இழக்கும்
  • பாதிக்கப்பட்ட அவையவத்தில் வலி
  • அவயவ வீக்கத்தால் முழங்கை, முழங்கால் போன்ற மூட்டுகளில் வலி
  • பாதிக்கப்பட்ட அவயவத்தில் அடிக்கடி தோல் தொற்றுக்கள்

காரணங்கள்

முதனிலை மற்றும் இரண்டாம் நிலை அவயவ வீக்கங்களுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.

புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை

நிணநீர் மண்டலம் வழியாக புற்று நோய் உடல் முழுவதும் பரவுகிறது. இதற்கான அறுவை மருத்துவத்தின் போது புற்றுநோயுள்ள நிணநீர்ச்சுரப்பிகள் அகற்றப்படுகின்றன. கீழ் வரும் சிகிச்சைகளை அளிப்பதால் ஏற்படும் சிக்கல்களின் மூலமாக அவயவ வீக்கம் ஏற்படும் அபாயம் உண்டு:

  • மார்பகப் புற்று
  • தோல் புற்று
  • பெண்களுக்கே வரும் புற்றுநோய்களான கர்ப்பப்பைவாய் மற்றும் கருவாய்ப் புற்றுக்கள்
  • ஆண்களுக்கே வரும் புற்றுநோய்களான முன்னிலைச் சுரப்பி அல்லது ஆண்குறிப் புற்று

கதிர்வீச்சு சிகிச்சை

கதிர்வீச்சு மருத்துவம் கட்டுப்படுத்தப்பட்ட அதி ஆற்றல் கதிர்வீச்சை கொண்டு புற்று திசுக்களை அழிக்கிறது. எனினும் சிலசமயம் நல்ல திசுக்களும் அழிக்கப்படலாம்.

நரம்பு நோய்கள்

நரம்புகள் வழியாக இரத்தம் செல்வதைத் தடுக்கும் நரம்பு நோய்கள் சிலருக்கு அவயவ வீக்கத்தை ஏற்படுத்தலாம். அசாதாரண அல்லது சிதைவடைந்த நரம்புகளால் திசுக்களில் அதிக இரத்தம் அல்லது பாய்மங்கள் தேங்கி திசுக்கள் சிதைவடைகின்றன. இது நிணநீர் மண்டலத்தில் சுற்றோட்டத்தைப் பாதிக்கலாம்.

அவயவ வீக்கத்தை உண்டாக்கும் சில நரம்பு நோய்களாவன:

ஆழ்நரம்பு இரத்த உறைவு (டி.வி.டி) — உடலில் உள்ள ஆழமான நரம்பு ஒன்றில் உண்டாகும் இரத்த உறைவு

சுருள்சிரை (நரம்பு வீக்கமும் விரிவடைதலும்) — நரம்புகளில் இரத்தம் குறைவாகச் செல்வதால் நரம்பு அழுத்தம் அதிகமாகி அதிக பாய்மம் திசுக்களுக்குள் செல்கிறது.

தொற்றுநோய்கள்

சில வேளைகளில் தொற்றும் அவயவ வீக்கத்தை உண்டாக்கும்.

புரையோடுதல் நோய், பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இதனால் உண்டாகும் அவயவ வீக்கம் சில வேளைகளில் அந்நோயின் சிக்கலான கட்டமாகவும் இருக்கும். கடுமையான புரையோடுதலில், நிணநீர்ச் சுரப்பிகளை அல்லது இரத்தக்குழாய்களைத் தொற்று சுற்றி இருக்கும் திசுக்களை சிதைப்பதால் வடு ஏற்படும்.

பாரசைட்டால் ஏற்படும் யானைக்கால் நோய் அவயவ வீக்கத்தை உண்டாக்கும் இன்னொரு தொற்று நோயாகும். இந்தியாவில் சில பகுதிகளில் இருப்பது போல் வளர்ந்து வரும் நாடுகளில் இது பரவலாகக் காணப்படுகிறது.

அழற்சி

  • திசுக்களில் அழற்சி உண்டாக்கும் (சிவப்பும் வீக்கமும்) பாதிப்புகள் நிணநீர் மண்டலத்தை நிரந்தரமாகச் சிதைக்கும். அவயவ வீக்கத்தை உண்டாக்குபவை:
  • வாத மூட்டழற்சி - மூட்டுகளில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்
  • சொறி – இது தோலில் அரிப்பு, சிவப்பு, வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.

நோய்கண்டறிதல்

இச்சோதனைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

அளவு நாடா

4 செ.மீ. (1.6 அங்குலம்) இடைவெளி விட்டு காலில் மேல் நோக்கி அவயவ சுற்றளவு அளக்கப்பட்டு பின் அவயவ கன அளவு கணக்கிடப்படுகிறது.

நீர் இடப்பெயற்சி முறை:

ஒரு பொருள் இடப்பெயற்சி செய்யும் நீரின் அளவைக் கொண்டு கன அளவைக் கணக்கிட முடியும் என்ற அறிவியல் கொள்கையின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நோயாளி தன் பாதிக்கப்பட்ட அவயவத்தை ஒரு தொட்டியில் உள்ள தண்ணீருக்குள் வைக்கும் போது இடப்பெயர்ச்சியாகும் நீரின் அளவைக் கணக்கிடுகின்றனர். இந்த அளவைக் கொண்டு அவயவ கன அளவு கணக்கிடப்படும்.

அகச்சிவப்பு கதிர்

அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு அவயவத்தின் கன அளவு அளவிடப்படுகிறது. அவயவ வீக்கம் எவ்வளவு என்று இதன் மூலம் துல்லியமாகக் கணக்கிடப்படும்.

பிம்ப சோதனைகள்

பிம்ப சோதனைகள் கொண்டும் நோயைக் கண்டறிய முடியும். அவையாவன:

  • லிம்போசெண்டிகிராப் — கதிர்வீச்சு சாயம், ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஒரு சிறப்பு வரைவியால் அதன் பாதை தொடர்ந்து கவனிக்கப்படும். நிணநீர் மண்டலத்தின் வழியாக சாயம் செல்லும்போது அடைப்புகள் இருந்தால் அதன் மூலம் கண்டறியலாம்.
  • காந்த அதிர்வு பிம்ப ஊடுகதிர் (எம்.ஆர்.ஐ) — வலுவான காந்தப் புலமும் வானொலி அலைகளும் பயன்படுத்தப்பட்டு உடலின் தெளிவான உட்புற பிம்பம் உருவாக்கப்படுகிறது.
  • கேளா ஒலி ஊடுகதிர் — அதி அதிர்வு ஒலி அலைகள் மூலம் உடலின் உட்புற பிம்பம் உருவாக்கப்படுகிறது.
  • கணினி (அச்சு) வரைவி ஊடுகதிர் (சி.டி. அல்லது சி.ஏ.டி)— இது எக்ஸ்-கதிரையும், கணினியையும் பயன்படுத்தி நரம்புகள் மற்றும் நிணநீர் சுரப்பிகளின் விவரமான பிம்பத்தை உருவாக்குகிறது.

சிகிச்சை

  • அவயவ வீக்கத்திற்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைத் திட்டம், கூட்டுத் தேக்க நீக்க சிகிச்சை (சி.டி.டி) யாகும். இது நிணநீர்த் தேக்க நீக்க சிகிச்சை (டி.எல்.டி) என்றும் அழைக்கப்படும்.
  • கூட்டுத் தேக்கநீக்க சிகிச்சை (சி.டி.டி)யில்  நான்கு முறைகள் உள்ளன:
  • நிணநீர் வெளியேற்ற கைசிகிச்சை (எம்.எல்.டி): இது ஒரு பிரத்தியேகமான உருவுமுறை. இதன் மூலம் நிணநீர் பாய்தல் தூண்டப்பட்டு வீக்கம் குறையும்.
  • பல்லடுக்கு அவயவீக்க கட்டு (எம்.எல்.எல்.பி): பாதிக்கப்பட்ட அவயத்தில் இருந்து பாய்மத்தை வெளியேற்ற கட்டுக்களும் அழுத்தம் தரும் துணிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
  • சீர்ப்படுத்தும் பயிற்சிகள்: அவயவத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் நிணநீர் ஒட்டம் மேம்படுத்தப்படுகிறது.
  • தொற்று நோயைத் தடுக்க தோல் பராமரிப்பு அவசியம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate