பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மது பயன்பாட்டுக் கோளாறு

மது பயன்பாட்டுக் கோளாறு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்திய சமூகத்தில் மதுவின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, கல்லீரல் இழைநார் வளர்ச்சி, இதய நோய், நீரிழிவு போன்ற கெடுதலான உடல்நல பாதிப்புகளும் பணிக்குச் செல்ல இயலாமை, சாலைப் போக்குவரத்து விபத்துகள், பல்வேறு மனநல மற்றும் நடத்தைக் கோளாறுகள்  போன்றவையும் உண்டாகின்றன.

உலக அளவில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மதுவே ஒரு முக்கியக் காரணம்; இது இந்தியாவைப் பொருத்த வரையில் கூட உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் மதுவால் உலக அளவில் 3.2 % மரணங்கள் நிகழ்கின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலும் அருகிலுள்ள தெற்கு ஆசிய நாடுகளிலும்,  மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வரை ஆண்கள் மது அருந்துகின்றனர். பெண்களிடமும் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தீங்கு விளைவிப்பதற்கான சான்றும், பயன்பாட்டை நிறுத்தும் தொடர் முயற்சிகளும் இருந்த பின்னரும் தொடர்ந்து மதுவை பயன்படுத்துதலே மது பயன்பாட்டுக் கோளாறு எனப்படும்.

மதுசகிப்புத் தன்மையும் இதில் அடங்கும். அதாவது, போதை கிடைப்பதற்காக மேலும் மேலும் மதுவின் அளவைக் கூட்டுதல், மது உட்கொள்ளாதபோது தனித்துவமான மனம் மற்றும் உடல் ரீதியான நடத்தை அறிகுறிகள் தோன்றுதல் (மது நிறுத்தப் பின்விளைவுகள்).

மது பயன்பாட்டுக் கோளாறால் ஒருவருக்கு உடல் மற்றும் மன நலத்திற்குத் தீங்கும் சிதைவும் ஏற்படும், பணி செய்வது பாதிப்படையும், உறவுகளில் முரண்பாடும், சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகளும் உண்டாகும்.

இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளும் அவற்றின் பரப்பும்

இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் குடிப்பழக்கம் பரவலாக உள்ளது. பொதுவாக, ஆண்களிடம் இப்பழக்கம் பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி 23%-லிருந்து 74% வரை வேறுபடுகிறது. பெண்களிடம் பரவலாகக் காணப்படாவிட்டாலும், சில பிரிவுகளிலும் சமுதாயங்களிலும் 24% முதல் 48% வரை பரவலாகக் காணப்படுகிறது.

2005-ல் இந்தியாவில் குடிப்போர் எண்ணிக்கை 6.25 கோடி. இவர்களில் 17.4% பேர் (1.06 கோடி) மது பயன்பாட்டுக் கோளாறு உடையவர்கள். இந்தியாவில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் படுகிறவர்களில் 20-30 % பேர் மது தொடர்பான பிரச்சினைகளாலேயே அனுமதிக்கப் படுகின்றனர்.

நினைவிருக்கட்டும் : குடிப்பது ஒரு மனக்கோளாறாக இருக்கலாம்

உங்களைச் சுற்றி இருக்கும் யாராவது குடிப்பதை நிறுத்தமுடியாமல், அதனால் எழும் பிரச்சினைகளால் எப்பக்கமும் தத்தளித்துக்கொண்டு இருந்தால் அது ஒரு மனநலக் கோளாறு என்பதை நினைவில் வைத்திருங்கள். அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதை பற்றி எண்ணிப்பாருங்கள். இணக்கமும் தகுந்த சிகிச்சையும் இருந்தால் குணப்படுத்தி விடலாம்.

சாலைப்போக்குவரத்து விபத்துகள்: இந்திய அரசின் அறிவிப்பின் படி 2010-ல் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 134000 பேர் ஆகும். மலைக்கவைக்கும் இந்தப் புள்ளி விவரப்படி தினமும் 336 பேர் மரணம் அடைகின்றனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வு, 40 % சாலை விபத்துக்கள் குடிபோதையினாலேயே ஏற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலோனோர் இதில் இளைஞர்கள். ஆக்கபூர்வமான 20-50 வயது குழுவில் அடங்கியவர்கள். குடித்துவிட்டு வாகனமோட்டுதல் நாட்டுக்கு ஒரு சாபக்கேடாகி விட்டது.

குற்றமும் குடியும்: குடிக்கும் அதிக ஆபத்தான நடத்தைகள், குடும்ப வன்முறை, அபாயகரமான பாலியல் நடத்தைகள், குற்றமும் வன்முறைச் செயல்களும் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்பைப் பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

தற்கொலை: குடி தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களில் 10—15 % பேர்  தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். பொது மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமானதாகும். ஆரம்பத்திலேயே தகுந்த முறையில் கவனம் செலுத்தி இருந்தால் கணிசமானவர்களைக் காப்பாற்றிவிடலாம்.

உடனிருந்து உருக்குலைக்கும்: மது பயன்பாட்டுக் கோளாறு எப்போதுமே போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறு, சமூகவிரோத ஆளுமைக் கோளாறு, மனக்கவலை கோளாறுகள், மனவழுத்தம் போன்ற மனநிலைக் கோளாறுகள், இருமனக்கோளாறு போன்றவற்றுடன் இணைந்தே காணப்படும். பொதுவாக இந்த இணைப்பு சிக்கலானதாகவும் சமாளிக்க முடியாததாகவும் இருக்கும். இதுமட்டுமன்றி மது பயன்பாடு மது தூண்டும் மனக்கோளாறு, மது தூண்டும் மனநிலைக் கோளாறு, மது தூண்டும் மனக்கவலைக் கோளாறு மற்றும் மது தூண்டும் பாலியல் குறைபாடு ஆகியவற்றிற்கும் கொண்டுசெல்லும்.

குடித்தால் தூக்கம் வரும் என்பது கற்பனையே: பொதுவாக மது தூக்கத்தைத் தரும் என்று மக்கள் நினைத்துக் குடிக்கின்றனர். ஆனால் மது எளிதாகத் தூங்குவதற்கு வகைசெய்தாலும் உணமையில் அது தூக்கத்தற்கான கட்டுமானத்தைக் குலைக்கிறது. இதன் விளைவாக  ஆழ்ந்த தூக்கம் குறைதல், விட்டுவிட்டு தூங்குதல் ஆகியவை உண்டாகி இறுதியில் அடிக்கடி விழித்திருக்கும் நேரமே அதிகம் என்றாகிறது. எனவே உறக்கம் தரும் மருந்தாக மதுவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

உருப்பெற்றகரு பாதிப்பு நோய்: கர்ப்பமாக இருக்கும் பெண் குடிப்பதால் குழந்தை குறைகளோடு பிறக்கும் வாய்ப்பு 35-40 % உள்ளது. மேற்கு நாடுகளில் அறிவுத் திறன் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும் உருப்பெற்ற கரு பாதிப்பு நோய் கர்ப்ப காலத்தில் மதுவைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகும். இதனால் சிறிய தலை, முகக் குறைபாடுகள், அவயவம் மற்றும் இதயக் கோளாறுகளுடன்  குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைக்கு நேரக்கூடிய சேதாரத்தைத் தவிர்க்க கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் மது அருந்தக் கூடாது.

அறிகுறிகள்

பொதுவாக ஓர் ஆண்டுக்கும் மேலாக மது அருந்தும் நீண்ட நாள் பழக்கம் உள்ளவர்களுக்கு மது பயன்பாட்டு கோளாறு கீழ்க்காணும் அறிகுறிகளை வெளிப்படுத்தும்:

 • மது அருந்த வேண்டும் என்ற கடும் விருப்பம்
 • மதுவைப் பெறுவதற்கும், குடிப்பதற்கும், போதையில் ஆழ்ந்த பின் அதன் விளைவில் இருந்து உடலும் மனமும் விடுபடுவதற்கும் ஒருவர் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்.
 • ஒருவர் தாம் உட்கொள்ளும் மதுவின் அளவைக் குறைக்கப் பெரும்பாலும் முயற்சி செய்கிறார். ஆனால் அத்தகைய முயற்சிகள் வெற்றி அடைவதில்லை.
 • மது உட்கொள்ளுதல் ஒருவர் வரையறுக்கும் எல்லையைத் தாண்டிச் செல்கிறது. முதலில் நினைத்ததற்கு மாறாக உட்கொள்ளும் மதுவின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 • குடிப்பவருக்கு மது “சகிப்புத்தன்மை” உருவாகிறது. விரும்பும் விளைவை அல்லது போதையை அடைய அதிக அளவு மது தேவைப்படுகிறது. முதலில் உட்கொண்ட அளவு அதே அளவு போதையை இப்போது தருவதில்லை.
 • தொடர்ந்து மதுவைப் பயன்படுத்தி வருபவருக்கு தமது கடமைகளைச் செய்வதிலும் சமுதாயத்தில் தனக்குரிய பங்கை ஆற்றுவதிலும் தோல்வி ஏற்படுகிறது. உதாரணமாக, பணி அல்லது கல்விநிலையத்திற்குச் செல்லாமை, பணியிலும் படிப்பிலும் மோசமான நிலை, குழந்தைகளையும் குடும்பக் கடமைகளையும் புறக்கணித்தல்.
 • மதுவைப் பயன்படுத்தும் விதத்தினால் பல தனிநபர் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழுகின்றன. அல்லது மதுவின் விளைவுகளால் அப்பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. உதாரணமாக, கணவன் மனைவிக்கு இடையில் சண்டை அல்லது பிறருடன் கைகலப்பு.
 • மது பயன்பாட்டால் பிற முக்கியமான பணிகள் அல்லது பொழுதுபோக்குகள் கைவிட அல்லது குறைக்கப் படுகின்றன. மது அருந்துவதிலேயே ஒருவர் மூழ்கிப் போய்விடுகிறார்.
 • ஆரோக்கியத்திற்கும், சமூகத்திற்கும், சுயவாழ்க்கைக்கும் மதுவால் விளையும் சேதத்தை அறிந்த பின்னும் மது அருந்துதல் தொடர்கிறது.
 • தம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சூழல்களிலும் கூட  ஒருவர் திரும்பத் திரும்ப மது அருந்துகிறார். உ-ம்., வாகனமோட்டுதல்.

மது உட்கொள்ளாத போது குடிகாரருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் கீழ்வரும் ஒன்றோ அல்லது பலவோ அடங்கும்:

(அ) நடுக்கம்

(ஆ) தூக்க இடையூறு

(இ) மனநிலை மாற்றம்

(ஈ) வியர்வை

(உ) மனக்கவலை

(ஊ) வலிப்பு

(எ) தன்னிலை இழப்பு

(ஏ) மருட்சி (தூண்டுதல் இன்றி உணர்வு உ-ம்., பூச்சி இல்லாமல் இருந்தும் தோலில் பூச்சி ஊர்வது போன்ற உணர்வு)

(ஐ) இரத்த அழுத்தம் அதிகரித்தல்

(ஒ) சித்தபிரமை (உணர்வுநிலை ஊசலாடுதல்)

(ஓ) மதுவின் மேல் அடங்கா விருப்பம்

மது போதை

மது உளவினைப் பொருளாக இருப்பதால், ஒருவர் உட்கொண்ட அளவைப் பொருத்தும் அவரது தாங்கும் திறனைப் பொருத்தும் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது.

உட்கொள்ளும் அளவைப் பொருத்து விளைவுகள் ஏற்படுகின்றன. குறைந்து அளவு உட்கொள்ளும் போது, பரவசம், தோல் சிவத்தல், சமூகத்திலிருந்து ஒதுங்குதல் ஆகியவை ஏற்படும். அதிக அளவு உட்கொள்ளும் போது, குமட்டல், வாந்தி, குழறுதல், தடுமாற்றம், முடிவெடுக்கும் திறன் சிதைவு, கடும் மூச்சு சிரமம், ஆழ்மயக்கம், மரணம் வரை நேரிடலாம்.

காரணங்கள்

தொடக்க நிலைக் குடிப்பழக்கம், மது பயன்பாட்டுக் கோளாறாக முழுமை பெற்று வளர்வதற்குப் பல்வேறு காரணிகள் சிக்கலான விதங்களில் செயல் படுகின்றன. மொத்தத்தில், உளவியல், உயிரியல், சமூகப்-பண்பாட்டுவியல் மற்றும் பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்தே கடுமையான மது தொடர்பான வாழ்க்கைப் பிரச்சினையாக உருக்கொள்கிறது.

மது அருந்தத் தொடங்குதல் சமூக, மத மற்றும் உளவியல் காரணங்களால் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கு மரபியல் காரணியும் பங்களிக்கலாம்.

ஒரு தொடர்ந்த மரபியல் தாக்குறவுகள் மது பயன்பாட்டுக் கோளாறு ஆபத்துக்கு 60 %  காரணமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதி சூழலியல் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

மனவழுத்தத்தைக் குறைப்பதற்கும், உளவியல் ரீதியான வலியையும், நரம்புத்தளர்ச்சியையும் போக்குவதற்கும் சுயபரிந்துரை மருந்தாகவும் மதுவைப் பயன்படுத்துவது உளவியல் காரணிகளில் அடங்கும். ஆயினும், நாட்கள் செல்லச் செல்ல, இரத்த ஆல்ககால் அளவு வீழ்ச்சி அடைந்து வரும்போது, அது நரம்புத்தளர்ச்சி மற்றும் பதற்ற உணர்வை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உள இயங்காற்றல் கொள்கைகள், மதுவருந்துதல் வாய்நிலையிலேயே நிலைபெற்று விடுவதையும், கடுமையான தண்டிக்கும் மிகைமுனைப்பைக் கையாள மது பயன்படுத்தப் படுவதையும் குறிக்கிறது. நடத்தையியல் கொள்கைகள், பலனளிக்கும் விளைவுகளை எதிர்பார்ப்பதையும், நேரிய வலுவூட்டலையும், மதுவருந்துதலைப் பேணுவதன் காரணங்களாகக் குறிக்கின்றது.

சமூகப் பண்பாட்டுக் காரணிகள், குடிப்பது, குடிபோதை, மற்றும் விளைவுகளுக்கான தனிநபர் பொருப்பு ஆகியவற்றைக் குறித்தக் கலாச்சார மனப்பாங்கை மது பயன்பாட்டு கோளாறுக்கான முக்கிய தீர்மானக் கூறுகளாக உள்ளடக்குகின்றன.

கவனக் குறைபாட்டு மிகையியக்கக் கோளாறு அல்லது நடத்தைக் கோளாறு, ஆகிய குழந்தைப் பருவ காரணிகளின் வரலாறு அல்லது இரண்டுமே பின்னர் மது பயன்பாட்டுக் கோளாறை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

மது பயன்பாட்டு கோளாறு தொடர்புடைய ஆபத்துள்ள குழந்தைகளுக்கு மூளைச் செயல்பாட்டில் ஒரு தனித்துவமான உயிரியல் முறை தென்படுவதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு குடிகாரரின் நெருங்கிய உறவினர்களுக்கு கடுமையான மது தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு மூன்று அல்லது நான்கு மடங்கு மரபியல் ரீதியான ஆபத்துள்ளது.

இதன் மூலம் எவ்வாறு பல்வேறு உயிரியல், உளவியல், சமூகப்பண்பாட்டியல் காரணிகள் ஊடாடி மது பயன்பாட்டு கோளாறை ஒருவருக்கு ஏற்படுத்துகின்றன என்பதை நம்மால் காண முடிகிறது.

கண்டறிதல்

நோயாளி, அவரைப்பற்றிய தகவல் அளிக்கக்கூடிய நெருக்கமானவர்கள், பராமரிப்பவர்கள் ஆகியோர் கூறும் விவரமான வரலாற்றின் மூலம் மருத்துவ ரீதியாக மது பயன்பாட்டு கோளாறு கண்டறியப்படுகிறது. மது போதையைக் கண்டறிய மனநிலை ஆய்வு, உடலியல் ஆய்வு, மற்றும் சில ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக,

 • போதை என்று சந்தேகப்பட்டால் இரத்தத்தில் மதுவின் அளவு
 • உயிர்நொதி ஏற்றம், குறிப்பாக GGT மற்றும்  SGOT, SGPT
 • நீண்ட நாள் மது பயன்பாட்டு குறிகள், உ-ம். கல்லீரல் கொழுப்பு, கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற கல்லீரல் மாற்றங்கள்
 • தொடர் மது பயன்பாட்டோடு மிகை இரத்த அழுத்தம் அல்லது நரம்புப் புடைப்பு இணைந்திருப்பதைக் காணலாம்

மேலாண்மை

மது பயன்பாட்டுக் கோளாறு ஒரு சிக்கலான பிரச்சினையாகும். அதைக் கையாள பன்முக உத்தி தேவைப்படுகிறது.

மேலாண்மையில் பொதுவாக மூன்று படிகள் உள்ளன:

1. குறுக்கீடு

2. போதைநீக்கம்

3. மறுவாழ்வு

மது பயன்பாட்டால் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்மன பாதிப்புகளுக்கு ஏற்கெனவே அவர் முடியக் கூடிய அனைத்து மருத்துவப் பராமரிப்பையும் பெற்றுவிட்டார் என்று இவ்வணுகுமுறை அனுமானிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு மதுபயன்பாட்டால்,  கடுமையான கல்லீரல் நோயோ அல்லது இரத்த உட்கசிவோ இருந்தது என்றால் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மதுவை நிறுத்திய பின் ஏற்படும் எதிர்விளைவுகளோடு சேர்த்து அதற்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

1. குறுக்கீடு: இக்கட்டத்தில் ஒருவர் தமது மது பயன்பாட்டின் விளைவுகளை எதிர்கொண்டு அதனால் உருவான பிரச்சினைகளால் மதுப்பழக்கத்தை விடவும், சிகிச்சைக்கும், மதுவைத் தவிர்ப்பதற்குமான ஊக்கத்தை மேம்படுத்துகிறார்.

குடும்பத்தினரும், மதுவால் உண்டான விளைவுகளில் இருந்து நோயாளியைப் பாதுகாக்கக் கூடாது என்ற புரிதலுக்கு வருகின்றனர். மேலும், பொதுவாக அவர்களுக்கு இருக்கும், குற்ற உணர்வு, அச்சம், மற்றும் கோபத்திலிருந்து விடுபட உள்நோக்கும், புரிதலும் அளிக்கப்படுகிறது. துணை புரியும் குழுக்கள் இருந்தால் அவற்றை சந்திக்கவும் அவர்கள் ஊக்கப்படுத்தப் படுகின்றனர்.

2. போதை நீக்கம்: இதில் முழுமையான உடல் பரிசோதனை அடங்கும். பின்னர், மதுநிறுத்தப் பின்விளைவுகளின் கடுமையைப் பொருத்து மருந்துகளுடன் ஓய்வு, போதுமான ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள், குறிப்பாகத் தியாமைன், அளிக்கப்படுகிறது.

முறைகேடான போதைப்பொருள் பயன்பாட்டுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்குப் பிறரை விட சிறந்த பலன்களும், மதுவைத் தவிர்ப்பதற்கான அதிக சாத்தியக் கூறும் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

3. மறுவாழ்வு: இக்கட்டத்தில், மதுவைத் தவிர்க்க அதிக அளவில் ஊக்கம் அளிக்க வலியுறுத்தப்படுகிறது. நோயாளி மதுவற்ற ஒரு புது வாழ்க்கை முறைக்கு ஏற்பத் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள நோயாளிக்கு உதவி அளிக்கப்படுகிறது. மேலும் மீண்டும் மதுப் பழக்கத்திற்குச் சென்று விடாமல் தடுக்கத் தொடர் முய/ற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பல்வேறு கட்டங்களிலும் பின் வரும் மேலாளுமை உத்திகள் கையாளப்படுகின்றன.

அ. மருந்துகள்:

பென்சோடையாசெப்பைன்கள் (BZDs)

போதைநீக்கக் கட்டத்தில் மதுநிறுத்தப் பின்விளைவுகளுக்கு லோராசெபம், கார்டியாசெப்பாக்சைட் போன்றவை பயன்படுத்தப் படுகின்றன.

இவைகள் பழக்கம் உருவாக்கும் மருந்துகள் ஆகும்; தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதால், ஒரு நிபுணரின் கண்காணிப்பின் கீழ் கு/றுகிய காலத்திற்கே பயன்படுத்த வேண்டும்.

தியாமைனும் பிற உயிர்ச்சத்துக்களும்: போதை நீக்கக் கட்டத்தில் இவ்வுயிர்ச்சத்துக்களை நிரப்ப வேண்டியது இன்றியமையாதது ஆகும். இல்லையெனில் குறுகிய அல்லது நீண்டகால மூளைச் சேதம் ஏற்பட்டு கடுமையான் மூளைக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

அடங்கா விருப்படக்கிகள்: இவை மதுவின் மேல் உள்ள விருப்பத்தை அடக்கும் மருந்துகள். எனவே மறுவாழ்வுக் கட்டத்தில் மதுவைத் தவிர்க்க உதவலாம். இந்த வேலைக்காகவே இவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில சான்றுகளும் கிடைத்து வருகின்றன. இவை பழக்கம் ஏற்படுத்துவன அல்ல. நிபுணரின் கண்காணிப்பின் கீழ்தான் பயன்படுத்த வேண்டும்.

 • அகேம்ப்ரோசேட்
 • நல்டிரக்சோன்
 • டோப்பிராமேட்
 • பெக்லோஃபென்

மதுதடுப்பி (டிசல்ஃபிரம்): மறுவாழ்வு கட்டத்தில் நிபுணரின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மதுவை நிறுத்தியதற்கும் இம்மருந்தை ஆரம்பிப்பதற்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் இருக்கும் மதுவுடன் வினைபுரிந்து, கல்லீரலழற்சி, பார்வையிழப்பு, வெளிப்புற நரம்புத்தளர்ச்சி, சுவாச செயலிழப்பு, மரணம் போன்றவை ஏற்படலாம்.

ஆ. உளவியல் சிகிச்சையும் ஆலோசனையும்: நோயாளி மதுவைத் தவிர்க்கவும், அன்றாடகப் பிரச்சினைகளில் அவருக்கு உதவி செய்யவும், மதுவற்ற வாழ்க்கை முறைக்கு அனுசரிக்க அவருக்கு உதவவும், மதுவின் விளைவுகள் பற்றியும், வாழ்க்கைப் பிரச்சினைகளையும் பின்னடைவுகளையும் சமாளிக்க ஆரோக்கியமான திறன்களை வளர்ப்பது பற்றியும் விவாதித்து மதுவை விடும் அவரது முடிவை வலிமைப் படுத்தவும் பல்வேறு உத்திகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை தனிநபருக்கும் குழுவிற்கும் அளிக்கப்படுகிறது.

இ. புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை: இந்த வகையான உளவியல் சிகிச்சை, மது பயன்பாட்டு கோளாறு மனச்சோர்வுடன் இணைந்து காணப்படும் போது குறிப்பாக நல்ல பலனைத் தரும். மது பயன்பாட்டு கோளாறுக்கும் மனச்சோர்வுக்கும் அடிப்படையான காரணிகளை நோயாளி புரிந்து கொள்ள சிகிச்சை அளிப்பவர் உதவி செய்கிறார். புலன் சார்ந்த தவறுகள் சீர்செய்யப்படுகின்றன; தேவையற்ற நடத்தைகளைக் குறைக்க அல்லது நிறுத்த நடத்தை உத்திகள் பயன்படுத்தப் படுகின்றன. மது பயன்பாட்டுக் கோளாறும் மனச்சோர்வும் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஆழ்சுவாசம் போன்ற மனவமைதி நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈ. ஆதரவு உளவியல் சிகிச்சை: இம்முறையில் பல விதமான உளவியல் மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு, நோயாளியுடன் ஓர் ஆதாரவான மருத்துவ உறவை வளர்த்து ஆரோக்கியமான மனநிலை உருவாக்கப்படுகிறது.

உ. குடும்ப சிகிச்சை : தங்களுக்கு அன்பானவர்களின் மது பயன்பாட்டுக் கோளாறை சரியான முறையில் குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொண்டு மது நாட்டத்தையும் அதனோடு தொடர்புடைய செயலற்ற நடத்தைகளையும் அதிகப்படுத்தாத முறையிலும் நடந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் குடும்ப உளவியல் சிகிச்சை உதவி செய்கிறது. இதனால் சிகிச்சைக்கு ஓர் இணக்கமான சூழல் உண்டாவதால் பலனும் மேம்படுகிறது.

ஊ. குழு சிகிச்சை: மது பயன்பாட்டு கோளாறுடைய ஒருவருக்கொருவர் தொடர்பற்ற நபர்கள் அடங்கிய குழுவிற்கு இந்த உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் உதவிகளை உருவாக்கவும் இது பயனுள்ள வழியாகும்.

சுய உதவி குழுக்கள்: தேவைப்படும் ஆதரவையும், வலிமையையும், மதுவற்ற வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் ஒத்த நண்பர்கள் குழுவின் அனுபவப் பகிர்வுகளில் இருந்து பெற்ற கல்வியையும் “ஆல்ககாலிக் அனானிமஸ்” போன்ற சுய உதவிக் குழுக்கள் அளிக்கின்றன.

தடுப்புமுறை

மது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க:

 • மது பயன்பட்டின் தீங்கு தரும் முறைகளையும் விளைவுகளையும், அது ஒரு மன நலக் கோளாறு என்பதையும் பற்றிய பெரும் விழிப்புணர்வு
 • பெற்றோரும் சமூகமும் மது பயன்பாடு பற்றிய சிறந்த முன்னுதாரணத்தைக் காட்டுதல்.
 • மது அல்லது போதைப் பொருள் அறிமுகத்தால் இளைஞர்களிடம் தோன்றும் கீழ்வரும் பிரச்சினைகளை விரைவில் அறிந்து கொள்ளுதல்:

அ. ஒருங்கிணைப்பு இல்லாத அல்லது குழறிய பேச்சு

ஆ. படிப்பில் மதிப்பெண் குறைதல்

இ. ஒதுங்கி இருத்தலும் செயல்பாட்டில் ஆர்வமின்மையும்

ஈ. உறவுப் பிரச்சினைகள்

உ. அடிக்கடி மனநிலை மாறுதலும் எரிச்சலும்

ஆரம்பத்தில் குறுக்கிடுதல்: மது பயன்பாட்டாலும் அதன் விளைவுகளாலும் நீங்களோ அல்லது சுற்றி இருக்கும் யாராவது துன்பப்பட்டாலும் அல்லது நீங்களோ அல்லது சுற்றி இருக்கும் வேறு யாராவது  மனவழுத்தம் அல்லது மனச்சோர்வு போன்ற உணர்வு அல்லது நடத்தைப் பிரச்சினைகளைத் தீர்க்க மதுவை மருந்தாகத் தாமே பயன்படுத்தினாலோ உளவியல் உதவிகளை நாடவும்.

மூளை இன்னும் வளர்ச்சி அடைந்து வரும் இளம் பருவத்தில் மது அருந்தத் தொடங்கினால் மது பயன்பாட்டு கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்பதை நினைவில் வைக்கவும்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்பத்தில் தலையிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்விளைவுகள் ஏற்படும்.

உதவியை நாடுங்கள்… மதுவை விடுங்கள்…வாழ்க்கையைத் தழுவுங்கள்!!

இக்கட்டுரையின் உள்ளடக்கம், டாக்டர். மதுசூதன் சிங் சோலங்கி,  “உளவியல் ஆலோசகர்”, உளவியல் மற்றும் நடத்தையியல் துறை, சாக்கட் சிட்டி மருத்துவமனை, புதுதில்லி, அவர்களால் 1-11-2014 அன்று எழுதப்பட்டது.

ஆதாரம் : தேசிய சுகாதார வலைத்தளம்

3.16
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top