অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆந்த்ராக்ஸ்

ஆந்த்ராக்ஸ்

அறிமுகம்

ஆந்த்ராக்ஸ் நோய் விலங்குவழி பரவும் ஒரு நோயாகும் (விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவக் கூடும்). இது தாவரவுண்ணிகளுக்கு அசுத்த மண் மற்றும் உணவில் இருந்தும், அனைத்துண்ணிகளுக்கும் புலால் உண்ணிகளுக்கு அசுத்தமான இறைச்சி மற்றும் பிற உணவுகளில் இருந்தும், வன விலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவிய செத்த உடலை உண்பதாலும் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மிருகம் நீள்நுண்ணுயிரிகளை இறுதி இரத்தப்போக்கில் அல்லது இறப்பின் போது இரத்தத்தைத் துப்புவதன் மூலம் வெளியேற்றுகிறது. நுண்ணுயிரி கருவணுக்கள் மண்ணில் பலகாலம் நீடித்து நிலைக்கும்.

விலங்குகளில் இருந்தும் விலங்குப் பொருட்களில் இருந்தும் மனிதர்களுக்கு இந்நோய் நேரடியாக வருகிறது.

ஆசியா, தென் ஐரோப்பா, சார்-சகாலியன் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரிலேயாவின் சில பகுதிகளை உள்ளடக்கி ஆந்த்ராக்ஸ் நோய் உலகின் பல பாகங்களிலும் நிலவுகிறது. தீங்குதரும் கொப்புளம், தீய வீக்கம், ஊல்சார்ட்டர் நோய், குப்பைபொறுக்குவோர் நோய் என பலவகையாக ஆந்த்ராக்ஸ் நோய் அழைக்கப்படும்.

விலங்குவழி பரவும் இந்நோய் தென் இந்தியாவில் காணப்படுகிறது. ஆனால் வட இந்திய மாநிலங்களில் அரிதாகவே காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஆந்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காணப்பட்டது.

தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் (தில்லி), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம், 2014 –ல் இந்தியாவில் 6 ஆந்தராக்ஸ் தொற்றுப் பரவல் இருந்ததாக அறிவித்தது.

உயிரியல் தீவிரவாதமும் ஆந்த்ராக்சும்:

ஆந்த்ராக்ஸ் ஒரு முக்கியமான உயிரியல் போர் ஆயுதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில்

(i) மிகவும் ஆபத்தானது: மூச்சு வழியாக நுண்ணுயிரிகள் உள்ளிழுக்கப்பட்டால் அது உயிருக்கு நிச்சயமாக ஆபத்து விளைவிக்கும்.

(ii) ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரி வித்துக்கள் பல ஆண்டுகள் நிலைத்து வாழும் ஆற்றல் பெற்றது. அதைக் குறைந்த செலவில் ஏராளமாக உருவாக்கலாம்.

(iii) அது ஒரு போர்க்கருவியாக பயன்படுத்தக் கூடியது; காற்றில் தூவும் மணமற்ற பொருளாக மாற்ற முடியும்; பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நேரத்தில் கொல்லக் கூடியது.

நோயறிகுறிகள்

நோய் பரவும் வகையைப் பொறுத்து ஆந்த்ராக்ஸ் தொற்று தோல். மூச்சு, இரைப்பை ஆகிய மூன்று வடிவங்களில் ஏற்படுகிறது. ஓரிட நோயாகத் தோல் ஆந்த்ராக்ஸ் வடிவமே பெரும்பாலும் காணப்படுகிறது.

தோல் ஆந்த்ராக்ஸ்: இதுவே மிகவும் பரவலான வடிவம். தோலில் வெட்டுக் காயமோ புண்ணோ உடைய ஒருவர் மேல் ஆந்த்ராக்ஸ் கிருமி கருவணுக்கள் நேரடியாகப் படும்போது இந்நோய் உண்டாகிறது. இதன் விளைவாக உருவாகும் அரிக்கும் புடைப்பு வேகமாக ஒரு கருப்புப் புண்ணாக மாறுகிறது. இதன் பின் சிலருக்கு தலைவலி, தசைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி உண்டாகும். தொற்றுள்ள விலங்கு அல்லது அதன் அசுத்தமான திசு, முடி, தோல், மயிர் ஒருவரது மேல் படும்போது தோல் ஆந்த்ராக்ஸ் உருவாகும்.

இரைப்பைக்குடல் ஆந்த்ராக்ஸ்: நோயால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கின் இறைச்சியை உண்ணும்போது இது பரவும். ஆரம்ப அறிகுறி நச்சுணவின் அறிகுறி போன்று இருக்கும். ஆனால் நிலைமை மோசமாகி, கடுமையான வயிற்று வலி, இரத்த வாந்தி, கடும் வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.

நுரையீரல் ஆந்த்ராக்ஸ்: மனிதர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆந்த்ராக்ஸ் மூச்சடைப்பான் என்னும் நுரையீரல் ஆந்த்ராக்சே ஆகும். இது அரியது ஆனாலும் மிகவும் கவலை தருவதாகும். அதிக அளவில் காற்றில் இருக்கும் கிருமிகளை உள்ளிழுக்கும் போது இது உண்டாகிறது. ஆரம்பத்தில் சளி அறிகுறி போல் இருக்கும். படிப்படியாக மூச்சு விடுவதில் சிரமமும் அதிர்ச்சியும் ஏற்படும்.

காரணங்கள்

பெசிலஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் ஒரு கிராம் நேரி, குச்சி வடிவ பாக்டீரியாவால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுகிறது. இது உறைவடிவமான, கருவணு உருவாக்கும் பெசிலஸ் ஆகும்.

பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்தோ, பணியிடங்களில் அசுத்த விலங்குப் பொருட்கள் மூலமாகவோ இந் நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. நோய் வாய்ப்பட்ட விலங்குகளின் இறுதிக்கட்ட இரத்தப் போக்கு அல்லது மரணத்தின் போது இரத்த வாந்தி மூலம் கிருமிகள் வெளிப்படுகின்றன. காற்று படும்போது கருவணு உருவாகின்றன. பாதிப்படைந்த விலங்குப் பொருட்கள் மற்றும் செத்த உடலை உண்ணும் கழுகுகள் மூலம் கிருமிகள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பரவுகின்றன.

நோயரும்பு காலம் சில மணி நேரங்களில் இருந்து ஏழு நாட்கள் வரை இருக்கலாம். பெரும்பாலும் நோய்க்கிருமிகள் புகுந்து 48 மணி நேரத்தில் நோய் ஏற்படும்.

நோய்கண்டறிதல்

இரத்தம், தோல் புண் அல்லது மூச்சுமண்டல கசிவுகளை நேரடியாக பாலிகுரோம் மெத்திலின் நீலத்தால் சாயமேற்றுவதால் ஆய்வகத்தில் பெசிலஸ் ஆந்த்ராசிஸ் கண்டறியப்படுகிறது. இது துரிதமானது. 2-3 மணி நேரத்தில் சோதனை முடிவுகள் கிடைத்தாலும் அவை துல்லியமானவை அல்ல.

திசு ஆய்வு அல்லது எலி, கினிப்பன்றி அல்லது முயல் உடலுள் செலுத்தியும் ஆய்வகத்தில் உறுதி செய்யப்படுகிறது. திசு ஆய்வு மற்றும் இனங்காணலுக்கு 24-48 மணி நேரம் ஆகும். இக்கண்டறிதல் ஊகமே. இது பாலிமரேஸ் தொடர் வினை அல்லது விலங்கு நோய்க்கூறு சோதனை மூலம் உறுதிசெய்யப்படும்.

பாக்டீரிய கூடுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் பாலிமரேஸ் தொடர் வினைச் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இச்சோதனையை நேரடி மாதிரிகளில் இருந்தும் செய்யலாம். கண்டறிதலை உறுதி செய்ய 36-48 மணி நேரம் தேவைப்படும்.

நோய் மேலாண்மை

நுண்ணுயிர்க் கொல்லிகள் மூலம் ஆந்த்ராக்ஸ் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை மருத்துவ ஆலோசனைப்படியே உட்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி நுண்ணுயிர்க் கொல்லிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது.

சிக்கல்கள்

  • மருத்துவம் அளிக்கப்படா விட்டால் 20 % தோல் ஆந்த்ராக்ஸ் உயிருக்கு ஆபத்து அளிப்பவை யாகும்.
  • இரைப்பைக்குடல் ஆந்த்ராக்ஸ் இரத்த நச்சு, அதிர்ச்சி மற்றும் மரணம் உண்டாக்கும். குடல் ஆந்த்ராக்ஸ் 25%-60% நோயாளிகளில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
  • நுரையீரல் ஆந்த்ராக்ஸ் கடுமையான சுவாசப் பிரச்சினைகளை உண்டாக்கும். இது எப்போதுமே உயிருக்கு ஆபத்தானது ஆகும்.

தடுப்புமுறை

நுண்ணுயிர்க்கொல்லிகள் : நோய்க்கிருமிகள் உடலில் புகுந்து அறிகுறிகள் ஏற்படும் முன்னர் நுண்ணுயிர்க் கொல்லிகள் ஆந்த்ராக்ஸ் உருவாகாமல் தடுக்கும். 60 நாட்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகளை உட்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி:

மனிதர்களுக்குத் தடுப்பூசி – ஆந்த்ராக்சுக்கு ஒரு தடுப்பூசி உண்டு. ஆனால் அது பரவலாகப் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்படவில்லை. தோல் தொழிற்சாலை ஊழியர்கள், படையினர், ஆய்வகத்தில் ஆந்த்ராக்ஸ் சோதனையில் ஈடுபடும் ஊழியர், விலங்கு அல்லது விலங்குப் பொருட்களைக் கையாளுவோர் போன்ற ஆந்த்ராக்ஸ் தொற்று பரவும் நிலையில் உள்ளவர்களுக்கு சிலசமயம் இந்தத் தடூப்பூசி இடப்படும்.

18-65 வயதுள்ளவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப் படுகிறது. தசையில் இடும் இந்த ஊசி 5 வேளைகள் கொண்டதாகும். ஆந்த்ராக்ஸ் பரவும் ஆபத்துள்ள நிலையில் முதல் வேளையும், மீதி 4 வது வாரத்திலும், 6. 12, 18-வது மாதங்களிலும் கொடுக்கப்படும். பாதுகப்புக்காக ஆண்டு தோறும் ஊக்க வேளைகளாக அளிக்கவும் பரிந்துரைக்கப் படுகிறது.

சில சூழல்களில் ஆந்த்ராக்ஸ் வரும் வாய்ப்புள்ள போது பிறருக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. இது மூன்று வேளை மருந்து. ஆபத்து ஏற்படும் நிலையில் முதல் வேளையும் (தோலுக்கடியில்) இரண்டாவது, நான்காவது வாரங்களில் மீதி வேளையும் அளிக்கப்படும்.

கீழ்க்காணுவோருக்கு தடுப்பூசி அளிக்கக் கூடாது:

முன்னர் ஆந்திராக்ஸ் தடுப்பூசி அளித்த போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அடுத்த வேளை அளிக்கக் கூடாது.

ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் உள்ள கூறுகளுக்கு கடும் ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி அளிக்கக் கூடாது. வேறு ஒவ்வாமை உள்ளவர்கள் (மரப்பால் உட்பட) தங்கள் மருத்துவரிடம் கூற வேண்டும்.

சற்றே சுகவீனமாக இருந்தால் கூட பொதுவாகத் தடுப்பூசி இடலாம்.

கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி அளிக்கக் கூடாது.

விலங்குகளுக்குத் தடுப்பூசி — மந்தையில் சந்தேகத்துக்கு இடமுள்ள அனைத்து விலங்குகளுக்கும், அருகிலுள்ள விலங்குகளுக்கும், ஓரிடத்தில் நோய் ஏற்படும் சாத்தியக் கூறுள்ள எல்லா விலங்குகளுக்கும் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி இட வேண்டும். தடுப்பூசியின் செயல் திறன் ஓர் ஆண்டுக்கும் உட்பட்டதே. எனவே விலங்குகளால் நோய் பரவும் இடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி இட வேண்டும். சினையான விலங்குகளுக்குத் தடுப்பூசி இடக்கூடாது. நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளோடு இணைத்து தடுப்பூசியையும் பயன்படுத்த வேண்டும்.

ஆந்த்ராக்ஸ் கிருமி பயன்படுத்தப்பட்டுள்ளது (உயிரியல் ஆயுதம்) என சந்தேகப்படும் கடிதம்/பொதிகளை நிபுணர்களின் ஆலோசனைப்படி கையாள வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate