பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / பூச்சிகள் மற்றும் விலங்குகள் / டெங்கு, வைரஸ் காய்ச்சல் - பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டெங்கு, வைரஸ் காய்ச்சல் - பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் மழைநீர் தேங்குவதாலும் சுகாதாரமற்ற குடிநீரைப் பயன்படுத்துவதாலும் ஏற்படக் கூடிய டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதலைத் தவிர்க்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மழைநீர் தேங்கக்கூடாது

மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காதவாறும் நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கட்டிடத்தின் மேல்தளத்தில் வெளியேறாமல் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் உடைந்த பொருட்களில் தேங்கும் தண்ணீர் அகற்றப்பட வேண்டும்.

குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, கிணறு ஆகியவற்றை திறந்த நிலையில் இல்லாதவாறு அவற்றை மூடிவைக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்

பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் தொற்றுநோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். தேங்கியிருக்கும் நல்ல நீரில்தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன என்றும் அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்கள் இருந்தால் சுகாதாரத் துறையினரை அணுகி, குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் இருந்தால் அவற்றில் தேங்கும் தண்ணீர் மூலம், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு அபாயம் இருப்பதால் அவற்றை உடனே அப்புறப்படுத்த ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

நோய்கள் பரப்பும் கொசுக்கள்

கட்டிடப் பணிகளுக்காக நீண்ட நாட்களாக தொட்டிகளில் நீர் தேக்கி வைத்திருப்பதால் அதன்மூலம் நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப்பதால் தேவையான அளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கி பயன்படுத்திவிட்டு, அப்பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப்போதும் சுகாதாரமான குடிநீரையே பயன்படுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, நோய்க்கான அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

ஆதாரம் : தி இந்து நாளிதழ்

3.08823529412
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top