பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புளோரின் படிவுநோய்

புளோரின் படிவுநோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புளோரின் படிவுநோய் ஒரு முடமாக்கும் நோய் ஆகும். உடலின் மென் மற்றும் வன் திசுக்களில் புளோரைடுகள் படிவதால் இது ஏற்படுகிறது. குடிநீர், உணவுப்பொருட்கள், தொழிற்சாலை மாசு ஆகியவற்றின் மூலம் நீண்ட காலமாகப் புளோரடுகளை உள்ளெடுப்பதால் விளையும் பொது சுகாதாரப் பிரச்சினை இது. மிகையாகப் புளோரைடை, குறிப்பாக குடிநீர் மூலம் எடுப்பதால் பற்களும் எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன.

பல், எலும்பு மற்றும் எலும்பற்றப் பகுதிகளில் புளோரைடு படிந்து ஒரு பெரும் சுகாதாரக் கோளாறாக மாறுகிறது. அதிக அளவில் புளோரைடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பை விட பற்களில் பாதிப்பு முதலில் ஏற்படும். பல்லில் புளோரைடு படிதல் குழந்தைகளைப் பாதித்து அவர்களின் பற்களை நிறமாற்றமும் சிதைவும் அடைய வைக்கின்றது. எலும்பில் புளோரைடு படிதல் எலும்பையும், கழுத்து, முதுகெலும்பு, தோள், இடுப்பு, முழங்கை மூட்டுகளைப் பாதித்துக் கடும் வலியையும், கடினத்தையும் மூட்டுகளில் விறைப்பையும் ஏற்படுத்தும். கடுமையான எலும்புப் புளோரைடு படிவு ஊனத்தை உண்டாக்கும். எலும்பற்றப் பகுதிகளில் ஏற்படும் படிவு ஆரம்பக் கட்ட வெளிப்பாடாகும். இவை எலும்பு அல்லது பற்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் முன்னரே உருவாகும்.  இவை இரைப்பைக்குடல் அறிகுறிகளாகத் தோன்றும். பிற நோய்களோடு பிணைந்து தவறாகக் கண்டறிவதற்கு வழிகோலும். இது அனைத்து வயதையும் சார்ந்த ஆண், பெண், குழ்ந்தைகளைப் பாதிக்கும்.

புளோரைடு படிவு நோய் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் 25 நாடுகளில் இடம்சார் நோயாகவும் உள்ளது. புளோரைடு பட்டை என அறியப்படும் பகுதியில் இருந்து இந்நோய் அறிவிக்கப்படுள்ளது: ஒன்று சிரியாவில் இருந்து ஜோர்டான், எகிப்து, லிபியா, அல்ஜீரியா, சூடான் மற்றும் கென்யா வழியாகவும், இன்னொன்று துருக்கியில் இருந்து ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, வட தாய்லாந்து மற்றும் சீனா வழியாகவும் செல்லுகிறது. அமெரிக்கக் கண்டத்திலும் ஜப்பானிலும் இத்தகையப் பட்டைகள் உள்ளன.

இந்தியாவில் புளோரைடு படிவுநோய்க்கு முக்கியக் காரணம் நீரில் இருக்கும் புளோரைடே. குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இதனுடன் தொழிற்சாலை புளோரைடும் சேர்ந்து காணப்படுகிறது. இந்தியத் தரக்கட்டுப்பாட்டுத் தனிப்பிரிவின் (BIS) அளவுகோலின்படி இருக்கக்கூடிய புளோரைடு அளவு 1 பிபிஎம் (ppm) ஆகும் (ஒரு மில்லியனில் இருக்கும் பகுதிகள் அல்லது லிட்டருக்கு 1 மி.கி).

எலும்பு மற்றும் பல் பாதிப்பின் பிந்திய கட்டம் நிலையானதும் மாற்ற முடியாததுமான தன்மையுடையது. இது தனிநபர் மற்றும் சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக ஒரு நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் எதிர் விளைவுகள் உண்டாகும்.

கிராம மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம் 1987-1993 வரை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புளோரைடு படிவு தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்பு மூலம்) புளோரைடு படிவைக் குறுகிய அளவில் கட்டுப்படுத்த முனைந்தது.

நோயறிகுறிகள்

ஒரே நேரத்தில் அனைத்து அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வயது, ஊட்டச்சத்துநிலை, சூழல், சிறுநீரகச் செயல்பாடு, உள்ளெடுக்கப்பட்ட புளோரைடு அளவு, மரபியல் பின்னணி, ஒவ்வாமைப் போக்கு மற்றும் கால்சியமும் மக்னீசியமும் இருப்பதால் உண்டாகும் நீரின் கடினத்தன்மை போன்ற பிற காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்துக் கடுமையும் கால அளவும் இருக்கும்.

பல்வேறு அறிகுறிகள்:

  • பல் புளோரைடுப் படிவு: பல்லில் கறை அல்லது குழியோடு மருத்துவ ரீதியான பல் புளோரைடு படிவு வெளிப்படும். கடுமையான நேர்வுகளில் எனாமல் முற்றிலும் பாதிக்கப்படும் (இருப்பினும் பல் எனாமல் குறைபாட்டுக்கு புளோரைடு படிவு மட்டுமே காரணம் அல்ல. உயிர்ச்சத்து ஏ மற்றும் டி குறைபாடு அல்லது குறைந்த புரத-ஆற்றல் உணவு ஆகியவையும் பல் புளோரைடு படிவு நோய் போன்றே கானப்படலாம்). பற்கள் சுண்ணாம்பு வெள்ளையாகவும், வெள்ளை, மஞ்சள், பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகளைக் கொண்டதாகவும் அல்லது எனாமல் பரப்பில் கோடுகளோடோ காணப்படும். நிறமிழத்தல் ஈறுகளில் இருந்து விலகியும் இருபுறமும் சமச்சீரானதாகவும் இருக்கும்.
  • எலும்பு புளோரைடுப் படிவு: மூட்டுகளில் விறைப்பும் வலியுமே ஆரம்பக் கட்ட அறிகுறிகள். கடுமையான நேர்வுகளில், எலும்பு அமைப்பு மாறும். தசைநார்களில் சுண்ணாம்புச் சத்து படியும். இதனால் தசைகள் சிதைந்து வலி ஏற்படும். தண்டுவடப் பாதையும் முள்ளெலும்புத் துளையும் இடுங்கி நரம்புகளிலும் இரத்தக் குழல்களிலும் அழுத்தம் கூடுவதால் வாதமும் வலியும் உண்டாகும்.

எலும்பற்றப் பகுதியில் புளோரைடு படிவு/மென் திசுக்களில்/மண்டலங்களில் புளோரைடு படிவதன் விளைவு:

  • இரைப்பைக்குடல் அறிகுறிகள்: கடுமையான அதிக அளவு புளோரைடு படிவதால் வயிற்று வலி, உமிழ்நீர் மிகைப்பு, குமட்டலும் வாந்தியும் காணப்படும்.
  • நரம்பியல் வெளிப்பாடு: நரம்புத்தளர்ச்சியும் மனச்சோர்வும், விரல் கால் விரலில் கூச்சம், அதிகத் தாகம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உந்தல்.
  • தசையியல் வெளிப்பாடு: தசை பலவீனம் மற்றும் விறைப்பு, தசையில் வலியும் தசைவலிமை இழப்பும், இயல்பான செயல்பாடுகளைச் செய்ய இயலாமை.
  • ஒவ்வாமை வெளிப்பாடு: தோல் சொறி, இரத்தக் குழலைச் சுற்றி அழற்சி, இளஞ்சிவப்பு அல்லது நீலச் சிவப்பு புள்ளிகள், வட்டம் அல்லது நீள்வட்டமாகத் தோன்றி 7-10 நாட்களில் மங்கி மறையும்.
  • கரு பாதிப்பு: கர்ப்ப காலத்தில்/பாலூட்டும் போது அதிக புளோரைடு கொண்ட உணவு அல்லது தண்ணீரைத் தாய் உட்கொண்டால் கரு/குழந்தை பாதிப்படையும். இடம்சார் நோயுள்ள பகுதிகளில் கருச்சிதைவு, இறந்துபிறத்தல், குறையுடன் பிறத்தல் ஆகியவை பரவலாகக் காணப்படும்.
  • குறைந்த அளவு இரத்தப்புரதம்: இரத்தச் சிவப்பணுப் படலங்களில் புளோரைடு திரள்கிறது.  இதனால் அவை சுண்ணாம்புச் சத்தை இழக்கின்றன. சுண்ணாம்புச் சத்தை இழந்த படலங்கள் வளையும் தன்மை கொண்டனவாக மாறி மடிப்புகளாகின்றன. சிவப்பணுக்களின் வடிவம் மாறுகிறது. இத்தகைய செல்கள் எக்கினோசைட்டுகள் என அழைக்கப்படும். இவற்றை இரத்தச் சுற்றோட்டத்தில் காணலாம். இவை இரத்த விழுங்கணுக்களால் உட்கொள்ளப்பட்டு இரத்த ஓட்டத்தில் இருந்து அகற்றப்படுகின்றன. புளோரைடு நச்சால் நீடித்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தப்புரத அளவு குறைவுபடும்.
  • சிறுநீர்ப்பாதை வெளிப்பாடுகள்: குறைந்த அளவு சிறுநீர் வெளியேறும். மஞ்சள்-சிவப்பு வண்ணத்திலும் அந்தப் பகுதியில் அரிப்பும் இருக்கலாம்.
  • தசைநார் மற்றும் இரத்தக்குழாய்களில் சுண்ணாம்புபடிதல்: மென் திசுக்களான தசைநார்கள், இரத்தக் குழாய்கள் கடினமாதலும் சுண்ணாம்பு படிதலும் இரத்தக் குழாய்கள் அடைபடுதலும் இந்நோயின் தனித்துவமான அம்சம் ஆகும்.

பெரும்பாலான வெளிப்பாடுகள் குறிப்பாக நிகழா. ஆனால் நோய்பாதிப்பு உள்ள இடங்களில் கவனமாகவும் சந்தேகத்துடனும் நோக்க வேண்டும். இத்தகைய ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கிராமப் புறங்களில் பல நேர்வுகளைத் தொடக்க கட்டத்திலேயே கண்டறிய மிகவும் உதவியாக இருக்கின்றன. பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் குறுகிய காலத்தில் அதிக அளவில் பலன் விளைகின்றன.

காரணங்கள்

உணவு, நீர், காற்று (தொழிற்சாலை வாயுக் கழிவுகள்), அதிக அளவில் பற்பசையைப் பயன்படுத்துதல் போன்றவற்றினால் மிகையாக புளோரைடை உள்ளெடுக்கும் போது புளோரைடு படிவு நோய் உண்டாகிறது. இருப்பினும் குடிநீரே முக்கிய காரணமாக இருக்கிறது.

மித-அளவு நீடித்த பாதிப்பு (1.5 மி.கி./1லி நீர் என்ற அளவுக்கு மேல்-நீரில் புளோரைடின் அளவு பற்றிய உ.சு.நி. வழிகாட்டுதல்) பரவலாகக் காணப்படுகிறது. அதிக அளவு புளோரைடால் உண்டாகும் கடும் பாதிப்பு அரிதான ஒன்றாகும். எதிர்பாராத விதமாகக் குடிநீர் மாசடைவதால் அல்லது தீ அல்லது வெடிவிபத்தால் இது நிகழலாம்.

நீரில் இருக்கும் புளோரைடு நிலவியல் அடிப்படையானது. உயராமான மலைகளின் அடிப்பகுதியிலும், நிலப்படிவுகள் கடலில் சேர்ந்துள்ள பகுதிகளிலும் அதிக அளவு புளோரைடு கொண்ட நீர் பெரும்பாலும் காணப்படும். நமது நாட்டில் கண்டறியப்பட்டுள்ள குடிநீரில் இருக்கும் புளோரைடு அளவு 0.2 – 48 மி.கி/லிட்டராக வேறுபடுகிறது. இந்தியத் தரக்கட்டுப்பாடுப் பிரிவின் அளவுகோலின் படி இருக்கத் தக்க வரையறை 1பிபிஎம் ஆகும்.

பிற ஆபத்துக் காரணிகள்:

  • பல உடனடி உணவுகள், பானங்கள், தின்பண்டங்களில் அதிக அளவு பாறை உப்பு (CaF2) அல்லது “கருப்பு உப்பு” (இதில் 157 பிபிஎம் புளோரைடு உள்ளது) மற்றும் சிவப்புப் பாறை உப்பு இருக்கின்றன.
  • புகையிலை அல்லது பாக்கை சவைக்கும் போது.
  • புளோரோகொய்னோலோன் நுண்ணுயிர்க்கொல்லிகள், சில எதிர் மனச்சோர்வு மருந்துகள், கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள், ஊக்கமருந்துகள், எதிரழற்சி மருந்துகள், மூட்டழற்சி மருந்துகள், ஆண்டாசிட்டுகள், எலும்புப்புரை மற்றும் செவிக்கடின நோய் மருந்துகள் மற்றும் ஏராளமான புளோரைடு கொண்ட மருந்துகளை நீண்டநாள் பயன்படுத்தி வரும்போது புளோரைடு நச்சு ஏற்படும் வாய்ப்புண்டு.
  • சுண்ணாம்புச் சத்து குறைவு பட்டவர்களுக்கு அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களுக்குப் பல் மற்றும் எலும்பு புளோரைடு படிவு ஏற்படும் அபாயம் உண்டு.
  • புளோரைடு கொண்ட பற்பசை: புளோரைடு கொண்ட பற்பசையால் பல் துலக்கி சில நிமிடங்களிலேயே புளோரைடு உறிஞ்சல் நடைபெறுவதாக இந்திய ஆய்வுகள் காட்டியுள்ளன. வாயில் உள்ள எச்சிலில் அதிக புளோரைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • புளோரைடு கொண்ட பானங்கள்.
  • தேனீர், கடல் மீன், ஜெலாட்டின், கோழித் தோல், புளோரைடு சேர்த்த உப்பு, அறுப்புக்கு முந்திய பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்ட (உ-ம். சல்பூரைல் புளோரைடு, அலுமினியம் புளோரைடு, Na3AlF6-திராட்சையில் பயன்படுத்தப்படுவது) உணவுகள்.
  • சிகரெட் புகை மற்றும் தொழிற்சாலை மாசு ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சுழலில் உள்ள புளோரைடு. உ-ம். இரும்பு, அலுமினியம், எனாமல், தொட்டி, கண்ணாடி, செங்கல், பாஸ்பேட் உரம், மின்சக்தி, வெல்டிங், நீர் புளோரிடேஷன் தொழிற்சாலை, குளிர்பதனம், துரு அகற்றல், எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், மருந்துத் தொழிற்சாலை, பற்பசை, வேதிப்பொருட்கள் மற்றும் தானியங்கிகள் போன்ற தொழிற்சாலைத் தூசி மற்றும் புகையில் உள்ள புளோரைடு.
  • கொழுப்பு நிறைந்த உணவுகள் எலும்பில் புளோரைடு படிவை அதிகரிப்பதாக அறிக்கைகள் உள்ளன.
  • கடுமையான புளோரைடு படிவுநோய் உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் – பகுதி வறண்ட வெப்பநிலைப் பகுதிகள் - மட்டுமே காணப்படுகிறது என்பதும் நன்கு அறிந்ததே. குளிர் பகுதிகளோடு ஒப்பிடும் போது, இப்பகுதிகளில் குடிநீர் அதிகமாக உள்ளெடுக்கப்படுவதால் நோய் ஆபத்தும் அதிகரிக்கிறது. இப்பகுதிகளில் குடிநீரில் காணப்படும் புளோரைடு அளவு ஒரே விகிதமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • குழந்தைகளுக்குப் பல் உருவாகும் ஆரம்ப ஆண்டுகளில் புளோரைடு பாதிப்பு இருந்தால் மட்டுமே பல் புளோரைடு நோய் ஏற்படும்.
  • சீனாவில் புளோரைடு நச்சு, தேயிலைச் செங்கலாலும் மிளகாயையும் சோளத்தையும் நிலக்கரி கட்டி பயன்படுத்தி உலர்த்தும் போது புளோரைடால் அவை அசுத்தம் அடைவதாலும் ஏற்படுகிறது.

புளோரைடை உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகள்: வாயில் உள்ள இரத்தக் குழாய்கள் அல்லது இரைப்பைக்குடல் வழியாக உடலுக்குள் புளோரைடு நுழைந்தவுடன் அது பல உடல் உறுப்புகளையும், திசுக்களையும் சென்றடைகிறது. புளோரைடு ஓர் எதிர்மின் தனிமம். இதனால் நேர்மின் திறன் கொண்ட கால்சியம் அயனிகளால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. எலும்பிலும் பற்களிலும் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இவற்றால் கவரப்படும் புளோரைடு கால்சியம் புளோரோபாடைட்டு படிகங்களாகப் படிகின்றன. அதே வேளையில் எலும்பு மற்றும் பல்லின் சில பகுதிகளில் கட்டுறாத கால்சிய இழப்பும் உண்டாகிறது.

நோய் கண்டறிதல்

நோய்கண்டறிதலின் போது புளோரைடு கொண்ட அனைத்துப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். காணப்படும் அறிகுறிகள் புளோரைடால் ஏற்பட்டது என்றால் அவை ஒரு வாரத்துக்குள் கணிசமாகக் குறைந்து பல வாரங்களில் பெரும்பாலும் மறைந்து விடும். இரைப்பைக்குடல் அறிகுறிகள் 15 நாட்களுக்குள் மறையும்.

(l) இடம்சார்நோய்ப் பகுதிகளில் எலும்பு புளோரைடு நோயைக் கண்டறிய உடல் பரிசோதனை:

(அ) முட்டியை மடக்காமல் ஒரு நாணயத்தை எடுக்கச் செய்தல். எலும்பு புளோரைடுப் படிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு முட்டியை மடக்காமல் எடுக்க இயலாது (வேறு நோய்க்கும் இந்தச் சோதனை உண்டு).

(ஆ) நாடிச் சோதனை: நாடியால் மார்பின் மேற்பகுதியை தொடச் செய்தல். ஒருவருக்கு கழுத்தில் விறைப்போ அல்லது வலியோ இருந்தால் நாடியால் மார்பின் மேற்பகுதியைத் தொட இயலாது.

(இ) நீட்டல் சோதனை: கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, முழங்கையில் மடக்கி தலையின் பின் பகுதியைத் தொடச் செய்தல். வலியோ விறைப்போ இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய இயலாது.

(ll) கதிர்வீச்சு: X- கதிர் ஆய்வில் எலும்பின் சுற்றளவு, தடிமன் மற்றும் அடர்த்தியின் பெருக்கத்தையும், தசைநார்களில் சுண்ணாம்புப் படிவையும் காணலாம். கழுத்து, முதுகெலும்பு, முழங்கால், இடுப்பு மற்றும் தோள் மூட்டுகளில் புளோரைடின் அதிகபட்ச பாதிப்பைக் கண்டறியலாம். கை பாதங்களில் உள்ள சிறு எலும்புகளும் பாதிக்கப்படும்.

(lll) SA/GAG சோதனை (சியாலிக் அமிலம்/கிளைக்கோசாமினோகிளைகன் சோதனை): புளோரைடு நச்சை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிய இச்சோதனை நடத்தப் படுகிறது. SA/GAG  சோதனை மூட்டழற்சி, எலும்புப்புரை மற்றும் தண்டுவட எலும்புச்சிதைவு ஆகியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க மதிப்பு மாற்றத்தைக் காட்டாது.

(lV) கீழ்வருவனவற்றில் புளோரைடு இருப்பை மதிப்பிடல்:

  • குடிநீர் – 1.0 பிபிஎம் (மில்லியனில் ஒரு பகுதி) குடி நீரில் அனுமதிக்கப்படக் கூடிய புளோரைடின் மேல் அளவு எனக் கருதப்படுகிறது.
  • இரத்தம் (ஊனீர்) : இரத்த ஓட்டத்தில் புளோரைடின் அளவு நிலையாக இருப்பதில்லை. ஆகவே அதன் அளவை நிலையாக அளவிட இயலாது,  பிற திசுக்களுக்குத் திசை திருப்பப் பட்டு அவற்றால் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும்.
  • சிறுநீர்: இரத்த புளோரைடு அளவோடு ஒப்பிடும் போது சிறுநீர் புளோரைடு அளவு அதிக பயன் உடையது ஆகும். புளோரைடு உள்ள உணவு, நீர், மருந்து அல்லது ஒரு பொருளை உள்ளெடுக்கும் போது சிறுநீரில் புளோரைடு அளவு அதிகமாகும். (நோய் தாக்கும் இடங்களில் இருந்து பிற இடத்துக்குச் செல்லும் ஒருவருக்கு அதிக அளவு புளோரைடு வெளியேறலாம் (1-2 மாதங்களுக்கு). மூட்டு மற்றும் பிற இடங்களில் வலியும் குறையும். நோய் வரலாறு நோய் கண்டறிதலில் முக்கிய பணி ஆற்றுகிறது).

(V) இரத்தப்புரதக் கணக்கீடு: இரத்த சோகை கண்டறிய.

நோய் மேலாண்மை

கடுமையான எலும்பு புளோரைடு படிவுநோய்க்கு மருத்துவம் எதுவும் இல்லை. ஏற்பட்ட ஊனத்தைக் குறைக்க முயற்சிகள் செய்யலாம். இருப்பினும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் இந்நோயைத் தடுக்கலாம். பாதுகாப்பான குடிநீர், ஊட்டச்சத்து, அதிக புளோரைடு கொண்ட உணவைத் தவிர்த்தல் ஆகியவையே தடுக்கும் நடவடிக்கைகள். பல் மற்றும் எலும்பு புளோரைடு படிவு மாற்ற முடியாதது; சிகிச்சை எதுவும் இல்லை; புளோரைடு உள்ளெடுப்பை பாதுகாப்பான எல்லைக்குள் பேணுவதே ஒரே வழியாகும்.

பல் புளோரைடு படிவுக்கு சிகிச்சை:

  • இலேசான நேர்வுகளுக்குப் பல் வெண்மையாக்குதல்
  • காம்போசிட் பாண்டிங்
  • போர்சலின் வெனீர்

தடுப்புமுறை

அதிக அளவு புளோரைடை உட்கொள்ளுவதைத் தவிர்ப்பதன் மூலம் தனிநபரும் சமுதாயமும் புளோரைடு படிவு நோயைத் தடுக்க முடியும். கீழ் வரும் நடவடிக்கைகள் மூலம் இதை செய்ய முடியும்:

  • மாற்று நீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவது.
  • குடிநீரில் இருந்து அதிகப்படியான புளோரைடை அகற்றுதல்.
  • ஆபத்தில் இருக்கும் மக்கள் தொகை/தனிநபருக்கு ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.

(அ) மாற்று நீராதாரத்தைப் பயன்படுத்துதல்: மேற்பரப்பு நீர், மழைநீர், புளோரைடு குறைந்த நிலத்தடி நீர் ஆகியவை இதில் அடங்கும்.

மேற்பரப்பு நீர்: மேற்பரப்பு நீரில் பெரும்பாலும் உயிரியல் மற்றும் வேதியியல் மாசுகள் இருப்பதால் குடிநீராக அதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மணல் மூலம் வடிகட்டுதல், புறஊதா கிருமி நீக்கம், குளோரின் சேர்த்தல் (சில இடங்களில் போதுமானதாக இருக்கும் ; எல்லா இடங்களிலும் அல்ல) போன்ற எளிமையான மலிவான முறைகளால் மேற்பரப்பு நீர் தகுந்தவாறு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

மழை நீர்:பொதுவாக இது சுத்தமான மலிவான எளிய நீர் ஆதாரமாகும். ஆனால் இதை சேமிக்க வீடுகளிலும் சமுதாய அளவிலும் பெரும்பெரும் தொட்டிகள் தேவைப்படும் என்பதே பிரச்சினை ஆகும்.

புளோரைடு குறைந்த நிலத்தடி நீர் : நீரடுக்கின் நிலவியல் அமைப்பு மற்றும் நீர் எடுக்கப்படும் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரே பகுதியில் உள்ள கிணறுகளிலும்  புளோரைடு அளவு மாறுபடும். துளைக் கிணறுகளை ஆழப்படுத்துவதும் புதிய கிணறுகளைத் தோண்டுவதும் பயன்தரும். நிலத்தடி நீரில் புளோரைடின் விநியோகம்  நெடுக்காகவும் குறுக்காகவும் சமமற்ற வகையில் அமைந்துள்ளது.

(ஆ) நீரில் இருந்து புளோரைடை நீக்குதல்:

புளோரைடு படிவுநோயைத் தடுக்கப் பாதுகாப்பான புளோரைடு அளவுள்ள குடிநீரைப் பயன்படுத்துதலே சிறந்த வழி. இருப்பினும் இடம்சார் நோயுள்ள பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது அரிதாகும்.

எனவே, புளோரைடு நீக்கமே ஒரே வழி. இதைப் பல முறைகளில் செய்யலாம்:

(I) வேதியியல் வீழ்படிதல்: படிகார உறைவு (நல்கொண்டா உத்தி), மின்பகுபொருள் புளோரைடுநீக்கம்

· படிகார உறைவு/திரளல்: நல்கொண்டா உத்தி (ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நல்கொண்டாவில் முதல் சமுதாய புளோரைடு நீக்க ஆலை நிறுவப்பட்டது) திரளல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த உத்தி நாகபுரியில் அமைந்திருக்கும் தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது (NEERI). சுத்திகரிக்கப்படாத நீரில் அலுமினியம் சல்பேட்டு (ஆலும்: ஹைடிரேட் அலுமினியம் உப்பு), லைம் அல்லது சோடியம் கார்பனேட் (ஆலுமில் 1/20 பகுதி, காரச் சூழலில் இந்த முறை சிறப்பாக செயல்படுவதால்) மற்றும் சலவைத் தூள் (3 மி.கி./லி) சேர்த்து கிருமிநீக்கம் செய்யப்படுகிறது. சமுதாயம் மற்றும் வீட்டளவில் இந்த உத்தி பொருத்தமானது. வீட்டு அளவில், ஒரு வாளி நீரில் (20 லிட்டர்கள்) ஆலும், லைம் மற்றும் சலவைத்தூள் சேர்க்கப்படுகிறது (நீரின் காரத்தன்மையையும் புளோரைடு அளவையும் பொறுத்து ஆலும் மற்றும் லைமின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது). பின் இது 1 மணி நேரம் திரளலுக்கும் கசிறு வாளியின் அடியில் படிவதற்கும் வைக்கப்படுகிறது. கசிறு படிவிற்கு மேல் வாளியின் அடியில் இருந்து 5 செ.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய் வளியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் சேகரிக்கப்படுகிறது. கசிறு அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்ட சுத்த நீர் வேறு ஒரு வாளியில் சேமித்து வைக்கப்படும்.

· மின்பகுமுறையில் புளோரைடு நீக்கம்: சூரிய ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட மின்பகு ஆலைகள் சில இடம்சார் நோய்ப் பகுதிகளில் NEERI-யால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையில், (மிகை புளோரைடு கொண்ட) நீருக்குள் பொருத்தப்பட்டுள்ள அலுமினியம் மின்முனைகள் வழியாக ஒருதிசை மின்னோட்டத்தைச் செலுத்தும்போது, செயல் வகை அலுமினியம் ஹைடிராக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. நீரில் இருக்கும் புளோரைடு அயனிகள் இதனால் பரப்புக்கவர்ச்சி அடைகிறது. கசடும் சுத்த நீரும் பிரிகின்றன. மின்சாரம் குறைவாக உள்ள இடங்களில் சூரிய ஆற்றல் பயன்படுத்தப் படுகிறது. காய்ந்த கழிவு, நிலம் நிரப்பவும் செங்கல் செய்யவும் பயன்படும்.

(II) பரப்புக்கவர்ச்சி: இந்த அணுகுமுறையில், செயலூக்கம் பெற்ற அலுமினா (Al2O3), செயலூக்கம் பெற்ற கரி அல்லது அயனி பரிமாறும் பிசின்கள் போன்ற வலிமையான பரப்புறிஞ்சிகள் அடுக்கிய பத்திகளின் ஊடாக நீர் வடிகட்டப் படுகிறது. இந்த முறையும் சமுதாயம் மற்றும் வீடுகளுக்கு ஏற்றதாகும். பரப்புறிஞ்சிகளில் புளோரைடு அயனிகள் நிறைந்தவுடன் அரிப்பு ஒரு மென் அமிலம் அல்லது காரக் கரைசலால் பின்கழுவல் முறையால் சுத்தம் செய்யப்படும். பின்கழுவலுக்குப் பயன்படுத்தப்படும் பொருளில் புளோரைடு செறிந்திருப்பதால் அருகிலுள்ள நிலத்தடி நீரை பாதிக்காமல் அது கவனமாக அகற்றப்படவேண்டும்.

அனைத்து முறைகளிலும் அதி அடர் புளோரைடு கொண்ட கசடு (அகற்றப்பட வேண்டியது)  உருவாகிறது; ஆகவே, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில், குடிக்கவும் சமைக்கவும் தேவைப்படும் நீரை மட்டுமே சுத்திகரிக்க வேண்டும்.

(III) அயனி பிரிப்பு:

  • மறிமாற்று சவ்வூடுபரவல் வடிகட்டுதல்
  • மின்னூடுபிரித்தல்

(இ) சிறந்த ஊட்டச்சத்து: மேற்குறிப்பிட்ட பொறிநுட்ப தீர்வுகளோடு கூடுதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் (கால்சியம், உயிர்ச்சத்து சி, இரும்பு, ஆன்டாக்சிடன்டுகள்) பலன் தருபவை ஆகும். தாய்ப்பாலில் புளோரைடு குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்).

பின்வரும் முறைகளால் புளோரைடை அகற்ற முடியாது:

  • நீரை கொதிக்க வைத்தல்: புளோரைடை அகற்றாமல் அதன் அடர்த்தியைக் கூட்டும்.
  • நீரை உறையவைத்தல்: புளோரைடின் அடர்த்தியைப் பாதிக்காது.
  • செயலூக்கம்பெற்ற கரி: அரிப்புகள் புளோரைடை நீக்காது,

சுகாதாரக் கல்வி:

  • புளோரைடு படிவுநோய் பற்றிய தகவல், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான உணவு ஆகியவற்றைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவது நோய்த்தடுப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் முக்கியமானது ஆகும்.
  • 1 பிபிஎம் அளவுக்கு மேல் புளோரைடு கொண்ட நீரைப் பருகக்கூடாது.
  • அதிக அளவு புளோரைடு கொண்ட பாக்கு, புகையிலை, கருப்புப்பாறை உப்பு, சிவப்புப் பாறையுப்பு (சிந்தி), பற்பசை, வாய் கொப்பளிக்கும் மருந்துகள் மற்றும் புளோரைடு அதிக அளவில் கொண்டுள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  • பால், தயிர், கீரை, பழங்கள் (கால்சியம், இரும்பு, உயிர்ச்சத்து சி மற்றும் ஆன்டாக்சிடன்டுகள் கொண்டுள்ளன)) போன்ற உணவுகளை ஊக்குவிக்க வேண்டும்.

மனித வள மேம்பாடு: சுகாதாரம் மற்றும் பொது சுகாதார பொறியியல் பிரிவில் போதுமான மனித வளத்தை மேம்படுத்தல். இந்த நோயைக் கண்டறிய மருத்துவத்துறை சார்ந்தவர்கள்/மருத்துவர்களுக்கு தகவல்களை முழுமைபடுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இது போன்று பொது சுகாதார பொறியியல் துறை. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் மற்றும் பிற துறைகள் இடம்சார் நோய்ப் பகுதிகளில் ஆரம்பக் கட்டத்தில் நோயைக் கண்டறிவதிலும் தகுந்த நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்த முக்கியத்துவம் தரப்படுகிறது.

புளோரைடு படிவுநோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (NPPCF)

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நாட்டில் புளோரைடு படிவுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. ஒரு மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி NPPCF-யின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகும்.

NPPCF-யின் உத்திகள்:

  • சமுதாயத்தில் புளோரைடு படிவு நோய் கண்கணிப்பு.
  • பயிற்சி மற்றும் மனித வள ஆதரவு மூலம் திறன் கட்டுதல்.
  • மருத்துவ மனைகளில் நோய்கண்டறிதல் வசதிகளை அமைத்தல்.
  • புளோரைடு படிவுநோய் நேர்வுகளுக்கு மருத்துவம், அறுவை, மறுவாழ்வு மேலாண்மை.
  • புளோரைடு படிவுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சுகாதாரக் கல்வி.

ஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்

3.2380952381
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top