অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பு

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பு

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

சரியாக சாப்பிடுதல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.

சர்க்கரை வேண்டாம்

பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்

உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்

கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.

தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்

காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.

தூக்கம்

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.

ஆதாரம் : தினமணி

கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate