অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இரையக உண்குழலிய எதிர்வினை நோய்

இரையக உண்குழலிய எதிர்வினை நோய்

அறிமுகம்

வயிற்றில் இருந்து அமிலங்கள் இரைப்பைக்குள் புகுவதால் உமிழ்நீர் சிதைவு ஏற்பட்டு அதனால் தோன்றும் கடுமையான அறிகுறிகளே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் எனப்படுகிறது. வாயில் இருந்து குடல் வரை செல்லும் தசைகளால் ஆன நீண்ட குழாயே உணவுக் குழாய். பொதுவாக மெல்லப்பட்ட உணவு வாயில் இருந்து உணவுக் குழாய்க்குச் சென்று பின் வயிற்றுக்குள் செல்கிறது. அங்கு செரிமானத்துக்காக அமிலத்தன்மையுள்ள இரைப்பைச் சாறு அதனுடன் கலக்கப்படுகிறது. உணவுக்குழாயும் வயிறும் தசை நார்க் கற்றைகளால் ஆன ஒரு சுருக்குத்தசையால் (கீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசை) பிரிக்கப்பட்டுள்ளன. உணவோ, இரைப்பை அமிலங்களோ மீண்டும் உணவுக்குழாய்க்குள் சென்றுவிடாதவாறு இச்சுருக்குத்தசை தடுக்கிதழை (வால்வு) அடைக்கிறது.

நோயறிகுறிகள்

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆவன:

  • நெஞ்செரிச்சல்
  • எதிர்க்களிப்பு
  • விழுங்குவதில் சிரமம்

நெஞ்செரிச்சல்: நெஞ்செலும்புக்கு சற்று கீழ் எரியும் வலியோ உணர்வோ உண்டாகுதல். சாப்பிட்டபின் அல்லது உடலை வளைத்தாலோ படுத்தாலோ வலி மிகவும் அதிகமாகும்.

எதிர்க்களிப்பு: அமிலங்களை வெளியேற்றும் போது மேல் தொண்டையில் அல்லது பின்வாயில் வெறுக்கத்தக்க புளிப்புச் சுவை ஏற்படும்.

விழுங்குவதில் சிரமம்: விழுங்கும்போது ஏற்படும் சிக்கல்

காரணங்கள்

கீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கான பொதுவான காரணம். தொண்டையில் இருந்து வயிறுவரைச் செல்லும் உணவுக்குழாயின் அடியில் சுருக்குத்தசை அமைந்துள்ளது.

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் உண்டாக்கும் அபாயங்களாவன:

  • உடல் பருமன்
  • காபின் உட்கொள்ளுதல் (காப்பி, சாக்லேட்)
  • கர்ப்பம்
  • கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவு
  • மனவழுத்தம்
  • இடைவெளி குடலிறக்கம் (Hiatus Hernia) – வயிற்றின் பகுதி உதரவிதானத்தின் வழி துருத்துதல்

நோய்கண்டறிதல்

துல்லியமான அறிகுறிகளின் வரலாற்றைக் கொண்டே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது. அகநோக்கல், பேரியம் விழுங்கல், மேனோமெட்ரி ஆகியவற்றின் மூலமும் கண்டறியப்படலாம்.

அகநோக்கல்: இம்முறையில் கண்ணாடியிழைக் குழாய் வயிற்றுக்குள் செலுத்தப்படுகிறது. கண்டறியப்பட்ட இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயை உறுதிசெய்ய அகநோக்கி வாய்வழியாகத் தொண்டைக்குள் செலுத்தப்படுகிறது. இச்சோதனை நோயாளி நினைவுடன் இருக்கும்போதே செய்யப்படுகிறது. அமைதிப்படுத்த மயக்க மருந்தும் அளிக்கலாம். அகநோக்கி மூலம் உணவுக்குழாயின் உட்பரப்பு வயிற்று அமிலங்களால் சிதைவடைந்துள்ளதா என்று சோதிக்கலாம். மேலும் நெஞ்செரிச்சலுக்கு இன்னொரு காரணமான வயிற்றுப் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்தலாம்.

பேரியம் விழுங்குதல்: விழுங்கும் சிக்கல் இருந்தால் பேரியம் விழுங்கும் சோதனை செய்ய வேண்டும். விழுங்கும் திறனையும், பிரச்சினை எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய இச்சோதனை மிகவும் பலன் தரக்கூடியது. விழுங்குவதற்கு உதவும் தசைகளில் உள்ள அடைப்புகளையும் பிரச்சினைகளையும் இச்சோதனை மூலம் இனங்காணலாம்.

மேனோமெட்ரி: சுருக்குத்தசையின் உள் அழுத்தத்தின் அளவை அளப்பதன் மூலம் கீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசை செயல்படும் விதத்தைக் கண்டறியலாம். இச்சோதனையின் போது நோயாளியைச் சிறிது உணவை உட்கொள்ளச் செய்வார்கள்.

சிக்கல்கள்

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் மிகவும் பொதுவான சிக்கல் உணவுக்குழல் புண்களாகும். இந்நோயால் உற்பத்தி செய்யப்படும் மிகையான அமிலம் உணவுக்குழாயின் உட்பரப்பைச் சேதமாக்கி புண்களை உண்டாக்கும். புண்களில் இருந்து இரத்தம் கசிந்து வலியை உண்டாக்கி விழுங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதின் மூலம் புண்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

சிகிச்சை

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கு மருத்துவம் அளிக்க சுய பேணல் அவசியம். அதில் அடங்குவன:

  • நோயாளி உடல்பருமன் உள்ளவராக இருந்தால் எடைக் குறைப்பு
  • உண்ணும் இடைவெளியைக் குறைத்து குறைவாக உண்ணவும்
  • காஃபின், புகையிலை போன்ற நோய்த்தூண்டிகளைக் குறித்துக் கவனமாக இருக்கவும்
  • மருந்து: பின் வருவன போன்ற பல மருந்துகள் உள்ளன:
  • புரோட்டான் - பம்ப் தடுப்பான்கள் (Proton-pump inhibitors (PPIs)
  • H2 – ஏற்பி எதிர்ப்பிகள் (H2-receptor antagonists)
  • புரோகைனெட்டிக்ஸ் (Prokinetics)

அறுவை மருத்துவம்: இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கு வழக்கமான அறுவை சிகிச்சை முறை நிசன் ஃபண்டோப்ளிகேஷன் (Nissen fundoplication) ஆகும். அமில எதிர்வினையைத் தடுக்கவும், இடைவெளி குடல் இறக்கத்தைச் சீர் செய்யவும் இம்முறையில் வயிற்றின் மேற்பகுதி கீழ் உணவுக்குழல் சுருக்குத்தசையைப் பலப்படுத்த அதைச் சுற்றி பொதியப்படுகிறது.

இங்கு ஆரோக்கியத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள குறிப்பான தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate